ஆர்.எஸ்.எஸின் பொதுச் செயலாளருக்கு என்ன 'ஞானோதயமோ' தெரியவில்லை.
ஜாதி அடிப்படையிலான ஒடுக்குமுறைகளை எதிர்த்து போராடுவதை விட ஜாதிய பாகுபாட்டை ஒழித்துக் கட்ட வேண்டும் என்று அந்த இயக்கத்தின் பொதுச்செயலாளர் தத்தாத்ரேயா ஹொசபலே வலியுறுத்தி இருப்பது ஆச்சரியம்தான்!
இந்தியாவின் ஹிந்துத்துவ கோட்பாடுகளின் படி ஜாதிய கட்டமைப்பு நியாயப்படுத்தப்படுகிறது. ஜாதிய அடுக்குமுறையும் சரி என வாதிடப்படுகிறது. ஹிந்துத்துவ சித்தாந்தத்தை அடிப்படையாக கொண்டு செயல்படுவது ஆர்.எஸ்.எஸ். அமைப்பு - அதன் அரசியல் பிரிவுதான் ஒன்றியத்தில் ஆளும் பாஜக. என்பது எல்லோருக்கும் தெரிந்த ஒன்றே!
ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு இடஒதுக்கீடு கொண்டு வருகிற போதெல்லாம் எதிர்த்துக் குரல் கொடுப்பது பாஜகதான். ஆனால், உயர் ஜாதி ஏழைகளுக்கு வருமான வரம்பு விதித்து 10% இடஒதுக்கீடு கொடுத்ததும் ஒன்றியத்தில் ஆளும் பாஜக அரசுதான். அதேபோல சமூக ஏற்றத் தாழ்வுகள் இருக்கும் வரை இடஒதுக்கீடு தேவை என நியாயப்படுத்தித் திடீரென்று பேசி வருவதும் ஆர்.எஸ்.எஸ். தான்.
"ஜாதிய பாகுபாடுகளை எதிர்த்து ஆர்.எஸ்.எஸ். தொண்டர்கள் பாடுபட வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளார் அதன் பொதுச்செயலாளர் தத்தாத்ரேயா ஹொசபலே. குஜராத் மநிலம் வதோதராவில் நிகழ்ச்சி ஒன்றில் அவர் பேசியதாவது: ஒவ்வொரு வருக்கும் கோவிலுக்குள் நுழைய உரிமை உண்டு; எந்த இடத்திலும் யார் வேண்டுமானாலும் குடிநீரை எடுக்கலாம்; ஜாதிய அடிப் படையிலான ஒடுக்குமுறைகளை, தீண்டாமையை நாம் சகித்துக் கொண்டிருக்கக் கூடாது.
'ஜாதிய ஒடுக்குமுறை ஒட்டுமொத்த ஹிந்து சமூகத்தின் ஒற்றுமையை சீர்குலைக்கிறது. இத்தகைய ஜாதிய ஒடுக்குமுறைகளை அழித்தொழிக்க வேண்டும்!' என்று கூறும் ஆர்.எஸ்.எஸ். எந்தக் கூட்டத்தில் முடிவெடுத்து வெளியிட்டுள்ளது?
"எங்கய்யா ஜாதி பார்க்கிறாங்க?: விளையாட்டுப் போட்டிகளில் இந்தியர்கள் சாதிக்கிறார்கள். அவர்களிடம் என்ன ஜாதி என்றா கேட்கிறோம். என்ன மதம் என்றா கேட்கிறோம். கரோனா காலத்தில் ஜாதிகளைக் கடந்துதானே புலம் பெயர் தொழிலாளர்களுக்கு உதவி செய்தோம். சந்திரயான் -3 விண்வெளியில் வெற்றிகரமாக பாய்ந்தது.. அப்போது அந்த விஞ்ஞானிகளின் ஜாதிகளையா நாம் பார்த்து கொண்டிருந்தோம்? ஒரு பிரச்சினை, ஒரு வெற்றியின் போது ஒட்டு மொத்த தேசமும் ஒற்றுமையாக நிற்கிறது என்பதுதான் தேவை யானதும் முதன்மையானதும்."
"ஸநாதனம் என்பது என்ன?: ஸநாதன தர்மத்தை ஒழிப்போம் என சிலர் மிரட்டல் விடுக்கின்றனர். ஹிந்துக்களைப் பற்றி பேசுவதாலேயே ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தை மதவாதம் என்கிறார்கள். ஸநாதன தர்மம் என்பது சடங்குகளைப் பற்றியது அல்ல. வழிபாட்டு முறைகளைப் பற்றியது. கடவுள்களை மனித உருவில் பார்ப்பது பற்றி பேசுவது ஸநாதனம்."
