நம்முடைய முதலமைச்சரின் கரத்தை வலுப்படுத்த அனைவரும் ஒன்று சேர்ந்து இந்தியா கூட்டணியின் வெற்றிக்கு உழைப்போம்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, September 2, 2023

நம்முடைய முதலமைச்சரின் கரத்தை வலுப்படுத்த அனைவரும் ஒன்று சேர்ந்து இந்தியா கூட்டணியின் வெற்றிக்கு உழைப்போம்!

2024 நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்நாட்டில் 40 இடங்களிலும் வெல்வோம்!

சனாதனம் வீழட்டும், திராவிடம் வெல்லட்டும்!

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் முழக்கம்!

சென்னை, செப்.2 நம்முடைய முதலமைச்சரின் கரத்தை வலுப்படுத்த அனைவரும் ஒன்று சேர்ந்து இந்தியா கூட்டணியின் வெற்றிக்கு உழைப்போம்! வருகின்ற 2024 நாடாளுமன்றத் தேர்தலில் 40 இடங்களிலும் வெல்வோம்! சனாதனம் வீழட்டும், திராவிடம் வெல்லட்டும் என்றார்  அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்.

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் சார்பில் சென்னை காமராசர் அரங்கில் இன்று (2.9.2023) நடைபெற்ற ''சனாதன ஒழிப்பு மாநாட்டில்'' தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்துரை யாற்றினார்.

அவரது வாழ்த்துரை வருமாறு:

சனாதன ஒழிப்பு மாநாடு என்கிற பெயரில் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிற இந்த மாநாட்டில் வாழ்த்துரை வழங்கும் வாய்ப்பைத் தந்த மாநாட்டு ஏற்பாட்டுக் குழுவுக்கு எனது நன்றியை முதலில் தெரிவித்துக் கொள்கிறேன்.

சனாதனத்தை எதிர்ப்பதைவிட ஒழிப்பதே சரியானது

இந்த மாநாட்டின் தலைப்பே என்னைக் கவர்ந்திருக்கிறது. சனாதன எதிர்ப்பு மாநாடு என்று போடாமல் சனாதன ஒழிப்பு மாநாடு என்று போட்டிருக்கிறார்கள்.  சிலவற்றை மட்டும் தான் எதிர்க்க வேண்டும். சிலவற்றை ஒழித்தே தீர வேண்டும். அந்த வகையில், சனாதனம் என்பதை எதிர்ப்பதை விட ஒழிப்பதே சரியாகும். எனவே, இந்த மாநாட்டுக்கு மிகப் பொருத்தமான தலைப்பு தான் வைக்கப்பட்டுள்ளது. 

சனாதனம்னா என்ன? சனாதனம் அப்படிங்கிற பெயரே சமஸ்கிருதத்துல இருக்கு. சனாதனம், சமத்துவத்துக்கும் - சமூக நீதிக்கும் எதிரானது. சனாதனம்னா வேற ஒன்னுமில்ல. நிலையானதுனு அர்த்தம். அதாவது மாறாததுனு சொல்லலாம்.  எல்லாவற்றையும் மாற்ற வேண் டும். எதையும் கேள்வி கேட்கணும்னு உருவா னது  தான் திராவிட இயக்கமும், கம்யூனிச இயக்கமும். 

சிறப்புகளைப் பெற்ற இந்த ஆண்டு

நம்முடைய முத்தமிழறிஞர் கலைஞர் அவர் களுக்கு இது நூற்றாண்டு. வடலூர் வள்ளலார் ராமலிங்க அடிகளுக்கு இது 200ஆவது ஆண்டு. தந்தை பெரியார் அவர்கள் தலைமையில் நடத்தப்பட்ட வைக்கம் போராட்டத்துக்கும் இது நூற்றாண்டு.  அதேபோல, தமிழ்நாட்டு மக்களின் உரிமைகளை வென்றெடுக்க தோன்றிய திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு இது பவள விழா ஆண்டு. இவ்வளவு சிறப்புகளை பெற்ற ஆண்டாக இந்த ஆண்டு இருக்கிறது. தமிழ்நாடு முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டு நடந்து வருகிறது. இப்படி நாம எல்லாம் சந்தோஷமா இருக்கிற சமயத்துல, திடீர்னு ராஜ்பவனில் இருந்து அடிக்கடி சனா தனம், சனாதனம்னு குரல் கேட்டுக்கிட்டே இருக்கு. 

