ஓயாத வன்முறை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, October 10, 2023

ஓயாத வன்முறை

ஒடுக்கப்பட்ட பெண்கள் மீது மாநிலங்கள்தோறும் நிகழ்த்தப்படும் வன்கொடுமைகள் அதிகரித்துவரும் நிலையில் பீகாரில் தாழ்த்தப்பட்ட சமூக பெண் ஒருவர் மீது நிகழ்த்தப்பட்ட கொடூரம் அதிர்ச்சியளிக்கிறது. பாட்னா மாவட்டம் மோசிம்பூர் கிராமத்தைச் சேர்ந்த 30 வயதுப் பெண் ஒருவர் தன் மீது நிகழ்த்தப்பட்ட வன்முறை குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்த பிறகே இந்தச் சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

வன்கொடுமைக்கு ஆளான பெண்ணின் கணவர், உள்ளூர் கந்துவட்டிக்காரர் பிரமோத் சிங் என்பவ ரிடமிருந்து 1,500 ரூபாய் கடன் வாங்கியுள்ளார். அந்தக் கடனுக்கான வட்டியைக் கேட்டு பிரமோத் சிங், அவருடைய மகன் அன்ஷு சிங் இருவரோடு அடை யாளம் தெரியாத நால்வர் செப்டம்பர் 23 அன்று அந்த இளம்பெண்ணைக் கொடூரமாகத் தாக்கி, ஆடை களைக் களைந்துள்ளனர்.

அன்ஷு சிங், அந்தப் பெண்ணின் மீது சிறுநீர் கழித்திருக்கிறார். தலையிலும் தொடையிலும் காயங்களோடு தப்பித்த அந்தப் பெண், மருத்துவ மனையில் சிகிச்சை பெற்றுவருகிறார். தாங்கள் ஏற்கெனவே கடன் தொகையை வட்டியோடு திருப்பிச் செலுத்தி விட்ட நிலையிலும் கூடுதல் வட்டி கேட்டு பிரமோத் சிங் தங்களைத் தொடர்ந்து மிரட்டிவருவதாக அந்தப் பெண் புகாரில் தெரிவித்துள்ளார்.

“நாங்கள் ஏழைகள். எங்களால் வங்கியில் கடன் பெற முடியவில்லை. அதனால்தான் அதிக வட்டிக்கு உள்ளூர் கந்துவட்டிக்காரர்களிடம் பணம் வாங்கு கிறோம்” என்று வன்முறைக்கு ஆளான பெண்ணின் உறவினர் சொன்ன தகவல் முக்கியமானது. வன் முறையில் தொடர்புடையவர்கள் மீது வன்கொடுமை தடைச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப் பட்டுள்ளது. இந்தச் சம்பவத்துக்கு முன்னுரிமை தந்து உடனடியாக நடவடிக்கை எடுக்கும்படி முதலமைச்சர் நிதீஷ் குமார் தெரிவித்துள்ளார்.

தலித் மக்களைத் தாக்கினால் சட்டம் பாயும் என்கிற அச்சம் இல்லாததே இப்படியொரு சம்பவத்துக்குக் காரணம் என்பதால் பீகார் மாநில அரசுக்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் விளக்கம் கேட்டு தாக்கீது அனுப்பியுள்ளது.

No comments:

Post a Comment