மது அருந்தும் போது சாப்பிட ஒன்றும் இல்லாததால் பிள்ளையார் கையில் இருந்து லட்டை எடுத்துத் தின்று விட்டார்கள் இளைஞர்கள். எப்போதும் போல் இம்முறையும் பிள்ளையார் லட்டு லட்சம் ரூபாய்க்கு ஏலம் போகும் என்று காத்திருந்தவர்கள் ஏமாந்து போனார்கள்.
பிள்ளையார் சதுர்த்தி என்ற பெயரில் பல இடங்களில் பெரிய பெரிய சிலைகளை ஒரு வாரம் சாலை ஓரம் வைத்து பொது மக்களுக்குப் பெரும் இன்னலை விளைவித்துக் கொண்டு இருக்கிறார்கள். அரசும் காவல்துறையும் மக்களுக்கு இன்னல் ஏற்படுத்தாத வகையில் வைக்க வேண்டும் என்று கூறி நிபந்தனை விதித்ததால் தமிழ்நாட்டில் குறிப்பாக சென்னையில் பல இடங்களில் இந்த ஆண்டு பிள்ளையார் சிலைகளை வைக்கவில்லை. ஆனால் வட இந்தியாவில் மத நம்பிக்கை என்ற பெயரில் - ஹிந்து அமைப்புகளின் அடாவடிகளை - வேடிக்கைப் பார்ப்பதோடு நிறுத்தி விடுகின்றனர்.
தெலங்கானா மாநிலம் அய்தராபாத்-மியாபூரில் பிள்ளையார் சிலை ஒன்றை வைத்து, அதன் கையில் மிகப் பெரிய லட்டு ஒன்றை வைப்பார்கள். அந்த லட்டு 7 நாட்களுக்குப் பிறகு ஏலம் விடப்படும். முதலில் சில ஆயிரங்களுக்கு ஏலம்போன இந்த லட்டு தற்போது லட்சம் ரூபாய்களுக்கு ஏலம் எடுக்கப்படுகிறது. இந்த ஆண்டும் மிகப்பெரிய சிலையை வைத்து அதன் கையில் பெரிய லட்டையும் வைத்தனர். இந்த ஆண்டும் லட்ச ரூபாய்க்கு மேல் ஏலம் போகும் என்று இந்தப் பிள்ளையார் சிலைக்கு பந்தல் அமைத்தவர்கள் முறை வைத்துப் பாதுகாப்பிற்கு நின்றார்கள். இந்த லட்டை 7 நாட்களுக்குப் பிறகு பிள்ளையாரை கரைக்கத் தூக்கிச் செல்லும் முன்பு ஏலம் விட முடிவு செய்திருந்தனர். மிகப் பெரிய லட்டைப் பார்க்க அதிக கூட்டம் வருவதால் நள்ளிரவு வரை காத்திருந்து பிறகு திரைச்சீலைகொண்டு மறைத்துவிடுவார்கள்.
கடந்த வெள்ளிக்கிழமை காலையில் பிள்ளையார் சிலையின் முன்பு இருந்த திரைச்சீலையை அகற்றியபோது அதிர்ச்சி காத்திருந்தது, காரணம் பிள்ளையார் கையில் இருந்த மிகப் பெரிய லட்டைக் காணவில்லை. முதலில் உடைந்து கீழே சிதறி இருக்கும் என்று பார்த்தால் கீழேயும் லட்டு இல்லை. இதனால் கண்காணிப்புக் காமிராவில் சோதனை செய்தனர். அப்போது அவர்களின் கூடவே இருந்த ஒரு நபர் லட்டை திருடிச்சென்றது தெரியவந்தது.
உடனே அவரைப் பிடித்து விசாரித்த போது, பிள்ளையார் சிலை உள்ள இடத்திற்கு அருகில் இளைஞர்கள் மது அருந்தினார்கள். இந்த நிலையில் அன்று இரவு தூங்கச்செல்லும் முன்பு மதுவாங்கச் சென்றவர்கள் அதனுடன் சாப்பிட எதுவும் வாங்க வில்லை. அவர்களுக்குப் பிள்ளையார் கையில் இருந்த லட்டு தெரிந்துள்ளது.
மறுநாள் காலையில் வேறு லட்டை செய்து வைத்துவிடலாம் என்ற நினைப்பில் பெரிய லட்டை மதுப்பிரியர்கள் அனைவரும் பங்கு போட்டு தின்று மது குடித்துவிட்டுத் தூங்கி விட்டனர்.
காலையில் அனைவரும் எழுந்து வேறு லட்டை கொண்டுவந்து வைக்கும் முன்பே - லட்டு திருட்டுப் போன நிகழ்வு வெளியாகிவிட்டது - என்று பிள்ளையார் சிலை வைத்த இடத்தில் இருந்த சில இளைஞர்கள் கூறியுள்ளனர். இது தொடர்பாக யாரும் புகார் அளிக்க முன்வரவில்லை. ஆகையால் அந்த இளைஞர்களை கண்டித்துவிட்டு வேறு ஒரு லட்டை பூஜை செய்து வைக்க முடிவு எடுத்தார்களாம்.
வினையைத் தீர்ப்பவர் விநாயகர் என்றும் விக்னங்களைத் தீர்ப்பவர் விக்னேஸ்வரர் என்றும் பொய்களையும், புரட்டுகளையும் அள்ளிவிடும் ஹிந்துத்துவவாதிகள் தெலங்கானா மாநிலத்தில் அய்தராபாத் மியாபூரில் நடைபெற்ற இந்த நிகழ்வு களுக்கு என்ன பதில் சொல்லுவார்களாம்?
No comments:
Post a Comment