நாம இந்த நிலையில இருக்கும் போது கூட, ஸ்கூல்ல காலை உணவு போடுறதால, ஸ்கூல் கக்கூஸ் நிரம்பி வழியுதுனு, ஒரு பேப்பர்ல செய்தி போடுறான்.  நம்முடைய முதலமைச்சர் அவர்கள், உடனே ட்விட்டர்ல ஒரு பதிவு போட்டார்கள், நிலாவுக்கு சந்திராயன் விடுகிற இந்தக் காலத்திலேயே சனாதனம் இப்படி செய்தி போடுதுனா, 100 ஆண்டுகளுக்கு முன்ன என்ன ஆட்டம் ஆடியிருக்கும்னு கேட்டார்.

சனாதனத்தை எதிர்த்து கலைஞர் நடத்திய போர்

நம்முடைய முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள், அவருடைய நெஞ்சுக்கு நீதியில எழுதியிருக்கார். அவருடைய அப்பா முத்து வேலர் தாத்தா அவர்கள், கலைஞர் அவர்களின் 5 ஆவது வயதில் பள்ளிக்கூட கல்வியோட சேர்த்து இசைக்கல்விக்கும் ஏற்பாடு செஞ்சாங்க.  ஆனா இசைப் பயிற்சியில நம்முடைய கலைஞ ருக்கு ஆர்வம் போகலை. அதுக்கு என்ன காரணம் சொல்றார்னா.  இசை கத்துக்கணும்னா சட்டைப் போட்டுக்கிட்டு போகக்கூடாது, துண்டை இடுப்புல கட்டிக்கனும், காலுல செருப்பு போட்டுக்கக் கூடாது, இப்படி ஜாதி, மத, சாத்திர சம்பிரதாயங்களின் பெயரால் நடத்தப்படும் கொடுமையை என்னுடைய பிஞ்சு மனம் வன்மையாக எதிர்க்கக் கிளம்பியதுனு கலைஞர் அவர்கள் எழுதியிருக்கார்.  நம்முடைய முத்தமிழறிஞர் கலைஞருடைய பிஞ்சு மனசு சனாதனத்துக்கு எதிரா எரிமலை மாதிரி வெடிச்சுருக்கு.  அதனால தான் 5 வயதில் ஆரம்பித்து 95 வயது வரைக்கும் கலைஞர் அவர்கள் சனாதனத்தை எதிர்த்து பெரும் போரை நடத்தினார்கள். 

கலையும், எழுத்தும் உழைக்கும் மக்களுக்காக

தமிழ்நாட்டுல மாத்தக் கூடாதுனு எதுவுமே இல்லைனு, எல்லாத்தையுமே மாத்தியது நம் கலைஞர் அவர்கள் தான். சினிமாவுல சமஸ்கிருதம் கலந்த தமிழ் வசனங்கள் பேசிக்கிட்டு இருந்தப்ப, கலைஞர் அவர்கள் தான் தன்னுடைய பேனாவ ஈட்டியாக்கி,  “எந்த காலத்திலடா பேசினாள் பராசக்தினு” வசனம் எழுதினார்.  இங்கே கூடி இருப்பவர்களுக்கு நன்றாகத் தெரியும். தொடக்கத்தில் கலைகளும், எழுத்துகளும் சனாதனக் கருத்துகளை திணிக்க தான் பயன்படுத்தப்பட்டன. திராவிட இயக்கமும், கம்யூனிச இயக்கமும் தோன்றிய பிறகு தான் கலையும், எழுத்தும் உழைக்கிற மக்களுக்காக, ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களுக்கானதாக மாறியது. அதுக்கு முன்னாடி இங்கே ராமாயணமும், மகாபாரதமும் தான் மக்களுக்கு கலையாகவும், எழுத்தாகவும் சொன்னார்கள்.  திராவிட இயக்கம் வந்தப் பின்னாடி தான் மக்களுக்கு திருக்குறள், சிலப்பதிகாரம், மணிமேகலை எல்லாம் சொல்லப்பட்டது. கலைஞர் அவர்கள் குறளோவியம் எழுதினார்கள் - பூம்புகார் என்று கதை வசனம் எழுதினார்கள்.

