குலத் தொழில் கல்வியைத் திணிக்கும் விஸ்வகர்மா யோஜனாவை எதிர்த்து அக்.25 முதல் நாடு தழுவிய அளவில் எங்கள் பிரச்சாரம்
திருச்சியில் செய்தியாளர் கூட்டத்தில் தமிழர் தலைவர் பேட்டி
திருச்சி, அக்.21 தமிழ்நாட்டின் ஆளுநர் அரசமைப்புச் சட்டத்தின் பெயரில் எடுத்துக் கொண்ட உறுதிமொழிக்கு விரோதமாக நடந்து கொண்டு வருகிறார். உண்மையைச் சொல்லப் போனால் ஆளுநர் பதவியே தேவையில்லாத ஒன்று.
வரும்25ஆம் தேதி முதல் தமிழ்நாடு தழுவிய அளவில் விஸ்வ கர்மா யோஜனா என்ற பெயரில் ஒன்றிய பிஜேபி அரசு திணிக்கும் குலத் தொழில் கல்வித் திட்டத்தை எதிர்த்து திராவிடர் கழகத்தின் சார்பில் தொடர் பிரச்சாரம் நடைபெறும் என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:
நேற்று (20.10.2023) திருச்சியில் நடைபெற்ற திராவிடர் கழகத் தலைமைச் செயற்குழுக் கூட்டத்திற்குப் பிறகு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார்.
அப்பேட்டியின் விவரம் வருமாறு:
இன்று நடைபெற்ற திராவிடர் கழகத் தலைமைச் செயற்குழுவில் மிக முக்கியமான தீர்மானங்கள் நிறைவேற் றப்பட்டன. முதல் தீர்மானமாக இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மேல் மருவத்தூர் அடிகளாருக்கு இரங்கல்!
அந்த இரங்கல் தீர்மானம், இயக்கத்தில் தொண்டாற்றிய தோழர்கள் மறைவிற்கும், தமிழ்நாட்டில் கடலியல் வரலாற்று ஆய்வாளராக இருந்த ஒரிசா பாலு என்ற பாலசுப்பிரமணி, நேற்று (19.10.2023) மறைவுற்ற மேல்மருவத்தூர் தவத்திரு பங்காரு அடிகளார் ஆகியோருக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து நிறைவேற்றப்பட்டுள்ளது.
பங்காரு அடிகளாருடைய கருத்துகளில் எங்களுக்கு மாறுபாடுகள் இருந்தாலும், அவரைப் பொறுத்தவரையில் தனி வழியை உண்டாக்கிக் கொண்டு தமிழ்த்திரு அடிகளாக இருந்தார். தவத்திரு அடிகளார் என்று சொல்வதைவிட, தமிழ்த்திரு அடிகளார் என்று சொல்லக்கூடிய அளவிற்கு அவர் இருந்தார்.
காரணம், தமிழில் வழிபாடு, பெண்கள் கருவறைக்குள்ளே சென்று பூஜை செய்வதற்கும் அடிகோலினார்.
ஸநாதனத்திற்கு நேர் எதிரான ஒரு நிலைப் பாட்டினை நடைமுறையில் காட்டினார் அவர்.
ஆகவே, மற்ற செய்திகள், மூடநம்பிக்கைகள் போன்ற பலவகையான ஆதங்கம் எங்களுக்கு இருந்தாலும், ஒத்துப்போக முடியாத சூழ்நிலை இருந் தாலும், தமிழர் ஒருவர், துறவி,ஒரு ஆக்கத்தைத் தமிழ் பக்தர்களிடையே பரப்பினார்; அவருடைய மறைவு என்பது மிகப்பெரிய அளவிற்கு ஈடு செய்ய முடியாத இழப்பாகும். அவர் கல்வித் தொண்டையும் செய்தார். மருத்துவக் கல்வி, பொறியியல் கல்லூரி போன்றவையாகும்.
