இன்றைக்கு எமக்கு அளித்த புதிய பிரச்சார ஊர்தி என்பது என்னை மேலும் மேலும் வேலை வாங்குவதற்காகத்தான்!
என் இறுதிமூச்சு அடங்கும்வரை இந்த ஈரோட்டுப் பயணம் தொடர்ந்துகொண்டே இருக்கும்!
இப்பொழுது நடக்க இருப்பது இரு கட்சிகளுக்கான போர் அல்ல!
இரு தத்துவங்களுக்கிடையிலே நடக்கும்போர்!
இதில் நாம் வெற்றி பெற்றாகவேண்டும் - புதிய வேனுக்காக நன்கொடை கொடுத்தவர்களுக்கு நன்றி! நன்றி!!
திருச்சி, அக்.21 எனக்கு இப்பொழுது அளிக்கப்பட்டுள்ள புதிய வேன் என்னிடம் மேலும் வேலை வாங்குவதற்காக அளிக்கப்பட்டதாகும் - இறுதிமூச்சு அடங்கும்வரை எனது ஈரோட்டுப் பயணம் தொடர்ந்துகொண்டு இருக்கும். நடைபெறவிருக்கும் நாடாளுமன்றப் பொதுத்தேர்தல் என்பது ஏதோ இரு அரசியல் கட்சி களுக்கு இடையிலான போர் அல்ல - இரு சித்தாந்தங் களுக்கிடையே நடைபெறும் போராகும். இதில் நாம் வெற்றி பெற்றாகவேண்டும்; நம் பயணம் தொடரும், தொடர்ந்துகொண்டே இருக்கும் என்று எழுச்சி முரசு கொட்டினார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.
ஈரோட்டுப் பாதையில் தொடர்பயணம்
தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்குப் பிரச்சார ஊர்தி வழங்கும் விழா!
நேற்று (20.10.2023) மாலை திருச்சி, புத்தூர் நால் ரோட்டில் நடைபெற்ற ‘‘ஈரோட்டுப் பாதையில் தொடர் பயணம் - தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்குப் பிரச்சார ஊர்தி வழங்கும் விழா''வில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் நிறைவுரையாற்றினார்.
அவரது நிறைவுரை வருமாறு:
தமிழ்நாட்டில் ஒரு கருத்தியல் போர்!
வரலாற்றில் முக்கியமாக அதிலும் குறிப்பாக தமிழ் நாட்டில் ஒரு கருத்தியல் போர், ஒன்றிய ஆட்சிக்கும் எதிரான போர்! முக்கியமான ஒரு காலகட்டத்தை நாம் அடைந் திருக்கின்றோம் என்பதை மகிழ்ச்சியோடும், மனநிறை வோடும், அறிவிக்கும் நிலையில், இனிமேல் நாம் ஓய்ந்திருக்க முடியாது - படுக்கையிலே சாய்ந் திருக்கக் கூடாது என்பதற்காகத்தான் - எப்பொழுதும் எதிரிகளை நோக்கிப் பாய்ந்திருக்கவேண்டிய கால கட்டம் என் பதை வலியுறுத்தக் கூடிய வகையில் நடைபெறக்கூடிய இந்த ‘‘ஈரோட்டுப் பாதையில் தொடர் பயணம்'' என்கிற புதிய ஊர்தியை எனக்கு அளிக்கக் கூடிய இந்த சிறப் பான நிகழ்ச்சியின்மூலம் என்னிடம் அதிகமான வேலையை வாங்கவேண்டும் என்ற உறுதிப்படைத் திருக்கின்ற உங்களுக்கு என்னுடைய தலைதாழ்ந்த நன்றி!
வருத்தப்படக் கூடிய நிலைக்கு உங்களை ஒருபோதும் தள்ளமாட்டேன்!
அந்த நம்பிக்கையை நான் நியாயப்படுத்துவேன்; உங்களை ஒருபோதும் ஏமாற்றமாட்டேன். நாம் எதிர் பார்த்துக் கொடுத்தது நடக்கவில்லையே என்று வருத் தப்படக் கூடிய நிலைக்கு உங்களை ஒருபோதும் தள்ளமாட்டேன் என்ற உறுதியைக் கூறி என்னுரையை தொடங்குகிறேன். இந்நிகழ்ச்சிக்கு வந்திருக்கின்ற உங்களுக்கெல்லாம் என்னுடைய அன்பான வணக்கத் தினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
எனக்கு பயண ஊர்தியை வழங்கி, ‘கீ'யைக் கொடுத்திருக்கிறார்கள்.
‘கீ’.வீரமணி என்று போட்டிருப்பதை
ஒவ்வொரு முறையும் திருத்துவோம்!