17 லட்சம் மாணவர்கள் பயனடையும் காலை உணவுத் திட்டம்

மனிதர்கள் யாரும் பசியால வாடக் கூடாதுன்னு தான் வள்ளலார் வடலூர்ல அணையா அடுப்பை பத்த வச்சார். வள்ளலார் அன்னைக்கு பத்த வச்ச அந்த அடுப்பு இன்னமும் அணையாம எரிஞ்சுக்கிட்டே இருக்கு.  வள்ளலார் ஏற்றிய அந்த அடுப்புல இருந்து நெருப்பு எடுத்து தான் நம்முடைய முதலமைச்சர் அவர்கள், தமிழ்நாடு முழுவதும் இருக்கிற பள்ளிக்கூடங்கள்ல காலை உணவுத்திட்டம் அப்படிங்கிற பேர்ல அடுப்பு பத்த வச்சிருக்கார்.  இன்னைக்கு 31 ஆயிரம் பள்ளிகள்ல 17 லட்சம் மாணவர்கள் காலை உணவுத் திட்டத்தால பயனடைஞ்சு வர்றாங்க. நான் எந்த ஊருக்கு போனாலும், காலை சிற்றுண்டித் திட்டத்தை போய் ஆய்வு பண்றது என்னோட வழக்கம். இந்த திட்டத்துல நானும் ஒரு பயனாளி அப்படிங்கிறத இங்க பெருமையோட சொல்லிக்கிறேன்.

சமத்துவபுரம் அமைத்து சனாதனத்துக்கு சம்மட்டி அடி

மக்களை ஜாதியாக பிரித்து, தனித்தனியா இருக்கணும்னு சொன்னது தான் சனாதனம். ஆனா கலைஞர் அவர்களோ, எல்லா சமூக மக்களையும் ஒரே இடத்துல குடி வைத்து, அந்த இடத்துக்கு சமத்துவபுரம்னு பேர் வைத்து, சனாதனத்துக்கு சம்மட்டி அடி கொடுத்தார்கள். இதற்கு முன்பு ஆட்சியில் இருந்த சனாதன அடிமைகள், 10 ஆண்டு காலம் சமத்துவபுரங்களை பராமரிக்கவே இல்லை. மீண்டும் கழகம் ஆட்சிக்கு வந்தபிறகு தான், சமத்துவபுர வீடுகளை பராமரிக்க 50 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்றும், புதிதாக வீட்டை அமைத்துக்கொள்ள ஒரு லட்ச ரூபாய் என்றும் நம் முதலமைச்சர் அவர்கள் அறிவித்தார்கள்.

நம்முடைய கலைஞர் அவர்கள் அனைத்து ஜாதியினரையும் அர்ச்சகர் ஆக்கும் சட்டத்தைக் கொண்டு வந்தார்கள்.  நம் முதலமைச்சர் அவர்கள் அர்ச்சகர் பயிற்சி முடிச்சவங்களுக்கு கோயில்களில் அர்ச்சகராக்க பணியாற்ற ஆணை வழங்கினார்கள். இது தான் திராவிட மாடல். 

பெண்களுக்குப் பெருமை செய்யும் 'திராவிட மாடல்' அரசு

நான் விளையாட்டுத் துறை அமைச்சராகவும் - மகளிர் மேம்பாட்டுத் துறைக்கு அமைச்சரா இருக்கேன்.  வீட்டுப் படிக்கட்டை கூட தாண்டக் கூடாதுனு பெண்களை சனாதனம் அடிமைப்படுத்தி வச்சது. ஆனா, இன்னைக்கு நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல் போட்டிகள்ல பெண்கள் கலந்துக்கிறாங்க. இதெல்லாம் நமக்கு எவ்வளவு பெருமையா இருக்கு.  இன்னைக்கு பெண்கள் நிறைய பேர் மகளிர் சுய உதவிக் குழுக்கள் மூலமா கடன்பெற்று தொழில்கள் செஞ்சு பொருளாதாரத்துக்கு கணவனை எதிர்பார்க்காத ஒரு நிலையில இருக்காங்க.  பெண்களுக்கு சனாதனம் என்ன செஞ்சது. கணவனை இழந்தப் பெண்களை நெருப்பில் தள்ளி உடன்கட்டை ஏற வச்சது. கைம்பெண்களுக்கு மொட்டைப் போட்டு வெள்ளை புடவை கட்ட சொன்னுச்சு. குழந்தை திருமணங்கள நடத்துச்சு. இது தானே பெண்களுக்கு சனாதனம் செய்தது.  ஆனா, பெண்களுக்கு திராவிடம் என்ன செய்ததுன்னு நினைச்சுப் பாருங்க. பெண்களுக்கு கட்டணமில்லாப் பேருந்து பயணம், கல்லூரியில படிக்கிற பெண்களுக்கு புதுமைப் பெண் திட்டம் மூலமா மாதம் ஆயிரம் ரூபாய் கொடுப்பது. அண்ணா பிறந்த செப்டம்பர் 15 அன்று கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் மூலம் வீடுகளில் உழைத்துக் கொண்டிருக்கிற பெண்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் கொடுக்கப் போகிறது நமது திராவிட மாடல் அரசு.

