கட்சிகள் நன்கொடை பெறுவதில் திறந்த முறையில் இருந்ததை மாற்றி தேர்தல் பாண்டு பத்திரங்கள்மூலம் தந்திரமாகப் பெறுவதா? - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, October 17, 2023

கட்சிகள் நன்கொடை பெறுவதில் திறந்த முறையில் இருந்ததை மாற்றி தேர்தல் பாண்டு பத்திரங்கள்மூலம் தந்திரமாகப் பெறுவதா?

அரசமைப்புச் சட்ட அமர்வு விசாரணை நடத்தும் என்று அறிவித்திருப்பது வரவேற்கத்தகுந்த ஜனநாயகம் காப்பாற்றப்படும் நடவடிக்கையே!

உச்சநீதிமன்றம்தானே மக்களின் கடைசி நம்பிக்கை!

தமிழர் தலைவர் ஆசிரியர் விடுத்துள்ள முக்கிய அறிக்கை

ஏற்கெனவே நடைமுறையில் இருந்ததை மாற்றி தேர்தல் பாண்டு பத்திரங்கள்மூலம் கட்சிகள் நன் கொடை பெறுவதில் உள்ள முறைகேடுகளைக் களைந்தெறிய வற்புறுத்தும் வழக்கினை -  அரசமைப்புச் சட்ட அமர்வு விசாரணை நடத்தும் என்று அறிவித்திருப்பது வரவேற்கத்தகுந்த, ஜன நாயகம் காப்பாற்றப்படும் நடவடிக்கையே! உச்சநீதிமன்றம் தானே மக்களின் கடைசி நம்பிக்கை என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அறிக்கை விடுத்துள்ளார். 

அவரது அறிக்கை வருமாறு:

தேர்தலுக்காக அரசியல் கட்சிகள் -பிரபல கம்பெனி கள், முதலாளிகள், தனி நபர்கள், அமைப்புகள் எவற்றிட மிருந்தும் பெறும் நன்கொடைகளுக்கான திறந்த புத்தகம் போன்று, பொதுமக்களுக்குப் பகிரங்கமாகத் தெரியும் - முந்தைய சட்ட நிலையை - மிகத் தந்திரமாக ஆர்.எஸ்.எஸ். - பா.ஜ.க.வின் மோடி அரசு பதவி ஏற்ற பின், தலைகீழாக மாற்றி, மிகத் தந்திரமாக தேர்தல் நிதி நன்கொடைகளை தேர்தல் பாண்டு, பத்திரங்கள்மூலம் வங்கிகளில் வாங்கி, அவர்கள் விரும்பும் கட்சிக்குக் கொடுக்கலாம் என்றாக்கி, அதன்மூலம் திடீரென ஆளும் பா.ஜ.க. ஏராள பணத்தினை தேர்தல் பாண்டுகள் மூலம் பெற்றதோடு, கொடுத்தவர் யார் என்பதுபற்றிய தகவல் யாருக்கும் தெரியாது என்பது, ஜனநாயகத் தேர்தல்களை கீழ்மைப்படுத்தும், அரசியல் ஒழுக்கக் கேடு ஆகும்!

இதை எதிர்த்து, அந்தத் திருத்தம் அது அமலுக்கு வந்த எட்டாண்டுகளுக்கு முன்பே உச்சநீதிமன்றத்தில் போடப்பட்ட வழக்கு இதுவரை விசாரணைக்கே எடுத்துக் கொள்ளப்படாமல் கிடப்பில் இருந்தது!

தாங்கள் தயவு பெறும் 

அரசியல் கட்சிக்குத்தான் நன்கொடைகளைத் தருவார்கள்!

ஜனநாயகம் இப்படிக் கேலிக் கூத்தான பிறகு, கார்ப் பரேட் முதலாளிகளோ அல்லது கருப்புப் பண முதலை களோ தாங்கள் தயவு பெறும் அரசியல் கட்சிக்குத் தருவார்களே தவிர, நன்கொடைகளை வேறு யாருக்கும் தரமாட்டார்கள் என்பது எவருக்கும் புரிந்ததுதானே!

கட்சிகள் நன்கொடை பெறுவதில் உள்ள முறைகேடு களைக் களைந்தெறிய வற்புறுத்தும் இவ்வழக்கை உச்சநீதிமன்றத்தில் மூவர் தொடுத்துள்ளனர். இந்த வழக்கினை உடனடியாக விசாரிக்க மனுதாரர் சார்பில் வழக்காடும் வழக்குரைஞர்கள் உச்சநீதிமன்றத்தில் வற்புறுத்தினர்.

