நாடாளுமன்றத்தில் ஆசைத்தம்பியின் முழக்கம்!
தமிழ்நாடு இந்தளவுக்கு விழிப்புணர்வு பெற்றுள்ளது என்றால், அதற்குக் காரணம், பெரியார் இயக்கம்!
வெவ்வேறு மாநிலங்களில் இருந்து வந்துள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள்,
உங்கள் மாநிலங்களில் பெரியார் இயக்கத்தை உடனே தொடங்குங்கள்!
சென்னை, அக்.14 “தமிழ்நாடு இந்தளவுக்கு விழிப் புணர்வு பெற்றுள்ளது என்றால், அதற்குக் காரணம், பெரியார் இயக்கம்! எனவே, வெவ்வேறு மாநிலங்களில் இருந்து வந்துள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள், உங்கள் மாநிலங்களில் பெரியார் இயக்கத்தை உடனே தொடங் குங்கள்!” என்றார் ஆசைத்தம்பி என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் நேற்று (13.10.2023) சென்னை, இராஜா அண்ணாமலை மன்றத் தில் நடைபெற்ற திராவிட முன்னேற்றக் கழகத்தின் மூத்த முன்னோடி வாலிபப் பெரியார் ஏ.வி.பி. ஆசைத்தம்பி அவர்களின் நூற்றாண்டு விழாவில் ஆற்றிய உரை.
நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்பித்துக் கொண் டிருக்கக் கூடிய ஆன்றோர்களே, சான்றோர்களே,
நம்முடைய வாலிபப் பெரியார் ஆசைத்தம்பி அவர் களின் குடும்பத்தைச் சார்ந்திருக்கக்கூடிய சகோதர, சகோதரிகளே, பத்திரிகை மற்றும் ஊடகத் துறையைச் சார்ந்திருக்கக்கூடிய நண்பர்களே, பெரியோர்களே, தாய்மார்களே, என் உயிரோடு கலந்திருக்கக்கூடிய தலைவர் கலைஞர் அவர்களின் உயிரினும், உயிரான அன்பு உடன்பிறப்புகளே, உங்கள் அனைவருக்கும் என்னுடைய அன்பான வணக்கம்.
‘வாலிபப் பெரியார்’ என்று போற்றப்படும் ஏ.வி.பி.ஆசைத்தம்பி அவர்களின் நூற்றாண்டு விழாவை மிகக் குறுகிய காலத்தில் எழுச்சியுடனும், ஏற்றத்துடனும் இதை ஏற்பாடு செய்திருக்கக்கூடிய அமைச்சர் சேகர்பாபு அவர்களுக்கு முதலில் தலைமைக் கழகத்தின் சார்பில் என் நன்றியை நான் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.
வருங்கால சமுதாயத்திலும் ஆற்றல்மிக்க ஆசைத்தம்பிகள் உருவாக வேண்டும்!
இந்த நூற்றாண்டு விழாவை, ஒரு நிகழ்ச்சியாக மட்டும் நடத்தாமல், ஒளிப்படக் கண்காட்சியையும், அடுத்து ஆசைத்தம்பி அவர்களுடைய வாழ்க்கை வரலாறு குறித்து ஒரு சிறு ஆவணப்படத்தையும் தயாரித்து வழங்கக்கூடிய ஒரு பன்முக விழாவாக இதை நடத்திக் கொண்டிருக்கிறார். எதற்காக தி.மு. கழக முன்னோடிகளைப் போற்றும் இத்தகைய விழாக்களை நடத்துகிறோம்? என்றால், அண்ணன் துரைமுருகன் அவர்கள் எடுத்துச் சொன்னது போல, அவர்களது புகழைப் பரப்புவதற்காக மட்டுமா நடத்துகிறோம்? இல்லை. வரக்கூடிய காலக்கட்டத்தில் வருங்கால சமு தாயத்திலும் ஆற்றல்மிக்க ஆசைத்தம்பிகள் உருவாக வேண்டும் என்பதற்காகத்தான் இது போன்ற விழாக் களை நடத்துகிறோம்!
‘ஒருகாலம் வரும்- சட்டமன்ற உறுப்பினராக ஆவோம்; நாடாளுமன்ற உறுப்பினராக ஆவோம்’ என்றெல்லாம் யாரும் கணக்குப் போடாத காலத்தில், திராவிட இயக்கத் தூணாக தன்னை ஒப்படைத்துக் கொண்டவர் நம்முடைய ஆசைத்தம்பி அவர்கள்.