மக்களை முன்னேற்றுவதற்கான திட்டங்களை திராவிட மாடல் அரசு நிறைவேற்றுது. ஆனா, ஒன்றிய அரசு நம்ம மக்களை பின்னாடி தள்ள பார்க்குது. மணிப்பூர் மாநிலத்தை எடுத்துக்கங்க. பாஜக ஆளுகிற மாநிலம் அது. சொந்த மக்களை இரண்டு குழுக்களா பிரிச்சு கலவரத்தை மூட்டிவிட்டிருக்காங்க. இது தான் சனாதனம். ஆனா, அங்கே பயிற்சி பெற முடியாத விளையாட்டு வீரர்கள் 16 பேரை தமிழ்நாட்டுக்கு அழைச்சுட்டு வந்து, உணவு -  தங்கும் வசதி எல்லாம் கொடுத்து பயிற்சி கொடுத்துட்டு இருக்கோம். இது தான் திராவிடம்.

பொய் செய்தி பரப்பி வன்முறையைத் தூண்டும் சனாதனம்

பொய் செய்தி பரப்புறது. கலவரத்தை தூண்டுறது தான் சனாதனம். நம்ம ஊர்ல வட மாநில தொழிலாளர்கள் கொல்லப்படுகிறார்கள்னு ஒரு பொய்ய பரப்புனாங்க. ஆனா, அதை நம்முடைய மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் மிகச்சிறப்பாக கையாண்டார்கள்.  நம்முடைய அதிகாரிகள் பீகார் சென்றார்கள். அங்கிருந்த அதிகாரிகள் இங்கு வந்தார்கள். தவறாக எந்த சம்பவமும் நடக்கலன்னு சொல்லி, பாசிஸ்ட்டுகளோட அந்த பொய்ச் செய்தியை சுக்குநூறா நொறுக்கினார்கள்.

விஸ்வகர்மா திட்டம் தி.மு.க. கடுமையாக எதிர்க்கும்

இப்பக் கூட பாருங்க. பல்வேறு தொழில்களில் இருக்கிற கைவினைக் கலைஞர்களை ஊக்குவிக்கிறோம்னு சொல்லி ஒன்றிய அரசு விஸ்வகர்மா திட்டத்தை கொண்டு வராங்க.  ஆனா அதுல ஒரு சதி இருக்கு. கைவினைக்கலைஞர்கள் குடும்பங்களில் இருக்கிற அடுத்த தலைமுறை பிள்ளைகளுக்கும் அந்த திட்டத்துல பயிற்சி கொடுப்பாங்களாம்.  இதைத்தான் குலக்கல்வி திட்டம்னு 1953 ஆம் ஆண்டு ராஜகோபாலச்சாரியார் இங்க கொண்டு வந்தார். தந்தை பெரியார் அந்த திட்டத்தை எதிர்த்து கடுமையான போராட்டங்களை அறிவித்தார். அதனால, ராஜகோபாலச்சாரியார் முதலமைச்சர் பதவியில இருந்து விலகுற நிலை வந்தது.  பின்னர் முதலமைச்சரான காமராஜர் குலக்கல்வித் திட்டத்தை ஒழிச்சார். அந்த காமராஜருடைய பெயர்ல இருக்க அரங்கத்துல தான் இன்னைக்கு இந்த மாநாடு நடக்குது.  இந்த காமராஜர் அரங்கத்தில் இருந்து உறுதியாக சொல்கிறோம். ஒன்றிய அரசு கொண்டு வந்திருக்கிற விஸ்வகர்மா திட்டத்தை தி.மு.கழகம் கடுமையாக எதிர்க்கும்.  எப்படி குலக்கல்வி திட்டத்தை கொண்டு வந்த ராஜாஜி முதலமைச்சர் பதவியில் இருந்து விலகினாரோ, அதே மாதிரி இந்த விஸ்வகர்மா திட்டத்தை கொண்டு வந்திருக்கிற நரேந்திர மோடி வருகிற நாடாளுமன்றத் தேர்தல்ல படுதோல்வி அடையனும். நாம நம்ம குழந்தைங்கள படிக்க வைக்கிறதுக்காக யோசிச்சு திட்டங்கள கொண்டுட்டு வரோம். ஆனா, பாசிஸ்ட்டுகள் நம்ம குழந்தைங்கள படிக்கவிடாம செய்யுறதுக்கு என்ன வழின்னு யோசிச்சு அதுக்கு திட்டங்கள கொண்டு வர்றாங்க. ஏன்னா நாமெல்லாம் படிச்சிடக் கூடாதுங்கிறது தான் சனாதனக் கொள்கை.

