ஆவடி - ஒரகடத்தில் எழுச்சியுடன் நடைபெற்ற பெரியாரியல் பயிற்சிப் பட்டறை! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, October 25, 2023

ஆவடி - ஒரகடத்தில் எழுச்சியுடன் நடைபெற்ற பெரியாரியல் பயிற்சிப் பட்டறை!

கழகத் துணைத்தலைவர் 'பார்ப்பனப் பண்பாட்டுப் படை எடுப்பு' எனும் தலைப்பில் முதல் வகுப்பெடுத்தார்!


ஆவடி, அக். 25- ஆவடி கழக மாவட்டம் அம்பத்தூர் ஒரகடத்தில் திராவிடர் கழகத்தின் பெரியாரியல் பயிற்சிப் பட்டறை சிறப்பாக நடைபெற்றது.

ஆவடி மாவட்டம் ஒரகடத்தில் அம்பேத்கர் சிலை எதிரில் ஆர்த்தி மினி அரங்கத்தின் இரண்டாம் மாடியில் 14.10.2023 அன்று காலை 10:30 மணியளவில் பெரியாரியல் பயிற்சிப் பட்டறை தொடங்கியது. 61 மாணவர்கள் உள்ளிட்ட 100 க்கும் மேற்பட்ட தோழர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். ஆறு தலைப்புகளில் ஆறு ஆசிரியர்கள் கலந்துகொண்ட ஒருநாள் நிகழ்வு நடைபெற்றது. 

பயிற்சி முகாம் ஒருங்கிணைப்பாளரும், மாநில ஒருங்கி ணைப்பாளருமான தஞ்சை இரா. ஜெயக்குமாரின் ஒருங்கி ணைப்பில், மாவட்டத் தலைவர் வெ.கார்வேந்தன் தலைமை யேற்று உரையாற்ற மாவட்ட துணைச் செயலாளர் உடுமலை வடிவேல் அனைவரையும் வரவேற்றார். தலைமைக்கழக அமைப்பாளர் வி.பன்னீர்செல்வம் தொடக்கவுரை ஆற்றி நிகழ்வைத் தொடங்கி வைத்தார்.

மாநில இளைஞரணி துணைச் செயலாளர் சோ.சுரேஷ், திருவள்ளூர் மாவட்ட தொழிலாளரணித் தலைவர் கி. ஏழு மலை, காப்பாளர் பா.தென்னரசு, மாவட்ட மகளிரணித் தலை வர் பூவை மு.செல்வி, அம்பத்தூர் பகுதித் தலைவர் பூ.ராம லிங்கம், அம்பத்தூர் நகரச் செயலாளர் அய்.சரவணன், செயலாளர் க. இளவரசன், துணைத் தலைவர்கள் மு.ரகுபதி, வை. கலையரசன், துணைச் செயலாளர் பூவை தமிழ்ச் செல்வன், மாவட்ட பகுத்தறிவாளர் கழகத் தலைவர் த. ஜானகி ராமன், செயலாளர் கார்த்திகேயன், இளைஞரணித் தலைவர் வி.சோபன்பாபு, செயலாளர் எ.கண்ணன், பெரியார் சுயமரி யாதை திருமண நிலைய இயக்குநர் பசும்பொன் செந்தில் குமாரி, மாநில மாணவர் கழக துணைச் செயலாளர் செ.பெ. தொண்டறம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

நெஞ்சுக்கு நீதி ”ஏழாம்” பாகம் வெளியீடு!