"இந்தியா யூதர்கள், பார்சிகள், தலாய் லாமாவின் ஆதர வாளர்களுக்கு அடைக்கலம் கொடுத்திருக்கிறது. ஏனெனில் உலகம் ஒரு குடும்பம் என்ற கோட்பாட்டை பின்பற்றுவதால்தான். கரோனா காலத்தில் ஒட்டுமொத்த உலக நாடுகளுக்கும் கரோனா தடுப்பூசி கொடுத்ததும் இந்த உலகம் ஒரு குடும்பம் என்ற கோட்பாட்டின் கீழ்தான். இலங்கைக்கு பொருளாதார நெருக்கடியின் போது நிதி உதவி செய்ததும் உலகம் ஒரு குடும்பம் என்பதால்தான். ஒருநாள் இந்தியா உலகத்துக்கே வழிகாட்டியாக உருவெடுக்கும். இதற்கான வலிமை இந்துக்களிடம் உண்டு" இவ்வாறு தத்தாத்ரேயா ஹொசபலே ஏராளமாக கொட்டியுள்ளார்.
ஆர்.எஸ்.எஸ். பிரமுகர் பொடி வைத்துத்தான் பேசியுள்ளார். ஜாதியை ஒழிப்பதாகக் கூறவில்லை; மாறாக ஜாதி பாகுபாட்டை ஒழிக்க வேண்டும் என்றுதான் கூறுகிறார். இரண்டுக்கும் அடிப்படை யிலேயே வேறுபாடு உண்டு.
ஜாதியை வைத்துக் கொண்டு ஜாதி பாகுபாட்டை எப்படி ஒழிக்க முடியும்? பாகுபாடு காட்டுவது தானே ஜாதியின் அடிப்படைக் குணம். யாரை ஏமாற்ற இந்தத் திசை திருப்பும் பேச்சு?
இன்றைக்கு ஜாதி அதிகாரப்பூர்வமாக ஆட்டம் போடும் இடம் கோயில் கர்ப்பக்கிரகம் தானே!
ஒரே ஹிந்து மதத்தைச் சேர்ந்தவர்கள் - அதுவும் ஆகமப் பயிற்சியை முறையாகப் பெற்றவர்கள் பட்டியலினத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும், பிற்படுத்தப்பட்டோராக இருந்தாலும் அர்ச்சகர் ஆக முடியாது - கூடாது என்று அர்ச்சகப் பார்ப்பனர்களும், ஜீயர்களும், சங்கராச்சாரியாரின் ஆசீர்வாதத்துடன் உச்சநீதிமன்றத் திற்குச் சென்று தடை வாங்குவது ஏன்?
உண்மையிலேயே ஜாதியை ஒழிப்பதுதான் ஆர்.எஸ்.எஸ். பி.ஜே.பி.யின் கொள்கை என்றால் இந்த வழக்கை எதிர்த்து எதிர் மனு தாக்கல் செய்து வாதாட வேண்டியது தானே! அனைத்து ஜாதி யினருக்கும் அர்ச்சகர் உரிமைக்கு நாங்கள் ஆதரவு தெரிவிக்கிறோம் என்று அதிகாரப் பூர்வமாகப் பிரகடனப்படுத்த வேண்டியதுதானே!
தீண்டாமை க்ஷேமகரமானது என்று கூறும் சங்கராச்சாரியார் ஆர்.எஸ்.எஸ். பிரமுகரின் இந்தக் குறைந்தபட்சக் கருத்தை ஏற்றுக் கொள்கிறாரா?
சங்கர மடத்தில் பார்ப்பனரல்லாதார் ஒரு சிப்பந்தியாகக்கூட பணியாற்ற அனுமதி உண்டா?
தேர்தல் நேரத்தில் மக்களைக் குழப்ப இப்படி ஆளுக்கு ஒருவர் - ஆர்.எஸ்.எஸ். பிரமுகர்கள் பேசுவதைக் கண்டு ஏமாந்து விடக் கூடாது. எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
ஜாதி இல்லை என்றால் இந்து மதமே கிடையாது என்று சட்ட நிபுணர் முல்லர் கூறியது நினைவில் இருக்கட்டும்!
No comments:
Post a Comment