தோழர்களே, தோழர்களே! நமது கழகத் தலைவர் - தமிழர் தலைவர் - தகைசால் தமிழர் மானமிகு ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் ஒரு தொடர் பயணத்தை மேற்கொள்ளவிருக்கிறார்.
நாளை (25.10.2023) தொடங்குகிறது அந்தப் பயணம்? எதற்காக? அதன் நோக்கம் என்ன? என்பது முக்கியமானது.
அண்மையில் இந்திய ஒன்றிய பிஜேபி அரசு ஒரு திட்டத்தை அறிவித்துள்ளது. அதன் பெயர் "விஸ்வகர்மா யோஜனா!" என்பதாகும்.
பார்ப்பனர்கள் என்ன செய்தாலும் மேலால் தோற்றத்திற்கு ஒரு பளபளப்பு காணப்படும். உள்ளே பார்த்தால் பார்ப்பனீய நஞ்சு அதற்குள் கொடுக்கை நீட்டிக் கொண்டு இருக்கும்.
ஆச்சாரியார் (ராஜாஜி) 1952-1954இல் சென்னை மாநிலத்தில் ஒன்றைத் திணித்தார் - காலையில் மூன்று மணி நேரம் பள்ளியில் கல்வி; பிற்பகலில் பிள்ளைகள் அவரவர்களின் அப்பன் தொழிலைச் செய்ய வேண்டும்.
'தொழிற்கல்வி' என்று அதற்கு நாம கரணம் சூட்டினார்கள். ஈரோட்டுக் கண்ணாடி என்பது சாதாரணமானதல்ல- இது ஒரு நுண்ணாடி!
அதற்குள்ளிருக்கும் சூட்சமத்தை ஒரே நொடியில் புரிந்து கொண்ட தந்தை பெரியார் 'இது தொழிற்கல்வியல்ல - "குலக் கல்வியே!' என்ற ஒற்றை வார்த்தையில் அதன் தோலை உரித்துக் காட்டினார்.
பற்றிக் கொண்டது பெருந்தீ - தமிழ்நாட்டில்! தந்தை பெரியார் தலைமையில் நாடு எங்கும் கிளர்ச்சி! கிளர்ச்சி!!
பள்ளிகளை, கல்லூரிகளை விட்டு வெளியே வந்தனர் இருபால் மாணவர்களும்!
பெட்ரோலும், தீப்பந்தமும் தயாராகட்டும் என்றார் தந்தை பெரியார் - அவ்வளவுதான்! துண்டைக் காணோம் - வேட்டியைக் காணோம் என்று ஓடினார் - ஓடினார் முதல் அமைச்சர் ஆச்சாரியார் பதவியை விட்டு - பார்ப்பனர்கள் எப்பொழுது அதிகாரத்திற்கு வந்தாலும் அவர்களை உறுத்துவது பார்ப்பனரல்லாதார் கல்விதான் - அதுதான் அவர்களின் கண்களை உறுத்துவதாகும்.
மனுதர்மம் என்ன சொல்கிறது? சூத்திரன் படித்தால் அவன் நாக்கை அறுக்க வேண்டும்; படித்ததைக் கேட்டால் காதில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்ற வேண்டும். படித்து நெஞ்சில் வைத்திருந்தால் அவன் நெஞ்சைப் பிளக்க வேண்டும் என்பது தானே அவர்களின் மனு சாஸ்திரக் கட்டளை.
அதை வெளிப்படையாக செய்ய முடியாத அளவுக்கு விழிப்புணர்வு மேலோங்கி நிற்கும் இந்தக் கால கட்டத்தில் கொல்லைப்புற வேலைகளில் ஈடுபடுகின்றனர்.
1938களில் சென்னை மாநிலத்தில் பள்ளிகள் எத்தனை இருந்திருக்கும்? அப்பொழுதே 3000 பள்ளிகளை இழுத்து மூடிய பேர்வழிதான் ராஜகோபாலாச்சாரியார்.
1952-1954களில் 6000 பள்ளிகளை இழுத்து மூடியதோடு அரை நேரம் படித்தால் போதும் என்று சட்டம் செய்தார்.
சட்டமன்றத்தைக் கூட்டி இந்த முடிவை எடுக்கவில்லை! கேட்டதற்கு என்ன பதில் சொன்னார் தெரியுமா?
