மலையுச்சி நின்று ஒலிக்கும் உறுதி! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, October 5, 2023

மலையுச்சி நின்று ஒலிக்கும் உறுதி!

கலைஞர் கவிதை

கொஞ்சி  மகிழ வேண்டும்

தஞ்சைக்கு வா மகனே எனத்

தாய் அழைத்தாள் 

தட்டாமல் சென்றேன்;

தந்தையார் நெஞ்சில் தைத்த முள்ளை

தனயன் நான் எடுத்தெறிந்த செயலை

தன்மானத் தாய் பாராட்டுதல் என்ன விந்தையா?

நன் மாணவ மணிகள் நடத்திய கலை நிகழ்ச்சி

அதுவே அன்றைய பெரு விழாவின் தலை நிகழ்ச்சி!

அரிமாவாம் வீரமணியார் அன்னையாக உருகினார் அன்று 

தாய்க் கழகத் தலைவர் அன்றோ அன்னார்;

தாலாட் டிசைத்துத் தன்மானத்தைத் தூங்க விடாமல்

தமிழ் உணர்வுப் பாலூட்டி இன எழுச்சி வலுவூட்டும்

கமழ்கின்ற பகுத்தறிவுப் பூங்கா அன்றோ வீரமணியார்!

இமிழ் கடல் தாண்டியும் இலட்சிய முரசொலித்த

ஈ.வெ.ரா. பெரியாரின் ஒரு பெரும் வேட்கை;

அனைத்து ஜாதியினரும் ஆண்டவனை அர்ச்சிக்க ஆலயம் சென்றிட

அனுமதி இருக்க வேண்டுமென்று அடியேன் விடுத்த ஆணையால்

புதிய தமிழகம் பூத்ததம்மா என்று,

பூமித்தமிழர் அனைவருமே பூரிக்கின்றார் என்று

புகழ் மலர்கள் தூவிய தோடன்றி என்தோளில்

பொன்னாடை யொன்றும் போர்த்தி மகிழ்ந்தார்.

காசியில் நெய்த தங்க நூல் ஆடை 

கனமிகக் கொண்ட ஆடை!

முப்பத்தைந்து ஆண்டுக்கு முன்பு

மூத்த சிந்தனையாளர் பெரியாருக்கு அணிவித்த ஆடை 

மணியம்மையார் இத்தனை ஆண்டுகள் பத்திரப்படுத்திய  அந்த

மாசறு பொன்னாடையை மானமிகு தலைவர் இந்த மாண்புமிகுவுக்கு அணிவித்தார்

ஈரோடு தந்த வள்ளலின் தோளோடு புரண்ட ஆடை; பழைமையோடு

போராடி நான் பெற்ற வெற்றிக்குப் பரிசு என்றால், அது என்

கண்ணுக்கு மட்டும் விருந்தல்ல; என் நெஞ்சகத்தில் எழுகின்ற

புண்ணுக்கும் எப்போதும் ஏற்ற மருந்தாகும்!

பன்னாடைகள் சிலர் பகுத்தறிவுக் கொள்கைதனைப் பழிக்கலாம்; 

பெரியாரின்

பொன்னாடைதனை எனக்கு வழங்கிய வீரமணியாரும் நானும் 

அதனை வென்று;

எந்நாளும் இணைந்திருந்து அறிவியக்கப் புரட்சி செய்வோம் 

ஏற்றி வைத்த இலட்சியத் திருவிளக்கை என்றும் அணையாமல் காத்திடுவோம்!

தாய்க் கழகத்தின் மீது ஆணையாக;

தந்தை பெரியார் மீது ஆணையாக;

மானமிகு இந்த சுயமரியாதைக்காரன்,

மலையுச்சி ஏறி நின்று ஒலிக்கின்ற உறுதி இஃது!

- ‘முரசொலி’,16.06.2006


No comments:

Post a Comment