ஆசிரியர் அய்யா அவர்களுடைய பயணம் நீடித்த பயணம் - நெடும் பயணம் அல்ல - இது நீடிக்கக்கூடிய பயணம் - வரலாற்றைத் திருப்பக் கூடிய பயணம்!
ராகுல்காந்தி அவர்கள் நாடாளுமன்றத்தில் எழுப்பிய கேள்வியின்மூலம் பெரியாருடைய கொள்கை, பெரியாருடைய பிரச்சாரம் - நாடாளுமன்றத்தை எட்டிவிட்டது!
திருச்சி: தமிழர் தலைவருக்குப் பிரச்சார ஊர்தி வழங்கும் விழாவில்
திருச்சி, அக்.26 ஆசிரியர் அய்யா அவர்களுடைய பயணம் நீடித்த பயணம் - நெடும் பயணம் அல்ல - இது நீடிக்கக்கூடிய பயணம் - வரலாற்றைத் திருப்பக் கூடிய பயணம். ராகுல் காந்தி அவர்கள் நாடாளுமன்றத்தில், ‘‘ஒன்றிய அரசில் உள்ள தலைமை அதிகாரிகள் 90 பேரில், மூன்று பேர்தான் பிற்படுத்தப்பட்ட சமுகத்தைச் சேர்ந்தவர்கள்‘‘ என்பதைச் சுட்டிக்காட்டிப் பேசினார் என் றால், பெரியாருடைய கொள்கை, பெரியாருடைய போதனை, பெரியாருடைய பிரச்சாரம்- நாடாளுமன் றத்தை எட்டிவிட்டது என்றார் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் காதர்மொகிதீன் அவர்கள்.
ஈரோட்டுப் பாதையில் தொடர்பயணம்
தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்குப் பிரச்சார ஊர்தி வழங்கும் விழா
கடந்த 20.10.2023 அன்று மாலை திருச்சியில் நடை பெற்ற ஈரோட்டுப் பாதையில் தொடர்பயணம் - தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்குப் பிரச்சார ஊர்தி வழங்கும் விழாவில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் காதர்மொகிதீன் அவர்கள் சிறப் புரையாற்றினார். அவரது சிறப்புரை வருமாறு:
பேரன்பிற்கும், பெருமரியாதைக்கும் உரிய ‘‘ஈரோட் டுப் பாதையில் தொடர் பயணத்தை'' மேற்கொள்ள வாகனம் வழங்கும் இவ்விழாவிற்குப் பெருமை சேர்த்துக் கொண்டிருக்கின்ற தமிழர் தலைவர் மானமிகு வீரமணி அய்யா அவர்களே, வருகை புரிந்திருக்கின்ற அமைச்சர் பெருமக்களே, அனைத்துக் கட்சிப் பொறுப்பாளர்களே, சகோதர, சகோதரிகளே உங்கள் அனைவருக்கும் என்னுடைய நல்வாழ்த்துகளை முதலில் தெரிவித்துக் கொள்கிறேன்.
பெரியாருடைய பயணம் தொடங்கியது திருச்சியில்தான்!
திருச்சி, ஏதோ தமிழ்நாட்டில் உள்ள ஒரு ஊர் என்று பொதுவாக நினைக்கலாம். ஆனால், பெரியாருடைய பயணம் தொடங்கியது இந்த ஊரில்தான். அவர் பிறந்தது வேண்டுமானாலும் ஈரோடாக இருக்கலாமே தவிர, அவருடைய பயணம் முதலில் தொடங்குவதற்கு உறுதுணையாக இருந்தது இந்தத் திருச்சிதான்.
இந்தத் திருச்சியிலிருந்து பெரியார் அவர்கள் தொடங் கிய ஒவ்வொரு பயணமும், அவர் வாழ்க்கையில் வெற்றிப் பயணமாக ஆகியிருக்கிறதே தவிர, வெட்டிப் பயணமாக இருந்ததே இல்லை.
சமுதாயத்தையும், நாட்டையும் மாற்றித்
திருத்தி அமைக்கக் கூடிய ஓர் அற்புதமான பயணமாக அமையவேண்டும்!
அப்படி வெற்றிப் பயணம் தொடங்கிய இந்தத் திருச்சி மண்ணிலிருந்து, நமது மானமிகு ஆசிரியர் அய்யா அவர்களுக்கு, இந்தப் பரப்புரை வாகனத்தை நீங்கள் வழங்கி, அவருடைய பயணம் வெற்றிப் பயணமாக மட்டுமல்ல, சமுதாயத்தையும், நாட்டையும் மாற்றித் திருத்தி அமைக்கக் கூடிய ஓர் அற்புதமான பயணமாக அமையவேண்டும் என்று நான் வாழ்த் துகிறேன்.
