"விஸ்வகர்மா யோஜனா " என்ற ஒன்றிய அரசு கொண்டு வந்துள்ள குலத்தொழிலை திணிக்கும் திட்டத்தை எதிர்த்து தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் பரப்புரை தொடர் பயணம், (நாகப்பட்டினம் முதல் மதுரை வரை 25.10.2023 முதல் 5.11.2023 வரை) எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை எங்கள் குடும்ப வாழ்க்கை யோடு ஒப்பிட்டு பார்க்கிறேன்.
ஆம் தோழர்களே , என் தந்தை ஒரு சவரத் தொழிலாளி, இத்தொழிலை அவர் விரும்பி ஏற்றதல்ல, காலம் காலமாக இந்த சமூகத்தால் திணிக்கப்பட்டதின் விளைவு.
திராவிடர் கழகம் ஜாதி, மதங்களை கடந்தது. நம் கழகத் தோழர்கள் யாருக்கும், யார்,யார்? எந்த ஜாதி என்று தெரியாது. அது நமக்கு தேவையில்லாதது கூட , அப்படி தெரிந்து கொள்ள வேண்டும் என்று நம் மனதில் தோன்றினால், நான் - பெரியாரிஸ்ட், திராவிடர் கழகத்தை சார்ந்தவன் என்று சொல்லிக் கொள்வதில் வெட்கப்பட வேண்டும். இருந்தாலும் இங்கே நான் என் ஜாதியை குறிப்பிட்டு சொல்லுவ தற்கு காரணம். நாம் யாரால் தாழ்ந்தோம், யாரால் உயர்ந்தோம் என்பதை உணர்த்துவதற்காக , உணருவதற்காகத்தான்.
அந்த வகையில், சவரத் தொழிலாளியாகிய என் தந்தை (பெருமாள்) மருத்துவ குலத்தை சார்ந்தவர். அவரின் குலத்தொழிலாக அவர் மேல் திணிக்கப் பட்டவை சவரத்தொழில் மற்றும் நாதஸ்வரம், தவில் வாசிப்பது. அந்த வகையில் என்னுடைய தந்தை வாழ்வாதாரத்திற்காக சவரத் தொழிலை செய்கிறார். அப்படி சிறுவயதில் அவர் பணியாற்றிய இடம் அப்போது திருப்பத்தூர் நகர திராவிடர் கழக தலைவராக இருந்த நாதமுனி அய்யா நடத்தி வந்த முடி திருத்தம் செய்யும் கடையில், அவரிடம் தொழிலைக் கற்று அவரிடமே தினக்கூலியாக பணி யாற்றுகிறார். நாதமுனி தான் இந்த தொழிலுக்கு குரு.
இந்நிலையில், நாதமுனி அய்யா அவர்களின் முடி திருத்தம் செய்யும் கடைக்கு விடுதலை பத்திரிகை தினமும் வரும். அய்ந்தாம் வகுப்பு மட்டுமே படித்த என் தந்தை பெருமாள் விடுதலை பத்திரிகையில் வரும் செய்திகளை எழுத்து கூட்டி வாசிப்பார். விடுதலை பத்திரிகை மூலமாக தான் தமிழை வாசிக்கவே கற்றார் என்றே சொல்லலாம். அப்படி தொடர் விடுதலை பத்திரிகை வாசிப்பு மற்றும் நாதமுனி அய்யா சொல்லும் தந்தை பெரியார் பற்றிய கருத்துகள் - அதன் மூலமாக அவர் முழுமையாக தந்தை பெரியார் அவர்களின் சமூக சீர்திருத்த, சமூக முன்னேற்ற, மூடப் பழக்கங்கள் அற்ற பகுத்தறிவு கருத்துகளை உள்வாங்கி பெரியாரிஸ்டாக, பகுத்தறிவுவாதியாக மாறுகிறார்.
அதன் விளைவே இன்று நாம் இருக்கும் நிலைக்கு காரணம், அது நாள் வரையில் அவர் புத்தியில் பதிந்திருந்த எண்ணங்கள் அனைத்தும் தவறான எண்ணங்கள், இந்த எண்ணங்கள் எல்லாம் ஆதிக்க சமூகத்தினரால் உருவாக்கப்பட்டவை என்பதை உணருகிறார்.