சனாதனத்துக்கு எதிரான கருத்துகளை பொது மக்களிடம் பரப்ப வேண்டும்

இப்படி சனாதனத்துக்கும் திராவிடத்துக்குமான போர் உச்சத்திலே நடந்துக்கிட்டு இருக்கிற இந்த சூழல்ல தான் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள், கலைஞர்கள் சங்கம் சனாதன ஒழிப்பு மாநாட்டை ஏற்பாடு செஞ்சு சிறப்பாக நடத்துகிறீர்கள். இது மிக மிக அவசியமான மாநாடு. நீங்க இந்த மாநாட்டை ஆண்டுக்கு ஒரு முறை நடத்திக் கொண்டிருக்கிறீர்கள். இந்த மாநாட்டை பார்க்கிற போது சனாதனவாதிகளுக்கு நிச்சயம் எரியும். அவர்களுக்கு எரியட்டும். இந்த மாநாடுகளை நீங்கள் தொடர்ச்சியாக நடத்த வேண்டும். இன்றைக்கு இந்த மாநாடு நாள் முழுவதும் நடைபெறுகிறது. சனாதனத்துக்கு எதிரான தலைப்புகளில் பலர் பேச இருக்கிறாங்க. இதில் கலந்துகொண்டிருக்கிற எல்லாருக்கும் எனது பாராட்டுகளை தெரிவிச்சுக்கிறேன். இங்கே பேசிவிட்டு நாம் அப்படியே கலைந்து விடக்கூடாது. இங்கு பேசப்பட்ட அம்சங்களை எல்லாம் நாம் பொதுமக்கள்ட்ட கொண்டு போய் சேர்க்கணும்.

தொழிலாளர் வர்க்கத்தை உள்ளன்போடு நேசித்தவர் கலைஞர்

நான் மட்டும் பெரியாரையும் -  அண்ணாவையும் சந்திக்காம இருந்திருந்தா, ஒரு கம்யூனிஸ்ட்டாக இருந்திருப்பேன் என்று கலைஞர் அவர்களே சொல்லியுள்ளார்கள். கலைஞர் அதை பேச்சுக்காக சொல்லவில்லை. தொழிலாளர் வர்க்கத்தை உள்ளன்போடு நேசித்தவர் கலைஞர் அவர்கள். அதனால தான் என்னுடைய தந்தை - மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கே கம்யூனிஸ்ட் இயக்கத் தலைவரான ஸ்டாலின் அவர்களின் பெயரை சூட்டினார்கள். மே 1  உழைப்பாளர் தினத்தன்று ஊதியத்துடன் கூடிய விடுமுறையை தந்தவர் நம் கலைஞர் அவர்கள். அப்படிப்பட்ட இடதுசாரித் தோழர்கள் ஏற்பாடு செய்திருக்கும் இந்த மாநாட்டில் பங்கேற்றதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்.

இந்தியா கூட்டணியின் வெற்றியே இன்றைய தேவை

இப்போது நாம் மிக முக்கியமான காலகட்டத்தில் இருக்கிறோம். நமது முதலமைச்சர் அவர்கள் மும்பையிலே நடந்த இந்தியா கூட்டணித் தலைவர்கள் கூட்டத்திலே கலந்துக்கிட்டு இப்ப தான் திரும்பி இருக்கிறார்கள். சில மாதங்களில் நாடாளுமன்றத் தேர்தல் நடக்க இருக்கு. எனவே, நம்முடைய முதலமைச்சர் அவர்களுடைய கரத்தை வலுப்படுத்தக் கூடிய வகையிலே அனைவரும் ஒன்று சேர்ந்து இந்தியா கூட்டணியின் வெற்றிக்கு உழைப்போம். தமிழ்நாடு, புதுச்சேரியில் உள்ள 40 இடங்களிலும் வெல்வோம் என்று உறுதி எடுப்போம். இந்த சனாதன ஒழிப்பு மாநாடு வெல்ல என் வாழ்த்துகள்.  சனாதனம் வீழட்டும், திராவிடம் வெல்லட்டும் என்று கூறி எனது உரையினை நிறைவு செய்கிறேன்.  நன்றி, வணக்கம்.

இவ்வாறு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உரையாற்றினார்.

No comments:

Post a Comment