இந்த விழாவிலே பங்கேற்று சிறப்பித்துக் கொண் டிருக்கின்ற அன்புத் தலைவர்கள் அத்துணை பேரும், ஆசிரியர் அய்யா அவர்கள் தொடர்ந்து பணியாற்றிக் கொண்டிருக்கிறார். அவர் ஓய்வு எடுக்கவேண்டும் என்று சொன்னார்கள்.
ஈரோட்டுப் பாதை என்பது, பெரியார் அவர்கள் போட்டுக் கொடுத்த பாதை!
வீரமணி அவர்கள், ஈரோட்டுப் பாதையில் பயணம் செய்துகொண்டிருப்பவர். ஈரோட்டுப் பாதை என்பது, பெரியார் அவர்கள் போட்டுக் கொடுத்த பாதை. பாதை மிகத் தெளிவாக இருக்கிறது. பாதையிலே பயணம் செய்வதுதான் நம்முடைய வேலையே தவிர, பாதையை நிர்ணயிக்கக் கூடிய இடத்தில் நாம் யாரும் இல்லை.
பெரியார் அந்த அருமையான பாதையை உரு வாக்கித் தந்திருக்கிறார். வாஸ்கோடகாமாவால் இந்தியா விற்கு கடல்வழி பயணம் தொடங்கப்பட்டது வேண்டு மானால், சிரமமாக இருந்திருக்கலாம். ஆனால், காலப் போக்கில் அவருடைய கடல் பயணம் மிகச் சிறந்த, அருமையான நீர்வழிப் பயணமாக ஆவதற்கு அவர் போட்டுக் கொடுத்த பாதை அமைந்தது.
மிகப்பெரிய மாற்றங்களை உருவாக்கக் கூடிய திட்டங்கள்!
அதுபோன்று, பெரியார் அவர்கள் போட்டுக் கொடுத்த பாதை என்பது, அவர் வகுத்துக் கொடுத்த நெறி, அவர் வகுத்துக் கொடுத்த திட்டங்கள், அவர் உருவாக்கிய அனைத்து சீர்திருத்தங்களும், நாட்டிலும், சமுதாயத்திலும் மிகப்பெரிய மாற்றங்களை உருவாக்கக் கூடிய திட்டங்கள் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை.
அப்படிப்பட்ட சிறந்த அந்தத் திட்டங்களையெல்லாம் இன்றைக்கு ஆசிரியர் அய்யா வீரமணி அவர்கள், ஏதோ தமிழ்நாட்டில் மட்டுமல்லாமல், ஏன் இந்தியாவில் மட்டுமல்லாமல், கடல் கடந்த நாடுகளிலும் அதனைப் பரப்பக்கூடிய ஓர் அற்புதமான பணியைத் தொடர்ந்து அவர் செய்துகொண்டிருக்கின்றார்.
பெரியாருடைய பயணம் - உலகத்திற்குச் சொந்தமான பயணம்!
‘‘பெரியார் உலகம்'' என்று பெயரிட்டு, இது உலகத் திற்குச் சொந்தமான பயணம் பெரியாருடைய பயணம் என்பதைத் தெளிவுபடுத்தி இருக்கிறார்.
அவர் ஆஸ்திரேலியாவிற்குச் சென்றபொழுதும் சரி, அமெரிக்காவிற்கு சென்றபொழுதும் சரி, பல்வேறு நாடுகளுக்கு சென்றபொழுதெல்லாம் அங்கேயுள்ள அறிஞர் பெருமக்கள், அவரை சூழ்ந்துகொண்டு, பெரியார்பற்றி - வினாக்கள் எழுப்பி, தெளிவுபெற்றனர். அந்தத் தெளிவைத் தந்தது மானமிகு வீரமணி அவர் கள்தான். அது இன்று உலகம் முழுவதும் பரவிக் கொண் டிருக்கின்றது.
ஆகவே, இந்தக் கூட்டத்தில் அவருக்கு பரப்புரை வாகனத்தைக் கொடுத்து, அவருடைய பயணத்தைத் தொடரவேண்டும் என்று நீங்கள் கூறியிருப்பது, ஏதோ அவருடைய பயணத்தைத் தொடராமல் இருக்கமாட்டார் என்பதை அறிந்துகொள்வதாக ஆகாது.