அதுநாள் வரையில் நம்பிக் கொண்டிருந்த நம் பிறப்பு கடவுளால் படைக்கப்பட்டது. நாம் வாழும் வாழ்க்கை முறை கடவுள் என் தலையில் எழுதிய தலைவிதி என்பன போன்றவற்றில் மாற்று சிந்தனைகள் தந்தை பெரியார் கேட்கும் கேள்விகள் மூலமாக வருகிறது.
இவை எல்லாம் நம் விதி அல்ல, ஆதிக்க சமூகத் தால் உருவாக்கப்பட்ட சதி என்பதை உணருகிறார்.
அதன் பொருட்டு, காலம் காலமாக இருந்த அடிமைப் புத்தி, சடங்கு, சம்பிரதாயங்கள் மூலமாக கடைப்பிடிக்கப்பட்ட பழக்கவழக்கங்கள், கடவுள் என்று அவர் சிந்தனையில் பல மாற்றங்கள் உருவாயின.
இந்த பூமியில் பிறக்கின்ற எல்லா மனிதர்களைப் போன்று தானே நாமும் இங்கே பிறந்தோம். ஆனால் ஒருவர் உயர்ந்தவர், மற்றொருவர் தாழ்ந்தவர் என்று இருக்கும் இடத்திலிருந்து , உண்ணும் உணவிலிருந்து, உடுக்கும் உடை வரை ஏன்? இத்தனை ஏற்றத் தாழ்வுகள். நம்மை படைத்தது கடவுள் என்றால், ஏன்? இத்தனை பாகுபாடுகள் என்று தந்தை பெரியார் கேட்ட கேள்விகள் அனைத்தும் அவருள் எதி ரொலிக்கிறது.
அந்த பகுத்தறியும் கேள்விகளின் விளைவாக , நம்முடைய இந்த இழிநிலை மாற வேண்டுமென்றால்? குறைந்த வருமானம் உள்ள, சுயமரியாதையற்ற, காலம் காலமாக நம் மேல் திணிக்கப்பட்ட, இந்த குலத்தொழிலை விட்டு வெளியே வர வேண்டும். தன்னோடு இந்த இழி நிலை ஒழிய வேண்டுமென் றால் அதற்கு எதிர் வரும் காலத்தில் தன் பிள்ளை களை படிக்க வைக்க வேண்டும் என்ற எண்ணம் உருவாகிறது.
தந்தை பெரியார் அவர்களின் பகுத்தறிவு கேள்விகள், மனித சமூகத்தின் மீது அவருக்கிருந்த பற்று,அன்பு - தன் பிள்ளை தன் குடும்பம் என்று சுய நலமாக வாழும் மனிதர்களுக்கிடையே தன் சொத்துக்களை துறந்து, சுகபோக வாழ்க்கையை துறந்து, பொது நலனே தன் நலன் என்று தொண்டு வாழ்க்கை மேற்கொண்ட அந்த உண்மையான மா மனிதரை தன் வாழ்க்கையின் முன் மாதிரியாக, வழிகாட்டியாக பின்பற்றினார்.
இந்த சமூகம் மாற வேண்டுமென்றால், உங்கள் வாழ்க்கைத் தரம் உயர வேண்டுமென்றால், அவரவர் குலத்தொழிலை விட்டொழிக்க வேண்டும், அனை வரும் கல்வி கற்று அவரவருக்கு விருப்பமான துறையை தேர்ந்தெடுக்க வேண்டும். இதுவே சமூக மாற்றத்திற்கான அடிப்படை என்பதை உணர்ந்து தன் பிள்ளைகள் அனைவரையும் அத்தனை வறுமையிலும் பள்ளிகளுக்கு அனுப்பி கல்வி கற்க வைக்கிறார்.
