* காந்தியாரை ‘மகாத்மா' என்று அழைத்த பார்ப்பனர்கள் கடைசி காலத்தில் காந்தியாரின் மனமாற்றத்தைக் கண்டு அஞ்சினர்!
* காந்தியாரை விட்டு வைத்தால் ‘இனி தங்கள் ஆதிக்கத்திற்கு ஆபத்து' என்று கருதியே திட்டம் தீட்டினர்!
காந்தி நாடு, காந்தி மதம் என்று பெயர் சூட்டவேண்டும் என்று தந்தை பெரியார் கூறியது இந்தப் பின்னணியில்தான்!
தமிழர் தலைவர் ஆசிரியர் அறிக்கை
மதவெறிக்குப் பலியான காந்தியாரின் பிறந்த நாளில், மத, ஜாதி கலவரமற்ற மனிதத்தை உருவாக்க சபதம் ஏற்போம் என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அறிக்கை விடுத்துள்ளார். அவரது அறிக்கை வருமாறு:
இன்று (2.10.2023) அண்ணல் காந்தியாரின் 155 ஆவது பிறந்த நாள். 120 வயது வரை வாழ்ந்து மக்களுக்குத் தொண்டாற்றவே பெரிதும் விரும்பியவர் அண்ணல் அவர்கள்.
இடையில் ஆதிதிராவிடர்களுக்கு ‘‘தாழ்த்தப்பட் டோருக்கு'' தொகுதி முறை கூடாது என்று சாகும்வரை ‘உண்ணாவிரதத்தை' மேற்கொண்ட காந்தியாரின் உயிரைக் காப்பாற்றுவதற்கு - மனிதநேயத்துடன் - தனது உறுதியான தனித்தொகுதி நிலைப்பாட்டிலிருந்து இறங்கி வந்து - மனிதநேயத்தோடு நடந்துகொண்டு அவரது உயிரைக் காப்பாற்றினார் அண்ணல் அம்பேத்கர்.
காந்தியார் படுகொலையை நடத்தியவர்கள் யார்?
ஆனால், ஆர்.எஸ்.எஸ். அமைப்பில் பயிற்சி பெற்ற பார்ப்பன கோட்சே கூட்டம், காந்தியாரின் உயிரைப் பறிக்க மூன்று முறை முயற்சி - மூன்றாவது முறையில், இறுதியில் ‘வெற்றி' பெற்றது.காந்தியாரை நாடு ‘‘சுதந்திரம்'' அடைந்த ஆறு மாதங்களில் சுட்டுக்கொன்ற நிகழ்ச்சி இந்திய வரலாற்றின் அழிக்க முடியாத ரத்தக்கறை மட்டுமல்ல, மிகப்பெரும் தலைகுனிவை உலக மக்கள் மத்தியில் ஏற்படுத்திய கோரச் சம்பவமாகும்!
இத்தனைக்கும் தேசத் தந்தை காந்தியார் அவர்கள் ஹிந்து மத விரோதியா? இல்லை, இல்லை.
இதோ அவரே கூறுகிறார், படியுங்கள்!
‘‘நான் ஒரு ஸநாதன ஹிந்து என்று உரிமை பாராட்டி வருகிறேன்.
ஆயினும், ஹிந்து மதத்தின் பெயரால் நடக்கும் சிலவழக்கங்களை நான் ஏற்றுக்கொள்வதில்லை.
காந்தியாரின் மத ஆதரவும் - எதிர்ப்பும்!
‘‘வேதங்கள், உபநிடதங்கள், புராணங்கள் முதலிய ஹிந்து தர்ம சாஸ்திரங்களிலும், பகவான் அவதாரங்களி லும், மனிதன் மறுபிறப்பிலும் எனக்கு நம்பிக்கையுண்டு.
வேத காலத்திலிருந்த பண்டைய வருணாசிரம தர்மத்தில் எனக்கு நம்பிக்கையுண்டு. தற்காலத்தில் அர்த்தமற்ற முறையில் அனுஷ்டிக்கப்படும் வர்ணா சிரம தர்மம் என்பது தர்மமல்ல.''
வேதங்கள் முதலியவற்றைப்பற்றிக் குறிப்பிடுகையில், ‘‘அவை தெய்வங்களிடமிருந்து தோன்றியவை என்ற பதங்களை நான் உபயோகிக்கவில்லை. ஏனெனில், வேதங்களுக்கு மட்டும் தனித்த ஈசுவரத்தன்மை உண்டு என்று நான் கருதுவதில்லை.
ஹிந்து வேதங்களுக்கு எவ்வளவு ஈசுவரத்தன்மை உண்டோ, அவ்வளவு ஈசுவரத்தன்மை கிறிஸ்து வேத மாகிய பைபிளுக்கும், முகமதியர் வேதமாகிய குர்ஆனுக் கும், பாரசீகரின் வேதமாகிய ஜெண்டாவஸ்தாவுக்கும் உண்டு என்று கருதுகிறவன்.
நெற்றியில் நெடுக விபூதி, நாமம் அணிவதுதான் ஹிந்து தர்மமோ? மந்திரங்களை சரியாக உச்சரிப்பதுதான் நமது மதச் சித்தாந்தமோ? அங்குமிங்கும் ஓடியாடி யாத்திரை செல்வதுதான் மதச் சேவையோ? அவற்றை யெல்லாம் போதனையல்லவென்று நான் தைரியமாய்க் கூறுவேன்.
எனக்கு என் மனைவியிடத்தில் என்ன அன்பு ஊறு கின்றதோ, அத்தகைய அன்பு மதத்திடமும் ஏற்படுகிறது.
என் மனைவியிடத்தில் எத்தனையோ குறை களுண்டு; - ஆயினும் அவரிடத்தில் ஒரு பிரேமை ஏற்படுகிறது அல்லவா? அதேபோல, எனது மதத்திடமும் நான் பிரேமை பாராட்டுகிறேன்.
அநேக கோவில்களில் கொடிய அக்கிரமங்கள் நடக் கின்றனவென்று அறிந்திருப்பினும், நான் அவைகளிடத் தில் வர்ணிக்க முடியாத பக்தி காட்டுகிறேன்.
நான் ஒரு சீர்திருத்தக்காரன். ஆயினும் ஹிந்து தர்மத்தின் ஆணிவேரான தத்துவங்களை ஒருபோதும் மீறி நடக்கமாட்டேன்.
சாசுவதமான சுதந்திரத்தையும், சாந்தியையும் அடைய நான் செய்துவரும் யாத்திரையில் எனது தேசாபிமானம் ஒரு பாகமுமாகும்.''
- இது காந்தியாரின் திட்டவட்டப் பிரகடனம்!
ஹிந்து என்ற போர்வையில் இருந்தவர்களால் நிகழ்த்தப்பட்ட படுகொலை!
வேத மதம், ஆரிய மதம் என்ற பெயர்களாலேயே முதலில் அழைக்கப்பட்டு, பிறகு அந்நியர்களால் சூட்டப் பட்ட ‘ஹிந்து' என்ற பெயரில் அழைக்கப்படும் மதத் தினரின் பிரார்த்தனைக் கூட்டத்தில் பஜனை பாடி துவக்கிய அண்ணல் காந்தியாரை ஆர்.எஸ்.எஸிடம் பயிற்சி பெற்று, பிறகு விலகியதாகச் சொல்லப்படும் கோட்சேவும், அவரது நண்பர்களும் கூட்டுச் சதி செய்து, ஏன் சுட்டுக் கொன்றார்கள் என்ற நியாயமான கேள்வி பொதுவாக எவருக்கும் எழவே செய்யும் - இன்றைய இளைய தலைமுறை உள்பட!
காந்தியார் வெறும் ஹிந்து மத பக்தராக மட்டுமல்ல பிரார்த்தனைகளில், பிரசங்கங்களில் அவர் ‘ஈசுவர அல்லா தேரே நாம்' என்று மற்ற மதங்களையும் இணைத்தே பாட வைத்தார் பக்தியோடு மக்களை! என்றாலும், ஏன் ‘‘கோட்சேக்கள்'' உருவானார்கள்?
காந்தியார் ஆதரித்த மற்ற மதங்கள் அந்நிய மதங்கள் -ஆர்.எஸ்.எஸ். கணக்குப்படி!
அதுமட்டுமா? காந்தியாரின் மக்கள் செல்வாக்கு - தங்களின் மத முகமூடியோடு, உயர்ஜாதி ஆதிக்க பார்ப்பன - பனியா கூட்டாட்சி உருவாக்குவதற்கு வரும் காலத்தில் தடையாக இருக்கும் என்ற கணிப்பு ஆர்.எஸ்.எசுக்கு! அதனால்தான் அந்த கொலைத் திட்டம்!
அதைத் தாண்டி காந்தியாரின் ‘‘அரசியலில் மதத்தைக் கலக்கக்கூடாது, மதச்சார்பற்ற அரசாகவே இந்திய அரசு நடக்கவேண்டும்'' என்று கூறியதோடு,
தமிழ்நாட்டிற்கு வந்தபோது, சமூகநீதியின் அவசியத்தை உணர்ந்தவர் காந்தியார்!
சமூகநீதியின் தேவை, முக்கியத்துவத்தைத் தமிழ் நாட்டிற்கு இருமுறை வந்தபோது - பார்ப்பனர்கள் ஓமாந்தூரார் அரசுமீது ‘‘வகுப்புவாதக்'' குற்றச்சாட்டினைக் கூறி - அவர் புள்ளி விவர ஆதாரங்களுடன் மறுத்து, காந்தியாரிடம் முதலமைச்சர் ஓமாந்தூரார் விளக்கிய பிறகு, பார்ப்பன சூழ்ச்சியைப் புரிந்து, பார்ப்பனர்களிடம் காந்தியார் ‘வேதமோத வேண்டியவர்களுக்கு மெடிக்கல், என்ஜினியரிங் கல்லூரியில் எதற்கு இடம்? வருணா சிரமத்திற்கு இது விரோதமில்லையா?' என்றார்.
காந்தியாரின் மக்கள் செல்வாக்கு, தாங்கள் நினைக் கும் ஜாதி, மத ஆதிக்க ஆட்சியை அமைக்க எதிராகி விடும், மக்கள் காந்தியார் பக்கமே நிற்கக் கூடும் என் பதை அடிநீரோட்டமாக்கி, மத வெறுப்பு வைத்து, அவர்கள் காந்தியாரை விட்டு வைக்கவில்லை.
ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக்காக களமாடிய டாக்டர் அம்பேத்கர், தனது இலட்சியத்தையும் ‘‘பலி கொடுத்து'', காந்தியாரின் உயிரைக் காப்பாற்றி, அவர் விரும்பியபடி 120ஆண்டு வாழ தாராள ‘விசா' தருவது போல ஒதுங்கி வழிவிட்டார்!
ஆனால், ஆரியம், மதவெறி, ஜாதி வெறி அவரை விட்டு வைத்தால் எதிர்காலத்தில் மத வேடமணிந்து ஒரு பார்ப்பன சாம்ராஜ்ஜியம் அமைக்க காந்தியார் தடை யாகி, அமோக மக்களின் செல்வாக்குப் பெற்றவராகி விடாமல் தடுக்கவே அத்திட்டம்!
‘காந்தி நாடு, காந்தி மதம்' என்று பெயர் சூட்டவேண்டும் என்று
தந்தை பெரியார் கூறியது ஏன்?
தந்தை பெரியார் முன்னோக்கோடு உரையாடினார் காந்தியாரிடமே 1928 இல், பெங்களூர் சந்திப்பின்போதே - தொலைநோக்குப் பார்வையோடு கூறியதும் வரலாறு.
அதனால் முற்பகுதியில் வருணாசிரமக் கொள்கைக் காக காந்தியாரை வன்மையாகக் கண்டித்த பெரியார், காந்தியாரை - மாறிய காந்தியார் - ஆரியக் கொடுமையை உணர்ந்த காந்தியாரைக் கண்டறிந்து உணர்ந்து, காந்தி நாடு, காந்தி மதம் என்று பெயர் வையுங்கள் என்றார்.
காந்தியார் அவர்கள் சுட்டுக்கொல்லப்பட்டபொழுது, மராட்டியத்தில் பார்ப்பனர்கள் தாக்கப்பட்ட நிலையில், தமிழ்நாட்டில் எந்தவித அசம்பாவிதமும் ஏற்படாமல், தனது மூதுரையால் அவர்களுக்குப் பாதுகாப்புத் தந்து, வெறுக்கப்படவேண்டியது தத்துவங்களே தவிர, தனிமனிதர்கள் அல்ல என்று மக்களுக்குப் புரிய வைத்து, அமைதிப் பூங்காவாக்கினார் தந்தை பெரியார்!
இந்தியாவை மதக்கலவரமற்ற, ஜாதிக் கலவரமற்ற, மனித வெறுப்பற்ற பூமியாக்கி, கறையைக் கழுவ காந்தியார் சிந்திய ரத்தம் நமக்குப் பாடமாகி, அறிவுத் தெளிவை, சமத்துவ, சம வாய்ப்பை, ‘மனிதத்தை' மக்களிடையே ஒருமைப்பாட்டை ஏற்படுத்த இந்நாளில் சபதமேற்போம்!
கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்
சென்னை
2.10.2023
No comments:
Post a Comment