ஆகவே, ஒரு மனிதநேயராகவே அவர் வாழ்ந் திருந்தார். எனவே, அவருடைய மறைவிற்கு ஆழ்ந்த இரங்கலை திராவிடர் கழகத் தலைமைச் செயற்குழுவில் தெரிவித்திருக்கிறோம்.
ஜாதிவாரி கணக்கெடுப்பு
அதற்கடுத்து மிக முக்கியமான தீர்மானம் என்னவென்று சொன்னால், ஜாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்தப்படவேண்டும் என்பது மிக அவசியம். இன்று அகில இந்தியா முழுவதும் அது நடத்தப்படவேண்டும் என்று கோரிக்கைகள் வலுத்து வருகின்றன. அந்தக் கோரிக்கை நீண்ட காலமாக நாங்கள் வற்புறுத்தி வந்த கோரிக்கை.
ஒரு கேள்விக்கு பலமுறை பதில் சொல்லியிருக் கிறோம்.
யார் யாரெல்லாம் ஜாதி ஒழியவேண்டும் என்று சொல்கிறார்களோ, அவர்கள்தான் ஜாதிவாரிக் கணக்கு கேட்கிறார்களே என்று சிலருக்குக் குழப்பமாக இருக்கலாம்.
ஜாதியை ஒழிப்பதற்காகத்தான் ஜாதி வாரிக் கணக்கு.
அம்மை நோயை ஒழிப்பதற்காகத்தான், அம்மை நோய்க் கிருமியை உடலுக்குள் செலுத்துவது போன் றதுதான் அது. இதுகுறித்து மாலையில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் தெளிவான விளக்கங்களைச் சொல்லுவோம்.
சமூகநீதியை நடைமுறைப்படுத்துகின்றபொழுது, உயர்நீதிமன்றங்கள், உச்சநீதிமன்றம் கேள்வி கேட்பது என்னவென்றால், அதற்குரிய (Quantifiable data) ஜாதி வாரிக் கணக்கெடுப்பு இருக்கிறதா? அதை நியாயப்படுத்தக் கூடிய அளவில் புள்ளி விவரங்கள் இருக்கிறதா? என்ற கேள்வியை எல்லா நீதிபதிகளும் கேட்கிறார்கள்.
அது மராத்திய இட ஒதுக்கீடாக இருந்தாலும் சரி; வன்னியர்களுக்கு 10.5 சதவிகித இட ஒதுக்கீடை மய்யப்படுத்திக் கொடுக்கின்ற இட ஒதுக்கீடாக இருந் தாலும் சரி, இந்தக் கேள்வியைக் கேட்டு, குறுக்கே கட்டையைப் போடுகிறார்கள்.
ஆனால், இதையெல்லாம் சாதிக்கவேண்டும் என்றால், சமூகநீதியை வெறும் அரசமைப்புச் சட்டத் தின் ஏட்டுச் சுரைக்காயாக இல்லாமல், நடைமுறையில் கொண்டுவருவதற்கு தேவை என்பதற்காகத்தான் - அந்த அடிப்படையில் ஜாதிவாரிக் கணக்குத் தேவை என்று மிக முக்கியமாக எடுத்துச் சொல்லக்கூடிய சூழல் உள்ளது.
ஜாதித் தொழிலை செய்யச் சொல்வோர் யார்?
அதில் மிகப்பெரிய ஆபத்து என்னவென்றால், ஜாதிவாரிக் கணக்கெடுப்பு எடுப்பதா? ஜாதியை நிலை நாட்டுவதாக ஆகாதா அது என்று ஒருபக்கம் யார் கேள்வி கேட்கிறார்களோ, அவர்களே இப்பொழுது ஜாதித் தொழிலை செய்யுங்கள் என்று ஒரு திட்டத்தைக் கொண்டு வந்திருக்கிறார்கள்.
அந்தத் திட்டத்திற்குப் பெயர்தான் ''விஸ்வகர்மா யோஜனா'' என்கிற மனுதர்ம யோஜனாவாகும்.