நூற்றாண்டு நாயகர் தலைவர் கலைஞர் அவர்களின் சம காலத்தவரான அண்ணன் ஆசைத்தம்பி அவர்கள், தலைவர் கலைஞரைவிட அய்ந்து மாதம் இளையவர்.
நீதிக்கட்சியின் தலைவர்களில் ஒருவராக இருந்தவர் ஆசைத்தம்பியின் தந்தையார்!
1938 ஆம் ஆண்டு தலைவர் கலைஞர் அவர்களை, ஹிந்தி எதிர்ப்புப் போராட்டம் திருவாரூர் வீதியில் தமிழ்க் கொடி தாங்கி போராட வைத்தது. அதே ஆண்டில் திராவிட இயக்க எண்ணத்தால் தீவிரமாக உருவானவர்தான் நம்முடைய ஆசைத்தம்பி அவர்கள். அவருடைய தந்தையார் பழனியப்பன் அவர்கள், விருதுநகர் மாவட்டத்தில் நீதிக்கட்சியின் தலைவர்களில் ஒருவராக இருந்தவர்.
விருதுநகர் என்பதே நீதிக்கட்சியின் கோட்டையாக இருந்த நகரம்! அங்கிருந்து உருவானவர்தான் நம்மு டைய ஆசைத்தம்பி அவர்கள். பள்ளிப்பருவ காலத் திலேயே திராவிட இயக்க மாணவர்களை இணைத்து சங்கம் தொடங்கி பல்வேறு அமைப்புகளைத் உருவாக்கி, மேடைகளில் சொற்பொழிவாற்றத் தொடங்கினார்.
‘திராவிட முன்னேற்றக் கழகத்தின் தினத்தந்தி!’
· பேரறிஞர் அண்ணா நடத்திய ‘திராவிட நாடு' -
· சி.பா. ஆதித்தனார் நடத்திய ‘தமிழன்‘ போன்ற இதழ்களில் இளமைக் காலத்திலேயே எழுதத் தொடங்கினார். அதைத் தொடர்ந்து பிற்காலத்தில் 'தனி அரசு' என்ற இதழை அவர் நடத்தினார். முதலில் வார இதழாக வெளிவந்து கொண்டிருந்தாலும், அதற்கு பிறகு சில ஆண்டுகள் நாளிதழாகவும் வந்திருக்கிறது. ‘திராவிட முன்னேற்றக் கழகத்தின் தினத்தந்தி’ என்று அந்தக் காலத்தில் அழைக்கப்பட்டது ஆசைத்தம்பியின் தனி அரசு நாளிதழ்.
பேரறிஞர் அண்ணா - தலைவர் கலைஞரைப் போல ஏராளமான கதைகள் - நாவல்கள் எழுதியிருக்கிறார். நாற்பதுக்கும் மேற்பட்ட கதை நூல்கள் எழுதி இருக்கிறார். கதைகளில் பல்வேறு புதுமைகளைப் புகுத்தியவர் அவர்.
தலைவர் கலைஞர் அவர்கள் திரைக்கதை - வசனம் எழுதிய ’பராசக்தி’ திரைப்படம் எத்தகைய தாக்கத்தை நமது தமிழ்ச் சமுதாயத்தில் ஏற்படுத்தியதோ அதை அனைவரும் தெளிவாக அறிந்திருக்கக் கூடியவர்கள். அந்த பராசக்தி கதையில் வரும் பாத்திரங்களை வைத்தே 'கசந்த கரும்பு' என்ற கதையை எழுதியவர் ஆசைத்தம்பி அவர்கள்.
· திராவிடர்கள்
· திராவிடர் இயக்கம் ஏன்?
· தனி அரசு ஏன்?
· காந்தியார் சாந்தியடைய... போன்ற பல்வேறு கட்டுரைகளை அவர் அந்தக் காலகட்டத்தில் எழுதி திராவிட இயக்கத்தவர்களுக்கு உணர்வூட்டிய படைப்புக்களை படைத்திருக்கிறார்! அதிலும் குறிப்பாக ‘காந்தியார் சாந்தி அடைய’ என்ற புத்தகம் மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது.