என்னுடைய தந்தையார் பெயர் கிருஷ்ணசாமி - அழைப்பிதழ்களில் என் பெயரை போடும்பொழுது பல நேரங்களில் ‘கீ'.வீரமணி என்று போடுவார்கள். ஒவ் வொரு முறையும் அதனைத் திருத்துவோம்.
ஒருமுறை, சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்ற விழாவில் கலைஞர் அவர்கள் விழாக் குழு சார்பில், எனக்கு வேன் கொடுத்தார். இவ்விழா அழைப்பிதழில் இருக்கும் படத்தில் பார்த்திருப்பீர்கள்.
சொல்லை வைத்து விளையாடக்கூடிய
ஆற்றல் படைத்தவர் கலைஞர்!
கலைஞர் எப்பொழுதும் சொல்லை வைத்து விளையாடக்கூடிய ஓர் ஆற்றல் படைத்தவர். அப்படிப்பட்ட கலைஞர் அவர்கள், ‘‘இவருடைய பெயரை கி.வீரமணி என்று அழைத்தார்கள்; கி.வீரமணி என்று அழைப்பதற்கு மற்றவர்களுக்கு எப்படி இருக்கிறதோ, எனக்கு எப்பொழுதும் ‘கீ' கொடுத்துக் கொண்டிருப்பவர் அவர்; ஆகவே தான், ‘கீ' வீரமணி என்றும் இவரை அழைக் கிறார்கள்'' என்று வேடிக்கையாகச் சொன்னார்.
ஆனால், அன்றைக்கு அவர் என்னைப்பற்றி அப்படிச் சொன்னார். இன்றைக்கு நீங்கள் இந்த வேனைக் கொடுத்ததன்மூலமாக, எங்களுடைய தோழர்கள் ‘கீ' எனக்குக் கொடுத்துக் கொண்டிருக் கிறீர்கள். ‘சாவி' கொடுத்துக் கொண்டிருக்கிறீர்கள்.
சில நேரங்களில், பழைய கிராமஃபோன் பெட்டி சாவி சரியாக இல்லையென்றால், மிகவும் மங்கலாக ஒலிக்கும். மறுபடியும் அதற்குக் ‘கீ' கொடுப்பார்கள். பழைய கிராமஃபோன் பயன்படுத்தியவர்களுக்குத்தான் இது தெரியும்.
ஆகவேதான், இந்த வேன் வழங்கக்கூடிய நிகழ்ச்சி யில் எனக்கு சாவி கொடுத்திருக்கிறீர்கள்.
வேன் அளிப்பதற்கு 40 பேர் காரணமானவர்கள் என்று இங்கே சொன்னார்கள்; ஒரு குறிப்பிட்ட காலகட்டத்திற்குள் இந்த வேன் தயாராகி இருக்கிறது. இது ஒரு முக்கியமான காலகட்டம்!
‘‘பழுதில்லாத கொள்கை -
எனவே, பழுதில்லாத பயணம்!’’
வருகின்ற நாடாளுமன்றப் பொதுத் தேர்தலில் ‘இந்தியா' கூட்டணி வெற்றி பெற்றால்தான், இந்தியா வினுடைய விடியல் தொடங்கும் என்ற காலகட்டத்தில், நீங்கள் ஓய்ந்திருக்கக் கூடாது; வண்டியும் எந்த இடத்திலும் பழுதாகக் கூடாது என்பதால்தான், ‘‘பழு தில்லாத கொள்கை - எனவே, பழுதில்லாத பயணம்!'' எனவே, அது பழுதில்லாத முறையில் நடக்கவேண்டும் என்ற முறையில், சரியான நேரத்தில் அளித்தமைக்காக மீண்டும் அனைவருக்கும் தலைதாழ்ந்த நன்றியை நான் உரித்தாக்கிக் கொள்கிறேன்.
40 மட்டுமல்ல - 400-ம் நமதே!
நன்கொடை கொடுத்தவர்கள் 40 பேர்; நம்மு டைய முதலமைச்சரும் கேட்கிறார், நாற்பதும் நமதே!
‘‘40 தயாராக இருக்கிறது, அதிலொன்றும் சந் தேகமேயில்லை. நாற்பதும் நமதே'' என்றால் மட்டும் போதாது; அது பழைய முழக்கம். 400-ம் நமதே என்று சொல்லக்கூடிய அளவிற்கு இருக்க வேண்டும்.
எனவே, வரப் போவது அவர்களுக்குப் பூஜ்ஜியம் - அந்தப் பூஜ்ஜியம் நமக்குச் சேரும். ஆகவே 40 - 400 ஆகும் என்று சொல்லக்கூடிய அளவிற்கு, மிக முக்கியமான ஒரு காலகட்டத்தில் எனக்குப் பயண ஊர்தியை அளித்திருக்கிறீர்கள்.