விஸ்வ கர்மா யோஜனா என்பது என்ன?
ஆச்சாரியார் அவர்கள் 1952-1953 ஆம் ஆண்டு களிலேயே குலக்கல்வித் திட்டத்தைக் கொண்டு வந்து, அரை நேரம் படிப்பு, அரை நேரம் அவரவர் அப்பன் தொழிலை செய்யவேண்டும் என்று சொன்னார்.
ஆனால், இப்பொழுது வந்திருக்கின்ற திட்டம் அரை நேரம் அல்ல; முழு நேரமாக குலத்தொழிலை செய்யுங்கள் என்பதுதான்.
''நாக்கில் தேன் தடவி, மயக்க மருந்து கொடுப்பது'' போன்று, உங்களுக்கு ஒரு லட்சம் ரூபாய் கடன் கொடுப்போம், குறைந்த வட்டியில் என்கிறார்கள்.
ஒரு தொழில் தொடங்குவதற்கு, குறைந்த வட்டியில் பணம் கொடுத்தால், அதில் ஒன்றும் நமக்கு ஆட்சேபனையில்லை. எல்லாத் தொழில்களுக்கும் கொடுக்கவேண்டும் என்பதுதான் நமது விருப்பமும்!
ஆனால், ஜாதிவாரியாகப் புள்ளி விவரம் கொடுத்திருக்கிறார்கள்; செருப்பு தைக்கும் தொழில், சிரைக்கும் தொழில் செய்பவர் போன்ற 18 தொழில்களுக்காகத்தான் அந்தத் திட்டத்தைக் கொண்டு வந்திருக்கிறார்கள்.
இன்னும் ஒரு பெரிய ஆபத்து அந்தத் திட்டத்தில் என்னவென்றால், 18 வயதிற்கு மேற்பட்டவர்கள்தான் அந்தத் தொழிலை, அவரவர் அப்பாக்களோடு சேர்ந்து, குடும்பத்தோடு சேர்ந்து செய்யவேண்டுமாம். பரம்பரைத் தொழில் செய்கிறார் என்பதற்குத் தாசில் தார் சர்டிபிகேட் வேண்டுமாம்! உண்மை வெளிவந்து விட்டதல்லவா!
நம்முடைய பிள்ளைகள் எல்லோரும் இன்றைக் குக் கல்லூரிக்குச் சென்றிருக்கிறார்கள். 'திராவிட மாடல்' ஆட்சியில், ஏராளமான கல்லூரிகள்; திரும்பிய பக்கமெல்லாம் பள்ளிக்கூடங்கள்; உண்டு, உறைவிடப் பள்ளிகள் இருக்கின்றன.
விவசாயிகள்கூட கஷ்டப்பட்டாவது, கடன் வாங் கியாவது தம்முடைய மகனைப் படிக்க வைத்துப் பட்டதாரியாக்கவேண்டும், பொறியாளராக்க வேண் டும் என்று நினைக்கக் கூடிய கட்டத்தில், 'விஸ்வகர்மா யோஜனா' திட்டத்தைக் கொண்டுவந்து, 18 வயதிற்கு மேற்பட்டவர்கள் இந்தத் தொழிலில் ஈடுபட்டால், ஒரு லட்சம் ரூபாய் கடன், அதுவும் குறைந்த வட்டியில் என்றெல்லாம் சொல்வது, குளோரோஃபாம் என்ற மயக்க மருந்து கொடுக்கின்ற ஆபத்துதான்.
யாருக்கோ வந்த விருந்தா?
இது புரியாமல் சிலர், ''அய்யய்யோ எங்களுக் குக் கொடுக்கக் கூடிய கடனை இவர்கள் தடுக் கிறார்கள்'' என்று சொன்னால், அதன்மூலமாக, காலங்காலமாக செருப்புத் தைப்பவர் பிள்ளை மீண்டும் செருப்புத் தைப்பவராகவே வாழ்நாளைக் கழிக்கக் கூடிய அளவிற்கு, மலம் எடுப்பவர் பிள்ளை மலம் எடுப்பவராகவே, முடிவெட்டுபவர் பிள்ளை முடிவெட்டுபவராகவே இருக்கக்கூடிய ஆபத்து இருக்கிறது. அவர்கள் இதை படத்துடன் விளக்கியிருக்கிறார்கள்.