என் தந்தைக்கு அய்ந்து பெண்கள், ஒரு ஆண் (அது நான்). எங்கள் அனைவரையும் கல்லூரியில் உயர்கல்வி கற்க வைத்து பட்டங்களை பெறச் செய்து அனைவரையும் அரசாங்க உயர்பொறுப்புகளில் அமர வைத்தார். (இன்று சிலர் பணி ஓய்வும் பெற்று விட்டனர்)
நான் இவரின் கண்டிப்பின் காரணமாக பள்ளிப் படிப்பில் பல குழப்பங்கள் செய்து சரியாக படிக்கவில்லை என்றாலும், அவர் ஒரு நாளும் என் கையில் சவரக் கத்தியை கொடுத்ததில்லை. அதற்கு காரணம் தந்தை பெரியார் கொள்கை மீதிருந்த பிடித்தம், நம் குடும்பம், நம் சமூகம் உயர வேண்டும் என்ற எண்ணம். அதன் விளைவாக ஜாதிக் கென்றிருந்த குலத்தொழிலிருந்து வேறு தொழிலுக்கு மாற்றியே தீர வேண்டும் என்று வைராக்கியமாக என்னை தொழில்நுட்ப கல்வி (DEE) கற்க வைத்தார். பிறகு நானும் அதை உணர்ந்து மாற்றுத் துறையில் பயிற்சி பெற்று இன்று திருப்பத்தூர் நகரில் சிறப்பான முறையில் குலத் தொழிலில் ஈடுபடாமல் மின்னணு வியல் துறை சார்ந்த தொழிலும், வியாபாரமும் செய்து வருகிறேன்.
இப்படி, என் தந்தை நாங்கள் வாழும் வாழ்க்கை முறையையும், வாழ்க்கைத் தரத்தையும் உயர்த்தியது மட்டுமல்லாது, தான் வாழும் காலத்திலேயே தான் செய்து வந்த குலத்தொழிலையும் மாற்றி ஓமியோ பதி மருத்துவம் படித்து, மருத்துவம் பார்க்க அக் காலத்தில் வழங்கிய R.H.M.P பட்டத்தையும் பெற்று நகரில் ஓமியோபதி மருத்துவம் பார்த்து ஓமியோபதி மருத்துவத்தில் சிறந்த மருத்துவராக விளங்கினார்.
ஒரு சவரத் தொழிலாளி Dr.. வி. பெருமாள் R.H.M.P ஆனார். காலம் காலமாக சவரத்தொழிலை செய்து வந்த ஒருவரை மருத்துவராக மாற்றிய பெருமை, புகழ் இவையனைத்துக்கும் காரணம் தந்தை பெரியார் அவர்களின் கொள்கைகளை, சிந் தனைகளை உள் வாங்கியது, அந்த கொள்கைகளை ஏற்று தன் வாழ்க்கையில் ஒவ்வொரு நிலையிலும் அதைப் பின்பற்றியது, நடைமுறைப்படுத்தியதுதான்.
எங்களை கல்வி கற்க வைத்ததின் விளைவாக எங்கள் குடும்பம் மீது காலம் காலமாக திணிக்கப் பட்ட குலத்தொழிலை செய்து பிழைக்க வேண்டிய அவல நிலை ஒழிந்தது. அதற்கு ஒரே காரணம் தந்தை பெரியார், தந்தை பெரியார் என்று ஓங்கி உரக்க சொல்வேன். அவரின் சிந்தனைகள் என் தந்தையின் அறிவுக்கு சென்றடையவில்லை என் றால் இது சாத்தியமில்லை என்பதை முழுமையாக உணர்கிறேன்.
இன்று என் தந்தையின் பேரக் குழந்தைகள் பொறியாளர்களாக, மருத்துவராக, முத்தாய்ப்பாக பெருமிதத்துடன் கர்வத்தோடும் உணர்ச்சி பொங்க சொல்லுகிறேன். அய்ந்தாம் வகுப்பு படித்த சவரத் தொழிலாளியின் பேரன் இன்று அய். ஏ. எஸ்.
ஆம் தோழர்களே,
அரியானா மாநிலத்தில் மாவட்ட ஆட்சியராக ஜெ. கணேசன் மி.கி.ஷி. பணிபுரிந்து இப்போது அதைவிட உயர் பதவியில் பணியாற்றுகிறார்.