சங்கரரும், மத்துவரும் யாரைக் கேட்டுப் பிரச்சாரம் செய்தார்கள் என்று உச்சிக் குடுமி ஆணவத்தோடு உறுமினார் என்பதெல்லாம் ஞாபகத்தில் இருக்கட்டும்.
இதில் குறிப்பிடத்தக்க தகவல்களும் உண்டு. ஆச்சாரியாரின் குலக் கல்வித் திட்டத்தை - பிற்காலத்தில்கூட வக்காலத்துப் போட்டு எழுதி னார்கள் பார்ப்பனர்கள் என்றால், பார்ப்பனர் களின் கன்னக் கோல் புத்தி எத்தகையது என்பதைத் தெரிந்து கொள்ளலாம்.
'துக்ளக்'கில் சோ என்ன எழுதினார்?
"ஏழைக் குடும்பங்களைச் சேர்ந்த ஒவ்வொரு குழந்தையும், ஒவ்வொரு சிறுவனும், சிறுமியும் பள்ளிக் கூடத்திற்குச் செல்ல இயலும் வகையில், ஒரு புதிய மாற்றியமைக்கப்பட்ட ஏற்பாட்டை, கல்வி முறையை ராஜாஜி அறிமுகம் செய்தார். அது ஒரு புரட்சிகரமான ஏற்பாடு - முன்னேறிய நாடுகளில் கல்வி முறை அவ்வாறு அமைந்திருக்கிறது.
அதுவரை கல்வி கற்காத ஏழைக் குழந் தைகள், புதிய ஏற்பாட்டின் விளைவாக கல்வி கற்பார்கள் என்பதுதான் அந்தத் திட்டத்தின் தனிச் சிறப்பு - எனினும் திராவிடக் கட்சிகள் அரசியல் நோக்கத்துடன் அந்தப் புதிய ஏற் பாட்டை எதிர்த்தன. காங்கிரஸ் உறுப்பினர்கள் சிலரும் அந்த எதிர்ப்புக்கு ஆதரவு தந்தார்கள். அந்தச் சூழ்நிலையில் ராஜாஜி அமைச்சரவை 13.4.1954 அன்று பதவி விலகியது!!
('துக்ளக்' 5.10.2011 பக்.12)
'துக்ளக்' இப்படி எழுதினால் 'கல்கி' சும்மா இருக்குமா?
"ராஜாஜி ஒரு வேளை படிப்பு, ஒரு வேளை குலத் தொழில் என்றார்; அவர் திட்டம் இருக்கிற பள்ளிகளையும், ஆசிரியர்களையும் வைத்துக் கொண்டே இரட்டிப்பு எண்ணிக்கையில் நவீன கல்வி போதிக்க வழி வகுத்தது. அதே நேரத்தில் உடல் உழைப்பின் மகத்துவத்தை அவர்களுக்கு உணர்த்தியது. தொழில் அறிவையும், ஆர்வத் தையும் பெருக்கியது. எந்தத் தொழிலானாலும், அது இழிவு இல்லை என அறிவுறுத்தியது. குமாஸ்தா மனப்பான்மையை விரட்டியடிப்பது, தொழில் உற்பத்திக்கும், பொருளாதார வளர்ச் சிக்கும் உதவுவது, வேலையில்லாத் திண்டாட் டத்தைப் போக்குவது, தொழிற்கல்வித் திட்டத்தைக் குலக் கல்வித் திட்டம் என்று பெயர் சூட்டி ஒதுக்கியது. அன்றைய பொறாமை அரசியலுக்கு வசதியாக இருந்தது அவ்வளவு தான்"
('கல்கி' 1980 ஜூலை)
'துக்ளக்'கும் 'கல்கி'யும் வரிசை கட்டி விட் டன. 'தினமலர்' சும்மா இருந்தால் எப்படி?
கேள்வி: இன்றைய இளைய சமுதாயத் தினருக்கு பல்கலைக் கழகங்கள் கல்வி கற்றுத் தருவதைவிட ஏதாவது கைத் தொழில் கற்றுத் தந்தால் என்ன? பட்டத்தை வைத்துக் கொண்டு ரோடு ரோடாக அலைந்து திரிவதைவிட கைத் தொழில் ஒன்றைக் கற்றுத் தொழில் செய்ய லாமே?