இன்றைக்கு மிக முக்கியமான பிரச்சினைகளைப்பற்றி இங்கே சொன்னார்கள். சுற்றுப்பயணத்தின் இடையில் மூன்று நாள்கள் ஓய்வு. ஏனென்றால், அந்த மூன்று நாள்களும் ‘பண்டிகை' என்று சொன்னார்கள்; அந்த நேரத்தில் நாம் பிரச்சாரத்தை மேற்கொள்ளவேண்டிய அவசியமில்லை. அதற்காக ஓய்வு என்று அதற்கு அர்த்தமல்ல; வண்டியை சரிப்படுத்துகிறோம்; மீண்டும் 25 ஆம் தேதி அன்று அந்தச் சுற்றுப்பயணத்தை தொடங்குகிறோம்.
இன்றைக்கு நான் பேச்சாளன் அல்ல;
கேட்பாளன், செயலாளன்!
சுருக்கமாக சொல்கிறேன், பேசுவதற்கு நேரமில்லை. பல மேடைகளில் எப்பொழுதும் பேசிக் கொண்டிருப் பவன். ஆகவே, இங்கே மற்றவர்கள் பேசுவதை நான் கேட்கவேண்டும். இன்றைக்கு நான் பேச்சாளன் அல்ல; கேட்பாளன், செயலாளன்!
இங்கே சில புத்தகங்களை வெளியிட்டோம். அவற்றை அவசர அவசரமாக தயாரித்து எடுத்து வந்திருக்கின்றோம். அப்படி கொண்டு வந்த புத்தகம் ஒன்று, ‘‘ஆபத்து, ஆபத்து, மீண்டும் குலத்தொழில் திணிப்பா?'' என்ற தலைப்பு. நன்கொடை 20 ரூபாய். இந்த விலை அடக்கத்தைவிட குறைவு. நாம் நட்டத் திற்குத்தான் கொடுக்கிறோம். ஏனென்றால், மக்களிடம் பரவவேண்டும் என்பதற்காக.
புத்தகங்களை வாங்குங்கள்,
படியுங்கள், பரப்புங்கள்!
அதேபோல, ‘‘ஜாதிவாரிக் கணக்கெடுப்பு அவசியம் ஏன்?'', ‘‘ஸநாதன ஒழிப்பு ‘ஹிந்து'க்களுக்கு எதிரானதா?'', ‘‘மன்னர்களும், மனுதர்மமும்!'' போன்ற புத்தகங்கள் இந்தக் கூட்டத்தில் பரப்பப்படுகின்றன. இங்கே வாங்கி னால் உங்களுக்கு 20 ரூபாய் லாபம். தந்தை பெரியார்தான் சொல்வார், ‘‘இந்தக் கூட்டத்தில் வாங்கினால் கழிவு அதிகம்'' என்பார். ஆகவே, இப்புத்தகங்களை வாங் குங்கள், படியுங்கள், பரப்புங்கள்! அதுதான் என்னுடைய அன்பான வேண்டுகோள்.
இங்கே கொடுக்கப்பட்ட வேனினுடைய பெருமை கள்பற்றியெல்லாம் இங்கே சொன்னார்கள். பல நேரங்களில் பார்த்தீர்களேயானால், பொதுவாழ்க்கையில் இருப்பவர்களுக்கு, பொறுப்பில் இருக்கக் கூடியவர் களுக்கு எல்லாம் கார் வழங்கும்பொழுது, ‘குண்டு துளைக்காத கார்' என்று சொல்வார்கள். அது இப்பொழுது மிகவும் முக்கியமானது. ஏனென்றால், அவர்கள் மக்கள் மத்தியில் அவ்வளவு ‘செல்வாக்கோடு' இருக்கிறார்கள் என்று அர்த்தம். ஆகவே, அவர்களுக்குக் குண்டு துளைக்காத கார் என்று சொல்வார்கள்.
எதிர்ப்புக் குண்டுகள் துளைக்காத வேன் -இது எதிரிகளால்
வெல்ல முடியாத ஒரு வேன்!
எனக்கு இங்கே வழங்கப்பட்ட வேன் குண்டு துளைக்காதது அல்ல. இது எதிர்ப்புக் குண்டுகளால் துளைக்கப்பட முடியாத வேன்! இது எதிரிகளால் வெல்ல முடியாத ஒரு வேன். காரணம், இந்தக் கொள்கையினுடைய பலம்! இது ஈரோட்டுப் பயணம்! அதனுடைய தொடர்ச்சி! ஈரோட்டுப் பாதை என்பது இருக்கிறதே, அது சாதாரணமாக செப்பனிட்ட பாதை அல்ல. நாளைக்கும் சரி, அந்தப் பாதையில் மேடு - பள்ளங்கள் இருக்கும்; அந்தப் பாதைகளில் கற்களும், முற்களும் இருக்கும். அந்தப் பாதைகளில் எப்படியாவது இந்த வண்டி ஓடக்கூடாது என்பதற்காகவே நெருக்கடி களைக் கொடுப்பார்கள். அவற்றையெல்லாம் தாண்டி இந்தப் பயணம் வெற்றி பெறும்!