ஆகவே, இதனை எதிர்த்து தமிழ்நாடு முழுக்க ஒரு விழிப்புணர்வு வரவேண்டும். ஏனென்றால், நம்முடைய மக்கள் இதை யாருக்கோ வந்த விருந்து என்று நினைக்கிறார்கள்.
இன்னும் சிலர், அய்யோ, நமக்கு வரக்கூடிய பணத்தை இவர் தடுக்கிறாரோ?'' என்று தவறான ஒரு எண்ணத்தில் இருக்கிறார்கள்.
25ஆம் தேதி முதல் பரப்புரைப் பயணம்!
அவற்றையெல்லாம் விளக்கிச் சொல்வதற் காகத்தான், என்னுடைய பரப்புரைப் பயணம் தமிழ் நாட்டில் வருகின்ற 25 ஆம் தேதி நாகப்பட்டினத்தில் தொடங்கி, நவம்பர் 3 ஆம் தேதி மதுரையில் முடிய விருக்கிறது.
ஒவ்வொரு நாளும் இரண்டு பொதுக்கூட்டங்கள்; அதில் இந்தியா கூட்டணி என்ற பெயரால், இன்றைக்கு உருவாக்கப்பட்டு இருக்கின்ற மதச்சார்பற்ற ஜனநாயக சமூகநீதிக் கூட்டணியினுடைய தலைவர்கள் எல்லாம் சேர்ந்து, சென்னையில் முடிவெடுத்தபடி, எல்லா இடங் களிலும் இந்தப் பிரச்சாரம் மிக வேகமாக நடைபெறும்.
இன்னொரு முக்கியமான செய்தி - மதுரை காமராசர் பல்கலைக் கழகத்தில், சிறப்புத் தகுதி - முதுமுனைவர் என்று சொல்லக்கூடிய டாக்டர் பட்டம் அளிப்பது என்பது, அந்தப் பல்கலைக் கழகத்தினுடைய பெருமைக்குரிய ஒன்று. ஆன்ற விந்த கொள்கைச் சான்றோர்களையும், தியாகம் செய்தவர்களையும் கவுரவப்படுத்துவதற்காக "மதிப்புறு முனைவர் பட்டம்" கொடுப்பது என்பது பல்கலைக் கழகங்களினுடைய உரிமைகளில் ஒன்று - நடைமுறைகளில் ஒன்று.
ஆளுநர் போக்கு கண்டிக்கத்தக்கது
''தகைசால் தமிழர்'' விருதை முதலில் பெற்ற வரும் - வாழ்நாள் முழுவதும் மக்களுக்காகப் பாடுபட்ட தொழிலாளர்த் தலைவரும், சிறந்த முற்போக்குவாதியுமான 102 வயதான சங்கரய்யா அவர்களைப் பெருமைப்படுத்தவேண்டும் என்பதற் காகவும், மதுரைக் காமராசர் பல்கலைக் கழகம் பெருமைப்படவேண்டும் என்பதற்காகவும் அவருக்கு ''மதிப்புறு முனைவர் பட்டம்'' கொடுக்கவேண்டும் என்கிற தீர்மானத்தை பல்கலைக் கழக ஆட்சிமன்றக் குழுவில் நிறைவேற்றினர். அதற்குத் தமிழ்நாட்டில் இருக்கின்ற ஆளுநர் ஆர்.எஸ்.எஸ்.சினுடைய பிரதிநிதியாக அமர்ந்துகொண்டு தினமும் பஜனை செய்வது; தாழ்த்தப்பட்ட சமுதாயத்தினருக்கு பூணூல் மாட்டுவது என்ற புரோகித வேலையைச் செய்துகொண்டிருக்கின்ற ஆளுநர் முட்டுக்கட்டை போடுகிறார். ஆளுநரின் இந்தப் போக்கை வன்மையாக கண்டிக்கின்றோம். அவருக்கு இல்லாத அதிகாரத்தில் எல்லாம் தலையிட்டுக் கொண்டிருக்கின்றார்.