அவர் இயற்கை மனிதர்; இயற்கையால் உருவாக்கப் பட்ட மனிதர். இயற்கையில் எதுவும் தானாக நிற்பதில்லை.
சூரியன் தானாக நிறுத்திக் கொள்வதில்லை. சந்திரன் தானாக நிறுத்திக் கொள்வதில்லை. காற்று தன்னை நிறுத்திக் கொள்வதில்லை. தண்ணீர் தன்னை நிறுத்திக் கொள்வதில்லை.
இயற்கை எப்படி இருக்கிறதோ, அதுபோன்று பயணத்தைத் தொடர்ந்து நடத்தக் கூடிய ஓர் இயற்கை மனிதர் நம்மிடத்தில் இருக்கிறார்.
சூரியனே வராதே - கடலே பொங்காதே என்று சொல்வதற்கு ஒப்பானது!
இவரைப் பார்த்து, ‘‘ஓய்வெடுங்கள்'' என்று சொல்வது, இயற்கையைப் பார்த்து, சூரியனே வராதே - கடலே பொங்காதே என்று சொல்வதற்கு ஒப்பானதாகும்!
ஆகவே, அப்படிப்பட்ட ஓர் அற்புதமான பய ணத்தை அவர் தொடர்ந்து செய்கிறார் என்றால், அந்தப் பயணம் வெற்றிகரமாக இருக்கவேண்டும் என்பதற்காகத் தான். அதற்காக உறுதுணை புரிந்த அத்துணை பேரை யும் மேடைக்கு அழைத்து, இங்கே பெருமைப்படுத்தி இருக்கிறீர்கள்.
கலை நிகழ்ச்சி நடத்திய கோவன் உள்ளிட்ட அத் துணை தோழர்களையும் அழைத்துப் பெருமைப்படுத்தி இருக்கிறீர்கள்.
வாகன ஓட்டுநரை அழைத்துப்
பாராட்டினீர்கள்!
28 ஆண்டுகாலமாக உங்கள் வாகனத்தை ஓட்டிச் செல்லக்கூடிய ஓட்டுநர் தோழரையெல்லாம் அழைத்துப் பெருமைப்படுத்தினீர்கள்.
அவர்கள் 28 ஆண்டுகாலம் எந்தவிதமான அசம்பா விதமும் இல்லாமல் வாகனத்தை ஓட்டிய பெருமையை எடுத்துச் சொன்னீர்கள்.
அமெரிக்கக் குடியரசுத் தலைவர் ஒருமுறை, 48 ஆண்டுகாலம் டாக்சி ஓட்டிய ஒரு பெண்மணியை வரவழைத்து, விருது கொடுத்துப் பாராட்டினார் என்று நான் படித்திருக்கிறேன்.
அந்தப் பெண்மணியிடம் செய்தியாளர்கள், ‘‘48 ஆண்டுகாலம் எப்படி எந்தவிதமான அசம்பாவிதமும் இல்லாமல் காரை ஒட்டி நிரூபித்திருக்கிறீர், வெற்றி பெற்றிருக்கிறீர்?'' என்று கேட்டார்கள்.
அதற்கு அந்தப் பெண்மணி, ‘‘நான் 48 ஆண்டுகால மாக எந்தவிதமான அசம்பாவிதம் இல்லாமல் தொடர்ந் திருக்கிறேன் என்று சொன்னால், அதற்கு ஒரே காரணம், சட்ட விதிகளை பின்பற்றி வந்ததினால்தான்'' என்றாராம்.
பெரியார் போட்டுக் கொடுத்த பாதையில், பயணிக்கக் கூடிய அருமை நண்பர்கள்!
ஆக, 28 ஆண்டுகாலமாக பெரியார் போட்டுக் கொடுத்த பாதையில், பயணிக்கக் கூடிய அருமை நண்பர்கள், அந்தப் பயணத்தில் எந்தவிதமான பிசகும் இல்லாமல், அதில் மாட்டவும் செய்யாமல், அந்தப் பய ணத்தைத் தொடர்ந்து செய்கிறார்கள் என்பதற்கு இதுதான் அடையாளம்.
28 ஆண்டுகாலமாக அல்ல - இது 200 ஆண்டு காலமாக இருந்தாலும், பெரியார் போட்டுக் கொடுத்த பாதையில் செல்லக்கூடியவர்கள் எந்தவிதமான அசம் பாவிதங்களிலும் ஈடுபட முடியாது என்பதுதான் உண்மை.