இதோ, 102 வயதாகக் கூடிய எங்கள் அறக்கட்டளை யின் தலைவர் அவர்கள் இங்கே அமர்ந்திருக்கிறார், இளைஞர்களைப் போல் என்று சொன்னால், அதற்குக் காரணம் இந்தக் கொள்கைகளில் இருக்கின்ற வலிமை என்று தேசிய முஸ்லிம் லீக் தலைவர் அய்யா பேராசிரியர் அவர்கள் இங்கே சொன்னார்கள்.
இன்றைக்கு எதிரிகளோடு
கடைசி யுத்தம்; இனப் போராட்டத்தினுடைய மிக முக்கியமான கட்டம்!
ஆகவே, அந்த அடிப்படையை நினைத்துப் பார்க்கும்பொழுது, இன்றைக்குத் ‘திராவிட மாடல்' ஆட்சிக்கு எவ்வளவு எதிர்ப்புகள்?
ஈரோட்டில் பிறந்த தந்தை பெரியார் அவர்கள் திருச்சியை தலைநகரமாக்கினார்கள். ஏன், நாம் இந்த இடத்தைத் தேர்ந்தெடுத்தோம் என்று சொன்னால், இது மய்யம். எல்லா இடங்களுக்கும் பயணங்கள் வந்து கொண்டே இருக்கவேண்டும்.
ஆகவே, அப்படிப்பட்ட ஒரு சூழ்நிலையில், இன்றைக்கு இனப் போராட்டத்தினுடைய எதிரிகளோடு கடைசி யுத்தம்; மிக முக்கியமான கட்டம்.
இன்னும் நிறைய நாள் வாழ்ந்தால், நமக்குப் பயன்படுவாரே என்கிற பொறுப்புணர்ச்சி!
ஒரு பெரிய மகிழ்ச்சி - நம்பிக்கையூட்டுகிறது - பல நேரங்களில் என்னுடைய வயதைக் காரணமாக காட்டி, ‘‘நீங்கள் ஓய்வெடுத்துக் கொள்ளவேண்டாமா? ஓய் வெடுத்துக் கொண்டு பணியாற்றுங்கள்'' என்று சொல் வார்கள். அவர்களுக்கு என்னுடைய நன்றி! காரணம், அவர்களுக்கு என்மீது இருக்கின்ற அன்பு, பற்று, பாசம்! இன்னும் நிறைய நாள் வாழ்ந்தால், நமக்குப் பயன் படுவாரே என்கிற பொறுப்புணர்ச்சி. அதன் காரண மாகத்தான் அவர்கள் அப்படி சொல்கிறார்கள். அதற்கு அவர்களுக்கு என்னுடைய தலைதாழ்ந்த நன்றியை மீண்டும் தெரிவித்துக் கொள்கிறேன்.
‘‘தீயணைப்பு வாகனம்'' என்றார்
மதுக்கூர் ராமலிங்கம்!
ஆனால், நான் உரிமையாக அவர்களை நோக்கி ஒரே ஒரு அன்புக் கேள்வி. இங்கே நம்முடைய மதுக்கூர் இராமலிங்கம் அவர்கள் உரையாற்றும்பொழுது சொன்னார், ‘‘இந்த வாகனம் தீயணைப்பு வாகனம்'' என்று. தீயணைப்பு வாகனம் எப்பொழுதும் தயாராக இருக்கும் என்பதினால்தான் அப்படி சொன்னார்.
தந்தை பெரியார் என்ற மூச்சுக்காற்றுதான் இந்த சமுதாயத்தை வாழ வைத்துக் கொண்டிருக்கின்றது!
ஆனால், நான் இன்னும் ஒருபடி மேலே சென்று சொல்கிறேன் - இராணுவ வீரர்கள் ஓய்வெடுக்க முடியுமா? காவல்துறையினர் ஓய் வெடுக்க முடியுமா? விடுமுறைகூட எடுக்க முடி யாது; அதுதான் மிகவும் முக்கியானது. அதுபோல, காற்று ஓய்வெடுக்க முடியுமா? இதயம் ஓய் வெடுக்கலாமா? மூச்சுக் காற்று தன் வேலையைச் செய்யாமல் இருக்கலாமா? அதுபோல, திராவிட இயக்கம் என்று சொன்னால், தந்தை பெரியார் என்ற மூச்சுக்காற்றுதான் இந்த சமுதாயத்தை வாழ வைத்துக் கொண்டிருக்கின்ற மூச்சுக்காற்று. அதனை அடக்கவேண்டும் என்று இன எதிரிகள் நினைக்கிறார்கள்.
