தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்குப் பிரச்சார ஊர்தி வழங்கும் விழாவில் அமைச்சர் கே.என்.நேரு சிறப்புரை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, October 24, 2023

தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்குப் பிரச்சார ஊர்தி வழங்கும் விழாவில் அமைச்சர் கே.என்.நேரு சிறப்புரை

 ஆசிரியர் அய்யா அவர்களே, நீங்கள் சொல்லும் கருத்துக்கேற்ப நாங்கள் பணியாற்றுவோம்!

தளபதி அவர்கள் மீண்டும் தலைவராக வர, மீண்டும் முதலமைச்சராக வர நீங்கள் தொடங்கவிருக்கின்ற பயணம் மிகப்பெரிய வகையில் உதவும்!

திருச்சி, அக்.24 ஆசிரியர் அய்யா அவர்களே, நீங்கள் சொல்லும் கருத்துக்கேற்ப நாங்கள் பணியாற்றுவோம். அந்த உறுதியை உங்களுக்குத் தந்து, தளபதி அவர் களுடைய ஆட்சி மேலும் மேலும் வளர, தளபதி அவர்கள் மீண்டும் தலைவராக வர, மீண்டும் முதலமைச் சராக வர நீங்கள் தொடங்கவிருக்கின்ற பயணம் மிகப் பெரிய வகையில் உதவும் என்பதை நான் அறிவேன்.

அந்த வகையில், உங்களுக்கெல்லாம் தளபதியின் சார்பில், மனமார்ந்த நன்றியையும், வணக்கத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன் என்றார் நகர்ப்புற வளர்ச்சித் துறை மற்றும் நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என். நேரு அவர்கள்.

ஈரோட்டுப் பாதையில் தொடர்பயணம்

தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்குப் பிரச்சார ஊர்தி வழங்கும் விழா

கடந்த 20.10.2023 அன்று மாலை திருச்சியில் நடைபெற்ற ஈரோட்டுப் பாதையில் தொடர்பயணம் - தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்குப் பிரச்சார ஊர்தி வழங்கும் விழாவில் நகர்ப்புற வளர்ச்சித் துறை மற்றும் நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என். நேரு அவர்கள் சிறப்புரையாற்றினார்.

அவரது சிறப்புரை வருமாறு:

‘‘ஈரோட்டுப் பாதையில் தொடர் பயணம்'' என்ற வகையில், தமிழினத் தலைவர் ஆசிரியர் அய்யா அவர்களுக்கு, அவருடைய பயணத்தை நல்ல முறையில் மேற்கொள்வதற்காக வேன் வழங்குகின்ற நிகழ்ச்சிக்கு வருகை தந்து, வேனைப் பெற்றுக்கொண்டு நிறைவுரையாற்றவிருக்கின்ற தமிழர் தலைவர் ஆசிரியர் அய்யா அவர்களே,

திராவிடர் கழகத்தின் துணைத் தலைவர் மரியாதைக் கும், அன்பிற்கும் உரிய கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்களே,

நிகழ்ச்சியில் பங்கேற்று சிறப்பு செய்திருக்கின்ற மரியாதைக்கும், அன்பிற்கும் உரிய இந்திய தேசிய காங்கிரஸ்  கட்சியின் தமிழ்நாட்டின் தலைவரும், மேனாள் சட்டப்பேரவை உறுப்பினரும், மேனாள் நாடாளுமன்ற உறுப்பினருமான மரியாதைக்குரிய அண்ணன் அழகிரி அவர்களே,

திருச்சிக்குப் பல பெருமைகள் உண்டு; அதில் ஒரு முக்கியமான பெருமை பேராசிரியர் அய்யா காதர் மொகிதீன் அவர்கள், திருச்சியிலிருந்து அகில இந்திய முஸ்லிம் லீக் கட்சியின் தலைவராக இருந்து கழகத் திற்கும், தளபதிற்கும் உறுதுணையாக இருக்கின்ற பேராசிரியர் அய்யா காதர்மொகிதீன் அவர்களே,

வருகை தந்திருக்கின்ற மறுமலர்ச்சி திராவிட முன் னேற்றக் கழகத்தின் பொருளாளர் செந்திலதிபன் அவர் களே, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் அன்புச் சகோதரர் பாலாஜி அவர்களே,

இங்கே என்னோடு சட்டமன்றத்தில் இருந்து, இன்றைக்கு காங்கிரஸ் கட்சியின் தமிழ்நாட்டுத் துணைத் தலைவராக இருக்கின்ற மரியாதைக்குரிய பெருந்துறை மேனாள் சட்டமன்ற உறுப்பினர் சகோதரர் பெரியசாமி அவர்களே,

எந்த இடத்தில் பேசினாலும், 
துளியும் பயமில்லாமல் பேசுகின்றவர்!

