விநாயகர் பொம்மைகள் தண்ணீரில் கரைப்பு சுற்றுச்சூழல் பாதிப்பு சுற்றுச்சூழல் துறை செயலாளர் தலைமையில் குழு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, September 13, 2023

விநாயகர் பொம்மைகள் தண்ணீரில் கரைப்பு சுற்றுச்சூழல் பாதிப்பு சுற்றுச்சூழல் துறை செயலாளர் தலைமையில் குழு

சென்னை, செப் 13 விநாயகர் சதுர்த்தி விழாவின் போது விநாயகர் சிலைகளை நீர்நிலைகளில் கரைப்பதற்கு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் வகுத்த வழிமுறைகளை பின்பற்றி சிலைகளை கரைப்பதற்கு செயற்கையான நீர் நிலைகளை உருவாக்க வேண்டும் எனக் கோரி சென்னையைச் சேர்ந்த ஹரிஹரன் என்பவர் தென் மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். 

இந்த வழக்கு நீதித்துறை உறுப்பினர் புஷ்பா சத்தியநாராயணன், நிபுணத் துவ உறுப்பினர் சத்யகோபால் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழ்நாடு அரசு தரப்பில் செயற்கை நீர்நிலைகளில் சிலைகளை கரைப்பதால் ஏற்படக் கூடிய கழிவுகளை உள்ளாட்சி நிர்வாகங்கள் சுத்தம் செய்ய வேண்டி இருப்பதாகவும், சிலைகளை கரைப்பது தொடர்பான முறையான வழிகாட்டு தல்கள் அனைத்து மாவட்ட ஆட்சி யர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளதாக வும் தெரிவிக்கப்பட்டது. இதனை பதிவு செய்து கொண்ட தீர்ப்பாயம், ஒன்றிய மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் வழிகாட்டுதல்களின்படி தான் சிலைகள் கரைக்கப்படுகிறதா என்பதை கண்காணிப்பதற்காக தமிழ் நாடு வனம், சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை துறை செயலாளர் தலை மையில், பொதுத்துறை செயலாளர், வருவாய் நிர்வாக ஆணையர் மற்றும் மாசுக்கட்டுப்பாட்டு வாரிய தலைவர் ஆகியோர் அடங்கிய குழுவை அமைத்து உத்தரவிட்டது. மேலும் சூழலியல் முக்கியத்துவம் வாய்ந்த சதுப்பு நிலங்கள், ஆறுகள், முகத் துவாரங்கள், ஏரிகள் போன்றவற்றில் சிலைகள் கரைக்கப்படுவதை தவிர்க்க வேண்டும் என்றும் அறிவுறுத்தி, இந்த வழக்கின் விசாரணையை வரும் 20-ஆம் தேதிக்கு தள்ளிவைத்து தீர்ப்பாயம் உத்தர விட்டுள்ளது.


2000 ஆண்டுகளுக்கு முந்தைய முதுமக்கள் தாழி கண்டெடுப்பு

சிவகாசி, செப்.13 விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை ஒன்றியம் சிவசங்கு பட்டியில்  முதுமக்கள் தாழிகள் கண் டெடுக்கப்பட்டது. சிவசங்கு பட்டியில் தட்டாச்சியம்மன் கோயில் சார்பில் இடத்தை மண் அள்ளும் இயந்திரம் மூலம் சீரமைக்கும் பணி நடந்த போது மேற்பரப்பில் 6 முதுமக்கள் தாழிகள் கண்டெடுக்கப்பட்டன. அவற்றின் அருமை தெரியாததால் நான்கு தாழிகள் உடைக்கப்பட்டு விட்டது. தகவல் தெரிந்த அருகிலுள்ள ஏழாயிரம் பண்ணை அரசு பள்ளி ஆசிரியர்கள் மீதமிருந்த இரண்டு முதுமக்கள் தாழிகளை உடையாமல் பாதுகாப்பாக பள்ளிக்கு எடுத்துச் சென்றனர். தொல்லியல் துறை இயக்குநர் பாஸ்கர் பொன்னுச்சாமி வருவாய்த் துறையினர் மூலம் முதுமக்கள் தாழிகளை மீட்டார்.

அவர் கூறுகையில், ''முதுமக்கள் தாழிகள் கிடைத்த இடம், தற்போது அகழாய்வுப் பணிகள் நடந்து வரும் இடத்திலிருந்து நான்கு கி.மீ., தூரத்தில் உள்ளது. இதிலிருந்து இப்பகுதி முழு வதுமே முன்னோர்கள் வாழ்ந்ததற்கான சான்றுகள் அதிகமாக கிடைத்து வரு கின்றது. தற்போது இரண்டாம் கட்ட அகழாய்வில் கிடைத்துவரும் எலும்பு களையும், முதுமக்கள் தாழிகளையும் ஆய்வு செய்து இரண்டும் ஒரே காலத் தைச் சார்ந்ததா அல்லது வெவ்வேறு காலங்களை சார்ந்ததா என கண்டறியப் பட உள்ளது,'' என்றார்.


No comments:

Post a Comment