மோடி அரசுக்கு சு.வெங்கடேசன் எம்.பி. கேள்வி
பெருமுதலாளிகள் திருப்பிச் செலுத்தாத பல ஆயிரம் கோடி ரூபாய் கடன்களை, வராக்கடன் என்ற பெயரில் வங்கிகள் தள்ளுபடி செய்வது நீண்டகாலமாக வழக்கத்தில் உள்ளது.
ஆனால், நரேந்திர மோடி தலைமையிலான ஒன்றிய பாஜக அரசு அமைந்த பின், இவ்வாறு தள்ளுபடி செய்யப்படும் வராக்கடன் தொகையின் மதிப்பு பல மடங்கு அதிகரித்துள்ளது.
கடந்த 9 ஆண்டுகளில் 14 லட்சத்து 56 ஆயிரம் கோடி அளவிற்கான கடன்களை தள்ளுபடி செய்திருப்பதாக, ஒன்றிய அர சின் நிதித்துறை இணையமைச்சரே நாடாளுமன்றத்தில் வெளிப்படையாக ஒப்புக் கொண்டார்.
இது மன்மோகன் சிங்கின் 10 ஆண்டு ஆட்சியில் தள்ளுபடி செய்யப்பட்ட ரூ.3 லட்சத்து 76 ஆயிரம் கோடியை விட சுமார் 4 மடங்கு அதிகம் என்று விமர்சனங்கள் எழுந்தன.
ஆனால், அண்மையில் ஆர்.டி.அய். மூலம் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த இந்திய ரிசர்வ் வங்கி, கடந்த 9 ஆண்டுகளில் தள்ளுபடி செய்யப்பட்ட வராக்கடன் ரூ.24 லட்சத்து 95 ஆயிரம் கோடி என்று அதிர்ச்சித் தகவலை வெளியிட்டது.
இந்த செய்தி பத்திரிகைகளில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில்தான், நாடாளுமன்ற மதுரை மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன் தனது டுவிட்டர் எக்ஸ் பக்கத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
“எதற்கெடுத்தாலும் நேருவில் துவங்கி மன்மோகன் சிங் மீதே பழி போடும் நரேந்திர மோடி அரசின் முகமூடி கிழிந்து தொங்குகிறது.
மன்மோகன் சிங் ஆட்சியிலி ருந்த 10 ஆண்டுகளில் வராக்கடன் ஆன தொகை, 17 மாதங்களில் மோடி ஆட்சியில் சுவாஹா (தள்ளுபடி) ஆகியிருக்கிறது.
மன்மோகன் சிங் காலத்தில் ஆண்டு சராசரி வராக்கடன் 34 ஆயிரத்து 192 கோடி ரூபாய்... இதுவே மோடி ஆட்சியில் ஆண்டுக்கு 2 லட்சத்து 77 ஆயிரம் கோடி அள விற்கு அபகரிப்பு. மன்மோகன் சிங் கின் 10 ஆண்டு ஆட்சிக் காலத்தில் மொத்த வராக்கடன் 3 லட்சத்து 76 ஆயிரம் கோடி ரூபாய்... மோடி ஆட்சியில் 24 லட்சத்து 95 ஆயிரம் கோடி ரூபாய்.
நிதியமைச்சர் வராக்கடன் என்றாலே நீண்ட வகுப்பு எடுப்பார். ‘வராக்கடன் என்றால் ‘வஜா’ கடன் அல்ல’ என்றும், ‘வராக்கடன் என்று கணக்குகளில் காண்பித்த பின்னரும் வசூல் செய்ய நடவடிக்கை எடுப்போம்’ என்று கூறுவார்.
ஆனால், 25 லட்சம் கோடி ரூபாய் வராக்கடன் ஆகி இருக்கும் இந்த 9 ஆண்டுகளில், மீண்டும் வசூல் ஆகி இருப்பது எவ்வளவு தெரியுமா? வெறும் 2.5 லட்சம் கோடி ரூபாய். 10 சதவீதம்தான்.
பெரும் கார்ப்பரேட்டுகள் வைத்துள்ள பாக்கியே இதில் பெரும் பகுதி. அவர்களின் பெயர்களை வெளியிடு என்றால் ரிசர்வ் வங்கி சொல்கிறது, அது பரம ரகசியம். யாருடைய பணம் இது? இந்தியா முழுவதும் அரும்பாடுபட்டு, தமது பெரும் உழைப்பை செலுத்தி சாதாரண நடுத்தர மக்கள் சேமித்து வைத்திருக்கிற வியர்வை. ரத்தம்.
மோடி அரசே! மக்களுக்கு சொல்... யார் யார் வராக்கடன் வைத்திருக்கிறார்கள். யார் யாருக்கு “ஹேர் கட்” என்ற பெயரில் ‘வஜா’ செய்துள்ளீர்கள்?
இவை எல்லாம் பரம ரகசியம் என சட்டம் சொல்கிறது என்றால் சட்டத்தை திருத்துங்கள். அம்பானி - அதானிகளுக்காக உங்கள் பேனா ஆயிரம் திருத்தம் செய்யுமென்றால் அப்பாவி மக்களின் சேமிப்புகளை பாதுகாக்க உங்கள் பேனா அசையாதா?” என்று அந்த அறிக்கையில் கேள்வி எழுப்பியுள்ளார்.
No comments:
Post a Comment