பகுத்தறிவுவாதிகளைக் கொன்றவர்கள் ஸனாதன் சன்ஸ்தா தானே? - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, September 7, 2023

பகுத்தறிவுவாதிகளைக் கொன்றவர்கள் ஸனாதன் சன்ஸ்தா தானே?

பகுத்தறிவுவாதிகள் கொலையில் பின்னால் இருந்தது ஸனாதன் சன்ஸ்தா என்ற ஹிந்து மத அமைப்பு!

அதே ஸனாதனம் குறித்துதான் அமைச்சர் உதயநிதி பேசி யுள்ளார்.

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்தான் இன்றைக்கு இந்தியா முழுமைக்கும் பேசு பொருளாகி உள்ளார். அவரது தலையைச் சீவ முதலில் ரூ.10 கோடி கொடுப்பதாகச் சொன்னவர்கள், இப்போது அதைவிட அதிகம் தருவதாகப் பேரம் பேசி வருகிறார்கள்.

இந்தச் சர்ச்சையை பாஜக ஒரு தேசிய பிரச்சினையாக மாற்ற முயன்று வருகிறது. ஆனால், இதை எல்லாம் மிக இயல்பாகக் கடந்து போகிறார் உதயநிதி. 'ரூ.10 கோடி எதற்கு? என் தலையைச் சீவ 10 ரூபாய் சீப்பு போதும்' என்று நகைச்சுவையாகப் பதிலடி தந்தாரே பார்க்கலாம். ஒரு காலத்தில், ராமர் பாலம் சர்ச்சை எழுந்தபோது, மேனாள் முதலமைச்சர் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் 'எந்தக் கல்லூரியில் ராமன் பொறியியல் படித்தார்?' என்று கேட்க, அவரது தலையை ஒரு சாமியார் சீவி விடுவேன் என்றார்.

அதற்குக் கலைஞர் அவர்கள் - 'என் தலையை நானே சீவி பல ஆண்டுகள் ஆகிவிட்டன' என்றார். இன்றைக்கு மீண்டும் காலம் உதயநிதி மூலம் திரும்பி இருக்கிறது. இந்தச் சர்ச்சையால் தங்களின் இளைஞரணி செயலாளர் 'தேசிய தலைவராக மாறிவிட்டார்' எனப் பெருமிதத்தோடு கூறிவருகிறார்கள். ஸனாதன ஒழிப்பு மாநாட்டை நடத்தியவர்களை விட்டுவிட்டு, அதன் நோக்கத்தை நோக்காது, மாநாட்டில் பேசிய உதயநிதி குறிவைக்கப்படுவது ஏன்?

புதியதாக உதயநிதி ஸ்டாலின் ஸனாதனம் குறித்துப் பேசவில்லை; ஸனாதனம் குறித்து உதயநிதியின் தாய்கழகமான திராவிடர் கழகம் தென் இந்தியாவில் பலமாக பேசத் துவங்கியது; பெரியாரின் மாணவரான கலைஞர், திருமாவளவன், தற்போ தைய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்வரை பேசி இருக்கிறார்கள். தொடர்ந்து பேசியும் வருகிறார்கள். இதைத் தேர்தலுக்காகப் பெரிதுபடுத்துகிறார்கள். பாஜக எதையாவது பேசி மக்களைக் கவர வேண்டிய கடினமான காலத்தில் இருக்கிறது.

பாஜகவின் அடிப்படைக் கொள்கை 'ஒரே நாடு ஒரே தேர்தல்' என்பது. அதைப் பல காலமாகப் பேசிக் கொண்டிருந் தார்கள். ஆனால், ஆட்சி முடியப் போகின்ற நேரத்தில் ஏன் குழு அமைக்கிறார்கள்? இதைப் பற்றிய விவாதத்தைக் கிளப்பிவிட்டு விட்டால், 7.50 லட்சம் கோடி ஊழலைப்பற்றிப் பேசாமல் இருப்பார்கள் எனக் கணக்குப் போடுகிறார்களோ!

பெரியார், ஜாதி ஒழிப்பு மூலவேரான ஸனாதனம், அதன் கொள்கைகள் அடங்கிய மனுதர்மம் குறித்து தொடர்ந்து பேசி வந்தார்; அவர் தன்னுடைய வாழ்நாளில் எங்குமே வன்முறை யைத் தூண்டியது கிடையாது - ஆனால் அவரது கூட் டங்களில்  எவ்வளவோ தடவைகளில் ஸனாதனிகள்  அட்டூழியங்களைச் செய்ததுண்டு; வன்முறைகளைக் கட்டவிழ்த்ததுண்டு. 

