மற்றவர்கள் யாரும் படிக்கக் கூடாது; அய்யர், பார்ப்பனர்கள் மட்டும்தான் படிக்க வேண்டும்; மற்றவர்கள் அவரவர்கள் குலத் தொழிலை செய்ய வேண்டும் என்று எழுதி இருந்தார்களே, இதை யார் மாற்றியது?
காரைக்கால், செப் 25- மற்றவர்கள் யாரும் படிக்கக் கூடாது; அய்யர், பார்ப்பனர்கள் மட்டும்தான் படிக்க வேண்டும்; மற்றவர்கள் அவரவர்கள் குலத் தொழிலை செய்ய வேண்டும் என்று எழுதி இருந்தார்களே, இதை யார் மாற்றியது? எம்.எல்.ஏ., மாற்றினாரா? எம்.பி., மாற்றினாரா? அமைச்சர்கள் மாற்றினார்களா? யார் மாற்றியது? தந்தை பெரியார்தான் மாற்றினார் - திராவிடர் கழகம் தான் காரணம்.
காரைக்கால் மாவட்ட திராவிடர் கழகத்தின் சார்பில், வைக்கம் நூற்றாண்டு விழா, முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழா, மற்றும் தந்தை பெரியார் 145 ஆவது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் காரைக்கால் புதுத் துறை தேராக் குளத்தெருவில், 22.9.2023 வெள்ளிக்கிழமை மாலை 6.30 மணி அளவில் காரைக்கால் மாவட்ட திராவிடர் கழகத்தின் இளைஞரணி செயலாளர்
ஆ. லூயிஸ் பியர் அவர்கள் தலைமையில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.
பொதுக்குழு உறுப்பினர் க.பதி ஜெய்சங்கர், காரைக் கால் மாவட்ட கழக இளைஞரணி தலைவர் மு.பி.பெரியார் கணபதி, காரைக்கால் மாவட்ட கழக துணை செயலாளர் செ. செந்தமிழன், காரை மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் மு.க.ஸ்டாலின், காரைக் கால் மாவட்ட மாணவர் கழக துணை செயலாளர் மனோ ஆகியோர் முன்னிலை வகித்திருந்தனர்.
காரைக்கால் மாவட்ட மாணவர் கழக தலைவர்
மோ. மோகன்ராஜ் கூட்டத்திற்கு வருகை தந்த அனை வரையும் வரவேற்றார்.
தலைமையுரை நிகழ்த்திய காரைக்கால் மாவட்ட கழக இளைஞரணி செயலாளர் ஆ.லூயிஸ்பியர், தந்தை பெரியார் அவர்களின் புத்தகங்களைப் படித்து கழகத் தோழர்கள் பெரியாரைப் பற்றி சொன்னதைகேட்டு தெரிந்து கொண்ட பிறகும், தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப் பட்ட, சிறுபான்மை இன மக்களுக்காக உழைத்து தொண்டு செய்த இப்படி ஓர் இயக்கத்தை கண்டதே இல்லை என்ற முடிவுக்கு வந்து, என்னை நான் திராவிடர் கழகத்தில் இணைத்துக் கொண்டு பெரியார் கொள்கை களை ஏற்று வாழ்வதோடு இந்த மக்களுக்காக, இங்குள்ள கிராம மக்களுக்காக தொண்டு செய்து வருகிறேன் என்பதில் மிகவும் பெருமை கொள்கிறேன்.
தன் வாழ்நாள் முழுவதும் போராடினார்
தந்தை பெரியார்
இந்தக் கிராமத்தில்உள்ள இளைஞர்கள் பெரியார் கருத்துகளையும், திராவிடர் கழக கொள்கைகளையும் படித்துத் தெரிந்து கொண்டு கழகத்தில் இணைந்து நீங் களும் பணியாற்ற வேண்டும் பிள்ளைகளை நன்றாக படிக்க வையுங்கள்; படிப்பு ஒன்று தான் நம்மை அடிமைத்தனத்திலிருந்து மீட்டெடுக்கும், அரசு உத்தி யோகங்களுக்குச் சென்று சமூகத்தில் சிறந்த மனிதர் களாகவும், உயர்ந்த நிலையையும் அடைவதற்கு கல்வி ஒன்று தான் சிறந்த வழி. எனவே, எல்லோரும் படிக்க வேண்டும்; அதற்காகத்தான் தந்தை பெரியார் அவர்கள் தன் வாழ்நாள் முழுவதும் போராடினார் என்று பேசினார்.
தொடக்க உரை நிகழ்த்திய மாநில இளைஞரணி துணைச் செயலாளர் நாகை, நாத்திகப் பொன்முடி. தந்தை பெரியார் அவர்கள் இந்த சமூகத்திற்காக தனது 95 வயது வரை போராடினார். பெண்கள் படித்து ஆண்களுக்கு சமமாக வரவேண்டும் என்பதற்காக பெண்களைப் படிக்க வைப்பதற்காக ஒரு குடும்பத்தில் உள்ள ஆண் பிள்ளைகளை விட, பெண் பிள்ளைகளை படிக்க வைத்தால், அது அந்தக் குடும்பமே படித்ததற்குச் சமமானது என்று பெண்களைப் படிக்க வைக்க பெற்றோர்களை அறிவுறுத்தினார்.
