தேசிய அளவில் கவனம் பெற்ற வாச்சாத்தி வழக்கில் குற்றவாளிகளுக்கு தர்மபுரி மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் வழங்கிய தண்டனையை சென்னை உயர் நீதிமன்றம் உறுதிசெய்ததோடு அவர் களது மேல்முறையீட்டு மனுக்களையும் தள்ளுபடி செய்தது.
சந்தன மரக் கடத்தல் தொடர்பாகத் தமிழ்நாட்டுக் காவல் துறையும் வனத்துறையும் வருவாய்த் துறையும் தர்மபுரி மாவட்டம் வாச்சாத்தி மலைக்கிராமத்தில் 1992இல் ‘தேடுதல் வேட்டை’யில் ஈடுபட்டனர். பெண்கள், சிறுவர்கள் உள்பட நூற்றுக்கும் மேற்பட்ட கிராம மக்களைக் கைது செய்தனர். அவர்களில் 18 பெண்களைக் கூட்டுப் பாலியல் வல்லுறவுக்கு ஆளாக் கினர்.
அரசு அதிகாரத்தில் இருக்கிறவர்கள் வாச்சாத்தி கிராமத்தில் கட்டவிழ்த்துவிட்ட வன்முறை வரலாறு காணாதது. இடதுசாரி அமைப்பினரும் மலைவாழ் மக்கள் சங்கத்தினரும் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்கத் தொடர்ந்து போராடிவந்த நிலையில் இந்த வழக்கில் 2011இல் தர்மபுரி முதன்மை அமர்வு நீதிமன்றம் தீர்ப்பளித்தது. 269 பேர் மீது குற்றம் சுமத்தப்பட்ட நிலையில் தீர்ப்பின்போது உயிரோடு இந்த 215 பேரும் குற்ற வாளிகள் என நீதிமன்றம் தீர்ப்பளித்தது. பத்து ஆண்டுக் கடுங்காவல் தண்டனைதான் அதிபட்ச தண்டனையாக விதிக்கப்பட்டது.
அதுவும் பாலியல் வன்முறையில் ஈடுபட்ட 12 பேருக்குத்தான் அது. அய்வருக்கு ஏழு ஆண்டுகளும் மற்றவர்களுக்கு ஓராண்டு முதல் மூன்றாண்டுகள் தண்டனையும் விதிக்கப்பட்டது. இவர்களில் 27 பேர் தண்டனையை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தனர். இது தொடர்பாக வாச்சாத்தி மலைக்கிராமத்துக்கே நேரில் சென்று விசாரித்த நீதிபதி பி. வேல்முருகன், குற்றவாளிகளின் தண்டனையை உறுதிசெய்து செப்டம்பர் 29 அன்று தீர்ப்பளித்தார்.
வன்முறை நடந்து 31 ஆண்டுகள் கடந்த நிலையில் குற்றவாளிகளுக்கு அளிக்கப்பட்டிருக்கும் இந்தத் தீர்ப்பு, பாதிக்கப்பட்டவர்களுக்குக் கிடைக்கிற நீதியாகி விடாது என்கிறபோதும் சட்டத்தின் மீதான நம்பிக்கையை அளிக்கிறது.
No comments:
Post a Comment