உதயநிதி ஸ்டாலின் இனப்படுகொலை (நிமீஸீஷீநீவீபீமீ) என்ற வார்த்தையைப் பயன்படுத்தியதாக அவர்கள் சொல்கிறார்கள்; ஆனால், இவர் அந்த வார்த்தையை நான் பயன்படுத்தவில்லை; ஸனாதனம் என்ற வார்த்தையைத்தான் பயன் படுத்தினேன் என்று பதிலளித்திருக்கிறார். பலர் திராவிடர்களை திராவிடத்தை ஒழிப்போம் என்று பேசுகிறார்கள், அப்படி என்றால் எல்லாம் கொலை செய்யப் பார்க்கிறீர்கள் என்றாகிவிடுமா?

ஸனாதனத்தை ஒழிப்போம் என்பதை ஒரு கொள்கை ரீதியாகப் பார்க்க்கவேண்டும். பிறப்பால் வேற்றுமை காட்டும் சமநீதி இல்லாத ஒரு கொள்கையை ஒழிக்க வேண்டும் என்று அவர் சொல்லி இருக்கிறார். இதே கருத்தைத்தான் இந்திய அரசமைப்புச் சட்டமும் சொல்கிறது.

பிறப்பால் உயர்ந்தவன் தாழ்ந்தவன் என்று பாகுபாடு காட்டுகின்ற அனைவரையும் நமது நாட்டுச் சட்டத்தின்படி கைது செய்து சிறையிலடைக்கலாம். அதற்கு முழு உரிமை இருக்கிறது. ஆகவே உதயநிதி ஸ்டாலின் பேசியதில் ஒரு தவறும் இல்லை 

சிலர் ஸனாதன தர்மம் என்பது வேறு, வர்ணாசிரமம் என்பது வேறு என்று விளக்கம் தருகிறார்கள். ஆனால், அவர்கள் அனைவரும் பிறப்பால் பார்க்கப்படும் பாகுபாட்டை ஆதரிக் கின்றவர்கள். ஏற்கின்றவர்கள். இன்றைக்கும் ஆவணி அவிட்டம் கொண்டாடிப் பூணூல் தரித்துக் கொண்டு தான் இருக்கிறார்கள்.

பாஜகவைச் சேர்ந்த சமூகவலைதளப் பிரிவு தேசியத் தலைவரும் இந்தியாவிலேயே அதிக வதந்தியைப் பரப்புவதில் முதன்மையானவர் என்று பெயரெடுத்துள்ளவருமான  அமித் மாள்வியா என்பவர் உதயநிதி ஸ்டாலின் கூறியதை இந்துக் களுக்கு எதிரான இனப்படுகொலை (Genocide) எனத் திரித்துக் கூறியுள்ளார். அவர்மீது வழக்கே போடலாம். இதைப் போன்ற ஒரு பொய்யைச் சொன்னதற்காக குற்றவியல் வழக்குத் தொடரப்பட வேண்டும்.

பெரியார், அண்ணா போன்ற தலைவர்கள் ஸனாதன தர்மத்தைப் பற்றிப் பல முறை பேசி இருக்கிறார்கள். ஸனாதன தர்மத்திற்கும் வர்ணாசிரம தர்மத்திற்கும் ஒரு வித்தியாசமும் கிடையாது.

இதைப்பற்றி அண்ணல் அம்பேத்கர் எழுதி இருக்கிறார். ஜாதியை வேரோடு அழிக்க வேண்டும் என்கிறார். அதன் சிறு தடயம்கூட மிச்சம் இருக்கக் கூடாது என்கிறார் அவர். ஜாதிக் கொடுமையைச் சீர்திருத்தம் செய்ய முடியாது -  அதை அடியோடு ஒழிக்கத்தான் வேண்டும் என்றார்.

