உடலில் நுண்ணுயிர் எதிர்ப்பிகள்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, October 26, 2023

உடலில் நுண்ணுயிர் எதிர்ப்பிகள்!

கடந்த பத்தாண்டுகளைவிட, அடுத்த பத்தாண்டு களுக்கு, ஆன்டிபயாடிக் மருந்துகளை எதிர்க்கும் ஆற்றல் கொண்ட நுண்கிருமிகளின் தொல்லை அதிகமாக இருக்கும். இதற்கு, புதிய ஆன்டிபயாடிக் மருந்துகளை உருவாக்குவதில் ஆராய்ச்சியாளர்கள் தீவிரமாகியிருக்கின்றனர்.

இருந்தாலும், நோய் எதிர்ப்பு அணுக்களை வெளியில் தேடுவதைவிட, மனித உடலுக்குள்ளேயே தேடலாம் என்று ஒரு தரப்பு விஞ்ஞானிகள் கருதுகின்றனர். அண்மையில், மனித உடலிலேயே சில டஜன் நுண்கிருமி எதிர்ப்பு ‘பெப்டைடுகள்’ இருப்பதை அமெரிக்காவிலுள்ள பென்சில்வேனியா பல்கலைக் கழக விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். இதற்கு உதவியாக இருந்தது ஒரு, செயற்கை நுண்ணறிவு மென்பொருள் என்பது குறிப்பிடத்தக்கது.

கிருமிகளைக் கொல்லும் ஆன்டிபயாடிக் மருந்துகளுக்காக, தேயிலை, புகையிலை, பாம்பு விஷம், தவளைத் தோல், பூஞ்சைகள், வினோத விலங்குகளின் தாய்ப்பால் என்று சகலத்தையும் விஞ்ஞானிகள் விட்டுவைக்காமல் ஆராய்ந்து வருகின்றனர். இருந்தாலும், மனித உடலிலேயே கிருமிகளைக் கொல்லும் பாக்டீரியாக்கள் இருப்பதை, ஒரு செயற்கை நுண்ணறிவு மென்பொருள் உதவியிருக்கிறது. மனித உடலில் உற்பத்தியாகும் பல லட்சக் கணக்கான புரதங்களின் பட்டியல் கொண்ட டிஜிட்டல் களஞ்சியத்தில், நோய் எதிர்ப்புத் தன்மையுள்ள புரதங்களைக் கண்டறிய, அம் மென்பொருள் உதவியது.

அது அடையாளம் கண்ட 2,603 புரதங்களில், 55 புரதங்களில் நோய் எதிர்ப்பு ஆற்றல் இருப்பதை விஞ்ஞானிகள் உறுதி செய்துள்ளனர். சில சோதனைகளில், இந்த நோய் எதிர்ப்புப் புரதங்கள், சில சக்தி மிக்க நோய்கிருமிகளை எளிதில் வென்று காட்டின. இந்த போரில் பக்கவிளைவுகள் ஏதும் இருக்கவில்லை. இந்த ஆய்வைத் தொடர்ந்தால் அதிக நேரவிரயமின்றி பல இயற்கையான நோய் எதிர்ப்பு மருந்துகளை மனித உடலிலிருந்தே கண்டறிய முடியும்.

No comments:

Post a Comment