புதுடில்லி, அக். 4- ராமர் சேது பாலம் உள்ள இடத்தில் இருபுறமும் சுவர் எழுப்பவும், அந்த பாலத்தை தேசிய நினைவுச் சின்னமாக அறிவிக்கவும் கோரிய மனுவை, உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
தமிழ்நாட்டின் ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் தீவில் இருந்து, இலங்கையின் மன்னார் தீவு வரையில் கடலுக்கு அடியில் சுண்ணாம்பு கற் களால் அமைந்துள்ள பாதை, ராமர் சேது பாலம் என்றும், ஆதம் பாலம் என்றும் அழைக்கப்படுகிறது.
ராமாயணத்தில், ராமர் இலங்கை செல்வதற்காக வானரப் படையினரால் உருவாக்கப்பட்டதே, இந்த ராமர் சேது பாலம் என்ற நம்பிக்கையும் உள்ளது. இந்நிலையில், ராமர் சேது பாலத்தை தேசிய நினைவுச்சின்னமாக அறிவிக்கவும், பாலத்தின் இருபுறமும் சுவர் எழுப்பவும் அனுமதி கோரி, 'ஹிந்து தனிநபர் சட்ட வாரியம்' என்ற அமைப்பு, உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது.
ராமர் பாலத்தை தேசிய நினைவுச் சின்னமாக அறிவிக்க கோரிய பா.ஜ., மூத்த தலைவர் சுப்ரமணியன் சுவாமியின் மனு உச்சநீதிமன்றத்தில் ஏற்கெனவே நிலுவையில் உள்ளது. இந்நிலையில், ஹிந்து தனிநபர் சட்ட வாரியத்தின் மனு விசாரணைக்கு வந்தபோது, இந்த வழக்கை சுப்ரமணியன் சுவாமியின் மனுவுடன் சேர்த்து விசாரிக்க அந்த அமைப்பின் தலைவரும், வழக்குரைஞருமான அசோக் நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்தார். இதை ஏற்க மறுத்த நீதிமன்றம், 'மனுதாரர் விடுத்துள்ள கோரிக்கைகள் மீது, நீதிமன்றம் எந்த உத்தரவையும் பிறப்பிக்க முடியாது. இது, அரசின் நிர்வாகம் தொடர்பானது; நீதிமன்றம் தலையிட முடியாது' என உத்தரவிட்டு, மனுவை தள்ளுபடி செய்தது.
No comments:
Post a Comment