வண்டிக்குத் தேய்மானம் ஏற்பட்டதே தவிர, கொள்கைக்குத் தேய்மானம் ஏற்படவில்லை!
ஆரியத்தை எதிர்த்து மிகப்பெரிய அளவிற்குப் பயணங்கள் - அந்தப் பயணங்களைத் தடுக்க எத்த னையோ முறை, எவ்வளவோ சூழ்ச்சிகள் நடந்திருக் கின்றன - ஆனால், வண்டிக்குத் தேய்மானம் ஏற்பட்டதே தவிர, கொள்கைக்குத் தேய்மானம் ஏற்படவில்லை. அது வளர்ச்சியைப் பெற்றிருக்கிறது. இதுதான் திராவிட இயக்கத்தினுடைய மிகப்பெரிய லட்சியம். பூரிப்படை கின்றோம். நிறைய சொல்லவேண்டும் என்று நினைத் தோம், நேரமில்லாத காரணத்தினால் அதற்கு வாய்ப்பில்லை.
தந்தை பெரியாரின் பிரகடனம்!
தந்தை பெரியார் சொன்னார், ‘‘நாளைக்கே நான் இறந்துபோனால் கூட, நிம்மதியாக இறப்பேன். காரணம், என்னுடைய கொள்கைகள் வெற்றி பெற்றிருக்கின்றன'' என்றார்.
அவருக்கு இருந்த உறுதிகள்தான் இன்று நமக்குப் பயன்படுகின்றன. ‘‘எனக்குப் பெரியார் தந்த புத்திதான் முக்கியமே தவிர, எனக்கு சொந்த புத்தி தேவையில்லை'' என்று சொன்னவன் நான். இன்னமும் அதைக் கடைப்பிடிக்கிறேன். ஏனென்றால், சொந்தப் புத்திக்குச் சபலங்கள் உண்டு; குறைபாடுகள் உண்டு. பெரியார் தந்த புத்திக்கு சபலங்கள் கிடையாது. அதற்கு என்றைக்குமே முழுக்க முழுக்க ஒரே பார்வை நேர்பார்வைதான்!
அந்த வகையில் நண்பர்களே, நினைத்துப் பாருங்கள், எங்களுக்கு என்ன குறை?
அய்யாவிற்கு ஏற்பட்ட சலிப்பும் -
அண்ணாவின் கடிதமும்!
அண்ணா அவர்கள் அமெரிக்காவிற்கு சிகிச்சைக்காக சென்றிருந்த நேரத்தில், தந்தை பெரியார் அவர்களே கூட ஒரு கட்டத்தில், ‘‘நான் சலிப்பாக இருக்கிறேன்'' என்று அவர் எழுதியதைப் படித்துவிட்டு, அண்ணா அவர்கள் கவலையோடு அமெரிக்காவிலிருந்து ஒரு கடிதம் எழுதினார்.
‘‘உலகத்தில் நான் அறிந்த வரலாற்றில், தன்னுடைய வாழ்நாளிலேயே தன் கொள்கைகள் வெற்றி பெற்றதைப் பார்த்த தலைவர் நீங்கள் ஒருவர்தான்; உங்களுக்கு எதற்கு விரக்தி? உங்களுக்கு எதற்கு சலிப்பு வர வேண்டும்?'' என்று அந்தக் கடிதத்தில் எழுதியிருந்தார்.
பெரியார் எங்கும் பயணம் செய்திருக்கிறார்!
ராகுல் காந்தி அவர்கள் கேட்கிறார், செய்தியாளர் களைப் பார்த்துக் கேட்கிறார், ‘‘உங்களில் எத்தனைப் பேர் தாழ்த்தப்பட்டவர்கள்? உங்களில் எத்தனைப் பேர் இதர பிற்படுத்தப்பட்டவர்கள்? கைதூக்குங்கள்'' என்றார்.
ஒருவரும் கை தூக்கவில்லையே, டில்லியில்!
இதற்கு என்ன அர்த்தம்?
பெரியார் அங்கும் உள்ளே புகுந்திருக்கிறார்; பெரியார் அங்கே பயணம் செய்திருக்கிறார்; பெரியாரு டைய கொள்கை அங்கே மலர்ந்திருக்கிறது. பெரியார் குரல் ஒலிக்கிறது; பெரியார் குரல் என்பது ஒரு பொதுக் குரல். அது காலத்திற்குக் காலம் வளர, வளர, அறிவு வளருவதுபோல, விஞ்ஞானம் வளருவதுபோல் வளரும். விஞ்ஞானத்தை ஒருபோதும் எவராலும் தோற்கடிக்க முடியாது; பெரியாரை எவராலும் தோற்கடிக்க முடியாது.
