சென்னை, அக். 5 டில்லியில் நடைபெற்ற தேசிய அளவிலான போட்டியில் வெற்றி பெற்ற தமிழ்நாடு என்சிசி மாணவர் அணியை தேசிய துணை தலைமை தளபதி கமோடர் அதுல் குமார் ரஸ்தோகி பாராட்டி, பரிசுகளை வழங்கினார்.
இதுகுறித்து, தேசிய மாணவர் படை இயக்குநரகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: டில்லியில், தேசிய அளவிலான என்சிசி காலாட்படை அணிகளுக்கான போட்டிகள் கடந்த செப்.19 முதல் 23 வரை நடைபெற்றது. இதில், தேசிய மாணவர் படை இயக்குநரகத்தின் தமிழ்நாடு, புதுச்சேரி, அந்தமான் நிகோபர் காலாட்படை பிரிவைச் சேர்ந்த 91 மாணவர்கள் பங்கேற்றனர். அவர்கள் துப்பாக்கி சுடுதல், தடை தாண்டுதல் ஆகியவற்றில் 4 பதக்கங்கள் உட்பட 39 பதக்கங்களைப் பெற்றுள்ளனர்.
குறிப்பாக துப்பாக்கி சுடுதல், துப்பாக்கி ஏந்தி தடை தாண்டுதல், வரைபடம் படித்தல், கூடாரம் அமைத்தல், களம் அமைத்தல், போர்க்களம் அமைத்தல் போன்ற போட்டிகள் ஆண், பெண் என இரு பிரிவினருக்கும் தனித்தனியே நடத்தப்பட்டது. பெண்கள்பிரிவினர் சுகாதாரம், ஆரோக்கியப் போட்டியில் தங்கம், கூடாரம் அமைத்தலில் வெள்ளிப் பதக்கங்களை வென்று முதலிடம் பிடித்துள்ளனர்.
ஆண்கள் பிரிவினர் துப்பாக்கி சுடுதல் மற்றும் தடை தாண்டுதலில் வெள்ளிப் பதக்கங்களை வென்று இரண்டாம் இடம் பிடித்துள்ளனர். இந்த அணியினர் கடந்த மே முதல் செப்டம்பர் வரை சென்னை மற்றும் மதுரையில் நடைபெற்ற பல்வேறு முகாம்களில் பங்கேற்றுகடுமையான போட்டி பயிற்சிகளைக் கடந்து தேர்ந்தெடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இவர்களுக்கான பாராட்டு விழா நேற்று முன்தினம் (2.10.2023) சென்னையில் உள்ள தேசிய மாணவர் படை தலைமையகத்தில் நடைபெற்றது. இதில், தேசிய துணை தலைமை தளபதி கமோடர் அதுல் குமார் ரஸ்தோகி பங்கேற்று வெற்றி பெற்ற அனைத்து தேசிய மாணவர் படை மாணவர்கள் அணியைப் பாராட்டி நினைவுப் பரிசுகளை வழங்கினார்.
இவ்வாறுஅதில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment