ஒன்றிய அரசின் இந்தப் போக்கை மாநில அரசுகள் தடுத்து நிறுத்தவேண்டும்! அக்.9 இல் மாவட்டத் தலைநகரங்களில் திராவிடர் கழகம் ஆர்ப்பாட்டம்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, October 4, 2023

ஒன்றிய அரசின் இந்தப் போக்கை மாநில அரசுகள் தடுத்து நிறுத்தவேண்டும்! அக்.9 இல் மாவட்டத் தலைநகரங்களில் திராவிடர் கழகம் ஆர்ப்பாட்டம்!

*     10 லட்சம் மக்கள் தொகைக்கு அதிகபட்சம் 100 மருத்துவ மாணவர்கள் மட்டுமே சேர்க்கப்படவேண்டுமாம்!

* அப்படியானால் இன்னும் பல ஆண்டுகளுக்கு  தமிழ்நாட்டில் மருத்துவக் கல்லூரிகள் கிடையாது!

* ஒன்றிய அரசு மக்கள் வளர்ச்சிக்கா, வீழ்ச்சிக்கா?

* மாநில அரசின் உரிமையில் தலையிட ஒன்றிய அரசுக்கு உரிமை கிடையாது!

தமிழ்நாட்டில் புதிய மருத்துவக் கல்லூரிகளைத் திறக்க கதவை மூடுகிறது ஒன்றிய அரசு - மாநில உரிமைகளில் தலையிடும் ஒன்றிய அரசின் தான் தோன்றித்தனமான இந்தப் போக்கை மாநில அரசு கள் தடுத்து நிறுத்தவேண்டும்; ஒன்றிய அரசைக் கண்டித்து திராவிடர் கழகம் சார்பில் அக்டோபர் 9 ஆம் தேதி மாவட்டத் தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடத் தப்படும்  என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அறிக்கை விடுத்துள்ளார். 

அவரது அறிக்கை வருமாறு:

‘‘தேசிய மருத்துவ ஆணையம் புதிய வழிகாட்டு முறை'' என்ற பெயரில் ஓர் அபாய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. வழக்கம்போல மாநிலங்களின் உரிமைப்பறிப்பு -  சமூகநீதி ஒழிப்பு என்ற உள்நோக்கம் கொண்ட திட்டமாகவே இதனைக் கருதவேண்டும்.

மருத்துவக் கல்விக்கான இடங்களின் எண்ணிக்கை மாநிலங்களின் மக்கள் தொகை எண்ணிக்கைக்கு ஏற்ப நிர்ணயம் செய்யப்படும் என்பதுதான் தேசிய மருத்துவ ஆணையத்தின் வழிகாட்டும் அறிக்கை.

ஒன்றிய அரசிதழில் ஆகஸ்ட் 16 ஆம் நாள் வெளி யிடப்பட்டுள்ள இளநிலை மருத்துவக் கல்விக்கான தேசிய மருத்துவ ஆணையத்தின் புதிய விதிமுறைகளில், 10 லட்சம் மக்கள்தொகைக்கு அதிகபட்சமாக 100 மருத்துவ மாணவர் சேர்க்கை இடங்கள் மட்டுமே அனுமதிக்கப்படும் என்றும், அதற்கும் கூடுதலான மருத்துவ மாணவர் சேர்க்கை இடங்கள் உள்ள மாநிலங்களில் புதிய மருத்துவக் கல்லூரிகளோ, மருத்துவ மாணவர் சேர்க்கை இடங்களோ அனுமதிக்கப்படாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு முதல் நடைமுறைக்கு வரும் இந்த விதிமுறைகள் தமிழ்நாடு போன்ற வளர்ந்த மாநிலங்களையே பாதிக்கும்.

அடுத்த 10 ஆண்டுகளில் தமிழ்நாட்டில் புதிய மருத்துவக் கல்லூரிகள் கிடையாதா - கூடாதா?

10 ஆண்டுகளுக்கு: 2011 ஆம் ஆண்டு கணக்கெடுப் பின்படி தமிழ்நாட்டின் மக்கள்தொகை 7.23 கோடி ஆகும். 2021 ஆம் ஆண்டில் இது 7.64 கோடியாக இருக்கும் என்று கணக்கிடப்பட்டிருக்கிறது. இந்த மக்கள் தொகைக்கு தமிழ்நாட்டில் அதிக அளவாக 7,640 மாணவர் சேர்க்கை இடங்கள் மட்டுமே இருக்க முடியும். ஆனால், தமிழ்நாட்டில் இன்றைய நிலையில், 11,600 மருத்துவ மாணவர் சேர்க்கை இடங்கள் உள்ளன. அதனால், இன்னும் பல பத்தாண்டுகளுக்கு தமிழ்நாட்டில் புதிய மருத்துவக் கல்லூரிகளைத் தொடங்க முடியாது; அதுமட்டுமின்றி, இப்போது இருக்கும் மருத்துவக் கல்லூரிகளில் கூடுதல் இடங்களையும் ஏற்படுத்த முடியாது.  (மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை இதில் அடங்குமோ!) புதுச்சேரி, கேரளம், ஆந்திரம், தெலங் கானா ஆகிய தென்மாநிலங்களுக்கும் இதே நிலை தான் ஏற்படும்.