அண்ணல் காந்தியார் கொலை செய்யப்பட்ட வேதனையில் எழுதப்பட்ட மிகச்சிறிய புத்தகம் அது. கோட்சே என்ற கொடியவனை - மனதில் இருக்கும் மதவாதத்தைக் கண்டித்து அந்த நூல் எழுதப்பட்டது. இந்த புத்தகம் வகுப்புவாதத்தை ஏற்படுத்துகிறது என்று சொல்லி அந்த நூலை அன்றைய அரசு தடை செய்தது.
சிறைச்சாலையில் மொட்டை அடித்து நிர்வாணப்படுத்தினார்கள்!
ஆசைத்தம்பியை கைது செய்து சிறையில் அடைத்தார்கள். ஆறு மாதக் கடுங்காவல் தண்டனையும் - 500 ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது. இந்த செய்தியைக் கேள்விப்பட்ட அறிஞர் அண்ணா அவர்கள், அன்றைய தினம் கழகத்தின் அமைப்புக்குழுச் செயலாளராக இருந்த மதிப்பிற்குரிய என்.வி.நடராசன் அவர்களிடம் இந்த வழக்கை கண்காணிக்கும் பொறுப்பை அவரிடத்தில் ஒப்படைத்தார். வழக்கு நடத்துவதற்காக குழுவும் அமைக்கப்பட்டது. இது தொடர்பாக நிதி திரட்டும் பணிகள் ஒரு பக்கம் நடந்து வந்தன. அதில் முதல் ஆளாக 50 ரூபாய் நிதி வழங்கினார் பேரறிஞர் அண்ணா அவர்கள்.
ஆசைத்தம்பிக்கு பிணை கிடைத்தது. ஜாமின் கிடைத்தது. சிறையில் இருந்து அவரை விடுவிப்பதற்கு முன்னதாக அவரை கட்டாயப்படுத்தி அவருக்கு மொட்டை அடித்து, கொடுமைப்படுத்தியது சிறைத்துறை. நிர்வாணம் ஆக்கினார்கள். பின்னர் கட்டிக் கொள்ள கோவணம் தரப்பட்டது. துறையூரைச் சேர்ந்த புத்தக வெளியீட்டாளர்களான தங்கவேல், கலியபெருமாள் ஆகியோருடன் சேர்த்து ஆசைத்தம்பிக்கும் மொட்டை அடிக்கப்பட்டது.
மொட்டை அடிக்கப்பட்ட மூவர் படத்தையும்...
இது தி.மு.கழகத்தைச் சேர்ந்தவர்களிடத்தில் அனைவருடைய மனதில் ஒரு வேகத்தை, கோபத்தை, ஆத்திரத்தை உண்டாக்கியது. மொட்டை அடிக்கப்பட்ட இந்த மூவர் படத்தையும் பேரறிஞர் அண்ணா அவர்கள், தனது ‘திராவிடநாடு' இதழில் வெளியிட்டார். கண்காட்சியில் இது இடம் பெற்றிருக்கிறது. இதைப் பார்த்தால் தெரியும். நாடு முழுவதும் கண்டனக் கூட்டங்கள் நடத்தப்பட வேண்டும் என்று அண்ணா அவர்கள் உத்தரவிட்டார். கோவில்பட்டியில் நடந்த தி.மு.கழக செயற்குழுவில் அதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. திருச்செங்கோட்டில் நடந்த கூட்டத்தில் தலைவர் கலைஞர் அவர்கள் பேசினார், 'சிறைச்சாலை என்ன செய்யும்?' என்ற சுந்தராம்பாள் பாட்டை பாடிக் காட்டினார். பாடி விட்டு, ‘சிறைச்சாலை என்ன செய்யும் தெரியுமா? மொட்டை அடிக்கும்' என்று முழங்கினார்.
அந்தக் காலத்தில் திராவிடர் கழகமும் திராவிட முன்னேற்றக் கழகமும் வெளியிட்ட புத்தகங்கள் ஏராளமாக தடை செய்யப்பட்டன. தந்தை பெரியாரின் பொன்மொழிகள் என்ற நூல் தடை செய்யப்பட்டது. அறிஞர் அண்ணாவின் ‘ஆரியமாயை' தடை செய்யப்பட்டது. புலவர் குழந்தையின் ‘இராவண காவியம்' தடை செய்யப்பட்டது. கலைஞரின் நாடகங்கள் - நடிகவேள் எம்.ஆர்.ராதாவின் நாடகங்கள் எல்லாம் தடை செய்யப்பட்டன.
அண்ணாவின் கட்டளை!
