மராத்திய மாநிலம் மும்பையில் வசித்து வருபவர் இறை ச.இராசேந்திரன் (வயது 61). அனைத்து மக்களிடமும் அன்போடு பழகி வரும் இராசேந்திரன் "காப்பியம்" எனும் பெயரில் அச்சகம் ஒன்றை நடத்தி வருகிறார். மிகச் சிறந்த கவிஞரும் கூட! நூல்கள் வெளியிட்டுள்ளார்.
திராவிடர் கழக, பகுத்தறிவாளர் கழக நிகழ்ச்சிகளுக்கு அவர்தான் அழைப்பிதழ்கள் தயார் செய்யும் பொறுப்பை ஏற்பார். ஆனால் அதற்குரிய பணம் எதுவும் பெறுவதில்லை. "எனக்கும் உரிமை இருக்கிறது; கடமை இருக்கிறது", என்கிற அளவிலே அவரின் சிந்தனைகள் இருக்கிறது. கடந்த 20 ஆண்டுகளாக அவர் இயக்க ஆதரவாளர்!
இந்த இடத்திலே இதன் தலைப்பை மீண்டும் வாசிக்கவும். அவர் ஓர் ஆத்திகர்.
இந்த ஆத்திகர் பயிற்சிப் பட்டறைக்குத் தனியாக வந்தாரா? அதுதான் இல்லை! இணையர் சகிதம் வந்த இராசேந்திரன் தனது மூன்று பிள்ளைகள், மரு மகள்கள், பேரன், பேத்திகளையும் அழைத்து வந்திருந்தார்.
இவரைப்பற்றி எழுதுவதற்கு இதுதான் சிறப்பா...? இல்லையில்லை... இனிதான் எழுதப் போகிறோம். பயிற்சிப் பட்டறை நிறைவில் இராசேந்திரன் கையில் ஒரு பொருளுடன் வந்தார். எல்லோரும் அவரையே உற்று நோக்க, அவர் ஒலிவாங்கியைப் பிடித்தார்.
"நண்பர்களே! எனது பெயர் இறை ச.இராசேந் திரன். இன்றைய பெரியாரியல் பயிற்சிப் பட்டறையில் குடும்பமாகக் கலந்து கொண்டதில் எனக்குப் பெரு மகிழ்ச்சி! மராத்திய மாநில திராவிடர் கழகத்திற்கும், பகுத்தறிவாளர் கழகத்திற்கும் என்னால் ஆன உழைப்பு, உதவிகள் எப்போதும் இருக்க வேண்டும் என நினைப்பவன் நான்!
அந்த வகையிலே அழைப்பிதழ் தயார் செய்து தருவது, நிகழ்விலே பங்கேற்பது என்பதைத் தாண்டி இப்போது ஒரு செயல் செய்துள்ளேன். என் கையிலே சிறிய உண்டியல் ஒன்று உள்ளது. அண்மைக் காலமாகவே இந்த முடிவை நான் எடுத்துள்ளேன்!
எனது உறவினர் ஒருவரின் நிகழ்ச்சிக்கு அவரின் இல்லம் சென்றிருந்தேன். அவர் வீட்டில் அருகருகே இரண்டு உண்டியல்கள் வைத்திருந்தார். என்ன வென்று விசாரித்தேன். "கையில் காசு கிடைக்கும் போதெல்லாம் அதில் போடுவேன். ஒரு உண்டியல் தேசத்திற்கு! மற்றொன்று தெய்வீகத்திற்கு என்றார்! தேசத்திற்கு என்பது ஆர்.எஸ்.எஸ் அமைப்பிற்கும், தெய்வீகத்திற்கு என்பது கோயிலுக்கும் என்றார்.
எனக்கும் மனதிற்குள் ஏதோபட்டது. அன்றே நானும் ஒர் உண்டியல் வைத்தேன்! சிறுக, சிறுகப் பணம் சேகரித்தேன். இதோ ரூ.454 சேர்ந்துள்ளது. அதைக் கொடுப்பதற்காக எடுத்து வந்துள்ளேன். இது இப்போது சிறு தொகையாக இருந்தாலும், அடுத்த ஆண்டு முழுவதுமாகச் சேர்ப்பேன்.
அவர்கள் ஏதேதோ காரணத்திற்காகப் பணம் சேர்க்கட்டும், எனக்கு இனவுணர்வு முக்கியம்! நம் வீட்டுப் பிள்ளைகளின் கல்வி முக்கியம்! சமூகநீதி முக்கியம்! எனவே திராவிடர் கழகத்திற்கு நாம் கொடுக்கிற நன்கொடை இச்சமூக வளர்ச்சிக்கே பயன்படும்! அவ்வகையில் குறுகிய நாட்களில் நான் சேர்த்த தொகையை வழங்குவதில் பெருமை கொள்கிறேன்", எனப் பலத்த கரவொலிக்கிடையே இறை.ச.இராசேந்திரன் உண்டியலை வழங்கினார்!
நல்ல கொள்கைகளை வழிநடத்த முன்மாதிரி மனிதர்கள் வந்து கொண்டே இருப்பார்கள்! நன்றி இறை.ச.இராசேந்திரன் அய்யா!
இந்த 454 ரூபாயுடன் மும்பைத் திராவிடர் கழகத் தோழர்கள் 546 சேர்த்து, ரூ ஆயிரத்தை விடுதலை வளர்ச்சி நிதியாக வழங்கினர்!
- வி.சி.வில்வம்
No comments:
Post a Comment