அதிகளவில் மருத்துவர்கள் உருவாக்கப்பட்டால், எதிர்காலத்தில் மருத்துவர்களுக்கு வேலை கிடைக்காது என்பதால்தான் இந்தப் புதிய கட்டுப்பாட்டைக் கொண்டு வந்திருப்பதாக தேசிய மருத்துவ ஆணையம் கூறுகிறது.  தமிழ்நாட்டில் 11,600 மருத்துவ மாணவர் சேர்க்கை இடங்கள் இருந்தாலும் கூட, அந்த இடங்கள் அனைத் திலும் படிப்பவர்கள் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் அல்ல.

வெளிநாடுகளிலிருந்தும்கூட மருத்துவ கல்விக்கு - மருத்துவ உதவிக்குத் தமிழ்நாட்டுக்கு வருகிறார்கள் - வெளிமாநிலங்களிலிருந்தும் ஏராளமானோர் வருகின்றனர். இவர்களை எல்லாம் மொத்தக் கணக்கில் எடுத்துக் கொள்ளுமோ ஒன்றிய அரசு?

மருத்துவக் கல்லூரி தொடங்குவது மாநில அரசின் கொள்கை முடிவு (Policy Decision). அதனைக் கட்டுப் படுத்தும் அதிகாரம் அந்த அமைப்பிற்குக் கிடையாது - அரசமைப்புச் சட்ட விரோதமே!

நோயாளிகளுக்கு டாக்டர்கள் விகிதாச்சாரம் இந்தியாவில் எட்டிவிட்டதா?

என்னே அறியாமை!

அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு அள்ளிச் செல்கின்றனரே!

தமிழ்நாட்டில் உள்ள 12 நிகர்நிலை மருத்துவப் பல்கலைக் கழகங்களில் உள்ள 2500 இடங்கள், அரசு மருத்துவக் கல்லூரிகளில் இருந்து அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு வழங்கப்படும் 783 இடங்கள், தனியார் கல்லூரிகளில் கடைசி நேரத்தில் நிர்வாகத்தால் நிரப்ப அனுமதிக்கப்படும் இடங்கள் ஆகியவற்றை சேர்த்தால் கிட்டத்தட்ட 4,000 இடங்களில் யாரை வேண்டுமானாலும் சேர்க்க முடியும். அந்த இடங்களில் பெரும்பாலும் பிற மாநில மாணவர்கள்தான் சேருகின்றனர். அதனால், அந்த இடங்கள் அனைத்தையும் தமிழ்நாட்டின் கணக்கில் சேர்ப்பது எப்படி சரியாகும்?

தமிழ்நாட்டில் உள்ள மருத்துவக் கல்லூரி இடங்கள் அனைத்தும் தமிழ்நாட்டிற்கானவை; அவற்றில் படிக்கும் மாணவர்கள் தமிழ்நாட்டில் மட்டும்தான் சேவை செய்வார்கள் என்று மருத்துவ ஆணையம் கூறியுள்ளது.  இது உண்மையான தகவல் அல்ல!

 தமிழ்நாடு உள்ளிட்ட தென்மாநிலங்களில் தான் அதிக மருத்துவக் கல்லூரிகள் உள்ளனவே தவிர, வட மாநிலங்கள் அனைத்தும் மருத்துவக் கல்வி வழங்குவதில் இன்னும் பின்தங்கித்தான் உள்ளன. அங்கு மருத்துவர் களுக்குக் கடுமையான பற்றாக்குறை நிலவுகிறது.

உலகின் பல நாடுகளில் விகிதாசாரம் எப்படி?

உலகில் மக்கள் தொகைக்கு இணையாக அதிக மருத்துவர்களைக் கொண்ட நாடு கியூபா தான். 2019 ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி அங்கு 110 பேருக்கு ஒரு மருத்துவர் இருக்கிறார். கத்தார் நாட்டில் 125 பேருக்கு ஒரு மருத்துவர் இருக்கிறார். அதற்காக அந்த நாடுகளில் புதிய மருத்துவக் கல்லூரிகளைத் திறக்கத் தடை விதிக்கப்படவில்லை. அவ்வாறு இருக்கும்போது தமிழ்நாட்டில் 253 பேருக்கு ஒரு மருத்துவர் இருப்பதைக் காரணம் காட்டி மருத்துவக் கல்லூரிகளுக்குத் தடை விதிப்பது அநீதி.

