பண்பாடா - நியாயமா! எது முதலில்?
மனிதர்களின் மனதில் உள்ள தன்முனைப் புக்கு பல நேரங்களில் பலியாவது சீரிய நட்பும், சிறந்த பண்பாட்டுப் பழக்கமுமே!
நாம் மற்றவர்களோடு உரையாடும் போது, குறிப்பாக விவாதிக்கும்போது, நம்முடைய கருத்தில் உள்ள உண்மை, நியாயம், தேவை இவற்றை வலியுறுத்தி, ஆதாரப்பூர்வமாக பலவற்றைச் சுட்டிக் காட்டியோ, மேற்கோள் காட்டியோ பேச முழு உரிமை படைத்தவர்கள் என்பது மறுக்க முடியாத உண்மைதான்!
ஆனால், அதற்காக நேரடியாக குஸ்தி போட கோதாவில் இறங்கி வாய்ச் சண்டை முற்றி வெறுப்பின் எல்லைக்குச் சென்று நடுவர் தலையிட்டு இருவரையும் சரிப்படுத்தும் காட்சிகளை தொலைக்காட்சி விவாதங்களில் பார்க்கும்போது, 'நயத்தக்க நாகரிகத்தை' - பயன்பட வேண்டிய பண்பு ஒழுக்கத்தை இவர்களில் பலருக்கும், விவாதங்களுக்கு வருமுன்னர் ஒரு பயிற்சி வகுப்பு எடுத்து அனுப்பியிருக்கக் கூடாதா? என்ற எண்ணம் தான் பற்பல நேரங்களில் நமக்குத் தோன்றும்.
கருத்தைக் கருத்தால் வெல்லும் வகையில் சொல்லும் போது, பொறுமையும், சகிப்புத் தன்மையும் இருசாராருக்கும் முக்கியமல்லவா?
பல விவாதங்கள் பிரபல தொலைக் காட்சிகளில் பெரும்பாலும் கொதி நிலை யிலேயே நடைபெறுவதும் விரும்பத் தக்கதாயில்லை.
வழக்குரைஞர்கள் எதிர் எதிரே நின்று நீதிபதி முன் வாதாடும்போதுகூட, மற்ற தரப்பை கற்றறிந்த நண்பர் வழக்குரைஞர் Learned Counsel என்று விளிக்கும் பண்பாட்டைக் கற்று தரும் வகையில்தான் வாதங்கள் அமைகின்றன!
ஆனால், தொலைக்காட்சி விவாதங்களில், ஏதோ போர்க் களத்தில், மும்முரமாக சண்டை போட்டு, 'இரண்டில் ஒன்று' என்று பார்க்கும் முடிவுபோல பேசுவது, அவலச்சுவை (Bad Taste) என்றே கூற வேண்டும்.
மாறுபட்ட இரு கருத்துள்ளவர்களோ, கொள்கை உடையவர்களோ உரையாடும் போதுகூட, நமக்கு நம் கருத்தை வலியுறுத்த எவ்வளவு உரிமை உண்டோ - அவ்வளவு உரிமை எதிர் தரப்பிற்கும் உண்டு என்ற எண்ணமே, பெரும்பாலோருக்கு வருவதே இல்லை; அதனால் தான் இந்த கீழிறக்கம்!
எவ்வளவுதான் நமது கருத்து 100க்கு 100 விழுக்காடு சரியானது - மறுக்கக் கூடாதது என்று நாம் நினைத்து அந்த உறுதியான நிலைப்பாட்டின் மீது நின்று விவாதித்தாலும்கூட, மற்றொரு தரப்பு அதை ஏற்காதபோது நாம் ஆத்திரப்படவோ, வெகுண்டெழுந்து வீம்புடன் வெளி நடப்பு செய்வதோ பேசுப வருக்கும் விவாதங்களை ஏற்பாடு செய்யும் தொலைக்காட்சியினருக்கும் பெருமை அளிப்பதாகாது!
உரையாடல்களில் பல நேரங்களில் "முதலைத்தனமும்", "மூர்க்கத்தனமும்" ஒன்றை ஒன்று முண்டியடித்து முன்னேறிச் சென்று முழுமையாக நமக்குக் களங்கத்தை ஏற்படுத்தக் கூடும்!
அறிவுக் கதவு திறக்கப்பட வேண்டிய வேளையில் ஆத்திர உணர்வு என்பது சாளரத்தை உடைத்து வெளியே குதித் தோடுவது எவ்வகையில் விவாதத்தில் கலந்து கொண்டோரை உயர்த்தக் கூடும்?
ஏற்பது, ஏற்காமல் புறந்தள்ளுவது என்பது பற்றி கிஞ்சிற்றும் கவலைப்படாது நமது உரையாடல் மூலம் வெற்றி நமக்குக் கிட்டியதா என்பதைவிட நாம் பண்பாடு குறையாமல் நயத்தக்க நாகரிகத்துடன் நடந்து கொண்டோமா என்று மட்டும் நமக்கு நாமே கேள்வி கேட்டு விடை பெற்றால் அது நமக்கு பெரு வெற்றியே!
நம் பக்கம் நியாயம் இருந்தாலும் நம் பண்பை பலி கொடுத்து அந்த நியாயத்தை நிரூபித்தால் அது யாருக்கும் பெருமை தராது!
முரட்டு வெற்றியைவிட, பண்பாட்டுடன் ஏற்படும் தோல்வி இத்தகைய ஏற்ற இறக்க விவாதங்களில் - பெரிதும் விரும்பத்தக்க தில்லையா!
No comments:
Post a Comment