இவர் அய். ஏ. எஸ். தேர்வில் தமிழ்நாட்டில் முதல் மாணவனாகவும் அகில இந்திய அளவில் இரண்டாம் இடத்திலும் வந்தவர்.
சூத்திரர்களுக்கு கல்வி வராது என்று பல காலமாக மறுக்கப்பட்டுவந்த நிலையில் வாய்ப்பு வழங்கப்பட்டால் யாரும் சிறந்து விளங்கலாம் என்பதற்கு இவரும் ஒரு உதாரணம்.
இவை எல்லாம் நான் சொல்லக் காரணம் தற் பெருமை அல்ல, தந்தை பெரியார் என்ற மாமனிதரின் சிந்தனை, தனி மனித வாழ்க்கையிலும், சமூகத்திலும் எந்த அளவிற்கு மாற்றத்தை உருவாக்கும் என்ற காரணத்திற்காகத்தான்.
என் தந்தையின் வாழ்க்கையில் தந்தை பெரியார் என்ற மனிதர், அவரின் திராவிட இயக்கக் கொள் கைகள் அவருக்கு அறிமுகம் ஆகாமலிருந்திருந்தால், எங்களை கல்வி கற்க அனுமதிக்காமலிருந்திருந்தால், எல்லாம் ஆண்டவன் செயல், தலை எழுத்து என்று நினைத்திருந்தால், நான், என் குடும்பம் இந்த நிலையில் இருந்திருக்க மாட்டோம். என் ஜாதிக்கு என்று நிர்ணயித்த குலத்தொழிலான சவரத் தொழிலைத் தான் இன்று நானும் செய்து கொண்டிருப்பேன்.
அதே போன்று தான் என் உடன் பிறந்த சகோதரிகள் கல்வி கற்காமல் இருந்து, அரசாங்கப் பணிக்கு போகாமல் இருந்திருந்தால், அவர்களும் இந்த குலத்தொழிலை செய்பவர்களைத் தான் திருமணம் செய்து கொண்டு இந்து மதத்தால் (வர்ணாசிரம தர்மம்) எங்கள் சமூகம் எந்த நிலையில் இருக்க வேண்டும் என்று நினைத்து உருவாக்கப் பட்டதோ அதே நிலையில் தான் இருந்திருப்பார்கள்.
இன்றும் என் தந்தையின் சம காலத்தில் வாழ்ந்தவர்களின் நிலை, தந்தை பெரியார் என்ற மனிதரின் சிந்தனையை உள் வாங்காத காரணத்தால் அதே இழி நிலையில்தான் இருக்கிறார்கள்.
தொழில் செய்தால் வருமானம் வரும்.
ஆனால், தந்தை பெரியார் சொன்ன "மானமும், அறிவும் மனிதருக்கு அழகு" என்ற நிலையை நாம் அடைய வேண்டுமென்றால், தந்தை பெரியார் தான் ஒரே தீர்வு.
அவரை பின்பற்றுவது தான் ஒரே வழி. அதை முழுமையாக உணர்ந்த பல குடும்பங்கள் போல, எங்கள் குடும்பமும் ஒரு உதாரணம்.
நானும் கழகத்தில் இணைந்து செயல்படுவதற்கு காரணம் ,தந்தை பெரியார் அவர்களால் எங்கள் குடும்பம் அடைந்த முன்னேற்றம், அதன் விளைவாக சமூகத்தில் ஏற்பட்ட மாற்றம், மரியாதை அதற்கு நன்றிக்கடனாகத் தான்.
இதை நான் செய்யவில்லை என்றால் நான் நன்றி மறந்தவனாகி விடுவேன்.
இப்படி, எங்கள் குடும்பம் போல பல குடும்பங்கள் முதல் தலைமுறையாக தலைதூக்கி வரும் இந் நாளில், அந்த முன்னேற்றத்தை தடுக்கும் வகையில், நய வஞ்சகமாக இப்போது ஆளும் பா.ஜ.க. ஒன்றிய மோடி அரசு கொண்டு வந்துள்ள திட்டம் தான் "விஸ்வகர்மா யோஜனா" என்ற குலக் கல்வி திட்டம்.