அந்த வரிசையில் ஆசைத்தம்பி அவர்களின் ‘காந்தியார் சாந்தி அடைய’ என்ற நூலும் தடை செய்யப்பட்டது. கழகத்தைச் சேர்ந்த அனைவர்க்கும் அறிஞர் அண்ணா அவர்கள் ஒரு கட்டளையை பிறப்பித்தார். 'எந்த புத்தகத்தைத் தடை செய்கிறார்களோ - அந்த புத்தகத்தை பொது இடத்தில் தெருவிளக்கு கம்பத்தின் கீழ் நின்று கொண்டு கூட்டமாக படியுங்கள்' என்று அண்ணா கட்டளையிட்டார்.
கூட்டம் கூட்டமாக நமது தொண்டர்கள், அந்த புத்தகங்களைப் படித்தார்கள். இலங்கையில் இந்தப் புத்தகத்தை அச்சிட்டு வெளியிட்டார்கள். மலையாளத்தில் மொழிபெயர்த்து வெளியிட்டார்கள். இது இன்னும் நெருக்கடியை ஏற்படுத்தியது. அப்போது, சென்னை வண்ணை நகர் பகுதியில் எஸ்.சி.மணி, பி.மணி, ராஜா ஆகிய மூன்று தி.மு. கழகத் தொண்டர்கள் காவல்துறையால் கைது செய்யப்பட்டார்கள்.
அறிஞர் அண்ணாவின் ‘ஆரியமாயை' நூலையும், ஆசைத்தம்பியின் ‘காந்தியார் சாந்தி அடைய’ நூலையும் விற்றார்கள் என்று கைது செய்யப்பட்டார்கள். வண்ணை நகர் பகுதியில் நின்றுகொண்டு அஞ்சாமல் முழக்கம் போட்டுள்ளார்கள் இந்த மூவரும். அத்தகைய வண்ணை நகரை உள்ளடக்கிய வடசென்னைப் பகுதியில்தான் இன்றைய தினம் ஆசைத்தம்பிக்கு நூற்றாண்டு விழாவை எடுத்துக் கொண்டிருக்கிறோம்.
அவருடைய புத்தகம் விற்றதால், 1950 ஆம் ஆண்டு கைது செய்தார்கள். ஆட்சிக்கு வந்து அதே பகுதியில் அவருக்கு நூற்றாண்டு விழாவை இன்றைக்கு நாம் கம்பீரத்தோடு கொண்டாடிக் கொண்டிருக்கிறோம். இதுதான் திராவிட இயக்கத்தின் வெற்றி!
திராவிட இயக்கத் தோழர்களுக்குக் கிடைத்திருக்கும் பெருமை! இத்தகைய அடக்குமுறையைப் பற்றியோ, கைது செய்யப்படுவதைப் பற்றியோ, சிறைச்சாலை சித்திரவதைகள் பற்றியோ ஆசைத்தம்பி எந்தக் காலத்திலும் கவலைப்பட்டவரல்ல!
எதைப்பற்றியும் கவலைப்படமாட்டார்
‘மிசா'வில் எங்களோடு ஓராண்டு காலம் சிறையில் இருந்தார். எண்ணிப் பார்க்கிறேன். அதிலும் குறிப்பாக, சென்னை சிறைச்சாலையில் நூற்றுக்கும் மேற்பட்டோர் இருந்தார்கள் என்று சொன்னால், அதில் எதற்கும் அஞ்சாமல் ஒரு சிறிதும் கவலைப்படாமல் இருந்த நம்பர்-1 கைதி யார் என்று கேட்டால் ஆசைத்தம்பி தான். நான் இப்போதும் சொல்கிறேன், தைரியமாக சொல்கிறேன். எதைப்பற்றியும் கவலைப்படமாட்டார். நாங்கள் எல்லாம் சிறைக்கு புதிது. எங்களைப் போன்றோர் சிறைக்கு புதிது. எங்களுக்கெல்லாம் தைரியம் ஊட்டியவர். சிறை என்றால் என்ன என்பதை எங்களுக்கு கற்றுக்கொடுத்தவர். அவரிடத்தில் பல பேர் சென்று கேட்பார்கள். எப்போது விடுவிப்பார்கள்? கவலைப்படாதீர்கள், 1 year, 1 year என்று சொல்வார். அவ்வளவு கூலாக சொல்வார். அவரைப்போல ஒரு ஜென்டில்மேனை நான் இதுவரைக்கும் பார்த்ததில்லை. எதைப் பற்றியும் கவலைப்படமாட்டார்.
