பிரிட்டனும் திராவிட மாடலும் பள்ளிக் குழந்தைகளுக்கான இலவச காலைச் சிற்றுண்டி திட்டம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, September 1, 2023

பிரிட்டனும் திராவிட மாடலும் பள்ளிக் குழந்தைகளுக்கான இலவச காலைச் சிற்றுண்டி திட்டம்

உலகம் முழுவதும் உள்ள வளர்ந்த நாடுகளோடு ஒப்பிடுகையில் ஒட்டுமொத்த செழிப்பு குறியீட்டு தரவரிசையில்(overall Prosperity Index rankings) பிரிட்டன் (Great Briton) 12வது இடத்தில் உள்ளது.  

ஆனால் உணவு வறுமையில் (food hunger)  பிரிட்டனில் உள்ள குழந்தைகளின் எண்ணிக்கை கடந்த ஆண்டில் கிட்டத்தட்ட 4 மில்லியனாக இரு மடங்காக அதிகரித்துள்ளது  என்று சமீபத்திய தரவுகள்   காட்டுகின்றன. தற்போது உணவு வறுமையில் போராடும் குழந்தைகளுக்கு இலவச பள்ளி உணவு வழங்குவதை விரிவுபடுத்த அமைச்சர்கள் மீது அழுத்தம் அதிகரிக்கிறது.

பிரிட்டனில் உள்ள‌ புட் பவுண்டேஷன் திங்க் டேங்கின்  (Food Foundation Thinktank)கூற்றுப்படி, பிரிட்டனில் அய்ந்தில் ஒரு குடும்பம் (22%) ஒரு நாள் முழுவதும் உணவைத் தவிர்ப்பதாகவும், பசியுடன் இருப்பதாகவும் அல்லது சாப்பிடாமல் இருப்பதாகவும்,  ஆய்வில் கண்டுபிடித்துள்ளனர். மேலும் இங்கிலாந்தில் இந்த அறக்கட்டளை எடுத்த கருத்து கணிப்பில் “இலவச பள்ளி உணவை விரிவுப்படுத்தும்படி பத்தில் எட்டு பேர் கேட்டுக் கொண்டுள்ளனர்”. பிரிட்டன் போன்ற வளர்ந்த நாடுகளில் தற்போதுதான் சமூகநீதி அடிப்படையிலான இலவச‌ திட்டங்கள் குறித்து யோசிக்கத் துவங்கி உள்ளனர். 

ஆனால், தமிழ்நாடு இது போன்ற நலத்திட்டங்களை 50 ஆண்டுகளுக்கு மேலாக தொடர்ந்து தொய்வின்றி நடத்தி வருகிறது. முக்கியமாக நீதிக்கட்சி ஆட்சி முதல், காமராசர், எம்ஜிஆர், கலைஞர், ஜெயலலிதா என ஒவ் வொருவரின் ஆட்சிக் காலத்திலும் தமிழ்நாட்டு பள்ளிகளில்  இலவச மதிய உணவுத்திட்டம் புதிய பொலிவு கண்டது. இதன் விளைவு, சிறுவர்களுக்கான உணவு வறுமை பெரிய அளவில் நீக்கப்பட்டது. 

தற்போது மு.க. ஸ்டாலின் அவர்களின் ஆட்சியில் காலைச் சிற்றுண்டி திட்டம் அறிமுகப்படுத் தப்பட்டுள்ளது. 

இந்தியாவிலேயே முதன் முதலில் பள்ளிக் குழந்தைகளுக்காக அறிமுகப்படுத்தப்பட்ட திட்டம் இது. கடந்த 2022 ஆம் ஆண்டு தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் முதல்கட்டமாக‌ பரிசோதனை செய்யப் பட்டது.  பிறகு முதலமைச்சரின் இத் திட்டத்தை அனைத்து அரசு தொடக்கப்பள்ளிகளுக்கும் விரிவு படுத்தி, தற்போது 1.7 மில்லியன் மாணவர்கள் பயன் பெறுகின்றனர். ஊட்டச் சத்து குறைபாட்டைக் குறைத்து, வருகைப் பதிவை அதிகரிப்பதை நோக்கமாகக் கொண்ட இத்திட்டம், மாணவர்களுக்கு சத்தான காலை உணவை வழங்குகிறது. இதன் வாயிலாக கற்றல் திறன் அதிகரிக்கும்.

இந்தத்  திட்டத்திற்கு 404 கோடி ரூபாய் ($54 மில்லியன்)   செலவிடப்பட்டு 31,000 அரசுப்  பள்ளி மாணவர்கள் பயன்பெறுகிறார்கள். உலகிலேயே இலவச காலைச் சிற்றுண்டி திட்டம் மூலம் அதிக அளவில் மாணவர்கள் பயன்பெறும் திட்டம் இதுதான்.

இத்திட்டம் மூலம் பணிக்கு செல்பவர்களின் குழந்தைகள், மற்றும் வறுமை விளிம்பில் உள்ள குழந்தைகளுக்கு மிக ஆரோக்கியமான உணவு காலையில் கிடைக்கிறது. இவை அய்க்கிய நாடுகளின் 17 நிலையான குறிக்கோள்களில் ஒன்றான “வறுமையை நீக்குதலில்” (No Hunger)  முக்கிய பங்காற்றுகிறது.

தமிழ்நாட்டில் “திராவிட மாடல்” வாயிலான சமூக நீதி முன்னெடுப்புகளில் புதிய வரவாக அறிமுகப் படுத்தப்பட்டு இருக்கும் “பள்ளி குழந்தைகளுக்கான காலைச் சிற்றுண்டி” திட்டத்தில் பங்கேற்கும் குழந்தை களின் பெற்றோர் வருமானத்தை ஒரு தகுதி நிர்ணயமாக வைத்திருக்கவில்லை. இது மிக முக்கியமாக குறிப்பிட வேண்டிய ஒன்று.

பெற்றோரின் வருமானத்தை அடிப்படையாகக்‌ கொள்ளாமால் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் எல்லாக் குழந்தைகளும் காலைச் சிற்றுண்டி  திட்டத்தில் பங்கேற்கலாம். இதற்காக தமிழ் நாடு அரசிற்கு பொருளாதார சுமை ஏற்பட்டாலும் “வறுமை ஒழிப்பில்” மிகத்தீவிரமாக தமிழ்நாடு அரசு கவனம் செலுத்தி வருவதை பாராட்டியே ஆக வேண்டும்.

உதாரணத்திற்கு, பிரிட்டனின் பள்ளிக் குழந்தை களுக்கான காலைச் சிற்றுண்டி திட்டத்தில் பங்கேற்க குழந்தைகளின் பெற்றோர் 7,400 ஸ்டெர்லிங் பவுண்ட் டிற்குக் கீழ் ஆண்டு வருமானம் இருக்க வேண்டும்.  இந்த விதிமுறையினால், வறுமையில் உள்ள சுமார் 800,000 குழந்தைகள் இலவச பள்ளி உணவுக்கு தகுதி பெறவில்லை. 2018 ஆம் ஆண்டு முதல் விலைகள் உயர்ந்தாலும், தகுதியுடைய குடும்பங்களாக இருப்பதற்கு அந்த வரம்பு முடக்கப்பட்டுள்ளது. 

பிரிட்டனில்  வேல்ஸ் (Wales)  பகுதியில் உள்ள குழந்தைகளுக்கு பெற்றோரின் வருமானத்திற்கு ஏற்ப வறுமைக் கோட்டில் உள்ள குழந்தைகளுக்கு இலவச காலைச் சிற்றுண்டி திட்டம் செயல்பட்டு வருகிறது. மற்றபடி மழலையர் மற்றும் ஒன்றாம் வகுப்பு பயிலும் குழந்தைகள் அனைவருக்கும் கட்டணமில்லாமல் பால் தருகிறார்கள். தமிழ்நாட்டைப் போலவே, 2024 ஆண்டு முதல் வேல்ஸ் பள்ளிகளில் இலவச மதிய உணவுத்திட்டத்தை அறிமுகப்படுத்த கன்சர்வேட்டிவ் கட்சி திட்டமிட்டுள்ளது. 

குறிப்பாக, பள்ளிகளில் இலவச உணவுத்திட்டத்தை அறிமுகப்படுத்துவது அடுத்து வரும் பிரிட்டன் நாடாளுமன்ற தேர்தலில் மிகப்பெரிய பங்கு வகிக்கும் என கார்டியன் நாளிதழ் கருத்து தெரிவித்துள்ளது  (1 March 2023). மேலும் சமீபத்தில் பிரிட்டனில் ஏற்பட்டிருக்கும் ஆற்றல் (வீட்டு மின்சாரம் மற்றும் கேஸ்) கட்டண உயர்விற்கு  பிறகு வீட்டிற்கு வாங்கும் மளிகை பொருட்களின் பண வீக்கம் 17.1% உயர்ந் துள்ளது. இந்த கட்டண உயர்வு குழந்தைகளுக்கான உணவு வறுமையினை அதிகரித்துள்ளது. 

ஆகவே தமிழ்நாட்டில் 50 ஆண்டுகளுக்கு மேலாக தொடர்ந்து வெற்றிகரமாக நடத்தப்பட்டு வரும் இலவச மதிய உணவுத்திட்டம் போன்று பிரிட்டனிலும் அறி முகப்படுத்தப்பட்டால் பெற்றோருக்கு ஒரு குழந்தைக்கு ஆண்டுக்கு  440 ஸ்டெர்லிங் பவுண்டை  சேமிக்கும் (இந்திய மதிப்பில் ஏறத்தாழ 45 ஆயிரம் ரூபாய்).

பிரிட்டனில் 2010 முதல் பள்ளியில் இலவச உணவைப் பெறும் குழந்தைகளின் எண்ணிக்கை 2 மில்லியனுக்கும் அதிகமாக அதிகரித்துள்ளது, இலவச பள்ளி உணவின் மூலம் பயனடையும் மாணவர்களின் எண்ணிக்கை ஆறில் ஒருவரில் இருந்து அதிகரித்து வருகிறது.  

பிரிட்டன் மாடலை ஒப்பிடும் போது திராவிட மாடலின் புதிய வரவான தமிழ்நாடு முதலமைச்சரின் இலவச காலைச் சிற்றுண்டி திட்டம் அதிக அளவிலான மாணவர்களை எந்த நிபந்தனையும் இன்றி பங்கேற்க அனுமதிக்கிறது. இந்த “சனநாயகத்தன்மைதான்” திராவிட மாடலின் முதுகெலும்பு எனச் சொல்லலாம்.

உலகளாவிய குழந்தைகளுக்கான வறுமை ஒழிப்பில் இந்த திட்டம் மிகப் பெரிய நன் விளைவுகளை ஏற்படுத்தும்  என்பது திண்ணம்.

- முனைவர் சுதாகர் பிச்சைமுத்து
இணைப் பேராசிரியர்
ஹெரியட் வாட் பல்கலைக் கழகம்
ஸ்காட்லாந்து, பிரிட்டன்

No comments:

Post a Comment