‘திராவிட மாடலின் சாதனை'
பெண்களுக்கு சொத்தில் சம பங்கு கிடைக்கத் தீர்மானம் கொண்டு வந்தார். ஆரம்பப் பள்ளிகளில் ஆசிரியர்களாக பெண்களை மட்டுமே நியமிக்கச் சொன் னார். மாண்புமிகு மானமிகு முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்கள் தலைமையில் நடைபெற்று வருகின்ற இன்றைய ‘திராவிட மாடல்' தமிழ்நாடு அரசு பெண்கள் முன்னேற்றத்திற்கான அனைத்து உதவி களையும், அவர்கள் படிப்பதற்கான எல்லாம் முயற்சி களையும் மேற்கொண்டு வருகிறது. பெண்களுக்கு உரிய மரியாதை வழங்க வேண்டும் என்பதற்காக அவர்களுக்கு கலைஞர் நூற்றாண்டு விழா கொண்டாடும் இந்த நேரத்தில், கலைஞரின் பெயரில் மகளிர் உரிமைத் தொகையாக பெண்களுக்கு ஆயிரம் ரூபாய் வழங்கி வருகிறது. இதுதான் ‘திராவிட மாடலின் சாதனை' என பேசினார்.
பெரியாரை ஏற்றுக்கொண்ட யாரும்
வீண் போனதில்லை!
காரைக்கால் மாவட்ட கழகத் தலைவர் குரு.கிருஷ்ணமூர்த்தி உரையாற்றும்போது, கிராமங்களை நகரத்திற்கு இணையாக உயர்த்த வேண்டும் என்ற தந்தை பெரியார் அவர்களின் ஆசை தற்போது நிறை வேறி வருகிறது. இந்தக் கிராமத்தில் இருந்து வந்திருக்கும் இளைஞரணி செயலாளர் லூயிஸ் பியர்,பெரியாரின் கொள்கைகளை ஏற்றுக்கொண்டு இன்றைக்கு ஒரு நல்ல நிலையில் வாழ்ந்து வருகிறார். இந்தப் பொதுக்கூட்டத்தை இந்தக் கிராமப் பகுதியில் ஏற்பாடு செய்து நடத்துகின்ற அளவிற்கு மிகச் சிறப்பான ஒரு கொள்கை வீரராக இருக்கின்றார். பெரியாரை ஏற்றுக்கொண்ட யாரும் வீண் போனதில்லை; பெரியார் கொள்கை கருத்துகள் என்பது ஒரு வாழ்வியல் சித்தாந்தம்; அதனைக் கடைப்பிடித்து வாழ்ந்தால் வாழ்க்கையில் முன்னேறலாம். இங்கு கூடியிருக்கின்ற இளைஞர்கள் லூயிசை போல், பெரியாரைப் பின்பற்றி வாழுங்கள்; அவரைத் தெரிந்து கொள்ள பெரியாரின் சிந்தனைகளைப் படியுங்கள், வாழ்க்கையில் முன்னேறுங்கள் .
பெரியார், ‘கடவுள் இல்லை' என்று
ஏன் சொன்னார்?
பெரியார், ‘கடவுள் இல்லை' என்று சொன்னார் என்று தான் உங்களுக்கெல்லாம் சொல்லப்பட்டு இருக்கிறது. இந்த சமூகத்திற்காக பெரியார் செய்த சாதனைகளை, தொண்டுகளை எல்லாம் மறைத்து விட்டு, பெரியார், ‘கடவுள் இல்லை' என்று சொன்னார் என்பதை மட்டுமே ஒரு பரப்புரையாகச் செய்து வருகிறார்கள். நீங்களும் அதையே நம்பிக்கொண்டு பெரியார், ‘கடவுள் இல்லை' என்று சொன்னவர் தானே என சொல்கிறீர்கள் . உங்கள் மீது தவறு இல்லை அப்படி உங்களுக்கு பெரியாரைப் பற்றி தவறாக சொல்லப்பட்டு இருக்கிறது. கடவுள் இருக்கு என்று எல்லோரும் சொல்லும்போது, பெரியார் மட்டும் ஏன் கடவுள் இல்லை என்று சொன்னார்? கடவுளுக்கும் - அவருக்கும் என்ன வாய்க்கால் வரப்பு தகராறா?அதற்கான காரணம் என்ன என்பதை நீங்கள் கண்டறிய வேண்டும். பெரியாரை முழுமையாகப் படித்துத் தெரிந்து கொண்டால்தான், பெரியார், ‘கடவுள் இல்லை' என்று ஏன் சொன்னார்? என்ற உண்மை உங் களுக்கு விளங்கும். லூயிஸ் பியர் ஏற்பாடு செய்துள்ள படிப்பகத்தில் உள்ள புத்தகங்களைப் படியுங்கள்; அதில் உங்களுக்குத் தெளிவு பிறக்கும் உங்கள் சந்தேகங்களுக்கு விடையும் கிடைக்கும்.
