புதுடில்லி,அக்.8- குற்றம் ஏதும் செய்யாத நபரை சட்டத்துக்குப் புறம்பாக 30 நிமிடங்கள் வரை காவல் நிலையத்தின் தடுப்புக் காவலில் அடைத்துவைத்ததற்காக அந்த நபருக்கு ரூ.50 ஆயிரம் இழப்பீடு வழங்க டில்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சம்பந்தப்பட்ட இரண்டு காவல் அதிகாரிகள் இணைந்து அந்த ரூ.50 ஆயிரத்தை பாதிக்கப்பட்ட வருக்குக் கொடுக்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில், "மனுதாரர் பங்கஜ் குமாரை காவல்துறையினர் கையாண் டுள்ள விதம் மிகுந்த வேதனையளிக்கிறது. சம்பவம் நடந்த இடத்திலிருந்து அவரை காவல்துறையினர் அப்படியே காவல் நிலையத்துக்கு கூட்டிச் சென்று எவ்வித விசாரணையும் இன்றி தடுப்புக் காவலில் அடைத் துள்ளனர். எவ்வித உரிய காரணமும் தெரிவிக்கப்படாமல் அவர் 30 நிமிடங்கள் தடுப்புக் காவலில் இருந்துள்ளார்.
அது அவருக்கு மிகுந்த மன உளைச்சலை அளித்துள்ளது. அதனாலேயே அவர் நீதிமன்றத்தை நாடியுள்ளார்.
சட்ட விரோத கைது, காவலை எதிர்த்து அவர் இழப்பீடு கேட்டுள்ளார். அவர் தரப்பில் நியாயம் உள்ளது.
அவருக்கு சம்பந்தப்பட்ட காவல் அதிகாரிகள் இருவர் இணைந்து ரூ.50 ஆயிரம் இழப்பீடாக வழங்க இந்த நீதிமன்றம் உத்தரவிடுகிறது" என்று தெரிவித்தது.
கடந்த 2002-ஆம் ஆண்டு செப்டம்பர் 2ஆம் தேதி இரவு 9 மணியளவில் பங்கஜ் குமாரை காவல்துறையினர் கூட்டிச் சென்றனர். அவர் பத்ர்பூர் காவல் நிலையத்துக்குக் கொண்டு செல்லப்பட்டார். முன்னதாக, அப்பகுதியில் கிராந்தி என்ற பெண்ணுக்கும் காய்கறி வியாபாரி ஒருவருக்கும் இடையே சண்டை ஏற்பட்டுள்ளது. அதில் காயமடைந்த கிராந்தி என்ற பெண் அப்பகுதியில் இருந்த பங்கஜ் குமாரின் கடைக்கு சென்றுள்ளார். தனக்கு நேர்ந்ததைக் கூறி உதவி கோரியுள்ளார்.
உடனே, அவர் காவல்துறைக்கு தொலைபேசியில் பேசியுள்ளார். அவ்வளவே நடந்துள்ளது. இதனையடுத்து அங்கு வந்த காவல்துறையினர் சண்டையில் நேரடியாக தொடர்பு இல்லாத பங்கஜ் குமாரை கைது செய்து தடுப்புக் காவலில் அடைத்தனர். இதனை எதிர்த்தே அவர் வழக்கு தொடர்ந்தார்.
வழக்கு விசாரணையின்போது டில்லி காவல்துறை தரப்பு எவ்விதமான முதல் தகவல் அறிக்கையும் பதிவு செய்யப்படாமல் காவல் நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டு தடுப்புக் காவலில் அடைக்கப்பட்டதாகக் ஒப்புக்கொண்டனர்.
மேலும், சம்பந்தப்பட்ட காவல் துணை ஆய்வாளர் ராஜீவ் கவுதம், துணை ஆய்வாளர் சமீம் கான் மீது விசாரணை நடத்தி துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்பட்டது என்றும் தெரிவித்தது. இருப்பினும் நீதிபதி பிரசாத் அதில் சமாதானம் அடையவில்லை.
"காவல் அதிகாரிகளால் மக்கள் நடத்தப்படும் விதத்தில் நீதிமன்றம் வருத்தம் கொள்கிறது. காவலர்கள் சட்டத்துக்கு அப்பாற்பட்டவர்கள் அல்ல. துறை நடவடிக்கை மட்டும் போதாது. இந்த வழக்கின் தன்மை யைக் காணும்போது மனுதாரர் தடுப்புக் காவலில் இருந்த நேரம் குறைவுதான் என்றாலும்கூட மனுதாரரின் தனிப் பட்ட சுதந்திரம் பறிபோய் உள்ளது. இது அரசியல் சாசன சட்டப்பிரிவு 21 மீதான அத்துமீறல்.
காவல் துறை இங்கே தனது அதிகாரத்தை வரம்பு மீறி அரசியல் சாசன, அடிப்படை உரிமைகளை அத்து மீறும் அளவுக்கு பயன்படுத்தியுள்ளது. துறை ரீதியான நடவடிக்கை அவர்களுக்கு பெரிய பாதிப்பை ஏற்படுத் தாது. அவர்களுக்கு வழங்கும் தண்டனை பிறருக்கும் முன்னுதாரணமாக இருக்க வேண்டும். அதனால் சம்பந்தப்பட்ட இரண்டு காவல் அதிகாரிகளின் ஊதியத் தில் இருந்து ரூ.50 ஆயிரத்தை இருவரும் சமமாக பகிர்ந்து பாதிக்கப்பட்ட நபருக்குக் கொடுக்க வேண்டும்” என்று கூறினார்.
No comments:
Post a Comment