தந்தை பெரியாரின் கொள்கைகளை இளம் வயதிலேயே பெரிய எழுச்சியுடன் மேடைகளில் முழங்கியவர் தளபதி அர்ச்சுனன் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் புகழாரம்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, October 15, 2023

தந்தை பெரியாரின் கொள்கைகளை இளம் வயதிலேயே பெரிய எழுச்சியுடன் மேடைகளில் முழங்கியவர் தளபதி அர்ச்சுனன் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் புகழாரம்!

சென்னை, அக்.15 தந்தை பெரியார் அவர்களின் கொள்கைகளை இளம் வயதிலேயே பெரிய எழுச்சியுடன் மேடைகளில் முழங்கி இயக்கத்தின் வளர்ச்சிக்கு துணை நின்றவர் இளைய பட்டக்காரர் என்று சொல்லப்படும் தளபதி அர்ச்சுனன் என்று அவரது நூற்றாண் டையொட்டி காணொலி மூலம் ஆற்றிய உரை யில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் புகழாரம் சூட்டினார்.

தமிழ்நாடு முதலமைச்சர்  மு.க.ஸ்டாலின்  நேற்று (14.10.2023) காணொலிக் காட்சி வாயிலாக திராவிடர் கழகத்தின் சார்பில் நடைபெற்ற தளபதி அர்ச்சுனன் மன்றாடியார் அவர்களின் நூற்றாண்டு விழாவில் உரையாற்றினார். அவரது உரை வருமாறு:

பழையகோட்டை - இளைய பட்டக்காரர் என்று சொல்லப்படும் மரியாதைக்குரிய அர்ச் சுனன் அவர்களின் நூற்றாண்டு விழாவுக்குத் தலைமை வகித்து - அவரது படத்தை திறந்து வைத்துள்ள திராவிடர் கழகத் தலைவர்  ஆசிரியர் அவர்களே! 

வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த விழாவில் பங்கெடுத்துக் கொண்டுள்ள திராவிட இயக்க ஆளுமைகளே!

உங்கள் அனைவருக்கும் எனது அன்பான வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த சிறப்புமிகு நூற்றாண்டு விழாவில் கலந்து கொள்ள இயலாத நிலையில் வேறு பணிகளில் நான் இருப்பதால் காணொலி மூலமாக எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

1940-ஆம் ஆண்டு நடைபெற்ற ஒரு மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றிய பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் அவர்கள் - இந்த இயக்கத்தை வளர்ப்பது சிறு வயது இளைஞர்கள்தான் என்று குறிப்பிட்டார்.

அத்தகைய இளைய தீரர்களில் ஒருவர்தான் பழையகோட்டை - இளைய பட்டக்காரர் என்று சொல்லப்படும் மரியாதைக்குரிய அர்ச்சுனன் அவர்கள்.

இன்றைக்கு மிகப் பெரிய தலைவர்களாகப் போற்றப்படும் பேரறிஞர் அண்ணா, முத்தமி ழறிஞர் கலைஞர் எனப் பலரும் மிக மிக இள வயதிலேயே மேடைகளில் முழங்கத் தொடங் கியவர்கள். 

அதிலும் நம்முடைய  ஆசிரியர் அவர்கள் - அந்தக் காலக்கட்டத்தில் பள்ளிச் சிறுவனாக இருந்து - பத்து வயதில் மேடைகளில் முழங்கத் தொடங்கியவர் என்பதை அனைவரும் அறி வீர்கள்.

இப்படி ஏராளமான இளைஞர்கள் - இளம் பெண்கள் - சிறுவர்கள் இந்த இயக்கத்தை நோக்கி சிறுவயதிலேயே ஈர்க்கப்பட்டார்கள். பெரியாரின் கொள்கை மீதான ஈர்ப்பு மட்டுமே காரணமல்ல. பெரியார் என்ற தலைவர் மீதான பாசமும், அன்பும் இன்னொரு முக்கியமான காரணம். அப்படி தந்தை பெரியாரால் ஈர்க் கப்பட்டவர்களுள் முக்கியமானவர் அர்ச்சுனன் அவர்கள்.