24 முறை சிறை சென்றவர் நம்முடைய ஆசைத்தம்பி
கணக்குப் போட்டு பார்த்தேன், மொத்தம் 24 முறை, இனம் -மொழி -நாடு காக்கப்போராடி சிறை சென்றவர் நம்முடைய ஆசைத்தம்பி அவர்கள். எப்போதுமே தனது மனதில் பட்டதை அப்படியே யாருக்கும் பயப்படாமல், வெளிப்படையாக எடுத்துச் சொல்லக்கூடிய ஆற்றல் ஆசைத்தம்பி அவர்களுக்கு உண்டு.
'ஜஸ்டிஸ் கட்சிக்கு புதிய அமைப்பு வேண்டும்' என்ற தலைப்பில் கட்டுரை தீட்டியவர்
இன்னும் சொல்லவேண்டும் என்று சொன்னால், அன்றைய நீதிக்கட்சித் தலைவர்களின் நடவடிக்கைகள் சரியாக இல்லை என்பதையும் மேடைகளில் பேசி இருக்கிறார். அறிஞர் அண்ணாவின் 'திராவிட நாடு' இதழில் 'ஜஸ்டிஸ் கட்சிக்கு புதிய அமைப்பு வேண்டும்' என்று 1943 ஆம் ஆண்டு கட்டுரை தீட்டியவரும் ஆசைத்தம்பி அவர்கள். இதை வைத்துப் பார்த்தால் 'திராவிடர் கழகம்' என்ற அமைப்பை உருவாக்குவதற்கான அடித்தளம் அமைத்தவரே ஆசைத்தம்பி அவர்கள்தான் என்றுகூட சொல்லலாம். அங்கே அண்ணன் திருநாவுக்கரசு உட்கார்ந்திருக்கிறார். நம்முடைய திராவிட இயக்கத்தின் எழுத்தாளர். ‘முரசொலி'யில் இரண்டு நாட்களாக ஆசைத் தம்பி அவர்களைப் பற்றி தொடர் கட்டுரையை எழுதியிருக்கிறார். அதில் எல்லாம் இடம் பெற்றிருக்கிறது. 1949 ஆம் ஆண்டு திராவிட முன்னேற்றக் கழகத்தை உருவாக்கியபோது, தலைவர் கலைஞர் அவர்கள் பொறுப்பு வகித்த கழகப் பிரச்சாரக் குழுவில் உறுப்பினராக ஆசைத்தம்பி அவர்களும் இடம் பெற்றார்கள்.
15 பேரில் ஒருவர்தான் ஆசைத்தம்பி!
விருதுநகர் நகர்மன்ற உறுப்பினராக தனது மக்கள் பணியைத் தொடங்கினார். கழகம் முதன்முதலாகப் தேர்தல் களத்தில் நின்றபோது, 1957 ஆம் ஆண்டு நின்றபோது சட்டமன்றத் தேர்தலில் நாம் 15 தொகுதிகளை வென்றோம். அந்த 15 பேரில் ஒருவர்தான் ஆசைத்தம்பி.
ஆயிரம் விளக்கு தொகுதியில் சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அதே ஆயிரம் விளக்கில் பின்னாளில் நான் சட்டமன்ற உறுப்பினராக வரக்கூடிய வாய்ப்பைப் பெற்றேன், அதுதான் எனக்கு பெருமை.
1967 இல் தேர்தலில் எழும்பூர் தொகுதியில் நின்று வெற்றி பெற்றார். இதில் என்ன சிறப்பு என்றால், இரண்டு தேர்தலிலும் அந்தக் காலத்தில் செல்வாக்காக இருந்த இரண்டு அமைச்சர்களை தோற்கடித்தவர் ஆசைத்தம்பி அவர்கள். ஆயிரம் விளக்கு தொகுதியில் வேட்பாளராக நின்ற அன்றைய அறநிலையத்துறை அமைச்சர் வெங்கடசாமி போட்டியிட்டார். அவரை ஆசைத்தம்பி தோற்கடித்தார். அதே போல் எழும்பூர் தொகுதியில், அன்றைய அமைச்சர் ஜோதி வெங்கடாசலத்தை எதிர்த்து நின்று அவரையும் தோற்கடித்தார்.