அப்படிப்பட்ட ஓர் அற்புதமான காரியத்தை நீங்கள் செய்திருக்கிறீர்கள்.
இந்தப் பரப்புரை வாகனத்தை வழங்குவதற்கு நிதியளித்தவர்களையெல்லாம் மேடைக்கு அழைத்து அவர்களையும் நீங்கள் பெருமைப்படுத்தி இருக்கிறீர்கள்.
அதைப் பார்க்கும்பொழுது, இந்த வாகனம் எங் கெங்கே பயணமாகிறதோ, இந்த வாகனத்திலிருந்து ஆசிரியர் அய்யா அவர்கள் எந்தெந்த கருத்துகளை மக்கள் மத்தியில் பேசப் போகிறார்களோ - இந்த வாகனத்தில் ஆசிரியர் அய்யா அவர்கள் பயணம் செய்து எந்தெந்த ஊரில் பயணம் செய்து, மக்களை சந்தித்து எழுச்சியை உருவாக்கிக் கொண்டு போகிறார்களோ - அந்தப் பயணம், அவர் பேசிய பேச்சு, அவர் சொன்ன கருத்துகள் அனைத்திலும் இந்தப் பரப்புரை பயணம் வாகனத்தை உருவாக்க உதவி செய்த அத்துணை பேருக்கும் பங்கு உண்டு.
100 பேர் நன்கொடை கொடுத்து, இந்த வாகனத்தை நீங்கள் உருவாக்கிக் கொடுத்திருக்கிறீர்கள் என்று சொன்னால், இந்த வாகனத்தின்மூலம்,
என்னென்ன நன்மைகள்,
என்னென்ன சீர்திருத்தங்கள்,
என்னென்ன மாற்றங்கள்,
என்னென்ன எழுச்சிகள்,
என்னென்ன முன்னேற்றங்கள் என்று திராவிடர் கழகத்தின் மூலமாக, அய்யாவினுடைய வழியாக நடக்கிறதோ, அத்துணைக்கும் அவர்களுக்கும் பங்கு உண்டு. அவர்களுக்கு இந்தப் பங்கு போய்ச் சேரும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை.
நெடும் பயணம் அல்ல -
இது நீடிக்கக்கூடிய பயணம் -
வரலாற்றைத் திருப்பக் கூடிய பயணம்!
இப்படிப்பட்ட ஒரு நல்ல காரியத்தைச் செய்த அருமைச் சகோதர, சகோதரிகளுக்கும் என்னுடைய நல்வாழ்த்துகளைச் சொல்லி, ஆசிரியர் அய்யா அவர் களுடைய இந்தப் பயணம் நீடித்த பயணம் - நெடும் பயணம் அல்ல - இது நீடிக்கக்கூடிய பயணம் - வரலாற் றைத் திருப்பக் கூடிய பயணம்.
அந்தப் பயணத்தின்மூலமாக ஒன்றை நான் சொல்ல விரும்புகிறேன். தமிழ்நாட்டில், தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள் உருவாக்கி நடத்திக் கொண்டிருக்கின்ற ‘திராவிட மாடல்' ஆட்சியினை நிலைநிறுத்துவதை தமிழ்நாட்டில் மட்டுமல்ல, இந்தியா முழுவதிலும் இதனை நிலைநிறுத்தக் கூடிய ஒரு காரியத்தில் அவர் ஈடுபட்டு இருக்கிறார்.
‘‘ஒன்றே குலம், ஒருவனே தேவன்!''
‘‘யாதும் ஊரே, யாவரும் கேளிர்!''
‘‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்!''
‘‘யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்!''
என்று சொல்லுவது மட்டுமல்லாமல், இந்தத் தமிழ் நாட்டில், பெரியார் அவர்கள் காட்டிய, அந்த சமூகநீதிப் பாதையை இன்றைய தினம் இந்தியா முழுவதும் பேசக்கூடிய ஓர் அம்சமாக அந்தப் பாதையை வலியுறுத்தக் கூடிய நிலை இன்று இந்தியா முழுவதும் இருப்பதற்குக் காரணம், இவருடைய கருத்தைத்தான் என்பதில் எந்தவித மாற்றமும் இல்லை.
கே.எஸ்.அழகிரியின் கூற்று!
‘‘ராகுல் காந்தி அவர்கள், பெரியார் திடலுக்கு வந்து, பெரியார் பிறந்த நாள் விழாவில் கலந்துகொள்ள வேண்டும்'' என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கே.எஸ்.அழகிரி இங்கே சொன்னார்.