இளம் வயதிலேயே பெரும் எழுச்சியுடன் தந்தை பெரியாரின் கொள்கைகளை மேடை களில் முழங்கி, இயக்கத்தின் வளர்ச்சிக்குத் துணை நின்றவர் பழையகோட்டை  இளைய பட்டக்காரர் ந.அர்ச்சுனன் அவர்கள். தமிழ் நாட்டின் மேற்கு மண்டலத்தில் பழையகோட்டை குடும்பத்தார் என்றால் அறியாதவர்கள் கிடையாது. மிகப் பெரிய செல்வந்தர்கள். 

ஏராளமான நிலபுலன்களைக் கொண்ட வர்கள். காங்கேயம் மாடுகள் என இன்று புகழ் பெற்றிருக்கும் மாடுகளை வளர்த்தெடுத்ததில் இந்தக் குடும்பத்தினருக்குத் தனிப் பெருமை உண்டு. அத்தகைய செல்வச் செழிப்பு மிக்க குடும்பத்தில் நல்லதம்பி சர்க்கரை மன்றாடியார் அவர்களின் இளைய மகனாக, நல்லசேதுபதி சர்க்கரை மன்றாடியாரின் இளவலாகப் பிறந்த இளைய பட்டக்காரர்தான் அர்ச்சுனன் அவர்கள்.

தந்தை பெரியாரின் கொள்கைகளால் இருபது வயதிலேயே ஈர்க்கப்பட்டு, அவரது தளபதியாகத் திகழ்ந்தவர் அவர். தமிழ்நா டெங்கும் பயணித்து பெரியாரின் பகுத்தறிவு-சுயமரியாதை கருத்துகளை முழங்கியவர். பொதுக்கூட்டங்களிலும் மாநாடுகளிலும் அர்ச் சுனன் முன்வைத்த கருத்துகள், சிந்தனையைத் தூண்டி, செயலாற்றலுக்குத் துணை நின்றன.

நீதிக்கட்சியும் சுயமரியாதை இயக்கமும் இணைக்கப்பட்டு 1944-ஆம் ஆண்டு சேலம் மாநாட்டில், திராவிடர் கழகம் எனப் பெயர் மாற்றம் பெற்றது. பெரியாரின் தலைமையிலான இயக்கத்திற்குப் பெயர் மாற்றம் செய்யும் தீர்மானத்தின் பெயர், அண்ணாதுரை தீர்மானம். பேரறிஞர் அண்ணாவின் பெயரால் அமைந்த தீர்மானம். அவரே முன்மொழிந்த தீர்மானம் அது. அதன்பிறகு, திராவிடர் கழகத்திற்கு ஒரு கொடி வேண்டும் எனப் பெரியார் திட்டமிட்டார். அதற்கான வடிவமைப்பின்போதுதான், கருப்பு நிறத்திற்கு நடுவே சிவப்பு வட்டம் வரைவதற்கு மை தேவைப்பட்டபோது, சிவப்பு மை இல்லாததால், தலைவர் கலைஞர் அவர்கள் தன் விரலில் குண்டூசியால் குத்தி, பொங்கி வந்த ரத்தத்தைக் கொண்டு சிவப்பு வட்டத்தை வரைந்தார்.

கொள்கையாளரின் குருதியில் வடிவ மைக்கப்பட்டது திராவிடர் கழகக் கொடி. சமு தாய இருளை அகற்றி, புரட்சி வெளிச்சம் பரவ வேண்டும் என்ற அடையாளமான அந்தக் கொடியை பல ஊர்களிலும் ஏற்றியவர் பழைய கோட்டை இளைய பட்டக்காரர் அர்ச்சுனன். 

கொடியேற்றி வைத்து அவர் ஆற்றிய வீர உரைகள், அன்றைய இளைஞர்களின் நெஞ்சில் அறிவுச் சுடராக ஒளிர்ந்தது. 