தலைவர், நம்முடைய முதலமைச்சர் அவர்களோடு பேசிக் கொண்டிருந்தபொழுது - இரவில் பல தலைவர் களுடைய உரையைக் கேட்பார்கள். கேட்டு, மறுநாள் காலையில், இன்னின்ன தலைவர்கள் எல்லாம் பேசினார் கள், சிறப்பாக இருந்தது என்று எடுத்துச் சொல்லுகின்ற பொழுது, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ‘தீக்கதிர்' ஏட்டிற்கு ஆசிரியராக இருக்கின்ற மதுக்கூர் ராமலிங்கம் அவர்களுடைய உரையைப்பற்றிக் குறிப்பிட்ட நம்மு டைய முதலமைச்சர் அவர்கள், ‘‘அவர் எந்த இடத்தில் பேசினாலும், துளியும் பயமில்லாமல் பேசுகின்றவர், அனைவரும் அதை ஏற்றுக்கொள்ளக்கூடிய கருத்தாகக் கொண்டு செல்லக்கூடியவர்'' என்று சிறப்புடன் குறிப் பிட்ட மதுக்கூர் ராமலிங்கம் அவர்களே,

வருகை தந்திருக்கின்ற வணக்கத்திற்குரிய மேயர் அன்பழகன் அவர்களே, திராவிட முன்னேற்றக் கழக மத்திய - மாவட்டக் கழகச் செயலாளர் வைரமணி அவர் களே, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தினு டைய மாநகர மாவட்டச் செயலாளர் சோமு அவர்களே, பெருநகர மாவட்டச் செயலாளர் சேரன் அவர்களே,

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாவட்டக் கழக செயலாளராகப் பொறுப்பேற்று இருக்கின்ற அன்புச் சகோதரரே. வருகை தந்திருக்கின்ற பெரியோர்களே, சகோதரர்களே அனைவருக்கும் வணக்கத்தினைத் தெரி வித்துக் கொள்கிறேன்.

எங்களுக்கு இதைவிட ஒரு பெருமை
வேறு எதுவுமில்லை!

இன்றைக்கு நடைபெறும் இந்நிகழ்ச்சியில் என்னைப் பங்கேற்க வைத்து, மாநிலக் கட்சிகளுடைய தலைவர் களின் முன்னிலையில், அய்யா ஆசிரியர் அவர்களுக்கு வேன் சாவியை வழங்குகின்ற ஒரு வாய்ப்பை திராவிடர் கழகம் எங்களுக்கு வழங்கியிருக்கிறது. எங்களுக்கு இதைவிட ஒரு பெருமை வேறு எதுவுமில்லை.

நான் வெளிப்படையாகச் சொல்கிறேன், சில அரசியல் தலைவர்களை நான் பார்த்திருக்கின்றேன்; சட்டமன்ற உறுப்பினர்களையும் பார்த்திருக்கிறேன். அவர்கள் எல்லாம் சொல்வார்கள், ‘‘ஆசிரியர் அவர்கள் கொள்கையைச் சொன்னால், அது கடுமையாக இருக் கும்; எனவே, அவர் இல்லாமல் இருந்தால் நன்றாக இருக்கும்'' என்றெல்லாம் சொல்லியிருப்பார்கள்.

ஆசிரியர் அவர்கள் இருக்கின்ற காரணத்தினால்தான், 
தி.மு.க. ஆட்சி வந்தது!

ஆனால், நாங்கள் நினைப்பது, ஆசிரியர் அவர்கள் இருக்கின்ற காரணத்தினால்தான், இந்த ஆட்சி வந்தது; இந்த ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.

நம்முடைய தலைவர் கலைஞர் அவர்களிடம் நாங்கள் பணியாற்றி இருக்கின்றோம்; இன்றைக்கு இருக்கின்ற முதலமைச்சரின் கீழும் நாங்கள் பணி யாற்றிக் கொண்டிருக்கின்றோம். ஆனால், தலை வரைக் காட்டிலும் கூடுதலாக, அதாவது, எச்.ராஜா சொல்வார், ‘‘கலைஞரைவிட, மு.க.ஸ்டாலின் மிகவும் ஆபத்தானவர்'' என்று. 