18 வயதிலிருக்கும் மாணவர்கள் அவரவர் தந்தை செய்யும் குலத்தொழிலை கற்றுக் கொண்டு தொழில் செய்தால், அவர்களுக்கு நிதி உதவி, அவரவர் குலத் தொழிலில் அவரவர்களை நிலை நிறுத்தும் சதித் திட்டம்.
ஆசிரியர் குறிப்பிடுவது போல, எங்களைப் போன்றவர்கள் காலம் காலமாக செய்து வந்த குலத்தொழிலை விட்டு மருத்துவராகவும், பொறி யாளராகவும், பட்டதாரிகளாகவும், அய்.ஏ.எஸ்.ஆகவும் ஆவதை பொறுக்க முடியாமல் அதை தடுப்பதற்காக கொண்டு வந்துள்ள மோசடி திட்டம்.
ஆசிரியர் தந்தை பெரியார் என்ற ஈரோட்டுக் கண்ணாடி கொண்டு சரியாக இந்த சதித் திட்டத்தை அடையாளம் கண்டு இதை தடுக்க வேண்டும் என்று எச்சரித்துள்ளார்.
இல்லையென்றால், நம் சமூகமும், நம் பிள்ளைகளின் வாழ்க்கையும் பின் நோக்கி இழுத்து செல்லப்படும் என்ற நிலையில் இதை ஒழித்தே தீர வேண்டும்.
பாசிச ஓநாய்கள் விரிக்கும் வலையில் நம் மக்கள் சிக்குண்டு விழாமல் தடுக்க வேண்டும், இதைப் பற்றிய விழிப்புணர்வை மக்களிடையே கொண்டு சேர்க்க வேண்டும் என்ற உயரிய நோக்கில்தான் இந்த பிரச்சார பரப்புரைப் பயணம்.
90ஆவது வயதிலும், தன் உடல் நலனையும் பொருட்படுத்தாமல் இந்த பிரச்சார பரப்புரைப் பய ணத்தில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு உள்ளார்.
அன்று ராஜாஜி கொண்டு வந்த குலக் கல்வி திட்டத்தை தந்தை பெரியார் ஓட., ஓட விரட்டியதின் விளைவாக அக் காலகட்ட சமூகம் தப்பியது. நாங்கள் எல்லாம் படித்து முன்னேறினோம்.
இன்று சமூகத்தில் உயர்ந்து வரும் அந்த தலைமுறைக்கு ஆபத்து.
அன்று தந்தை பெரியார் குலக் கல்வி திட்டத்தை விரட்டினார்.
இன்று தமிழின தலைவர் ஆசிரியர் இந்த "விஸ்வகர்மா யோஜனா" திட்டத்தையும் , பா. ஜ. க. அரசையும் ஓட, ஓட விரட்டுவார்.
இச் சமூகத்தின்பால் அக்கறை கொண்டு பயணிக்கும் ஆசிரியர் அவர்களின் பிரச்சாரத்திற்கு வலு சேர்க்கும் விதமாகவும் குலத் தொழிலில் ஈடுபட்டுள்ள குடும்பங்களிடையே விழிப்புணர்வை உருவாக்கும் விதமாகவும், ஆசிரியர் எழுதிய "ஆபத்து, ஆபத்து, மீண்டும் குலக் கல்வி திணிப்பா?" என்ற புத்தகத்தை குறைந்தது 1000 பிரதிகள் ஆவது திருப்பத்தூர் மாவட்ட கழகம் சார்பில் பெற்று அதை மக்களிடையே கொண்டு சேர்ப்பது என்ற எண்ணம் கொண்டுள்ளோம்.
அதை நிறைவேற்றியும் காட்டுவோம்.
வரும் தலைமுறையை காப்போம்.
வெல்லட்டும் ஆசியர் பரப்புரைப் பயணம்!
ஒழியட்டும் விஸ்வகர்மா யோஜனா திட்டம்!
நிலைக்கட்டும் சமூக நீதியும், சமத்துவமும்!
No comments:
Post a Comment