முன்னதாக “நெஞ்சுக்கு நீதி” புத்தகத்தின் ஏழாம் பாகம் என்று அறியப்படுகிற, “தாய் வீட்டில் கலைஞர்” எனும் புத்த கம் வெளியிடப்பட்டது. பகுத்தறிவாளர் டி.டி.ஆர்.செங்குட்டு வன், காப்பாளர் பா.தென்னரசு, கோபாலகிருஷ்ணன், கொரட் டூர் கோபால், த.ஜானகிராமன், மாவட்டத் தலைவர் வெ.கார்வேந்தன் ஆகியோர் கவிஞரிடம் உரிய தொகை கொடுத்து பெற்றுக்கொண்டனர். அதைத் தொடர்ந்து, முதல் வகுப்பு ”பார்ப்பனப் பண்பாட்டுப் படையெடுப்பு” எனும் தலைப்பில் துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன், ”தந்தை பெரியார் ஓர் அறிமுகம்” எனும் தலைப்பில் ஆசிரியர் மா.அழகிரிசாமி, “அறிவியலும் மூடநம்பிக்கையும்” எனும் தலைப்பில் எழுத்தாளர் மஞ்சை வசந்தன், “தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களின் சாதனைகள்” எனும் தலைப்பில் துணைப் பொதுச் செயலாளர் ச. பிரின்சு என்னா ரெசு பெரியார், ”தந்தை பெரியாரின் பெண் விடுதலைச் சிந்த னைகள்” எனும் தலைப்பில் துணைப் பொதுச் செயலாளர் சே.மெ.மதிவதனி, “இந்து - இந்துத்துவா - சங்பரிவார் - ஆர். எஸ்.எஸ்” எனும் தலைப்பில் வழக்குரைஞர் சு. குமாரதேவன் ஆகியோர் வகுப்பெடுத்தனர்.

ஆறு தலைப்புகள்! ஆறு ஆசிரியர்கள்! ஆறு வகுப்புகள்!

கழகத் துணைத் தலைவர் கவிஞர் தனது வகுப்பில், பார்ப்பன பண்பாட்டு படையெடுப்பு எப்படியெல்லாம் சடங் குகள் என்ற பெயரில், பெயர்கள் என்ற பெயரில், சாத்திரம் என்ற பெயரில் ஊடுருவியது என்பதை எடுத்துரைத்தார். இரண்டாம் வகுப்பில் ஆசிரியர் மா.அழகிரிசாமி தனது வகுப்பை படம் காட்டி விளக்கும் முறையில் படங்களுடன் பாடம் நடத்தினார். அதில் பெரியாரின் ஈரோடு இல்லம் தொடங்கி படிப்படியாக ஒவ்வொரு கட்டத்திலும் பெரியாரை படங்களுடன் அறிமுகம் செய்தார். தேநீர் இடைவேளைக்குப் பின்னர் எழுத்தாளர் மஞ்சை வசந்தன் பல்வேறு செயல் முறைகளுடன் கடவுள் இல்லை என்பதையும், ஆத்மா இல்லை என்பதையும், உயிர் என்று ஒரு பொருள் இல்லை என்பதையும் மிக அருமையாக விளக்கினார். இதற்காக அவர் மாணவர்களிடம் சவால் விட்டார். அவர்தான் வென்றார்! மதிய உணவு இடைவேளைக்குப் பின்னர் ச. பிரின்சு என்னா ரெசு பெரியார் ஆசிரியர் செய்த சாதனைகளை புள்ளி விவரங் களாகத் தராமல் தமிழ்நாட்டின் சமூகநீதி வரலாற்றையே பாடமாக எடுத்து ஆசிரியரின் சாதனைகளை மாணவர்களை உணரவைத்தார்.அடுத்து வகுப்பெடுத்த சே.மெ.மதிவதனியும் படங்களைக் காட்டி வகுப்பெடுத்தார். அதில் பெண்களே எதிர்பாராத உரிமைகளை நினைவூட்டி அவற்றை தந்தை பெரியார்தான் மீட்டுக்கொடுத்தார் என்று அதற்குரிய படங் களுடன் காட்டி விளக்கினார். பிற்பகல் தேநீர் இடைவேளைக் குப் பின்னர் வழக்குரைஞர் சு. குமாரதேவன் இந்துமகாசபை தொடங்கி இன்றைக்கிருக்கும் பா.ஜ.க. வரை வரிசைப்படுத்தி அவர்களின் வண்டவாளங்களை தண்டவாளத்தில் ஏற்றினார். 

தோழர்களின் நன்றி பாராட்டாத பணி!