தளபதி அவர்கள் என்றைக்கும் கொள்கையில் சமரசம் செய்துகொள்வதில்லை!

இந்தக் கொள்கையைப் பொறுத்தவரையில், தளபதி அவர்கள் என்றைக்கும் சமரசம் செய்துகொள்வதில்லை. இந்தக் கொள்கைக்காகவே அவர் ஆட்சியை நடத்திக் கொண்டிருக்கின்றார்.

இன்று மாலை சென்னை கொளத்தூர் தொகுதியில், மாநகராட்சியின் சார்பாக நான்கு நிகழ்ச்சிகள் நடை பெறவிருக்கின்றன. அந்த நான்கு நிகழ்ச்சிகளுக்கும் முதலமைச்சர் அவர்கள் வருகிறார்கள். மாநகர அமைச்சர் என்கிற முறையில், நான் அங்கே இருக்க வேண்டும்.

நேற்று மாலை சென்று தலைவரிடம் அனுமதி கேட்டேன்; ஆசிரியர் அய்யா திருச்சிக்கு வருகிறார்; நான் செல்லவேண்டும் என்று சொன்னேன்.

ஆசிரியரின் பணி நமக்கு அவசியம் தேவை:
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

‘‘ஆம், நான் விளம்பரம் பார்த்தேன்; ஏன் அவர் ஓய்வே எடுத்துக்கொள்ள மாட்டாரா? தொடர்ந்து பயணித்துக் கொண்டுதான் இருப்பாரா? அவரிடம் நான் சொன்னதாக சொல்லுங்கள், ‘‘ஓய்வெடுத்து இந்தப் பயணத்தைத் தொடரவேண்டும்'' என்று. அவருடைய பணி நமக்கு அவசியம் தேவை. அவருடைய உழைப்பு என்பது நமக்குத் தேவை'' என்று நம்முடைய முதலமைச்சர் அவர்கள் சொன்னார்கள்.

திராவிடர் கழகம் நடத்திய பிரச்சார நாடகம்!

கலைஞர் நூற்றாண்டு விழா, ‘‘தாய்வீட்டில் கலைஞர்'' புத்தகம் வெளியீட்டு விழாவினை திராவிடர் கழகம் நடத்தியது. அதில் முதலமைச்சர் அவர்கள் பங்கேற்றார். அந்நிகழ்ச்சியில்,  ஒரு பெரிய பிரச்சார நாடகத்தை, பிர மாதமாக நடத்தியது. திராவிட முன்னேற்றக் கழகம்கூட இப்படிப்பட்ட ஒரு பிரச்சார நாடகத்தைத் தயாரிக்க வில்லை. அந்நாடகத்தை மிகச் சிறப்பாக நடத்தி, மக்கள் மத்தியில் வெகுவாக இந்தக் கொள்கைகளை எடுத்துச் சென்றிருக்கின்றீர்கள்.

இங்கே இருக்கின்றவர்களுக்கும், மேடையில் உள்ளவர்களுக்கும் சொல்லிக் கொள்வது என்னவென் றால், இன்றைக்குத் திராவிட முன்னேற்றக் கழகம் ஆறாவது முறையாக ஆட்சிப் பொறுப்பேற்று இருக் கின்றது என்று சொன்னால், திராவிடர் கழகம் தந்த ஆதரவு; தந்தை பெரியார் அவர்கள் கொடுத்த ஆதரவு; இன்றைக்குத் தொடர்ந்து ஆசிரியர் அய்யா அவர்கள்  உழைத்ததுதான்.

ஓர் உதாரணத்தைச் சொல்கிறேன், கலைஞர் அவர்கள் வெளிநாடு சென்று வந்தார். அப்பொழுது ராஜாஜி அவர்கள், கலைஞரைப் பார்த்து, ‘‘வைரத்தை எடுத்து வந்துவிட்டார்'' என்று.

அப்பொழுது தந்தை பெரியார் அவர்கள், ‘‘யாரைப் பார்த்து நீ சொல்கிறாய்?'' என்று ராஜாஜியைக் கடுமை யாக விமர்சனம் செய்து அறிக்கை கொடுத்தார்.

தலைவர் கலைஞரின் ஆதங்கம்!