மாநிலத்தில் மருத்துவக் கல்லூரிகளை திறக்க அனு மதிக்கலாமா, வேண்டாமா? என்பதைத் தீர்மானிக்கும் அதிகாரம் மாநில அரசுக்குத் தான் உண்டு. தேசிய மருத்துவ ஆணையத்திற்கு அந்த அதிகாரம் கிடையாது. இந்த விவகாரத்தில் தேசிய மருத்துவ ஆணையம் கட்டுப்பாடுகளை விதிப்பதையும், அதற்கு ஒன்றிய அரசு உடந்தையாக இருப்பதையும் இந்திய அரசமைப்புச் சட்டம் ஏற்குமா? 

தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களில் அதிக மருத்துவக் கல்லூரிகள் உள்ளன என்றால், அது அந்த மாநிலங்களின் அரசுகள் பல பத்தாண்டுகளாக திட்ட மிட்டு, தொலைநோக்குப் பார்வையுடன் மேற்கொண்ட நடவடிக்கைகளின் பயன் ஆகும். இந்த வளர்ச்சிப் பணி தண்டனைக்குரியது என்று தேசிய மருத்துவ ஆணைய மும், ஒன்றிய அரசும் கருதுகிறதா?

வட மாநிலங்களின் பரிதாப நிலை!

வட இந்தியாவில் மருத்துவர்கள் மற்றும் மருத்துவ மனையின் அவலங்களுக்கு இரண்டு எடுத்துக்காட்டு - 2020 ஆம் ஆண்டு உத்தரப்பிரதேசம் மாநிலம் கோரக்பூர் அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் பற்றாக் குறையால் 30-க்கும் மேற்பட்ட குழந்தைகள் இறந்தனர். அரசின் மெத்தனப் போக்கைச் சுட்டிக்காட்டி குழந்தை களைக் காப்பாற்ற நடவடிக்கை எடுத்த குழந்தைகள் நல சிறப்பு மருத்துவர் கபில்கான்மீது கொலைப்பழி சுமத்தி சிறையில் அடைத்துச் சித்திரவதை செய்தது உத்தரப்பிரதேச அரசு! தற்போது அவர் சென்னையில் மருத்துவராக உள்ளார். அதேபோல் வாரணாசி மருத்துவ மனையிலும் இதே நிலைதான். அங்கும் 40-க்கும் மேற்பட்ட நோயாளிகள் மரணமடைந்தனர். 

மருந்து பற்றாக்குறையால் மகாராட்டிரத்தில் இறப்பு எண்ணிக்கை அதிகரிப்பு!

கடந்த 2 ஆம் தேதி மகாராட்டிராவில்  உள்ள நன்னேட் என்ற நகரத்தில் சங்கர்ராவ் சவன் அரசு மருத்துவமனையில் ஏற்கெனவே 12-க்கும் மேற்பட்ட குழந்தைகள் இரண்டே நாள்களில் உயிரிழந்த நிலையில், தற்போது மேலும் 7 பேர் உயிரிழந்துள்ளனர். இதை யடுத்து பலி எண்ணிக்கை 31 ஆக உயர்ந்துள்ளது. மருந்துப் பற்றாக்குறை மற்றும் மருத்துவர் பற்றாக் குறையால் உயிரிழப்பு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. பலி எண்ணிக்கை அதிகரித்துள்ளதால், மக்கள் அச் சத்தில் உள்ளனர். மருந்து வசதி ஏற்படுத்தி கொடுக்கவும் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

 அங்குள்ள மருத்துவமனைகளின் நிலை இப்படி இருக்க, இவர்கள் தமிழ்நாட்டையும் அந்த மாநிலங் களைப் போல் மாற்ற புதுப்புது விதிகளைக் கொண்டு வருகின்றனர். வளர்ச்சிக்காக ஒன்றிய அரசா? வளர்ச்சியை வீழ்த்துவதற்காக ஒன்றிய அரசா?

மாநில அரசுகள் இதனைக் கடுமையாக எதிர்த்து முறியடிக்கவேண்டும்.

இதைக் கண்டித்து திராவிடர் கழகம் சார்பில் 9.10.2023 அன்று மாவட்டத் தலைநகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்
சென்னை
4.10.2023


No comments:

Post a Comment