ஜமீன் குடும்பத்துப் பையனான அர்ச்சுனன் - தன் சொத்து, சுகம், செல்வச் செழிப்பு பற்றிக் கவலைப்படாமல், கரடுமுரடான சமுதாய சீர்திருத்தப் பாதையில் பயணித்தார். தந்தை பெரியாருக்குத் தளபதியாகச் செயல்பட்டார். அவர் கொள்கைகளைக் கொட்டி முழக்கி, பாட்டாளிகளின் தோழனாகத் திகழ்ந்தார்.

கோவையில் நடந்த திராவிடர் இளைஞர் முதலாவது மாநாட்டுக்கு வரவேற்புக்குழுத் தலைவராக இருந்தவர் அர்ச்சுனன். அந்த மாநாட்டில் தலைமையுரை ஆற்றியவர் பேரறிஞர் அண்ணா அவர்கள். “ஓர் அரிய-தீரமுள்ள முன்னணிப் படை இன்று தயாராகி விட்டது. கஷ்ட நஷ்டங்களைக் கவனியாமல், எதிர்ப்புக்கு அஞ்சாமல், சூது சூழ்ச்சிகள் கண்டு சோர்வடையாமல், சளைக்காமல் உழைக்க இளைஞர்கள் முன்வந்துள்ளனர். இது கண்டு எதிரிகள், எப்படி புறப்பட்டது இந்தப் படை, எப்படி அமைந்தது இத்தகைய முன்னணி என்று எண்ணி ஏங்குகின்றனர்” - இப்படி உணர்ச்சியும் எழுச்சியும் மிக்க அழகு தமிழில் பேசியவர் அண்ணா அல்ல, அர்ச்சுனன்தான் இப்படிப் பேசினார்.

அவருடைய சொற்பொழிவுகளின் பதிவு களைப் படிக்கும்போது, பேரறிஞர் அண்ணா வின் பேச்சைக் கேட்பது போலவே இருக்கிறது. தந்தை பெரியாரின் தளபதிகளான பட்டுக் கோட்டை அழகிரி, பேரறிஞர் அண்ணா, பழையகோட்டை அர்ச்சுனன் எனப் பலரும் கொள்கை முழக்கத்தால் எளியவர்களையும் ஈர்க்கக்கூடிய ஆற்றல் பெற்றவர்களாக தொடக்க காலத்தில் இருந்திருக்கிறார்கள். நம்பிக்கைக்குரிய இளைஞராகத் திகழ்ந்த அர்ச்சுனன் அவர்களைத் திராவிடர் கழகத்தின் முதல் பொருளாளராக நியமித்தார் பெரியார் அவர்கள்.

தந்தை பெரியாரின் நம்பிக்கையை ஒருவர் பெறுவது என்பது எவ்வளவு சிரமமானது என்பதை அனைவரும் அறிவோம். அத்தகைய பெரியார் அவர்களையே இளைஞராக இருக்கும்போது ஈர்த்து நம்பிக்கையைப் பெற்றவர் அர்ச்சுனன் அவர்கள் என்பதே அவரது பெருமையைச் சொல்வதற்கு போதுமான எடுத்துக்காட்டு.

திராவிடர் கழகம் உருவான சில ஆண்டு களில், தந்தை பெரியாரை கோவை மாவட்டம் முழுவதும் சுற்றுப்பயணம் அழைத்துச் செல்வதற்காக, அன்றைய நாளில் 16 ஆயிரம் ரூபாய்க்கு புது கார் ஒன்றை வாங்கியவர் அர்ச்சுனன். பத்து கிராம் தங்கம் 99 ரூபாய்க்கு விற்ற காலம் அது. அந்தக் காலத்தில் 16 ஆயிரம் ரூபாய்க்கு புது கார் வாங்கிக் கொடுத்தவர். இப்படி தனது உழைப்பை மொத்தமாக பெரியார் கொள்கைக்கு வழங்கியவர் அர்ச்சுனன் அவர்கள். 