உண்மையில், நாடாளுமன்றத்தையே பெரியார் மாளிகையாக்கி ராகுல் காந்தி அவர்கள் பேசியிருக்கிறார்.
பெரியார் அவர்கள் என்ன பேசினாரோ, அதையே ராகுல் காந்தி அவர்கள் நாடாளுமன்றத்தில் சொன்னார், ‘‘இந்த நாட்டினுடைய ஒன்றிய அரசில், 90 தலைமை அதிகாரிகள் இருக்கிறார்கள்; அதில் மூன்றே பேர்தான் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள். மீதம் உள்ள அத்துணை பேரும் உயர்ஜாதி சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள்தான்'' என்று சொன்னார்.
பெரியாருடைய பிரச்சாரம் -
நாடாளுமன்றத்தை எட்டிவிட்டது!
தமிழ் மண்ணில் பெரியார் பேசியதை, ஆசிரியர் வீரமணி பேசியது இந்த மண்ணில், திராவிட முன்னேற் றக் கழகத்தைச் சேர்ந்தவர்கள் பேசியது இந்த மண்ணில், ஆனால், காங்கிரஸ் கட்சியின் இளந்தலைவராக இருக் கக்கூடிய ராகுல் காந்தி அவர்கள் நாடாளுமன்றத்தில், ‘‘ஒன்றிய அரசில் உள்ள தலைமை அதிகாரிகள் 90 பேரில், மூன்று பேர்தான் பிற்படுத்தப்பட்ட சமுகத்தைச் சேர்ந்தவர்கள்'' என்பதைச் சுட்டிக்காட்டிப் பேசினார் என்றால், பெரியாருடைய கொள்கை, பெரியாருடைய போதனை, பெரியாருடைய பிரச்சாரம் - நாடாளு மன்றத்தை எட்டிவிட்டது; அது இந்தியா முழுவதற்கும் எட்டப்போகிறது என்பதற்கு அடையாளமாகத்தான் நாம் கருதவேண்டி இருக்கிறது.
ஆகவே, இப்படிப்பட்ட ஓர் அருமையான பரப் புரைப் பயணத்தில் ஆசிரியர் அய்யா அவர்கள் ஈடு பட்டிருக்கிறார். அவர்கள் தொடர்ந்து இப்பணியில் ஈடுபட வாழ்த்துகிறேன்.
பெரியாரிசத்தைப் பாராட்ட, போற்ற கடமைப்பட்டவர்களாக இருக்கிறோம்!
நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து, தாய்க்கு நாம் உதவுவதுபோல, பெற்றெடுத்த குழந்தையை நாம் வளர்ப்பதுபோல, திராவிடத் தளபதி ஏற்றிருக்கின்ற அந்தக் கொள்கையை, பெரியாரிசத்தைப் பாராட்ட, போற்ற கடமைப்பட்டவர்களாக இருக்கிறோம்.
ஆசிரியர் அய்யா அவர்கள் எந்தெந்த இடங்களில் பரப்புரையை மேற்கொள்ளவிருக்கிறார்களோ, அந்த இடங்களில் எல்லாம், திராவிட முன்னேற்றக் கழகம் வரும், இங்கே கூட்டணியில் உள்ள அனைவரும் வருவார்கள். நிச்சயம் ஒட்டுமொத்த சமுதாயமும் வந்து உங்களை வரவேற்று, ஆதரிக்கும். நீங்கள் செல்லுமிட மெல்லாம் உங்களுக்கு உறுதுணையாக இருப்போம் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
எல்லோரும் சேர்ந்து ஒத்துழைப்போம்!
உங்களுடைய வெற்றிப் பயணம் தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கவேண்டும். காற்றும், மழையும், சூரியனும், சந்திரனும் எப்படி ஓய்வில்லாமல் தன்னுடைய பணியை செய்துகொண்டிருக்கின்றனவோ, அதுபோல, உங்களுடைய பயணம் தொடர்ந்து நடந்து, வெற்றியை நிலைநாட்டக் கூடிய வகையில், நாடு முழுவதும் ஒரு பெரிய மாற்றத்தை உருவாக்கக் கூடிய வகையில், நிச்சயமாக அமையும்! அதற்கு எல்லோரும் சேர்ந்து ஒத்துழைப்போம் என்பதைச் சொல்லி, என்னுரையை நிறைவு செய்கிறேன்.
நன்றி, வணக்கம்!
- இவ்வாறு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் காதர்மொகிதீன் அவர்கள் உரையாற்றினார்.
No comments:
Post a Comment