தன்மானத்தை விட தமிழ் மானத்தைக் காக்க போராட்டக் களத்திற்கு வாருங்கள்!
சென்னை, அக். 16. தமிழியக்கம் ஆறாம் ஆண்டு தொடக்க விழாவில் தமிழர் தலைவர் ஆசிரியர் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். நிகழ்ச்சியில் பல்வேறு முக்கிய ஆளுமைகளும் பங்கேற்றனர்.
சென்னை சைதாப்பேட்டையில் உள்ள தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகம் அரங்கின் 5 ஆம் தளத்தில், 15.10.2023 அன்று காலை 10:30 மணியளவில் தமிழியக்கம் ஆறாம் ஆண்டு தொடக்க நிகழ்வு நடைபெற்றது.
தமிழியக்கம் சார்பில் தமிழர் தலைவருக்கு பயனாடை அணிவித்து நினைவு பரிசு வழங்கினர். விழாவில் நீர்வளத்துறை அமைச்சர் துரை.முருகன், கவிப்பேரரசு வைரமுத்து மற்றும் முக்கியப் பிரமுகர்கள் உரையாற்றினர்
மூடநம்பிக்கை ஒழிப்புச் சட்டம் தேவை!
தொடர்ந்து, ஹிந்தி திணிப்புக் கூடாது, உயர் கல்வி யில் முன்னேற்றம் - மகளிர் உரிமைத் தொகை - காலைச் சிற்றுண்டி ஆகிய புரட்சிகரமான திட்டங்களுக்கு தமிழ்நாடு அரசுக்கு பாராட்டு, தமிழ்நாட்டின் ஆறுகளை இணைக்க வேண்டுகோள், மூடநம்பிக்கை ஒழிப்புச் சட்டம் கொண்டு வரவேண்டும், நீதிபதிகள் அவரவர் தாய்மொழியில் ஒப்பமிட சட்டத் திருத்தம் தேவை, வானூர்தி நிலையங்களில் அறிவிப்புகள் தமிழில் இருக்க வேண்டும் உள்ளிட்ட 10 தீர்மானங்கள் அமைப்பின் நிர்வாகிகளால் வாசிக்கப்பட்டு அனைவராலும் ஒப்புதல் அளிக்கப்பட்டது. மேடையில் வீற்றிருந்த முக்கிய பிரமுகர்கள் அனைவருக்கும் வி.அய்.டி. வேந்தரும், அந்த அமைப்பின் பொதுச்செயலாளரும் இணைந்து ஆடையணிவித்து புத்தகம் நினைவுப் பரிசாக வழங் கினர். தலைமை உரையில் உயர் கல்வியில் தமிழ்நாடு சிறப்பான இடம் பெற வேண்டும் என்று வி.அய்.டி. வேந்தர் வேண்டுகோள் விடுத்தார்.
தன் மானமா? மொழி மானமா?
தொடர்ந்து வாழ்த்தரங்கம் நடைபெற்றது. புலவர் வா.மு.சேதுராமன், தமிழ்நாடு அரசின் நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் சுருக்கமாக உரையாற்றினர். அதன் பின்னர் தமிழர் தலைவர் ஆசிரியர் பேசினார். அவர் தனது உரையில்:
நிறைவேற்றப்பட்ட 10 தீர்மானங்களும் பாராட்டத் தக்கவை என்றார். தீர்மானங்களை நிறைவேற்றியதோடு, அவை செயலுக்கு வர களத்திற்கு வர வேண்டும் என்று எதிரில் இருந்தவர்களுக்கு அழைப்பு விடுத்தார். தமிழுக்கு திராவிடம் என்ன செய்தது? என்று இன்றைக் கும் சில அரைவேக்காடுகள் கேட்டுக் கொண்டிருக் கின்றன என்று சீற்றத்தோடு பேசியவர், 1918 ஆம் ஆண்டு திராவிட இயக்கத்தின் தொடக்கத்தில் நடை பெற்ற மாநாட்டில் தமிழ் மொழியை செம்மொழி ஆக்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று சான்றுகளுடன் சுட்டிக்காட்டினார். பிறகு 2004 ஆம் ஆண்டு முத்தமிழ் அறிஞர் கலைஞர் முயற்சியால் தமிழ் செம்மொழி ஆக்கப்பட்டதை எடுத்துரைத்தார். அந்தக் காலத்தில் வெள்ளைக்காரன் கூட, தமிழ் மொழியை நீஷ பாஷை என்று சொன்னதில்லை. மொழி ஒரு போர்க்கருவி என்று பெரியார் சொன்னதை சுட்டிக்காட்டி, தமிழ் மொழி தெரியாத கடவுளுக்கு இங்கு என்ன வேலை? என்று மொழியை பெரியார் போர்க் கருவி ஆக்கிக் கொண்டதையும் சேர்த்துச் சொல்லி விட்டு, ஆகவே தன்மானத்தை விட்டு மொழி மானம் காக்க போராட்டக் களத்திற்கு வாருங்கள் என்று அழைப்பு விடுத்து தமது உரையை நிறைவு செய்தார்.
கலந்து கொண்டு சிறப்பித்தோர்!
நிகழ்ச்சியில் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழக வேந்தர் முனைவர் வேதகிரி சண்முகசுந்தரம், ஏ.சி. சண்முகம், நல்லி குப்புசாமி, மறைமலை இலக்குவனார் போன்றோர் உரையாற்றினர். இந்நிகழ்ச்சியில் தென் சென்னை மாவட்டத் தலைவர் இரா.வில்வநாதன், செயலாளர் செ.ர.பார்த்தசாரதி, செல்வ மீனாட்சி சுந்தரம், வழக்குரைஞர் துரை அருண், சிவக்குமார், உடுமலை வடிவேல், கமலேஷ் மற்றும் ஏராளமான தமிழ் ஆர்வலர்கள், தமிழியக்கம் உறுப்பினர்கள், பொறுப்பாளர்கள், நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
No comments:
Post a Comment