''திராவிடர்களாகிய நாம் சுதந்திரத்துடன் வாழ வேண்டும்! இல்லாவிட்டால் மாள வேண்டும்" என்று ஊர் ஊராகப் போய் எழுச்சி ஏற்படுத்தினார். மேற்கு மண்டலத்தில் கருஞ்சட்டைப் படையை பலப்படுத்தியது அவரது கர்ஜனைதான். அத்தகைய  கொள்கை வீரர். பேச்சாலும் செயலாலும் திராவிட இயக்கத்தின் பக்கம் பலரையும் ஈர்த்த தீரர், உடல்நலன் பாதிக்கப்பட்டு தன் 23 வயதிலேயே உயிர் நீத்தார் என்பது மிகமிக வருத்தம் தரும் செய்தி. 

அர்ச்சுனன் அவர்களுடைய மறைவு கேட்டு அதிர்ச்சியடைந்த பெரியார், கண்ணீருடன் தன் கைப்பட குடிஅரசு பத்திரிகையில் இரங்கல் தலையங்கம் எழுதினார். பேரறிஞர் அண்ணா அவர்கள், 'திராவிட நாடு' இதழில் தலையங்கம் தீட்டினார். தமிழ்நாடெங்கும் திராவிடர் கழகத் தினர் சோகத்தில் மூழ்கினர். இழப்புகளையும் வலிகளையும் எதிர்கொண்டே திராவிட இயக்கம் வளர்ந்தது. அர்ச்சுனன் அவர்களின் மறைவின் துயரையும் தாங்கிக்கொண்டு, அவரது புகழ் போற்றும் நிகழ்வுகளை அன்றைக்கும் திராவிடர் கழகம் நடத்தியது. இன்றைக்கும் அவர் நூற்றாண்டு நிறைவு விழாவை நடத்துகிறது. 

இலட்சியவாதிகள் இறக்கலாம். இலட்சி யங்கள் ஒரு போதும் இறப்பதில்லை என்று எழுதியவர் முத்தமிழறிஞர் கலைஞர். 

இலட்சியங்களை உயர்த்திப் பிடித்த இலட்சியவாதியாம் அர்ச்சுனனை மறக்காமல், அவரது புகழினைப் போற்றும்   ஆசிரியர் அவர் களுக்கும் திராவிடர் கழகத்தினருக்கும் என் பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். திராவிடர் கழகமும் திராவிட முன்னேற்றக் கழகமும் இரட்டை குழல் துப்பாக்கி என்றார் பேரறிஞர் அண்ணா. தாய்க் கழகத்தின் கொள்கை மறவர் அர்ச்சுனனை தி.மு.கழகம் நினைவிலேந்திப் போற்றுகிறது. பழைய கோட்டை பட்டக்காரர் குடும்பத்தினர் பலர் இன்றளவும் தி.மு.கழகத்தின் கொள்கை முரசங்களாகத் திகழ்ந்து வருகிறார்கள்.

அர்ச்சுனன் போன்ற தீரர்கள் சுயமரியாதை - பகுத்தறிவு இயக்கத்துக்கு இன்னும் தேவைப்படுகிறார்கள். தமிழ்நாட்டில் மட்டு மல்ல, இந்தியா முழுமைக்கும் திராவிட இயல் கோட்பாடு ஒலிக்கத் தொடங்கி இருக்கிறது. "எங்களுக்கு ஒரு பெரியார் இல்லையே! எங்கள் மாநிலத்தில் திராவிட இயக்கம் இல்லையே" என்ற ஏக்கம் மற்ற மாநிலங்களில் கேட்கத் தொடங்கி இருக்கிறது.

பழையகோட்டை இளைய பட்டக்காரர் அர்ச்சுனன் அவர்கள் வழியில், இலட்சிய முழக்கத்தை தொடர்ந்து எழுப்புவோம். சமூக நீதியையையும் சுயமரியாதையும் இந்தியா முழுமைக்கும் பரவிடச் செய்வோம்.

நன்றி வணக்கம்.

இவ்வாறு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உரையாற்றினார்.


No comments:

Post a Comment