பதில்: கற்றுத் தருவதைவிட நீங்கள் கூறும் திட்டத்தையும், அன்றைய முதல்வர் ராஜாஜி அமல்படுத்தினாராம். (படித்துக் கேட்டுத் தெரிந்து கொண்டதால் 'ராம்' போட்டுள்ளேன்). அப்போது இந்தத் திராவிடக் கட்சிகள் குய்யோ முறையோ எனக் கத்தி பைசா பெறாத காரணங்களைக் கூறி, ஜாதி வெறியைத் தூண்டி விட்டு, இக்கல்வி முறையை (காலையில் ஏட்டுக் கல்வி, மாலையில் தொழிற்கல்வி) தொடர விடாமல் தடுத்துள்ளனர் - பலனை இன்று அனுபவிக்கிறோம்"
('தினமலர்' வாரமலர் - 4.4.2010)
இந்த வரலாற்றை எல்லாம் தெரிந்து கொண்டால் தான் - இப்பொழுது மோடி தலைமையிலான பாசிச பார்ப்பன ஒன்றிய அரசின் 'விஸ்வகர்மா யோஜனா'வின் திரை மறைவில் ஒளிந்திருப்பது. அந்த ராஜாஜியின் குலக்கல்வித் திட்ட தொடர்ச்சி என்பது எளிதில் விளங்கி விடும்.
18 ஜாதிகளைப் பட்டியலிட்டு அதன் அடிப்படையில் பரம்பரை ஜாதித் தொழிலை செய்பவர்களுக்குக் குறைந்த வட்டியில் நிதி உதவி தரப்படுமாம். இதற்காக ரூபாய் 13 ஆயி ரம் கோடியை மோடி ஆட்சி ஒதுக்கியுள்ளது.
பரம்பரை ஜாதித் தொழிலை செய்பவர் களுக்கு 5 சதவீத வட்டியுடன் முதற்கட்டமாக ஒரு லட்சம் ரூபாயும், இரண்டாம் கட்டமாக ரூ. 2 லட்சமும் கடனுதவியாக வழங்கப்படுமாம். அத்துடன் சந்தை வாய்ப்புகளை ஏற்படுத்தித் தருவது, அவர்களின் திறனை மேற்படுத்த உதவுவது போன்றவையும் செயல்படுத்தப்பட உள்ளன என்று 'தினமலர்' (21.8.2023) தலையங்கம் தீட்டியுள்ளது.
நாட்டில் எத்தனை எத்தனையோ தொழில்கள் உள்ளன. அதில் என்ன இந்தக் குறிப்பிட்ட 18 தொழில்கள்?
இந்தத் திட்ட அறிவிப்புக்குள் நுழைந்து பார்த்தால் அதற்குள் குடி கொண்டிருக்கும் விஷ நாகத்தைக் கண்டு கொள்ளலாம்.
தொழிலுக்குத்தான் லட்சக்கணக்கில் கடன் தருகிறார்கள் என்று ஏமாந்துவிடக் கூடாது. பரம்பரை ஜாதித் தொழில் செய்பவர்களுக்குத் தான் இந்த நிதி உதவி. இதுதான் கோடிட்டுக் காட்ட வேண்டிய முக்கிய பகுதி!
பரம்பரை ஜாதித் தொழிலைத்தான் இவர்கள் செய்கிறார்கள் என்று வட்டாட்சியர் சான்றிதழ் பெற வேண்டுமாம். கோணிப் பைக்குள்ளிருந்து பூனைக் குட்டியின் 'மியாவ்' 'மியாவ்' சத்தம் இப்பொழுது கேட்கிறதா?
இதை எல்லாம் புரிந்து கொள்வதற்கு ஈரோட்டு நுண்ணாடி தேவை!
இந்தத் திட்டம் எந்தத் தேதியில் தொடங்கப் படுகிறதாம்? தந்தை பெரியார் பிறந்த நாளான செப்டம்பர் 17 அன்று தொடங்கப்படுவதைக் கவனிக்கத் தவறக் கூடாது.
இந்தியத் துணைக் கண்டத்திலேயே இந்தப் பார்ப்பனீய - வருணாசிரம சூட்சமத்தை முதன் முதலில் புரிந்து கொண்ட இயக்கம் திராவிடர் கழகம் - சென்னை பெரியார் திடலில் அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டியது. (29.8.2023)
இதில் முக்கியமாக அழுத்தமாக கவனிக்க வேண்டிய ஒன்று - 18 வயது உள்ள பரம்பரை ஜாதித் தொழிலைச் செய்பவர்கள் விண்ணப் பிக்கலாமாம்!