எது எது அவருடைய வேலையோ, அதையெல் லாம் விட்டுவிட்டு, எது எது அவருடைய வேலையில்லையோ அதையெல்லாம் அரசாங்க ஊதியத்தில், மக்கள் வரிப் பணத்தை ஊதியமாகப் பெற்றுக்கொண்டு செய்து வருகிறார். இது வன்மை யான கண்டனத்திற்குரியதாகும்.
இன்னுங்கேட்டால், துணைவேந்தர் நியமனத்தில் யுஜிசியினுடைய உறுப்பினர் இருக்கவேண்டும்; மானியக் குழுவின் உறுப்பினர் இருக்கவேண்டும் என்று அவர் சொல்லிக் கொண்டிருக்கின்றார் அல்லவா - அந்த மானியக் குழுவின் விதிமுறைகளைப் பல்கலைக் கழகங்கள் மாற்றுகின்றன.
அந்தப் பல்கலைக் கழகங்கள் மாற்றக்கூடிய நிலையில், இதுதான் அந்த விதி:
Hon'ble Governor is ex-officio Chancellor of the State Universities. As per the provisions of the Act of the concerned University, the Governor appoints the Vice Chancellor on the advice/ in consultation with the State Government.
அவர் ஆளுநராக வந்ததினால்தான், வேந்தரே தவிர, தனிப்பட்ட முறையில், அவர் வேந்தராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர் அல்ல. ஆளுநர் பொறுப்பில் இருப்பவர் வேந்தராக வருவார். குறிப்பிட்ட பல்கலைக் கழகத்தினுடைய விதிகளின்படி, துணைவேந்தரை, வேந்தராக இருக்கக்கூடிய ஆளுநர் நியமனம் செய்ய முடியாது. அந்த மாநில அரசின் அறிவுரையைக் கேட்டு, அதன் ஒப்புதலைப் பெற்றுத்தான் துணை வேந்தரை நியமனம் செய்ய முடியும்.
As Chancellor, the Governor also presides over the Convocation of the State Universities, whenever present.
ஆளுநர் எப்பொழுதெல்லாம் இங்கே இருக் கிறாரோ, அப்பொழுது பட்டமளிப்பு விழா நடந்தது என்றால், அந்தப் பட்டமளிப்பு விழாவிற்கு அவர் தலைமை தாங்கவேண்டும். பட்டமளிப்பு விழாவில் பேசுகின்ற உரிமைகூட அவருக்குக் கிடையாது. அப்படியே பேசினாலும், பட்டமளிப்பு விழாவிற்கான வாசகங்கள் தெளிவாக இருக்கின்றன. அதைத்தான் அவர் பேசவேண்டும். அவருடைய வேலை அதுதான்.
Chancellor also appoints his/her nominees on various bodies like Senate, Syndicate, Board of Management, Selection Committee and Academic Council of the State Universities.
பல நிறுவனங்களுக்கு இவர் சார்பாக சிலரை நியமிக்க முடியும்; அதுதான் அவருடைய அதிகாரம்.
The Chancellor has been entrusted with the powers to enquire into the affairs of the State Universities as per the provisions of the Act.
மாநில அரசின்கீழ் இயங்கக்கூடிய பல்கலைக் கழகங்களில், ஏதாவது விவகாரம் இருந்தால், அந்த விவகாரத்தை ஆளுநர் விசாரிக்கலாம்.
ஆனால், யாருக்கு டாக்ட்ரேட் பட்டம் கொடுக்க வேண்டும் என்பது ஆட்சிமன்றக் குழு உறுப்பினர்களின் கூட்டத்தில்தான் முடிவு செய்யப்படும்.
