சென்னையில், ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 15ஆம் தேதி தமிழ்நாடு மேனாள் முதலமைச்சர் அண்ணாவின் பிறந்தநாளை நினைவு கூறும் வகையில், அறிஞர் அண்ணா மிதிவண்டிப் போட்டி சென்னை மாநகராட்சி சார்பில் நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டும் பேரறிஞர் அண்ணா அவர்களின் பிறந்தநாளை சிறப்பிக்கும் வகையில் அறிஞர் அண்ணா மிதிவண்டிப் போட்டி அக்டோபர் 14ஆம் தேதி அன்று, காலை 6.00 மணியளவில் சென்னை தீவுடத்திடலில் தொடங்கி, சுவாமி சிவானந்தா சாலையில் உள்ள தொலைக்காட்சி நிலையம், நேப்பியர் பாலம், காயிதே-இ-மில்லத் பாலம், அண்ணாசாலை வழியாகச் சென்று மீண்டும் தீவுத்திடலில் தொடங்கிய இடத்திலேயே முடிக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி சார்பில் தெரிவிக்கபட்டுள்ளது.
பரிசு தொகை
மாவட்ட அளவில் நடத்தப்படும் இப்போட்டிகளில் பங்கேற்க, இந்தியாவில் தயாரான மிதிவண்டிகள் மட்டுமே உபயோகப்படுத்தப்பட வேண்டும். ஒவ்வொரு பிரிவிலும் முதல் இடம் பெறுபவர்களுக்கு ரூ.5000/-, இரண்டாம் இடம் பெறுபவர்களுக்கு ரூ.3000/-, மூன்றாம் இடம் பெறுபவர்களுக்கு ரூ.2000/- மற்றும் 4 முதல் 10 இடங்களில் வருபவர்களுக்கு ரூ.250/- பரிசும், தகுதிச் சான்றிதழ்களும் வழங்கி சிறப்பிக்கப்படும்.
போட்டிக்கான முன்பதிவு
இது குறித்து சென்னை மாநகராட்சி தெரிவித் துள்ளதாவது, "மேற்கண்ட போட்டியில் பங்குபெறும் மாணவ / மாணவியர்கள் தன் சொந்த மிதிவண்டி மற்றும் தலைக்கவசத்துடன் கலந்துகொள்ள வேண்டும். போட்டியாளர்கள் அனைவரும் வயது சான்றிதழுடன், வங்கி கணக்குப் புத்தகம் ஆகியவை கொண்டு அக்டோபர் 13ஆம் தேதி வரை சென்னை, பெரியமேட்டில் உள்ள ஜவஹர்லால் நேரு விளையாட்டு அரங்கத்தில் காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை முன்பதிவுகள் செய்துக் கொள்ளலாம். போட்டியின் போது ஏற்படும் விபத்து அல்லது அசம்பாவிதங்களுக்கு பங்கு கொள்ளும் நபரே பொறுப்பேற்க வேண்டும். இதற்கான எழுத்து மூலமான ஒப்புதலை மாவட்ட விளையாட்டு அலுவலரிடம் ஒப்படைத்த பின்னரே போட்டியில் கலந்துகொள்ள அனுமதிக்கப்படுவர்.
மேலும், அக்டோபர் 14ஆம் தேதி, அன்று காலை 05.30 மணிக்கு சென்னை தீவுத்திடலில், சென்னை மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் முன் நேர்நிலையாக கேட்டுக் கொள்ளப்படு கிறார்கள். மேலும், இது தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு சென்னை மாவட்ட விளையாட்டு அலுவலகத்தில் நேரிலோ அல்லது 044-26644794, 7401703480 மற்றும் 7338980191 ஆகிய தொலைபேசி எண்ணிலோ தொடர்பு கொண்டு விவரம் பெற்றுக் கொள்ளலாம்" என்று பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
யார் யார் பங்கேற்கலாம்?
இந்த மிதிவண்டி போட்டியானது மூன்று பிரிவுகளில் நடத்தப்படவுள்ளது. முதல் பிரிவில் 13 வயதிற்குட்பட்ட மாணவர்கள் / மாணவிகள், இரண்டாம் பிரிவில் 15 வயதிற்குட்பட்ட மாணவர்கள் / மாணவிகள் மற்றும் மூன்றாம் பிரிவில் 17 வயதிற்குட்பட்ட மாணவர்கள் / மாணவிகள் என்று மூன்று பிரிவுகளின் கீழ் போட்டிகள் நடத்தப்படும் என்று சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment