நடப்பது மனுதர்ம ஆட்சியே! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, October 24, 2023

நடப்பது மனுதர்ம ஆட்சியே!

நாட்டில் நடப்பது மக்களாட்சியா மதச் சார்பற்ற ஆட்சியா அல்லது பார்ப்பனர்களின் புரோகித ஆட்சியா என்ற கேள்வி எழுந்துள்ளது. 

புதிதாக தென்கிழக்கு டில்லி மாவட்ட ஆட்சியராக பதவி ஏற்ற லக்‌ஷய் சிங்கால் என்பவர் தான் பதவில் அமரும் முன்பு - பார்ப்பன அர்ச்சகர் ஒருவரை அழைத்துவந்து பூஜைகள் செய்து தனது இருக்கையில் உட்காரவைத்த நிகழ்வு கடும் சர்ச்சையைக் கிளப்பி உள்ளது. 

டில்லி மாநிலத்தில் தென்கிழக்கு டில்லி மாவட்டத்திற்கு புதிய ஆட்சியராக உத்தரப்பிரதேசத்தில் பல மாவட்டங்களில் பல்வேறு துறைகளில் பணியாற்றி பயிற்சி முடித்த அய்.ஏ.எஸ். அதிகாரி லக்‌ஷய் சிங்கால் என்பவர் முதல் முதலாக மாவட்டத்தின் ஆட்சியராக பதவி ஏற்றார். 

பதவி ஏற்கும் நாளில் அலுவலகத்திற்குப் பார்ப்பன அர்ச்சகர் ஒருவரை அழைத்து வந்துள்ளார். மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முழுவதும் 'புனித நீர்' தெளித்து, பூஜை செய்த அந்த பார்ப்பன அர்ச்சகரை தனது இருக்கையில் அமரவைத்து அவரிடம் ஆசீர்வாதம் வாங்கி உள்ளார்.  இதை அவரது உதவியாளர் ஒருவர் படம் பிடித்துள்ளார். சமீபத்தில் இதை பொதுவெளியில் வெளியிட்டும் உள்ளார். 

 அதில் முதலில்  ஆட்சியர் அறையில் பூஜை செய்கிறார். பின்னர் ஆட்சியர் லக்‌ஷய் சிங்கால் அந்த அர்ச்சகர்ப் பார்ப் பனரை வணங்கி   அவருக்கு மாலை மற்றும் பட்டாடைகளை அணிவித்து ஆட்சியர் இருக்கையில் அமரவைக்கிறார்.  

இது தொடர்பாக சமூக வலைதளத்தில் அப் பகுதியைச் சேர்ந்த அகதோசியாம் என்ற நபர் கூறும் போது, மாவட்ட ஆட்சியர் தன்னுடைய இருக்கையில் பூஜை செய்து அமரவைத்த நபர் சதீஷ் என்றும் அவர் அனுமான் கோவில் பூசாரி என்றும் கூறியுள்ளார். மேலும் அந்தப் பூசாரிமீது கோவில் விரிவாக்கம் என்ற பெயரில் பலரிடம் பணம் வாங்கி சரியாக கணக்குக் காட்டாத குற்றச்சாட்டும் உள்ளது என்றும் கூறினார். மேலும் ஆட்சியர் பக்தி மிக்கவர் என்றால், கோவிலுக்குச் சென்றிருக்கலாம், அல்லது வீட்டில் வைத்து பூஜை செய்யலாம்; ஆனால் அவர் தனது அலுவலகத்தில் மோசடி குற்றச்சாட்டுக்கு ஆளான பார்ப்பனரை வைத்து பூஜை செய்து அவரை தனது இருக்கையில் அமரவைப்பது  அரசமைப்புச்சட்டத்தின் மதச் சார்பின்மைக்கு எதிரான ஒன்று அல்லவா! 

இதையே காரணமாக வைத்து மேலும் பல தவறுகளை அந்தப் பூசாரி செய்யும் பட்சத்தில் அவர்மீது புகார் கொடுத்தால் நடவடிக்கை எடுக்க அனைவருமே தயங்குவார்கள்.  மேலும் இதைப் பயன்படுத்தியே அந்தப் பார்ப்பனர் மேலும் பல மோசடிகளைச் செய்ய வாய்ப்பு உள்ளது என்றும் கூறினார். 

2000ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இதே போன்று அலகாபாத் உயர்நீதிமன்றத்திற்கு  மாற்றலாகி வந்த ஒரு நீதிபதி   தனக்கு முன்பு ஒரு தாழ்த்தப்பட்ட சமூக நீதிபதி இருந்த காரணத்தால் அந்த நீதிபதி  இருந்த இருக்கைக்கு அர்ச்சகர்களைக் கொண்டு பூஜை செய்வித்து, கங்கை நீரைக் கொண்டு வந்து தீட்டுக் கழித்து, பிறகு அந்த இருக்கையில் அமர்ந்து பணிகளைத் தொடர்ந்தார். இது தொடர்பாக புகார் தெரிவித்த தாழ்த்தப்பட்ட சமூக  நீதிபதியை கட்டாய ஓய்வு பெறவைத்து நீதிபதிகளுக்கான குடியிருப்பிலிருந்து வெளியேற் றினார்கள். 

 இந்த நிலையில் அவர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த போது - அப்போது அந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஆனந்த் இந்தக் காலத்திலும் இப்படி நடக்கிறதே என்று கருத்து தெரிவித்திருந்தார்.  இந்த நிலையில் அதே போன்று  புதிதாக ஆட்சியர் அலுவலகத்தில்  பூஜை செய்து பார்ப்பனரையே தனது இருக்கையில் அமரவைத்த நிகழ்வு பேசும் பொருளாகி உள்ளது.

ஆர்.எஸ்.எஸ்., பிஜேபியின் கொள்கை என்பதே ஒரே நாடு, ஒரே மதம், அதுவும் ஹிந்து மதம், ஸநாதனம் என்பதுதான். இது அரசமைப்புச் சட்டத்திற்கு விரோத மானது என்பதுபற்றி அவர்களுக்குக் கவலை இல்லை.

தங்களுடைய பார்ப்பனீய வைதீகத்திற்கு முடி சூட்ட வேண்டும் என்பதே! நாடாளுமன்ற புதிய கட்டடத் திறப்பு விழா எப்படி நடந்தது - நாட்டு மக்கள் பார்த்து நகைக்கவில்லையா?

குடியரசு தினத்தில் அதிகாரப் பூர்வமாக ஒன்றிய அரசு வெளியிட்ட விளம்பரத்தில் திட்டமிட்ட  வகையில் "மதச் சார்பின்மை" என்ற சொல்லை நீக்கிடவில்லையா?

எதற்கும் ஓர் அளவுண்டு. 2024 மக்களவைத் தேர் தலில் இந்த சட்ட விரோத மனுதர்ம பிஜேபி ஆட்சிக்கு முடிவு கட்ட மக்கள் தயாராகட்டும்! தயாராகட்டும்!!

No comments:

Post a Comment