முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் - அனைத்து பள்ளிகளிலும் செயல்படுத்த ஆய்வு : உயர்நீதிமன்றத்தில் தகவல் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, October 14, 2023

முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் - அனைத்து பள்ளிகளிலும் செயல்படுத்த ஆய்வு : உயர்நீதிமன்றத்தில் தகவல்

சென்னை,அக்.14- தமிழ்நாட்டில் அரசுப் பள்ளி மட்டுமன்றி மற்ற பள்ளிகளிலும் காலை உணவுத் திட்டம் செயல்படுத்தப்படும் என்று உயர்நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தகவல் தெரிவித்துள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த பிரேசில் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல வழக்கு ஒன்றினை தாக்கல் செய்திருந்தார். மனுவில், தமிழ்நாடு அரசு தற்போது காலை உணவுத் திட்டத்தை அரசு பள்ளிகளில் செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டம் தமிழ்நாட்டில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. ஏற்கெனவே மதியம் உணவு வழங்கப்பட்டு வருகிறது. தற்போது காலையும் உணவு வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளதால் பள்ளிக்கு வரும் மாணவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. ஆனால் தூத்துக்குடி உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் இருக்கக்கூடிய அரசு உதவிபெறும் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம் இல்லை. எனவே கடலோரத்தில் இருக்கும் அரசு உதவிபெறும் பள்ளியிலும் இத்திட்டத்தை செயல்படுத்தினால் கடலோர மீனவ குடும்பங்கள் மிகப்பெரிய பயன்பெறும். மீனவக் குடும்பங்கள் அதிகாலையில் கடலுக்கு செல்கின்றனர். அவர்களது குழந்தைகள் பசியோடு இருக்கின்றனர். எனவே கடலோரத்தில் உள்ள அரசு உதவிபெறும் பள்ளிகளில் காலை உணவு திட்டத்தை செயல்படுத்த தமிழ்நாடு அரசுக்கு உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருந்தார்.

இந்த மனு நீதிபதி எம்.சுந்தர் அமர்வில்  விசாரணைக்கு வந்தது. விசாரணையின் போது அரசு தரப்பில் ஆஜரான வழக்குரைஞர் சிவக்குமார், காலை உணவுத் திட்டத்தில் அரசு கொள்கை ரீதியாக முடிவு எடுத்து தற்போது செயல்படுத்தப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் அனைத்து அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் காலை உணவு திட்டத்தை செயல்படுத்த விரிவான ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. வரக்கூடிய காலத்தில் நிதிநிலையை கருத்தில் கொண்டு அனைத்து மாவட்டங்களிலும் திட்டத்தை செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். இதனை பதிவு செய்துகொண்ட நீதிபதி வழக்கை முடித்துவைத்து உத்தரவிட்டார்.


No comments:

Post a Comment