அதை கலைஞர் அவர்களிடம் ஒருநாள் இரவு 9 மணியளவில் திராவிடர் கழகத் தலைவர் அவர்கள் சொன்னார்; ‘‘இதுபோன்று ராஜாஜி அவர்கள் பேசினார்; அதற்குத் தந்தை பெரியார் அவர்கள் உங்களுக்கு ஆதரவாக, ராஜாஜியை கடுமையாக எதிர்த்துப் பேசியுள்ளார். அன்னை மணியம்மையார் அவர்களும் கடுமையாகக் கடிந்துகொண்டார்கள்'' என்று சொன்னார்.

‘‘எனக்கு ஒரு சங்கடம் வருகிறது என்று சொன்னால், எனக்காகப் பேசிய தலைவர் அன்றைக்கு இருந்தார். இன்றைக்கு யாரும் இல்லையே'' என்று தந்தை பெரியாரைப்பற்றி கலைஞர் சொல்கின்றபொழுது, நாங்களும் இருந்தோம். அன்று இரவு உணவே உட்கொள்ளாமல் தூங்கச் சென்றுவிட்டார்.

முதல் ஆளாக நிற்பது திராவிடர் கழகம்தான் -
ஆசிரியர் அய்யா அவர்கள்தான்!

இதை எதற்காகச் சொல்கிறேன் என்றால், இன்றைக்குத் தளபதிக்கும், இந்த ஆட்சிக்கும் ஒரு சிறு அசைவு என்றால்கூட, அதனை எதிர்த்து முதல் ஆளாக நிற்பது திராவிடர் கழகம்தான் - ஆசிரியர் அய்யா அவர்கள்தான்.

எனவே, ஆசிரியர் அய்யா அவர்களே, நீங்கள் செல்லுகின்ற இடமெல்லாம் உங்களுக்குச் சிறப்பு வரவேண்டும். நீங்கள் சொல்லுகின்ற கருத்துகளை யெல்லாம், இந்த மக்கள் ஏற்றுக்கொள்ளவேண்டும். அந்த வகையில், உங்களுடைய பயணம் வெற்றி கரமாக அமையவேண்டும். அப்படி வெற்றிகரமாக அமைந்து, அதில் நாங்களும் பயன்பெறவேண்டும் என்பதை நான் உங்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறேன்.

நான், நான்காவது முறையாக அமைச்சராக இருக்கிறேன். நான் பியூசி வரையில்தான் படித் திருக்கிறேன், திருச்சி ஜமால் முகமது கல்லூரியில்- 1969 இல்.

அய்யா தந்தை பெரியாரைப் பார்த்ததற்கே நான்குமுறை அமைச்சராக ஆகியிருக்கிறேன்!

இப்பொழுது அய்யா தந்தை பெரியார் அவர்கள் உபயோகித்த வேனை வைத்திருக்கிறீர்களே, அந்த வேனில், அவர் வருகிறபொழுது, நான் தினந்தோறும் பார்த்திருக்கிறேன். அய்யா தந்தை பெரியாரைப் பார்த்ததற்கே நான்குமுறை அமைச்சராக ஆகி இருக்கிறேன்.

உங்களுடைய பயணம் என்பது இக்காலகட்டத்திற்கு மிகவும் தேவை!

உங்களுடைய பயணம் என்பது இக்காலகட்டத்திற்கு மிகவும் தேவை. உங்களால்தான் அது முடியும். நீங்கள் இருக்கின்ற வரையில்தான் இந்தக் கொள்கைக்கு ஒரு கெட்டித்தன்மை வரும் என்ற இந்த நேரத்தில் சொல்லிக் கொள்கிறேன்.

இந்நிகழ்ச்சிக்கு வந்திருக்கின்ற ஒவ்வொரு தலை வரையும் நான் பாராட்டுகிறேன்.

அண்ணன் அழகிரி அவர்கள் சட்டமன்றத்தில் பேசுகின்றபொழுது, கலைஞர் அவர்களுடைய அமைச் சரவை, கோட்டையில் இருந்தாலும்கூட, அண்ணன் அழகிரியோ, பீட்டர் அல்போன்சோ, நம்முடைய திருப்பூர் மேயர் பேசுகிறார் என்று சொன்னால், நம்முடைய சுப்பராயன் பேசுகிறார் என்று சொன்னால், தலைவர் கலைஞர் அவர்கள் அவையில் வந்து அமர்ந்துவிடுவார். அவர்கள் பேசுகின்ற வரையில் இருந்து அவர்களுடைய பேச்சைக் கேட்டுவிட்டு, அவர்களைப் பாராட்டி விட்டுத்தான் செல்வார். அப்படி ஒரு பேச்சாற்றல் மிக்க தலைவர்.