‘‘ஒரு எம்.பி. என்பது 100 எம்.பிக்கு சமம்!''
அதற்கு பிறகு 1977 இல் நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு. கழகத்தின் சார்பில் ஒரே ஒருவர் தான், ‘‘ஒன்னே ஒன்னு, கண்ணே கண்ணு,'' ஆசைத்தம்பி வடசென்னையிலிருந்து வெற்றி பெற்றார்.
திராவிட முன்னேற்றக் கழகத்தில் ‘‘ஒரு எம்.பி. என்பது 100 எம்.பிக்கு சமம்'' என்பதை அப்போதே நிரூபித்தார் அண்ணன் ஆசைத்தம்பி அவர்கள். அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்தார்.
நாடாளுமன்றத்தில் இறுதி உரையாற்றும்போது, கடைசியாக, நிறைவாக உரையாற்றும்போது, “இந்தியாவை ஒற்றைத்தன்மை கொண்ட நாடாக மாற்றிவிடாதீர்கள்” என்று முழங்கியவர் ஆசைத்தம்பி அவர்கள். அப்போதே முழங்கியிருக்கிறார்.
“தமிழ்நாடு இந்தளவுக்கு விழிப்புணர்வு பெற்றுள்ளது என்றால், அதற்குக் காரணம், பெரியார் இயக்கம்!
“ஒற்றை மொழி - ஒற்றை மத நாடாக மாற்றிவிடாதீர்கள்” என்று எச்சரிக்கை செய்தார். அவரது நாடாளுமன்ற உரைகளில் இன்னொன்றையும் வலியுறுத்தி இருக்கிறார். “தமிழ்நாடு இந்தளவுக்கு விழிப்புணர்வு பெற்றுள்ளது என்றால், அதற்குக் காரணம், பெரியார் இயக்கம்! எனவே, வெவ்வேறு மாநிலங்களில் இருந்து வந்துள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள், உங்கள் மாநிலங்களில் பெரியார் இயக்கத்தை உடனே தொடங்குங்கள்!” என்றும் ஆசைத்தம்பி அவர்கள் அங்கே பேசி இருக்கிறார்.
தி.மு.க.வில் இருந்தாலும் தி.க.வின் மீது அதிகமான பற்றுக் கொண்டவர் ஆசைத்தம்பி அவர்கள். தி.மு.க. - தி.க. ஆகிய இரண்டு இயக்கங்களும் இணைந்து ஒரு போராட்டத்தை நடத்தி, கைது செய்யப்பட்டு அத்தனை பேரும் சிறையில் அடைக்கப்பட்டார்கள்.
திராவிடர் கழக வரிசையில் நின்று, கையை தூக்கி ‘‘இங்கே இருக்கிறேன்'' என்றார்!
காலையில் அனைத்து கைதிகளையும் நிற்க வைப்பார்கள், ஷிuஜீமீக்ஷீவீஸீtமீஸீபீமீஸீt வந்து செக் செய்வார். தி.மு.க.வினர் தனியாகவும் - தி.க.வினர் தனியாகவும் நின்றுள்ளார்கள். அப்போது கலைஞர் அவர்கள் கேட்கிறார், ஏன் இப்படி பிரிந்து பிரிந்து நிற்கிறீர்கள் என்று ஆசிரியர் வீரமணி அவர்களிடம் கேட்டுள்ளார். “ஜெயிலர்தான் நிற்கச் சொன்னார்” என்று ஆசிரியர் சொல்லியிருக்கிறார். “ஆசைத்தம்பி எங்கே நிற்கிறார்?” என்று தலைவர் கலைஞர் கேட்டிருக்கிறார்... திராவிடர் கழக வரிசையில் நின்று கையை தூக்கி இங்கே இருக்கிறேன் என்று ஆசைத்தம்பி சொல்கிறார்.
அந்தளவுக்கு பெரியார்வாதியாக இருந்ததால்தான், அவர் இன்றைக்கு ‘வாலிபப் பெரியார்’ என்று அவர் அழைக்கப்பட்டுக் கொண்டிருக்கிறார். ஆசைத்தம்பி அவர்களின் திருமணத்தை தந்தை பெரியார் அவர்கள் நடத்தி வைத்தார். அவரது மகள் காந்தி திருமணத்தையும் தந்தை பெரியார்தான் நடத்தி வைத்தார். மகன் சவுந்தரபாண்டியன் திருமணத்தை தலைவர் கலைஞர் அவர்கள் நடத்தி வைத்தார்.