அது என்ன 18 வயது - புரியவில்லையா? +2 படித்து முடித்து 18ஆம் வயதை எட்டிப் பிடிக்கும் பரம்பரை ஜாதித் தொழில் செய்யும் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் +2க்கு மேல் படிக்காமல், கல்லூரிக்குள் காலடி எடுத்து வைக்க விடாமல் தடுக்கும் தந்திரமும், சூழ்ச்சியும் இதில் பின்னிக் கிடக்கிறது என்பதைதக் கவனிக்கத் தவறுவோமேயானால், ராஜாஜியின் குலக் கல்வித் திட்டத்தை ஒழித்துக் கட்டி கண் விழித்த நம் மக்கள், இந்த இடத்தில் பழைய கள் புதிய மொந்தை என்ற நிலையில் பார்ப்பனர் வெட்டி வைத்துள்ள பாழுங் கிணற்றில் விழ வேண்டியதுதான்.
'நீட்' என்றாலும், புதிய கல்வித் திட்டம் என்றாலும், 'விஸ்வ கர்மா யோஜனா' என்றாலும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் தான்.
மனுதர்மம் முக்காடு போட்டு சலங்கை கட்டி வருகிறது - வருகிறது - எச்சரிக்கை!
தமிழர் தலைவர் ஆசிரியர் மானமிகு கி. வீரமணி அவர்கள் அக்டோபர் 25இல் நாகப்பட்டினத்தில் தொடங்கும் பிரச்சாரம் - வரலாற்றுப் பொன்னேட்டில் பொறிக்கப்படும் முக்கியக் கல்வெட்டாகும்! எதிர்கால வரலாறு இதனை எடுத்துக் காட்டிக் கொண்டே இருக்கும்.
ஆச்சாரியார் கொண்டு வந்த குலக்கல்வித் திட்டத்தை எதிர்த்து இதே நாகப்பட்டினத் தில்தான் குலக்கல்வி திட்ட ஒழிப்பு மாநாடு நடத்தப்பட்டது. (1954 மார்ச்சு 27, 28)
இதே நாகப்பட்டினத்திலிருந்துதான் 'சுயமரி யாதைச் சுடரொளி' நீடாமங்கலம் அ. ஆறுமுகம் தலைமையிலும் பட்டுக்கோட்டை டேவிட்ஸ் தளபதியாகவும் இருந்து குலக்கல்வி எதிர்ப்புப் பிரச்சாரப் படை தொடங்கியதையும் நினைவு கூர்ந்தால், வரலாற்றின் விசித்திரத்தையும், பொருத்தத்தையும் புரிந்து கொள்ளலாம்.
புறப்பட்டு விட்டார் தமிழர் தலைவர் ஆசிரியர் மானமிகு கி.வீரமணி - ஒத்தக் கருத்துள்ளவர்களை ஒருங்கிணைத்து தந்தை பெரியார் பிறந்த திராவிடப் பூமியின் கிளர்ச்சி, எரிமலைக் குழம்பின் வீரியம், இந்தியத் துணைக் கண்டத்தையே திரும்பிப் பார்க்கச் செய்ய வேண்டும்.
சிறப்பாக செயலாற்றுவீர் தோழர்களே! சமூகப் புரட்சி இயக்கமாம் திராவிடர் கழகத்தின் இந்தச் செயல்பாடு ஆரியத்தின் வீரியத்தை வீழ்த்தும் - ஒடுக்கப்பட்ட மக்களின் எழுச்சிக் கொடியை விண்ணில் பறக்கவிடும்! வினை முடிப்போம் - வெற்றி பெறுவோம்!
வாழ்க பெரியார்! வெல்க திராவிடம்!!
ஆச்சாரியார் அன்று என்ன சொன்னார்?
"அவனவன் ஜாதித் தொழிலை அவனவன் செய்யவேண்டும். வண்ணார் வீட்டுப் பிள் ளைகள் படிக்க வேண்டியதில்லை. குலத் தொழிலைச் செய்தால் போதும். எல்லோரும் படித்தால் வேலை எங்கிருந்து கிடைக்கும்?"
(29.6.1952 அன்று சென்னை திருவான்மியூரில் நடைபெற்ற சலவைத் தொழிலாளர் மாநாட்டில் முதல் அமைச்சர் சி. ராஜகோபாலாச்சாரியார் ஆற்றிய உரையிலிருந்து - 'தி ஹிந்து' 30.6.1952)
No comments:
Post a Comment