இறுதியாக பயிற்சி முகாமின் ஒருங்கிணைப்பாளர் இரா. ஜெயக்குமார், தலைமைக்கழக அமைப்பாளர் வி. பன்னீர் செல்வம் உள்ளிட்ட மாவட்ட பொறுப்பாளர்களை மேடையில் அமரவைத்து ஒவ்வொருவரையும் அறிமுகம் செய்வித்து, அவர்கள் சமூகத்தில் நல்ல நிலையில் இருப்பதைச் சுட்டிக் காட்டி, அவர்கள் ஏன் பயிற்சி வகுப்பை நடத்துகிறார்கள்? உங்களிடம் எங்களுக்கு ஓட்டுக் கேட்கவா? இல்லை-உங்கள் எதிர்காலம் ஜாதி,மத, பாலின பேதங்களுக்கு ஆட்படாமல் சுயமரியாதையுடன் நீங்கள் வாழ்வதற்காக என்று பேசி சிந் திக்க வைத்தார். ஒருங்கிணைப்பாளர் இரா.ஜெயக்குமார் வகுப் புகளை ஒருங்கிணைப்பதில் கண்டிப்புடனும், நேரத்துடன் முடிவதற்கு ஏற்ப தனது பணிகளை செவ்வனே செய்து முடித்தார். வகுப்புக்களுக்கு இடையில் அம்பத்தூர் பகுதித் தலைவர் ராமலிங்கத்தின் இரட்டைப் பேரன்கள் உரையாடல் மூலமாக பெரியாரியலை சிறப்பாக வகுப்பினருக்கு அறிமுகம் செய்வித்தனர். மதிய உணவு இடைவேளையில் பகுத்தறி வாளர் மதிவாணன் தலைமையில் ஆவடி “புதிய காலம் இசைக்குழு” வினர் பகுத்தறிவுப்பாடல்களை பாடினர். வகுப்பு முடிந்தவுடன் பாடங்களை நன்கு கவனித்து குறிப்புகள் எழுதிய மூவருக்கு புத்தகங்கள் பரிசாக வழங்கப்பட்டன. பங் கேற்ற அனைத்து மாணவர்களுக்கும் பங்கேற்பு சான்றிதழ்கள் கொடுக்கப்பட்டன. மாணவர்களில் மூவர் பயிற்சி முகாமில் தாங்கள் கற்றுக்கொண்டது என்ன என்பதை மேடையேறி மற்றவர்களுடன் பகிர்ந்து கொண்டனர். இறுதியாக பயிற்சிப் பட்டறை ஒருங்கிணைப்பாளர்களுடன் மாணவர்கள் ஒரு குழு ஒளிப்படம் எடுத்துக்கொண்டனர். மாவட்ட துணைத் தலைவர் வை. கலையரசன் நன்றியுரை கூறி நிகழ்ச்சியை நிறைவு செய்தார். 

பயிற்சி முகாமின் உடனடித் தாக்கம்!

வகுப்புகள் நடைபெற்ற ஆர்த்தி மினி அரங்கத்தின் மேலாளர் வித்யா வகுப்பு தொடங்கியதிலிருந்து நிறைவு பெறும் வரை பின்னாலிருந்து கேட்டுக்கொண்டிருந்தார். மாணவர்கள் குழு ஒளிப்படம் எடுத்துக் கொண்ட பின்னர், என்ன நினைத்தாரோ அவரே ஒருங்கிணைப்பாளர்களை அணுகி, “சார், நானும் முழுமையாக வகுப்புகளை கவனித் தேன். எனக்கும் ஒரு சான்றிதழ் கிடைக்குமா?” என்று ஆசை யுடன் வினவினார். எழுதாத சான்றிதழ்களுடன் மாநில ஒருங்கிணைப்பாளர் தஞ்சை இரா. ஜெயக்குமார் புறப்பட்டு போய்விட்டார். ஆகவே ஒருங்கிணைப்பாளர்கள் திகைத்த போது, விதயாவே “சரி உங்களுடன் ஒரு குழு ஒளிப்படமாவது எடுத்துகொள்ளலாமா? உங்கள் எண்ணை வாங்கிக் கொள் ளலாமா?” என்று கேட்டார். முன்னதை நிறைவேற்றி வைக்க முடியாத ஒருங்கிணைப்பாளர்கள், பின்னதை உடனே நிறை வேற்றினர். ஆவடி மாவட்ட ஒருங்கிணைப்பாளர்களுடன் அரங்க மேலாளர் வித்யா மற்றும் அரங்கத் தூய்மைப் பணியா ளர்களுடன் ஒளிப்படம் எடுத்த பிறகு, ஒருவருக்கொருவர் எண்களை பரிமாறிக்கொண்டு, அவரைத் தொடர்பு கொள் கிறோம் என்று சொல்லி விடைபெற்றுக்கொண்டு வந்தனர்.


No comments:

Post a Comment