"அயோத்தியில் ராமர் கோவில் அமைய உள்ளதை இன்னும் சில மாதங்களில் நாம் காணப்போகிறோம். இதைக் காண பல நூற்றாண்டுகளாக காத்திருந்த நிலையில், அதை பார்க்கும் அதிர்ஷ்டம் நமக்கு கிடைத்துள்ளது. இது மக்களின் பொறுமைக்கு கிடைத்த வெற்றி.
ஒரு ஏழைக் குடும்பத்தின் சமூக - பொருளாதார நிலையை உயர்த்த ஒவ்வொருவரும் உறுதி ஏற்க வேண்டும். அனைவரும் வளர்ந்தால் தான், இந்த நாடு வளர்ச்சி அடையும்.
ராவணன் உருவ பொம்மையை எரிப்பது, ராமரின் வெற்றியை கொண்டாடுவதுடன் இந்த தசரா பண்டிகை கொண்டாட்டத்தை முடித்துக் கொள்ளக் கூடாது. ஜாதிகள் மற்றும் பிராந்தியங்களுக்கு இடையே பிரிவினையை ஏற் படுத்தி நாட்டை துண்டாட நினைக்கும் சக்திகளை வேரோடு ஒழிக்க வேண்டும். நாட்டின் வளர்ச்சியை பற்றி சிந்திக்காமல், சுயநலத்துடன் சிந்திக்கும் சித்தாந்தங்களை தீயிட்டு எரிக்க வேண்டும்."
புதுடில்லியில் நடந்த தசரா விழாவில் பிரதமர் நரேந்திர மோடி பேசியதுதான் இது ('தினமலர்' - 25.10.2023 பக்கம்-7).
இராவணனைக் குலத் தெய்வமாக வழிபடும் மக்கள் வட நாட்டில் உண்டு. அந்த இராவணனை எரிப்பது இராவணனைக் குல தெய்வமாக வழிபடுவோரின் மனதைப் புண்படுத்தாதா?
ஆரிய - திராவிடப் போராட்டம்தான் இராமாயணம் என்று வரலாற்று ஆசிரியர்களின் ஆய்வுகள் கூறுகின்றன.
அப்படிப் பார்த்தால் திராவிடனாகிய இராவணனை எரித்தால் திராவிட மக்களின் உணர்வைப் புண்படுத்துவது ஆகாதா? மீண்டும் நாங்கள் 'இராவண லீலா'வை நடத்த வேண்டுமா?
ஜாதி, மத உணர்வைத் தூண்டி நாட்டைப் பிளவுபடுத்துவதாக எதிர்க்கட்சிகள்மீது குற்றப் பத்திரிகை படிக்கும் பிரதமர் மற்றும் அவர் சார்ந்த கட்சிகள், சங்பரிவார்களும் செய்து வரும் அட்டகாசத்தைவிட, வேறு யாரால் செய்ய முடியும்?
ஜாதி தொடர்பானவை
1. விஸ்வ கர்மா திட்டத்தைக் கொண்டுவந்து 18 வயதிற்குப் பிறகு பரம்பரையாக குறிப்பிட்ட தொழிலைச் செய்யும் குடும்பத்தின் பிள்ளைகள் அதே தொழிலை செய்ய வேண்டும் அப்படிச் செய்தால் அரசு நிதி உதவி உள்ளிட்ட சலுகைகளை வழங்கும் என்று கூறினார்
2. உனா உள்ளிட்ட பல இடங்களில் உரிமம் பெற்று இறந்த மாட்டின் தோலை உரித்த தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்களை - பசுப்பாதுகாவலர்கள் என்ற பெயரில் அடித்து கொலை செய்தார்கள்; இதற்கு கண்டனம் கூட தெரிவிக்காத மோடி அவர்களை அடிக்கா தீர்கள் என்னை அடியுங்கள் என்று அய்தராபாத்தில் பேசினாரே!
3. மத்தியப்பிரதேச குஜராத், மகாராட்டிரா, அரியானா, கருநாடகா உள்ளிட்ட மாநிலங்களில் தொடர்ந்து தாழ்த்தப் பட்ட பழங்குடியின மக்கள் தாக்கப்பட்டு, பாலியல் வன் கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்படும் போது எந்த கருத்தும் தெரிவிக்காமல் அமைதியாக இருந்தார் பிரதமர்.
