மு.சு.அன்புமணி
மதிச்சியம், மதுரை
'விடுதலை' நாளிதழ் அக்டோபர் 17 அன்று வெளியான "விளையாட்டில் கூட விபரீத மதவெறியா " தலையங்கம் வாசித்தேன். உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு என பெருமிதம் கொண்ட இந்தியாவில் தான் இந்த மதவெறி திளைத்துக் கொண்டுள்ளது.
தேசபக்தி என்ற பெயரில் ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க. வகையறாக்கள் மக்களை ஏய்த்துக்கொண்டு மதம் என்ற போர்வையில் வலம் வருகிறார்கள்.
இந்தியாவின் விடுதலைக்காக போராடியவர்களில் எவரும் ஜாதி, மதம், இனம் என்று பார்த்து போராடவில்லை. எண்ணற்ற இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள் என்று அனைத்து இன மக்களும் இணைந்து போராடிப் பெற்றதை தான், இன்று பா.ஜ.க. தனிப்பட்ட மதத்திற்கான உரிமை போல செயல்பட்டு வருகிறது.
பிரதமராக பதவியேற்பின்போது எடுத்த ஒருமைப்பாடு உறுதிமொழியை மறந்து ( மறைத்து) விட்டு மதவெறிக்காக தூபம் போட்டு வருகிறார் பிரதமர் மோடி.
ஒன்பதரை ஆண்டு பாஜக ஆட்சியின் சாதனைகள் என்று அவர்களால் மார்தட்டி சொல்ல முடியவில்லை.
நேர்மறையான அரசியலை எதிர்மறை அரசியலாக மாற்றி நாட்டு மக்களை ஏமாற்றி வருகிறது பாஜக.
மணிப்பூர் கலவரம் பற்றி பேசாத பிரதமர் கோவில்கள் பற்றி பேசுகிறார்.
பாஜகவின் ஆட்சியில் சாதனைகள் எதுவுமில்லை - மாறாக ஆறாத வேதனை தான் நடந்து வருகிறது.
விலைவாசி குறைப்பு, மக்களுக்கு வங்கி சேமிப்பு தொகை, கருப்பு பணம் மீட்பு என்று எந்த செயலும் இல்லை.
மக்களாட்சி மாண்பை மறைத்து , மதவெறியை வளர்க்க மிக தெள்ளத் தெளிவாக நஞ்சை விதைத்து வருகிறது பாஜக.
தேசப் பிதா காந்தியாரை கொன்ற கூட்டம் அல்லவா, பச்சைத்தமிழர் காமராஜரை கொல்ல முயன்ற கூட்டத்திற்கு தேசப் பற்று பற்றி என்ன கவலை. தேசியம் என்ற பெயரில் மதவெறியை தூண்டி நாட்டுமக்களை ஏமாற்றி வருகிறது.
பாஜக ஆட்சியின் நஞ்சான சாதனைகள் (வேதனைகள்) வரிசையாக, திட்டம் போட்டு மதவெறியாக்க செயலில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. கல்வி, ராணுவம், தொழில் என்று தொடர்ச்சியாக மத நஞ்சை கக்கி வருகிறது. கல்வி என்பதில் 'நீட்' எனும் நஞ்சு, ராணுவத்தில் 'அக்னிபத்', தொழிலில் 'விஸ்வகர்மா' என்று நாட்டு மக்கள் ஒற்றுமையாக இருப்பவைகளில் எல்லாம் பாஜக தனது நஞ்சை தொடர்ந்து கக்கி வருகிறது.
இப்படி நாட்டின் அனைத்து துறைகளிலும் மதவெறியை புகுத்துவதில் தான் பாஜக தொடர்ந்து முனைப்பு காட்டி வருகிறது. இந்தச் செயல்கள் அடியோடு களையப்படவேண்டும்.
மனிதநேயத்தோடு உள்ள மக்களிடம் மதவெறியை திணிக்கும் பாஜகவின் நயவஞ்சக திட்டத்தை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
இவைகளால் நாட்டு மக்கள் என்ன பயன் பெற்றார்களா, இல்லை மாறாக பாஜக தமது ஆட்சி அதிகாரத்தை பயன்படுத்தி ஆணவத்தோடு, தலைக்கனத்தோடு நாட்டை சீர்குலைக்கும் முயற்சியில் செயல்பட்டு வருகிறது என்பதே உண்மை. அந்த வகையில் தான் தற்போது உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின்போது ஜெய்சிறீராம் என்ற முழக்கம். கல்வி, ராணுவம், தொழில் என்பதை தாண்டி தற்போது விளையாட்டிலும் மதவெறியை கலக்க திட்டம் தீட்டு வருகிறது. மக்களை மாக்களாக்க, மதத்தை கையில் ஏந்தி வருகிறது இந்த மதவெறி அரசு.
இந்த செயல் பாஜகவுக்கு வேண்டுமானால் மகிழ்ச்சியாக இருக்கலாம். ஆனால் உலகளவில் இந்தியாவிற்கு மாபெரும் தலைகுனிவான செயல் என்பதில் அய்யமில்லை.
இந்துக்களின் பலகாரங்கள், இஸ்லாமியர்களின் பிரியாணி, கிறிஸ்தவர்களின் கேக் ஆகியவை இன்றும் மக்கள் தங்கள் மதங்களை மறந்து பரிமாறிக் கொண்டு மகிழ்ச்சியாகத் தான் இருக்கிறார்கள்.
ஆகவே, பாஜக புதுச் சாயம் பூசி மதத்திற்கு மெருகேற்ற வேண்டாம். அது எடுபாடாத ஒன்றாகும்.
இந்த ஆர்எஸ்எஸ் வகையறாக்களின் மதவெறி பற்றி தெரிந்து தான் அன்றே, தந்தை பெரியார் இந்த நாட்டிற்கு 'காந்தி நாடு', மதத்திற்கு 'காந்தி மதம்' எனப் பெயரிட வேண்டும் என்றார். எவ்வளவு நிதர்சனமான உண்மை. ஆர்.எஸ்.எஸ். வகையறாவால் இந்தியா துண்டாடப்படும் என்றார் புரட்சி வீரர் பகத்சிங். அந்த மாபெரும் தலைவர்களின் கூற்றுகள் எவ்வளவு தெள்ளத்தெளிவானவைகள். பா.ஜ.க. ஆட்சியின் தொடரும்.
இந்த நஞ்சுச் செடி வேரோடு களையப்படவேண்டும். அதற்கு மக்கள் தயாராக இருக்கிறார்கள். பாஜகவின் மதச்சாயம் இனியும் எடுபடாது.
ஆர்.எஸ்.எஸ். மற்றும் பாஜகவின் மதவெறி செயல்கள்
கருப்புகளால் நெருப்பாக்கப்படும்,
சிவப்புகளால் அழித்தொழிக்கப்படும்,
கதர்களால் களையப்படும்,
நீலங்களால் அகற்றப்படும்.
விடியட்டும், வளரட்டும் சமூக நீதி, மதச்சார்பின்மை.
களையட்டும், ஒழியட்டும் மதவெறி,
மதவெறி ஆணவம்.
காத்திருப்போம் அதிகாரத்திற்கு
காவல் காப்போம் சமூக நீதிக்கு
வென்றெடுப்போம் மனிதநேயத்தை!
No comments:
Post a Comment