பெரியாருடைய பயணம் என்பது விஞ்ஞானத்தின் பயணம்.
சந்திரயானை அனுப்பி, விளைவுகள் எல்லாம் வெற்றிகரமாக வந்தவுடன், அங்கே இருக்கின்ற இடத்திற்கு ‘‘சிவன் சக்தி'' என்றுதான் பெயர் வைக்க முடியுமே தவிர, அந்த இடத்திற்குப் போவதற்கு உங்களுடைய சிவனால் இதுவரை முடியவில்லை.
சிவன் தலையில் கால் வைத்தாரே ஆம்ஸ்ட்ராங்!
இதுவரையில் ‘‘பித்தா பிறைசூடிப் பெருமானே'' என்றுதான் பாடிக் கொண்டிருந்தார்கள்.
பித்தன், பிறையைத் தலையில் சூடிக் கொண் டிருக்கின்றான் என்றார்கள்.
தமிழாசிரியர் அதற்குப் பதில் சொன்னார், ‘‘சிவனின் தலையில் இருக்கின்ற அந்தப் பிறை'' என்று.
அப்படியென்றால், ‘‘சந்திரனுக்கு முதன்முதலில் ஆம்ஸ்ட்ராங் சென்று, கால் வைத்தாரே! அப்படி யென்றால், சிவன் தலையில்தான் கால் வைத்தாரா?'' என்று மாணவர் ஒருவர் கேட்டார்.
‘‘அதிகப்பிரசங்கி, நீ என்ன, கருப்புச் சட்டைக்காரன் பையனா?'' என்று அந்த மாணவரைப் பார்த்து ஆசிரியர் கேட்டார்.
பிரச்சாரப் பயணத்தை நடைப்பயணமாக
அன்று நடத்தினோம்!
ஆகவேதான் நண்பர்களே, இந்தப் பயணம் என்பது இருக்கிறதே, அது எங்களுக்காக அல்ல - உங்களுக்காக!
காரணம் என்ன?
இதோ பாருங்கள், ஆச்சாரியார் கொண்டு வந்த குலக்கல்வித் திட்டத்தை எதிர்த்து அன்றைக்கு நாம் மிகக் கடுமையாகப் பாடுபட்டு, நம்முடைய தோழர்கள் சிறைச்சாலைக்குச் சென்று - ஒரே நேரத்தில் திராவிட முன்னேற்றக் கழகம் - திராவிடர் கழகம் ஒரு பக்கத்தில் போராட்டங்களை நடத்தின. பிரச்சாரப் பயணத்தை நடைப்பயணமாக அன்று நடத்தினார்கள். சென்னைக் குப் போவதற்கு முன்பாக, அந்தத் திட்டம் ஒழிந்தது.
அதேநேரத்தில், ஆச்சாரியார் வீட்டிற்குமுன் திரா விட முன்னேற்றக் கழகம் அதனுடைய பணியைச் செய்துகொண்டிருந்தது.
பெரியார் காரணம்!
திராவிட இயக்கம் காரணம்!!
அந்தக் குலக்கல்வித் திட்டம் மட்டும் நீடித்திருந்தால், சிரைக்கிறவன் பிள்ளை சிரைக்கவேண்டும்; வெளுக் கிறவன் பிள்ளை வெளுக்கவேண்டும்; வீதி கூட்ட வேண்டியவன் பிள்ளை வீதி கூட்டவேண்டும்; மலம் எடுக்கின்றவன் பிள்ளை, மலம் எடுக்கவேண்டும் என்று ஆகியிருந்தால், இன்றைக்கு நம்மில் பொறியாளர்களாக வந்திருக்கின்ற முடியுமா? பட்டதாரிகளாக ஆகியிருக்க முடியுமா? இத்தனை மருத்துவக் கல்லூரிகள் வந் திருக்குமா? திரும்பிய பக்கமெல்லாம் பொறியியல் கல்லூரிகள் வந்திருக்குமா?
இதற்கெல்லாம் யார் காரணம்?
பெரியார் காரணம்!
திராவிட இயக்கம் காரணம்!
திராவிட இயக்கத்தினுடைய சாதனை காரணம்!
இவையெல்லாம் காப்பாற்றப்பட வேண்டும் என்பதற் காகத் தானே போராட்டம்!
இரண்டு தத்துவங்களுக்கு
எதிராகப் போராட்டம்!
போராட்டம் இரண்டு கட்சிகளுக்கு இடையே என்று ஏமாந்து போகாதீர்கள் நண்பர்களே! இரண்டு தத்துவங்களுக்கு எதிராகப் போராட்டம்!