4. மலம் அள்ளுவது புனிதமான தொழில், அது கடவு ளுக்குச் செய்யும் தொண்டு என்று கர்மயோக் என்ற நூலில் எழுதியவர் யார்?
குஜராத் முதலமைச்சராக இருந்த சாட்சாத் நரேந்திர மோடி தானே!
மதம் தொடர்பான பேச்சு
1. அயோத்தியில் உள்ள ராமஜென்ம பூமி, மதுராவில் உள்ள கிருஷ்ண ஜென்ம பூமி, காசி விஸ்வநாதர் ஆலயம் உள்ளிட்டவற்றை மீட்போம் என பாஜகவும், ஆர்.எஸ்.எஸ். அமைப்பும் கூறியுள்ளன. இதற்கு ஏற்றாற்போல, மதுரா தொகுதி பா.ஜ.க. எம்.பி. ஹேமமாலினி, கிருஷ்ணர் சிலையை மோடிக்கு அன்பளிப்பாக வழங்கியுள்ளார்.
2. 2019 மக்களவைத் தேர்தலில் முக்கிய வாக்குறுதி களில் ஒன்று, புதிய குடியுரிமைச்சட்டம் கொண்டுவந்து பிற நாடுகளில் இருந்து இந்தியா வந்து குடியேறிய முஸ்லிம்களை அடையாளம் காண்போம் என்றார் மோடி
3. "இந்தியாவில் ஊடுருவியுள்ள முஸ்லிம்கள் கரையான் களைப் போல நம் நாட்டைத் தின்று கொண்டிருக்கிறார்கள்" என்று அன்றய பாஜக தலைவரும் உள்துறை அமைச்சருமான அமித்ஷா பேரணியில் பேசவில்லையா?
4. "புதிய குடியுரிமைச்சட்டம் என்பது முஸ்லீம்களை அகற்று வதற்கான எங்கள் வழிமுறையாகும்." சட்ட விரோத குடியேறிகளாகக் கருதப்படுபவர்களை நாடு கடத் துவதே எங்கள் நோக்கம் - குறிக்கோள் என்று அமித்ஷா வெளிப்படையாகக் கூறினாரே!
5. 19.2% முஸ்லிம் மக்கள்தொகை கொண்ட உத்தரப் பிரதேச மாநிலத்தில், பாரதிய ஜனதா கட்சி (BJP) 2017 மாநில சட்டமன்றத் தேர்தலில் வென்ற 312 இடங்களில் ஒரு முஸ்லீம் வேட்பாளரைக் கூட நிறுத்தவில்லை.பிப்ரவரி 20, 2017 ஆம் ஆண்டு உத்தரப் பிரதேசத்தின் சட்டமன்றத் தேர்தலின்போது பதேபூரில் நடந்த தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் மோடி கூறியதாவது: ”ரம்ஜான் சமயத்தில் தடையில்லாமல் மின்சாரம் தரப்படுமானால், அதே வசதி தீபாவளிக்கும் தரப்பட வேண்டும். அதில் பாரபட்சம் இருக்கக் கூடாது. ஒரு இடத்தில் கபரிஸ்தான் (இஸ்லாமியர்களின் இடுகாடு) இருக்குமானால், அங்கே ஷம்சானும் (இந்துக்களின் மயானம்) இருக்க வேண்டும்” என்று மோடி கூறினார்.
6. கருநாடகத்தின் தேர்தல் பரப்புரையின் போது வாக்கு செலுத்தும் கருவியின் பொத்தானை அமுக்கும் போது ‘பஜ்ரங் பலீக்கு ஜே’ என்று சொல்லி அழுத்துங்கள் என்று கூறியது யார்?
140 கோடி மக்களுக்கான ஆட்சியை நடத்த வேண்டிய பிஜேபி - அதன் பிரதமர், உள்துறை அமைச்சர் இப்படி நாசகாரமாகப் பேசுவது அராஜகம் அல்லவா! இவர்கள் தான் எதிர்க்கட்சிகளைப் பார்த்து ஜாதி, மதங்கள் பெயரால் மக்களைப் பிளவுபடுத்துகின்றனர் என்று நா கூசாமல் குற்றம் சுமத்துகிறார்கள் - நிலைக் கண்ணாடி முன் நின்று பிரதமர் பேசுகிறாரோ!
No comments:
Post a Comment