கடந்த 02-09-2023 அன்று சென்னையில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் மன்றத்தின் சார்பில் நடைபெற்ற ஸனாதன ஒழிப்பு மாநாட்டில் உரையாற்றிய மாண்புமிகு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ” சனாதனம் என்பதை எதிர்ப்பதோடு நின்று விடக்கூடாது. அது கரோனா, டெங்கு, மலேரியா போன்றது என்பதால் அதனை ஒழிக்க முனைய வேண்டும்” என்று பேசியுள்ளார் என்றும், அவரது பேச்சு சனாதனத்திற்கு எதிரானது என்றும், இந்து தர்மத்தைப் பின்பற்றும் தனது மத உணர்வினைப் புண்படுத்தி விட்டது என்றும் கூறி புதுடில்லியைச் சேர்ந்த வினித் ஜிண்டால் என்பவர் உதயநிதி மீது இந்திய தண்டனைச் சட்டத்தின்படி நட வடிக்கை எடுக்கக்கோரி காவல்துறையில் புகார் அளித்துள்ளார்.
போதாக் குறைக்கு இதுபற்றி பேசியுள்ள ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்கள், உதயநிதியின் பேச்சு இந்து மதத்தையும், கலாச்சாரத்தையும் வெறுப்பதாக உள்ளது என்றும், ஸனாதனம் என்பது மக்களின் மனங்களில் உள்ளது; ஆனால் மோடி ஆட்சிக்கு வந்தால் சனாதன ஆட்சி வந்து விடும் என்றும் பொய் பிரச்சாரம் செய்கின்றனர் என்றும் கூறியுள்ளார். (ஆதாரம் 4-9-2023 இந்து தமிழ்திசை)
துவக்கத்திலேயே ஒரு கேள்வி. ஸனாதனம்தான் இந்திய பெரும்பான்மையான இந்துக்களின் கலாச்சார பண்பாடு சார்ந்த மக்களின் மனங்களில் உள்ள விழுமிய தர்மம் ஆயிற்றே, அந்த சனாதனம் குடிகொண்ட ஆட்சிக்கு மோடி அதிபராவார் என்று எதிர்க்கட்சிகள் சொன்னால் அது உங்களுக்கு மகிழ்ச்சி தானே! எப்படி பொய்ப்பிரச்சாரம் ஆகும். அப்படியென்றால் சனாதனம் என்பது மக்களுக்கு ஏற்புடையதல்ல என்பதை அமித்ஷா ஏற்றுக்கொள்கிறாரா?
விஷயத்திற்கு வருவோம். உதயநிதி மீது டெல்லி காவல்துறையிடம் புகார் அளிக்கும் அளவுக்கு அந்த சனாதனம் என்றால் என்னதான் பொருள்?
ஸனாதன ஒழிப்பு மாநாட்டில் உரையாற்றிய தமிழர் தலைவர் ஆசிரியர் அதுபற்றி ஆதாரத் தோடு ”ஸனாதனம் என்றால் நித்தியமான மதம் என்றும் புராணவிதி என்றும் வேதங்களை அடிப்படை ஆதார மாகக் கொண்டது என்றும் சனாதனத்தின் மூலப்பிரமாணம் வர்ணா சிரமம்தான் என்றும் 1916இல் பனாரஸ் செண்ட்ரல் இந்து கல்லூரி வெளியிட்ட “சனாதன தர்மா அன்ட் எலி மெண்டரி டெக்ஸ்ட்புக்” என்ற நூலிலிருந்து விளக் கினாரே. அது போதாதா? இந்து மதத்திற்கு மற்றொரு பெயர் ஸனாதன மதம் என்பதும், சனாதனத்தின் அடிப்படையே வர்ணாஸ்ரம தர்மம் எனப்படும் ஜாதி பாகுபாடுதான் என்பதும்தான் என இந்து மத அத்தாரட்டியான பெரிய சங்கராச்சாரியார் சொல்லியிருக்கிறார். “தெய்வத்தின் குரல்” என்ற பெயரில் வெளியாகியிருக்கும் அவர் உரைகளிலிருந்து சிலவற்றை சுருக்கமாகப் பார்ப்போம்.