இந்தக் கூட்டணிக்கு அச்சாரமிட்டு முதல் கையெழுத்திட்டவர் பேராசிரியர்தான்

இன்றைக்குத் தி.மு.க. ஆட்சிக்கு வந்திருக்கின்றது என்று சொன்னால், இங்கே மேடையில் அமர்ந்திருக்கின்ற அகில இந்திய முஸ்லிம் லீக் தலைவர் அய்யா பேரா சிரியர் காதர்மொகிதீன் அவர்கள், கூட்டணி பேச்சு வார்த்தையின்போது, எனக்கும் - அழகிரிக்கெல்லாம் கடுமையான வாக்குவாதங்கள் நடைபெற்று இருக்கிறது. ஆனால், முதலில் எங்களை வழிக்குக் கொண்டு வந்த வர், நம்முடைய பேராசிரியர் அவர்கள்தான். இந்தக் கூட்டணிக்கு அச்சாரமிட்டு முதல் கையெழுத்திட்டவர் அவர்தான்.

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொருளாளர் செந்திலபதின் அவர்களுடைய உரையை கேட்டதில்லை. கடந்த கூட்டத்தில் நான் அவருடைய பேச்சைக் கேட்டிருக்கிறேன். மிகச் சிறப்பாக பேசுகிறார்.

முத்தரசன் அவர்கள் சிறிது உடல்நலக் குறைவு ஏற்பட்டு, நேற்றுதான் மருத்துவமனையில் இருந்து வீட்டிற்குத் திரும்பியிருக்கிறார்.

ஆசிரியர் அவர்கள் சொன்னார், ‘‘தலைவர்கள் சிலருக்கு சிறிது உடல்நலக் குறைவு ஏற்பட்டதால், இங்கே வர முடியாத சூழல்'' என்று.

நம்முடைய தீக்கதிர் ஆசிரியர் மதுக்கூர் ராமலிங்கம் அவர்களைப் போன்று, அப்படியெல்லாம் பேச முடியுமா? என்பதற்கு அவர்தான் எடுத்துக்காட்டு.

எனவே முன்னணியில் இருக்கின்ற தலைவர்கள் சொல்லுகிற, பேசுகின்ற செயல்களுக்கு ஊக்கமூட்டுகின்ற மாவட்டச் செயலாளர்கள் - நானும் 25 ஆண்டுகாலம் மாவட்டச் செயலாளராக இருந்திருக்கிறேன். இன்றைக்கு ஒவ்வொரு கட்சியிலும், கலை போன்றவர்கள், நம் முடைய சோமு போன்றவர்கள், சேரன் போன்றவர்கள், மாவட்டத் தலைவராக புதிதாகப் பொறுப்பேற்று இருக்கின்ற நம்முடைய ரெக்ஸ் போன்றவர்கள்.

மீண்டும் தளபதி முதலமைச்சராக வர நீங்கள் தொடங்கவிருக்கின்ற பயணம் மிகப்பெரிய வகையில் உதவும்

ஆசிரியர் அய்யா அவர்களே, நீங்கள் சொல்லும் கருத்துக்கேற்ப நாங்கள் பணியாற்று வோம். அந்த உறுதியை உங்களுக்குத் தந்து, தளபதி அவர்களுடைய ஆட்சி மேலும் மேலும் வளர, தளபதி அவர்கள் மீண்டும் தலைவராக வர, மீண்டும் முதலமைச்சராக வர நீங்கள் தொடங்க விருக்கின்ற பயணம் மிகப்பெரிய வகையில் உதவும் என்பதை நான் அறிவேன்.

அந்த வகையில், உங்களுக்கெல்லாம் தளபதியின் சார்பில், மனமார்ந்த நன்றியையும், வணக்கத்தையும் தெரிவித்து அமைகிறேன்.

நன்றி, வணக்கம்!

- இவ்வாறு நகர்ப்புற வளர்ச்சித் துறை மற்றும் நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என். நேரு அவர்கள் சிறப்புரையாற்றினார்.


No comments:

Post a Comment