ஆளுநராக இருப்பவர், ''தான் ஒப்புக் கொண் டால்தான் டாக்ட்ரேட் பட்டம் கொடுக்க முடியும்'' என்று சொல்ல முடியாது. இதுதான் இப்பொழுது வந்திருக்கின்ற யுஜிசி என்கிற மாநிலக் குழுவினுடைய அறிக்கையாகும்.
எனவே, தனக்கு இல்லாத அதிகாரத்தை அவர் பிரகடனப்படுத்தி, தான் எடுத்துக்கொண்ட பதவிப் பிரமாணத்திற்கு விரோதமாக ''பப்ளிக் வெல்ஃபேர்'' - பொதுமக்கள் நலனுக்காக நான் பாடுபடுவேன் என்று எடுத்துக்கொண்ட உறுதிமொழிக்கு மாறாக தமிழ்நாடு ஆளுநர் நடந்துகொள்கிறார்.
ஏற்கெனவே பல மாதங்களுக்கு முன்பாக, சட்ட மன்றத்தில், நிறைவேறிய துணைவேந்தர் நியமனம் என்பதில் அவரிடமிருந்து மாற்றக்கூடிய சட்டத் திருத்தத்தைக் கிடப்பில் போட்டு வைத்திருக்கிறார்.
சுயமரியாதை இருந்தால்....?
இதுவே, நல்லவர்கள், சுயமரியாதை உணர்வு உள்ளவர்கள் யாராவது இருந்திருந்தால், இதுபோன்று வந்த பிறகு, இந்தப் பதவியில் நான் நீடிக்க விரும்பவில்லை; உடனடியாக என் பதவியிலிருந்து விலகிக் கொள்வேன் என்று சொல்லியிருப்பார்கள். அதுதான் நனிநாகரிகம், அரசியல் நாகரிகம்.
ஆனால், அந்த அரசியல் நாகரிகத்தைக்கூட அவர் கடைப்பிடிக்கத் தயாராக இல்லை. ஏனென் றால், அவர் ஒரு போட்டி அரசாங்கத்தை நடத்திக் கொண்டிருக்கிறாரே தவிர, அவர் ஆளுநர் பதவிக் குரிய கடமையைச் செய்யவில்லை என்பதை வன்மையாகக் கண்டிக்கின்றோம்.
செய்தியாளர்: ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு அந்த உரிமை இல்லை என்கிறீர்களா?
தமிழர் தலைவர்: யார் ஆளுநராக வந்தாலும், இதுதான் சட்டம். அந்த சட்ட விதியைத்தான் நான் உங்களுக்குப் படித்துக் காட்டினேன்.
இந்த விதி, மாநில அரசினுடைய பல்கலைக் கழகங்களுக்கு யுஜிசி என்று சொல்லக்கூடிய ஒன்றியக் குழு அண்மையில் அனுப்பியிருக்கின்ற முடிவு.
செய்தியாளர்: யாருக்குமே டாக்ட்ரேட் பட்டம் கொடுக்க வேண்டாம் என்று சொல்கிறாரா? அல்லது சங்கரய்யாவிற்குக் கொடுக்கவேண்டாம் என்று சொல்கிறாரா, ஆளுநர்?
தமிழர் தலைவர்: மற்ற செய்திகள் வரவில்லை. சங்கரய்யாவிற்குக் கொடுக்கக் கூடாது என்று சொல்கிறார் என்பது தெளிவாகி இருக்கிறது. அந்தப் பட்டியலில் வேறு யாராவது இருக்கிறார்களா என்று தெரியவில்லை.
ஒருவேளை சங்கராச்சாரியாருக்குக் கொடுத்தால், ஒப்புக்கொள்வாரோ என்பதும் நமக்குத் தெரிய வில்லை.
ஆளுநர் பதவி நீக்கப்படுமா?
செய்தியாளர்: ஒன்றியத்தில் காங்கிரஸ் கூட்டணி ஆட்சிக்கு வந்தால், ஆளுநர் பதவிகளை விலக்கிக் கொள்வார்களா?