1949ஆம் ஆண்டு நவம்பர் மாதம் அம்பேத்கர் பேசிய கடைசி உரை மிகமிக முக்கியமானது.  "இந்தியச் சமுதாயத்தில் வேதனையை ஏற்படுத்தக் கூடிய இரண்டு விடயங்கள் இருக்கின்றன. அது என்னவென்றால், சமுதாய ரீதியாக, பொருளாதார ரீதியாக இங்கே சமத்துவம் என்பது இல்லை. அதைப்போன்று சகோதரத்துவமும் இல்லை"

"ஒரு மனிதன் ஒரு ஓட்டு என்பதில் சமநிலை பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது. ஆனால் எல்லா மனிதர்களும் சமம் என்ற நிலை இல்லை. அங்கே முரண்பாடுகள் நிலவுகின்றன. இது அரசியல் ஜனநாயகத்திற்கு மிகப் பெரிய அபாயம்" என்று அவர் பேசி இருக்கிறார் மனிதத்தன்மைக்கு எதிரான கொள்கைகள் என்று ஒன்று இருந்தால், அவை ஒழிக்கப்பட வேண்டும் என்பதுதான்  மானமிகு உதயநிதி ஸ்டாலின் பேச்சின் சாரம்சம். அதில்  சிக்கல் என்ன இருக்கிறது? 'காங்கிரஸ் முக்த்' பாரத்(காங்கிரஸ் இல்லாத இந்தியா) என்று பாஜக தொடர்ந்து சொல்லி வருகிறது.

அப்படி என்றால், காங்கிரஸ்காரர்களை ஒழிக்கப்போவதாக அவர்கள் சொல்கிறார்கள் என்று நாம் அர்த்தம் கொள்ளலாமா? அதற்காக பாஜகவை யாராவது விமர்சித்திருக்கிறார்களா? அப்படிப் பேசினால், அது அப்பட்டமான திரிபுவாதம் இல்லையா?

ஆனால், இஸ்லாமியர்களைக் கொல்லுங்கள் என்று சிலர் பேசி இருக்கிறார்கள். அறைகூவல் விட்டும் வருகிறார்கள். அவர்கள் மீது சட்டப்படி எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அவர்கள்தான் இப்போது ஹிந்துக்களை ஒழிக்கச் சொல்கிறார் உதயநிதி என்று அர்த்தம் கற்பிக்கிறார்கள். இது அடிப்படை அரசியல் நாகரிகம் அற்ற அவர்களுக்கே உரித்தான அவதூறுச் செயல்.

2023இல் மனித சமூகம் எதிர்கொள்கின்ற பிரச்சினைகளுக்கான தீர்வுகளை 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னதாகவே ரிஷிகளும் முனிவர்களும் தந்துவிட்டார்கள். அதைக் காலா காலத்திற்கும் மாற்றத் தேவை இல்லை என்று சொல்வதை யாராவது ஏற்க முடியுமா?

இந்திய அரசமைப்புச் சட்டம் நடைமுறைப்படுத்தப் பட்டபோது அதற்கு முன்னதாக இந்தியாவிலிருந்த எந்தச் சட்டங்களும் செல்லாது என்று சொன்னதற்குப் பிறகும், ஸனாதனம் இன்றைக்கும் பொருந்தும் என்று சொன்னால் ஏற்றுக்கொள்ள முடியுமா?. இது அரசமைப்பு சட்டத்திற்கே எதிரானது இல்லையா?" 

அரசமைப்புச் சட்டத்திற்கு உள்பட்டு ஒன்றைச் சொன்னவரை ஒரு சாமியார் 'கொல்லுங்கள் - 10 கோடி  ரூபாய் தருகிறேன்!' என்று கூறுகிறார். அவரது படத்தை கத்தியால் வெட்டி தீவைத்து எரிக்கிறார். ஆனால் அவருக்கு உத்தரப்பிரதேச மாநில காவல்துறை பாதுகாப்பு அளிக்கிறது. 

இதற்குப் பெயர்தான் ஸனாதனம் என்பது! 

 ஸனாதனம் என்ற பெயரில் இயங்கும் ஸனாதன சன்ஸ்தா என்ற இதே அமைப்புதான் நரேந்திர தபோல்கர், கல்புர்கி, கோவிந்த பன்சாரே மற்றும் கவுரி லங்கேஷ் ஆகிய பகுத்தறிவாளர்களின் கொலையின் பின்னணியில் இருந்து சதித்திட்டம் தீட்டி நிதி அளித்து ஆயுதங்களையும் வழங்கியது. கொலை வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்டு தற்போது பிணையில் உள்ளவர்களுக்கு இன்று வரை ஸனாதன் சன்ஸ்தா அனைத்து உதவிகளையும் வழங்கி வருகிறது என்பதை கருத்தில் கொள்ள வேண்டும்.

ஸனாதனம் என்றால் சமத்துவத்துக்கு எதிரானது; வன்முறையை அணுகுமுறையாகக் கொண்டது - மக்கள் புரிந்து கொள்வார்களாக!

 

No comments:

Post a Comment