ஆதிக்கவாதிகளுக்கும் - அடிமைப்பட்டுக் கிடக்கின்றவர்களுக்கும், சுரண்டல்காரர்களுக்கும் - சுரண்டப்படுபவர்களுக்கும் இடையே நடைபெறுகின்ற உரிமைப் போராட்டம்!
இந்த இயக்கம் சாதாரணமானதல்ல; பெண் களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தியதால், இன் றைக்குப் பெண்களிடையே விழிப்புணர்வு ஏற் பட்டு இருக்கிறது.
மண்டல் கமிசன் அறிக்கையை நடைமுறைப் படுத்த வலியுறுத்தி, இந்தியாவில் 42 மாநாடுகள், 16 போராட்டங்களை நடத்தினோம்.
சமூகநீதிக்காவலர் வி.பி.சிங்!
சமூகநீதிக்காவலர் வி.பி.சிங் அவர்கள், ஒடுக்கப்பட் டோர் சமுதாயத்தைச் சார்ந்தவரோ, பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தைச் சார்ந்தவரோ அல்ல! அரசர் பரம்பரை யில் வந்தவர். ஆனால், மண்டல் அறிக்கையை அமல்படுத்தினார். அதனால், அவருடைய பிரதமர் பதவியே போனது. அதைப்பற்றி அவர் கவலைப்பட வில்லை. வி.பி.சிங் அவர்கள் மனிதநேயர்.
பாதை இல்லாத ஊர்களுக்கெல்லாம் பாதை போடுவதுதான் ஈரோட்டுப் பாதை!
இன்றைக்கு அதே உணர்வு ராகுல் காந்தி அவர் களிடம் வந்திருப்பதற்காக அவரை நாங்கள் பாராட்டு கிறோம். 1925 ஆம் ஆண்டில், காங்கிரசை விட்டு வெளியே வந்த தந்தை பெரியார் அவர்கள், எந்தக் காரணத்திற்காக-தன்னுடைய பயணத்தைத் தொடங்கி னார்? சமூகநீதிக்காகத்தான்! அதுதான் சுயமரியாதைப் பயணம்; அதுதான் ஈரோட்டுப் பயணம். பாதை இல்லாத ஊர்களுக்கெல்லாம் பாதை போடுவதற்குப் பெயர்தான் ஈரோட்டுப் பாதை.
அந்த ஈரோட்டுப் பாதையை மிகத் தெளிவாக போட்டு, போட்டு,
சித்திரச் சோலைகளே
உம்மை நன்கு திருத்த இப் பாரினிலே
முன்னர் எத்தனை தோழர்கள்
ரத்தம் சொரிந்தனரோ
உங்கள் வேரினிலே...
என்று புரட்சிக்கவிஞர் கேட்டாரே, அதுபோல, இந்த ஈரோட்டுப் பாதைக்காக ரத்தம் சிந்தியவர்கள் உண்டு; ஈரோட்டுப் பாதைக்காக உயிர்ப் பலியாகியோர் உண்டு. ஆனாலும், பாதை செப்பனிடப்பட்டு இருக்கிறது.
மகளிர் உரிமை மாநாட்டில்
பிரியங்கா காந்தி முழக்கம்!
இந்த ஈரோட்டுப் பாதை இன்றைக்கு டில்லி பாதை - இந்தப் பாதையைத்தான் நம்பவேண்டும் என்பதற் காகத்தான் காஷ்மீரிலிருந்து அம்மையார் மெகபூப் வருகிறார். மேற்கு வங்காளத்தில் இருக்கின்ற பெண் வருகிறார்; அதேபோல, கிழக்கிலே இருக்கக் கூடியவர் வருகிறார்; மராட்டியத்தில் இருக்கக்கூடிய பெண் இங்கே வந்து முழங்குகிறார்.
சென்னையில் கனிமொழி எம்.பி., அவர்களின் முயற்சியினால் நடைபெற்ற மகளிர் உரிமை மாநாட்டில், ‘‘பெண் ஏன் அடிமையானாள்?'' என்று நூறு ஆண்டு களுக்கு முன்பு பெரியார் எழுதிய நூல் தமிழ்நாட்டு மண் என்று இன்றைக்கு பிரியங்கா காந்தி பேசுகிறார் என்று சொன்னால், ஈரோட்டுப் பாதை பயணம் என்பது இருக்கிறதே, அது வீண்போவதில்லை - அது வெற்றிக் கனியைப் பறித்துக்கொண்டே இருக்கும். மற்றவர் களுக்குத் திருப்பத்தை உண்டாக்கும்.
மண்டல் காற்று, கமண்டலை எதிர்த்து என்றைக்கும் வீசும்; அது ஒருபோதும் வீசாமல் இருக்காது!
அன்றைக்கு நாங்கள் மண்டல் அறிக்கையை அமல் படுத்தக் கோரி இந்தியா முழுவதும் 42 மாநாடுகளையும், 16 போராட்டங்களையும் நடத்தியதன் காரணமாக, மக்களுக்கு விழிப்புணர்ச்சி ஏற்பட்டது. அதனை சமூக நீதிக் காவலர் வி.பி.சிங் நடைமுறைப்படுத்தியபொழுது, அவருடைய ஆட்சியைக் கவிழ்த்தனர்.
பண்பட்ட சமூகநீதிக் காவலர் என்பதற்கு அடையாள மான வி.பி.சிங் சொன்னார், ‘‘நான் ஒருமுறை அல்ல, பத்து முறை வேண்டுமானாலும், நூறு முறை வேண்டு மானாலும் பிரதமர் பதவியை இழக்கத் தயாராக இருக் கிறேன். இந்த மண்டல் காற்று, கமண்டலை எதிர்த்து என்றைக்கும் வீசும்; அது ஒருபோதும் வீசாமல் இருக்காது'' என்று சொன்னார்.
மண்டல் காற்று இன்றைக்கு நாடு முழுவதும் வீசிக் கொண்டிருக்கிறது.
ஆர்.எஸ்.எஸ். தலைவருக்கு இப்பொழுதுதான் திடீரென்று கண்கள் திறந்திருக்கின்றன. ‘‘அய்யோ, இது என்ன கொடுமை!'' என்று வித்தை காட்டுகிறார்கள். சமூகநீதிபற்றி எல்லாம் பேசுகிறார்கள்.
என் உயிர் முடியும்வரையில்
இந்தப் பயணம் தொடரும், தொடரும்!
எனவேதான் நீங்கள் எத்தனை வித்தைகள் காட்டி னாலும் நடக்காது; அந்த மோடி வித்தைக்காரர்களையெல் லாம் அம்பலப்படுத்துவதற்காகத்தான் இந்தப் பயணம்!
இந்தப் பயணம், பயனற்ற பயணமாக இருக்காது!
இந்தப் பயணம் வெற்றிப் பயணம்!
வெற்றி கிட்டும்வரையில் போராடுகின்ற பயணம்!
அதுமட்டுமல்ல,
முடியும்வரை இந்தப் பயணம் தொடரக்கூடிய பயணம்!
முடியும் என்று சொல்லும்பொழுது, என்னுடைய இயலாமையைக் குறிக்கவில்லை. என் உயிர் முடியும் வரையில் - எங்கள் தோழர்களுடைய உயிர் முடியும் வரையில் இந்தப் பயணம் தொடரும், தொடரும்!
உங்கள் ஆதரவுக்கு நன்றி!
நன்கொடை அளித்தவர்களுக்கு நன்றி!
உழைத்தவர்களுக்கு நன்றி!
வாழ்க பெரியார்!
வருகிறோம், மீண்டும்!
புத்தகங்களைப் படியுங்கள்!
தொடர் பயணம் உண்டு!
மறுபடியும் என்னுடைய பயணம் ‘விஸ்கர்மா யோஜனா' என்ற பெயரால் மீண்டும் குலக்கல்வித் திட்டத்தைக் கொண்டுவருவதை எதிர்த்துத்தான் - மீண்டும் உங்களையெல்லாம் சந்திப்பேன்.
வாழ்க பெரியார்!
வளர்கின்ற பயணம்!
வெற்றி பெறுகின்ற பயணம்!
2024 ஆம் ஆண்டில் ஒன்றியத்தில் அமையவிருக் கின்ற ஆட்சி ‘இந்தியா' கூட்டணியினுடைய ஆட்சிதான்!
எல்லாம் மாறும் - மாற்றம் என்பதுதான் மிக முக்கியமானது; மாற்றாமல் நாங்கள் விடமாட்டோம் - மாற்றியே தீருவோம்! அதற்கு ஏற்றாற்போன்று உங்களையும் மாற்றித் தீருவோம்!
உங்களையும் திருப்திச் செய்யக்கூடிய அளவிற்கு அதற்கான விளக்கங்களைச் சொல்வோம். அதற்குத்தான் இந்த சக்கரங்கள் ஓடும்; அதற்குத்தான் இந்தப் பயணம்!
உல்லாசப் பயணம் அல்ல -
கொள்கைக்காக உயிர்விடக் கூடிய பயணம் என்று கூறி முடிக்கிறேன்.
நன்றி, வணக்கம்!
நன்றி! நன்றி!! நன்றி!!!
இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் நிறைவுரை யாற்றினார்.
No comments:
Post a Comment