இந்நிலையில், வழக்குப் போட்ட மூவரது பொதுநல மனுக்களில், அவர்கள் கோரியபடி, தேர்தல் பாண்டு (பத்திரங்களாக வாங்கி) மூலம் நன்கொடை தரும் சட்டத்திற்குத் தடை கோரியதை உச்சநீதிமன்றம் அனுமதி மறுத்தது; என்றாலும், இந்தப் பிரச்சினையின் முக்கியத்துவம் கருதி, மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வுமுன் (தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையில்) விசாரணைக்கு வந்தது!

கடந்த 10 ஆம் தேதி இம்மனுக்கள் விசாரணைக்கு வந்தபோது, 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலுக்கு, தேர்தல் பத்திரங்கள்மூலம் நன்கொடை பெறுவதற்கு முன்பே இம்மனுக்களை அவசரமாக விசாரிக்கவேண்டும் என்று தொண்டு நிறுவனத்தின் வழக்குரைஞர் பிரசாந்த் பூஷன் வலியுறுத்தினார்.

மூன்றில் ஒரு பங்கு 

ஒரு பெரிய கட்சிக்கு கிடைத்திருக்கிறது!

அரசியல் கட்சிகள் ரூ.12 ஆயிரம் கோடி நன்கொடை பெற்றிருப்பதாகவும், அதில் மூன்றில் ஒரு பங்கு ஒரு பெரிய கட்சிக்குக் கிடைத்திருப்பதாகவும் மற்றொரு வழக்குரைஞர் கூறினார்.

இதையடுத்து நான்கு பொதுநல மனுக்கள்மீதும் வருகிற அக்டோபர் 31 மற்றும் நவம்பர் ஒன்றாம் தேதியன்று இறுதி விசாரணை நடைபெறும் என்று நீதிபதிகள் கூறினர்.

இந்நிலையில், நேற்று (16.10.2023) தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வு, இவ் வழக்கை அரசமைப்புச் சட்ட அமர்வுக்கு மாற்றியது.

5 நீதிபதிகள் அடங்கிய, 

அரசமைப்புச் சட்ட அமர்வு மாற்றம்!

இதுகுறித்து நீதிபதிகள் கூறியதாவது:

‘‘தேர்தல் பத்திரம்மூலம் நன்கொடை பெறும் அரசியல் கட்சிகள் நன்கொடை பெறுவதற்கு முன்பே அவசரமாக விசாரிக்கவேண்டும் என்ற கோரிக்கைகள் முக்கியத்துவம் கருதியும், அரசமைப்புச் சட்டத்தின் 145(4) ஆவது பிரிவு (உச்சநீதிமன்றத்தின் நடைமுறையை ஒழுங்குபடுத்தும் விதமாக) சம்பந்தப்பட்டது என்ப தாலும், அதிகாரப்பூர்வ பிரகடனத்துக்காக, இந்த மனுக்கள் 5 நீதிபதிகள் அடங்கிய, அரசமைப்புச் சட்ட அமர்வுக்கு (Constitution Bench) மாற்றப்படுகின்றது'' என்று கூறினர்.

‘‘ஏற்கெனவே நிர்ணயித்த அக்டோபர் 31 மற்றும் நவம்பர் ஒன்றாம் தேதிகளில் அரசமைப்புச் சட்ட அமர்வு விசாரணை நடத்தும்'' என்றும் அறிவித்திருப்பது வரவேற்கத்தகுந்த ஜனநாயகம் காப்பாற்றப்படும் நடவடிக்கையாகவே பார்க்கப்படவேண்டும்!

ஜனநாயகத்தில், பொது ஒழுக்கத்தில் நம்பிக்கை உள்ள அனைவருமே எதிர்பார்க்கிறார்கள்!

நாடே வெகு ஆவலுடன் எதிர்பார்க்கும் இந்த விசாரணையின் தீர்ப்பில் உரிய நியாயம் கிடைத்து, நன்கொடைகள் வெளிப்படைத்தன்மையோடு, கருப்புப் பண உண்டியல்களின் மறுதோற்றமாகி விடாமல் இருக்க உச்சநீதிமன்றத் தீர்ப்பினை ஜனநாயகத்தில் பொது ஒழுக்கத்திலும் நம்பிக்கை உள்ள அனைவருமே எதிர்பார்க்கிறார்கள்!

உச்சநீதிமன்றம்தானே மக்களின் கடைசி நம்பிக்கை - அதுவும் நம் நாட்டு ஜனநாயகத்தில்!

கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்
சென்னை
17.10.2023


No comments:

Post a Comment