அய்யா பிறந்த நாள் வாழ்த்துகள்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, September 17, 2023

அய்யா பிறந்த நாள் வாழ்த்துகள்!

தந்தை பெரியார் உலக மயமாகிறார்-உலகம் பெரியார் மயமாகிறது!

தந்தை பெரியார் 145 ஆம் ஆண்டு பிறந்த நாளில்  புதிய சமூகநீதி தழைத்தோங்கும் சமூகம் படைக்க உறுதியேற்போம்!

  தந்தை பெரியார் உலகமயமாகிறார் - உலகம் பெரியார் மயமாகிறது! தந்தை பெரியார் 145 ஆம் ஆண்டு பிறந்த நாளில் புதிய சமூகநீதி தழைத் தோங்கும் சமூகம் படைக்க உறுதியேற்போம் என்று  திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அறிக்கை விடுத்துள்ளார்.

அவரது அறிக்கை வருமாறு:

‘செயற்கரிய செய்பவர் பெரியர்' என்றார் அறிவின் வெளிச்சமான ஆழ்சிந்தனையாளரான நம் அருமை திருவள்ளுவர்! அதனை செயலில் வென்று காட்டியவர் நமது ஒப்புவமையற்ற அறிவு ஆசானாம் சுய சிந்தனையாளரான தலைவர் தந்தை பெரியார்!

புத்தரும், சித்தரும், ஏனைய பலரும் தோற்றோடினர் - ஆரியத்தை எதிர்த்த களத்தில்! காரணம் ஆரியம் ஒரு விதைக்காது விளையும் கழனி.

ஆரியத்தைத் தோற்றோடச் செய்தார்! 

அலறும்படிச் செய்தார் - செய்கிறார்

இதனை அறிவியல் ரீதியாக தனது சுயமரியாதை இயக்கம்மூலம், சமூகநீதி, சமத்துவ, சம உரிமைக் களங்களில் எதிர்கொண்டு, ஆரியத்தைத் தோற்றோடச் செய்தார்! அலறும்படிச் செய்தார் - செய்கிறார். உரு வத்தால் மறைந்து அரை நூற்றாண்டுக்குப் பின்னரும் இன்றும் அவர் போட்ட ஈரோட்டுப் பாதையில் அகிலமும், அரசியல், சமூக, பொருளாதார தளங்களில் பீடுநடை போடும் அளவுக்கு செயற்கரிய செய்தார்!

அதனால்தான் ஆட்சிகள் பெரியாரைத் துணை கொண்டு சாதனை சரித்திரம் எழுதி வருகின்றன! பெரியாரைப் பிழை செய்பவர்கள் வரலாற்றில் காணாமற் போய் இருக்கிறார்கள் - அவர்தம் அன்பார்ந்த எதிரி யான ஆச்சாரியார் உள்பட (தத்துவப்படி, தனி மனித உறவு நட்பு அடிப்படையில் அல்ல).

சிலையாக நின்றாலும்,

சீலமாக வென்றாலும்,

சிம்ம சொப்பனமாகிறார்

எமது பகுத்தறிவுப் பகலவன்!

ஏச்சுப் பேச்சு, எள்ளல், எதிர்ப்பு,

சிறைவாசங்கள், செருப்பு வரவேற்பு என்ற

அவமானப் பரிசுகள் - எல்லாம் அந்த தத்துவ ஞானியை உலகப் பெரியாராக்கிட உதவவே செய்தன!

தளபதி அஞ்சாநெஞ்சன் பட்டுக்கோட்டை அழகிரிசாமி அவர்கள் ‘பெரியாரில் பெரியார்!' என்றார்!

சரித்திரம் படைக்கும் 

சாகப் புகழ்பெற்ற தலைவர்!

உத்தமத் தொண்டால் உயர்ந்து - இன்று நல்வழிகாட்டி, பேதமற்ற புது உலகை பெருநோக்கத்தோடு மானிடத்தை சமதளமாக்கி, சமதர்மபுரிக்கு அழைத்துச் செல்லுகிறார் - நம் சரித்திரம் படைக்கும் சாகப் புகழ்பெற்ற தலைவர்!

அவரது 145 ஆம் ஆண்டு பிறந்த நாளில், ‘பெரியார் உலகம்' பணிகள் தொடங்கி விட்டன!

ஆம், இன்று பெரியார் உலக மயம்

உலகம் பெரியார் மயம்!

நாங்கள் சூட்ட 

வேறு மாலை ஏது தந்தையே!

சமூகநீதிக்கான சரித்திர நாயகர் நம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நடத்தும் திராவிடர் ஆட்சி, அவரது பிறந்த நாள் விழாவை ‘‘சமூகநீதி நாளாக்கி'',  ஆட்சியை, இனமீட்சியாக நடத்துவதும், அவர் நெஞ்சில் தைத்த முள்ளை அகற்றி - கருவறையில் ஒளிந்திருந்த ஜாதி - தீண்டாமைப் பாம்பை அடித்துவிரட்டினார் - இதைவிட, நாங்கள் சூட்ட வேறு மாலை ஏது தந்தையே!

வாழ்க! வாழ்க!!

வருக, புதிய சமூகநீதி தழைத்தோங்கும் சமுதாயம்!


கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்
சென்னை
17.9.2023

No comments:

Post a Comment