அந்தமானில் தனது இறுதி உரையில்...
திராவிடக் கோட்டையின் தலைமைத் தளபதியாக இருந்தவர் அவர். அத்தகைய ஆசைத்தம்பியை நாம் அந்தமானில் இழந்தோம். அந்தமானில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். தி.மு. கழகக் கொடியை ஏற்றி வைத்தார். நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்தபோது களைப்பாக இருக்கிறது - கண்ணைக் கட்டுவது போல இருக்கிறது என்று சொல்லி இருக்கிறார். மூளையில் இரத்தக் குழாய் வெடித்து அங்கேயே இறந்தும் போனார். அவரது உடலை அங்கிருந்து எடுத்து வருவதற்கே பெரிய அளவில் போராட்டம் நடந்தது. அவரது உடலைப் பார்த்து தலைவர் கலைஞர் அவர்கள் கதறினார். ஏனென்றால் தனது இறுதி உரையில் அந்தமானில் பேசுகிறபோது, கலைஞர் சார்பில் உங்களுக்கெல்லாம் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்றுதான் பேசி இருக்கிறார் ஆசைத்தம்பி.
'திராவிட இயக்கம் துவங்காமல் போயிருந்தால் கேட்பாரற்ற அனாதைகளாக ஆகியிருப்போம்!'
தனது இறுதி உரையில், 'திராவிட இயக்கம் துவங்காமல் போயிருந்தால் கேட்பாரற்ற அனாதைகளாக ஆகியிருப்போம்' என்று சொன்னவர் ஆசைத்தம்பி அவர்கள். இதுதான் அவரது மரண சாசனம்!
அந்தக் கூட்டத்தில், அந்தமானில் இருக்கக்கூடிய தி.மு.கழகத் தோழர்கள் ஆசைத்தம்பியை பலரும் புகழ்ந்து பேசினார்கள். இறுதியாக அவர் சொன்னார்: “இவை எதுவும் எனக்கு கிடைத்த புகழ் அல்ல, திராவிட முன்னேற்றக் கழகத்தில் நான் இருப்பதால் கிடைத்த பெருமை!” என்று சொன்னவர் ஆசைத்தம்பி அவர்கள்.
திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஒவ்வொரு பொறுப்பாளர்களும் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பதற்கு எடுத்துக்காட்டான சொற்கள் இவை!
ஆசைத்தம்பியின் வாழ்க்கை - ஒவ்வொரு தொண்டருக்குமான இலக்கணம்!!
ஆசைத்தம்பி பற்றி நம்முடைய இனமானப் பேராசிரியர் அவர்கள் சொல்கின்றபோது, “கலைஞரின் நெஞ்சில் வேல்பாய்ந்தால், அந்த வேலை எடுத்து எதிரியின் நெஞ்சிலே பாய்ச்சும் வீரம் கலைஞருக்கு உண்டு. கலைஞரின் முதுகில் யாராவது வேல் பாய்ச்சிவிடக் கூடாது என்பதற்காக, நின்று காத்தவர் நம்முடைய ஆசைத்தம்பி" என்று சொன்னார்.
இதுதான் ஒவ்வொரு தொண்டருக்குமான இலக்கணம்! ஆசைத்தம்பி மறைந்தபோது தலைவர் கலைஞர் அவர்கள் உருக்கமாக எழுதினார்கள்...
“என் அன்பே! ஆசைத்தம்பி! நீ மறையவில்லை. மறைய மாட்டாய். உன்னையும், உன் உறுதியையும் நாங்கள் மறக்க மாட்டோம்" - என்று சொன்னார் தலைவர் கலைஞர் அவர்கள்!
ஆசைத்தம்பி அவர்களை நாம் மறக்கவில்லை; அவரது உறுதியை மறக்கவும் முடியாது என்பதன் அடையாளமாகத்தான் இந்த நூற்றாண்டு விழாவை நாம் கொண்டாடிக் கொண்டிருக்கிறோம்.
‘வாலிபப் பெரியார்’ ஆசைத்தம்பி அவர்களின் புகழ் வாழ்க! வாழ்க! வாழ்க! வாழ்க! என்று கூறி விடைபெறுகிறேன்.
நன்றி! வணக்கம்.
- இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் உரையாற்றினார்.
No comments:
Post a Comment