தமிழர் தலைவர்: யூகங்களுக்குப் பதில் சொல்ல விரும்பவில்லை.
ஒன்றியத்தில் 'இந்தியா கூட்டணி' ஆட்சி ஏற்பட்டால், நிச்சயமாக ஆளுநர் என்ற பதவி இருக்க வேண்டுமா? என்கிற கேள்விக்குறி மறுபரிசீலனைக்கு ஆளாகும்.
அது ஆளுநர் பதவிக்கே கேள்விக்குறியை உண்டாக்கக் கூடிய அளவிற்கு இருக்கும்.
ஏனென்றால், அவ்வளவு வலியை அனுபவித் திருக்கிறார்கள் மக்கள்; ஆகவே, மீண்டும் மக்களுக்கு அந்த சோதனை ஏற்படக் கூடாது என்பதற்காக, 'இந்தியா கூட்டணி'க்குப் போதிய அளவிற்கு வாக்களித்து, வேண்டிய பெரும்பான்மையை உருவாக்கினால், சுலபமாக அரசமைப்புச் சட்டத் திருத்தத்தின்மூலமாக, அண்ணா சொன்ன கனவு நனவாகும். ''ஆட்டுக்குத் தாடி தேவையில்லை; நாட்டுக்குக் கவர்னர் தேவையில்லை'' என்ற நிலை வரும்.
செய்தியாளர்: பங்காரு அடிகளாரின் உடல் அடக்கத்தின்«£பது தமிழ்நாடு அரசின் மரியாதை கொடுக்கப்படும் என்று சொல்லியிருக்கிறது. ஆனால், சிலர் ஆன்மீகவாதிக்கு ஏன் அரசு மரியாதை என்று விமர்சனம் செய்திருக்கிறார்களே?
தமிழர் தலைவர்: யார் யார் மனித சமுதாயத்திற்குத் தொண்டாற்றினார்களோ, அது ஆன்மிகமா? நாத் திகமா? என்பது முக்கியமல்ல. மனிதமா? இல்லையா? என்று பார்க்கக் கூடிய மகத்தான, பரந்த மனப்பான்மை உள்ள ஆட்சி, இன்றைக்குச் சமூகநீதிக்கான சரித்திர நாயகர் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்களின் தலைமையில் நடைபெறுகிறது.
உறுப்புக் கொடை கொடுப்பவர்களின் உடலடக்கத் தின் போது அரசு மரியாதை கொடுக்கப்படும் என்று இந்த ஆட்சி சொன்ன அளவிற்கு, வேறு எந்த ஆட்சியும் மனிதத்தை இந்த இந்த அளவிற்கு மதிக்கவில்லை.
ஆகவே, அப்படி இருக்கும்பொழுது, அவர் உழைப்பைக் கொடுத்திருக்கிறார்; ஒரு திருப்பத்தைக் கொடுத்திருக்கிறார். எங்கள் கொள்கைக்கு நேர் மாறானவர் பங்காரு அடிகளார். ஆனால், நாங்களே அவரைப் பாராட்டுகிறோம்.
ஏனென்றால், கொள்கை வேறு; மனிதநேயம் வேறு. அந்த மனிதநேயத்தைப் பாராட்டுவது அரசின் கடமை.
முதலமைச்சர் அவர்கள் சொன்னதைப்போல, ''எங்களுக்கு வாக்களித்தவர்களுக்கும் நான் முதல மைச்சர்; வாக்களிக்காதவர்களுக்கும் முதலமைச்சர்'' என்றார், அது வெறும் வார்த்தையல்ல.
நடைமுறையில் அதனை நான் கடைப்பிடிக்கிறேன், அதுவே ஒழுக்கம், கட்டுப்பாடு என்பதை நிரூபித்த முதலமைச்சருக்குப் பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
நன்றி, வணக்கம்!
- இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார்.
No comments:
Post a Comment