"நம்முடைய ஸனாதன மதத்தில் மற்ற மதங்கள் எதிலுமே இல்லாத வர்ண தர்மம் இருப்பதால் இது அவசியமில்லை என்று எடுத்துப் போட்டுவிட்டு, நம் மதத்தையும் மற்றவை மாதிரி ஆக்கிவிட வேண்டும் என்று சீர்திருத்தக்காரர்கள் சொல்கிறார்கள்” (பக்கம் - 158)
"சரி மதம் என்பது என்ன? ஆத்மாவுக்கு வந்திருக்கிற வியாதி தீருவதற்கு வைத்தியம் செய்வதுதான் மதம், ஒரு நோயாளிக்கு இன்ன வியாதி வந்திருக்கிறது அது இன்ன மருந்தைத் தந்தால் சொஸ்தமாகும் என்பது வைத்தியனுக் குத்தான் தெரியும். தங்களுக்கென்று ஒரு பொருளையும் தேடிக்கொள்ளாமல் பரமத் தியாகத்துடன் லோகஷேமத்தையே நினைத்த ரிஷிகள், தர்ம சாஸ்திரக்காரர்கள் அப்படித் தந்திருக்கிற மருந்துதான் நமது ஸநாதன தர்மம். ( பக்கம் -159)
"யோசித்துப் பார்த்தால் நம் தேசத்திலும் கூடப் பழைய வர்ண தர்மங்களில் பிடிப்புக் குறைந்து போய், எல்லாம் ஒன்றாகி விட வேண்டும் என்ற அபிப்பிராயம் வந்த பிற்பாடு தான் இப்படி மத உணர்ச்சியின்றி நாஸ்திகம் அதிகமாகியிருக்கிறது என்று தெரிகிறது: சந்தேகத்திற்கு இடமில்லாமல் தெரிகிறது.” (பக்கம் - 162)
இப்படி நிறைய ஆதாரங்களைக் காட்டிக் கொண்டே போகலாம். ஆக ஸனாதன தர்மம் என்றால் இந்து தர்மம் என்றும் இந்து மதத்தில் உள்ள ஜாதிப்பிரிவுகளை வலியுறுத் தும் வர்ணாஸ்ரம தர்மம் என்பதும் விளங்கும்.
இதனை எக்காலத்திலும் விட்டுவிடாமல் ஆதிக்கம் செலுத்திக் கொண்டிருந்த தங்கள் இனத்திற்கு “எல்லாம் ஒன்றாகிவிட வேண்டும்“ என்ற சமூகநீதி எண்ண மேலீட்டால் “ஸனா தனத்தை ஒழிப்போம்“ என்றால் ஆத்திரம் வராமல் என்ன செய்யும்?
நாட்டில் பெரும்பான்மையாக உள்ள மக்கள் இந்துக்கள் என்று முத்திரை குத்தப்பட்டு ஜாதிகளுக்குள் கட்டுவிக்கப்பட்டு தங்களுக் குள் பிரிவினைகளைப் பெருக்கிக் கொண்டு பிளவுபட்டு அடித்துக்கொண்டு சாக வேண்டும் என்கின்ற கூட்டத்திற்கு உதய நிதியின் பேச்சு சாவுமணியாக ஒலித்தது என்பதில் அய்யமில்லை.
இக்கூட்டம் நாட்டின் எந்த நீதி மன்றத்தின் கதவுகளையும் தட்டட்டும். நிரம்பிக் கிடக்கும் ஆதாரங்களை சட்டபூர்வமாகக் காட்டி உறுதி செய்து காலங்காலமாக விமேசனமின்றிக் கிடந்த மக்களுக்கு இதன் மூலமாகவாவது ஒரு தீர்வு கிட்ட வழி வகுத்த மாண்புமிகு உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கு கோடானுகோடி நன்றிகளும் வாழ்த்துகளும்!
No comments:
Post a Comment