‘‘பெரியாரை வாசியுங்கள், பெரியாரை சுவாசியுங்கள்'' உங்கள் வாழ்க்கை வளம் பெறும் என்று மிக விளக்கமாக பேசினார்.
தமிழர் தலைவர் அவர்கள் 90 வயதிலும்
ஒரு இளைஞரை போல் ஓய்வில்லாமல்...
பொதுக்குழு உறுப்பினர் க.பதிஜெய்சங்கர் உரை யாற்றுபோது, இளைஞரணி செயலாளர் லூயிஸ்பியரைப் போல் இளைஞர்கள் கழகத்தில் இணைந்து பணியாற்ற வேண்டும். தமிழர் தலைவர் அவர்கள் 90 வயதிலும் ஒரு இளைஞரை போல் ஓய்வில்லாமல், இந்த சமுதாய முன்னேற்றத்திற்காக உழைத்துக் கொண்டே இருக்கிறார். அய்யாவிற்கு பிறகும், அம்மாவிற்கு பிறகும் இந்தக் கழகத்தை கட்டிக் காத்து மக்களுக்காக உழைத்து வரும் ‘‘தகைசால் தமிழர்'' நமது கழகத் தலைவர் ஆசிரியரை பின்பற்றி கழகப் பணியாற்றிட வாருங்கள் இளைஞர்களே என்ன கேட்டுக் கொண்டார்.
காரைக்கால் மாவட்ட திராவிடர் கழக மாவட்ட செயலாளர் பொன். பன்னீர்செல்வம் உரையாற்றும்போது, தமிழர் தலைவர், திராவிடர் கழக தலைவர், ‘தகைசால் தமிழர்', மானமிகு, ஆசிரியர் அவர்கள் உளுந் தூர்பேட்டையில் நடைபெற்ற கலந்துரையாடல் கூட்டத் தில் ‘‘கொடி, படி, செடி'' என மூன்று முத்தான வார்த்தை களை உதிர்த்து, கழக வீடுகளிலும், கிராமம் தோறும், பட்டி தொட்டி எங்கும் கழகக் கொடியை ஏற்ற வேண்டும். எல்லோரையும் படிக்க வைக்கவேண்டும் அதற்காகப் படிப்பகங்களையும், நூலகங்களையும், உருவாக்க வேண்டும். இதுபோன்ற கழக நிகழ்ச்சிகளில், கழகக் குடும்ப விழாக்களில் மரச்செடிகளை வழங்கவேண்டும் என பேசினார்.
காரைக்கால் மாவட்டம் முழுவதும் உள்ள கிராமங்களில் செயல்படுத்தப்படும்
சுற்றுச்சூழலை பாதுகாப்பதற்கும் காற்று மாசுபடாமல் இருப்பதற்கும், மழை பெறுவதற்கும் அதிகமாக மரச் செடிகளை நட்டு வளர்க்க வேண்டும் என்று சொன்னார். அதனை சாத்தியமாக்கும் வகையில், இன்றைக்கு இங்கே காரைக்கால் மாவட்ட திராவிடர் கழகம் நடத்திக் கொண் டிருக்கக் கூடிய வைக்கம் நூற்றாண்டு விழா, முத்தமிழ் அறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழா மற்றும் தந்தை பெரியார் அவர்களின் 145 ஆவது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் ‘‘தகைசால் தமிழரின்'' கொடி, படி ,செடி ஆகியவைகளை நிறைவேற்றி இருக்கின்றோம். விரைவில் இது காரைக்கால் மாவட்டம் முழுவதும் உள்ள கிராமங்களில் செயல்படுத்தப்படும்.
‘‘யார் வரவேண்டும் என்பதை விட யார் வரக்கூடாது!'' என்பதில் நாம் கவனமாக இருக்க வேண்டும்
தந்தை பெரியார் அவர்கள் இந்த சமுதாயத்தில் புரை யோடி போயிருந்த இழி நிலைகளை மாற்றுவதற்காக, தன் இறுதி மூச்சுவரை இந்த மக்களின் முன்னேற்றத் திற்காக போராடினார். குறிப்பாக பெண்களின் முன் னேற்றத்திற்காக போராடினார். பெண்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று செங்கல்பட்டு சுய மரியாதை மாநாட்டிலே தீர்மானம் கொண்டு வந்தார். ஒன்றியத்திலே ஒன்பது ஆண்டுகாலமாக ஆட்சியில் இருக்கும் பிஜேபி அரசு, ஊழல் இல்லாத அரசு என்று சொல்லிக்கொண்டு இன்றைக்கு ஏழு திட்டங்களில் ஏழரை லட்சம் கோடிக்கு ஊழல் செய்திருக்கிறது என சி.ஏ.ஜி. அறிக்கை வெளியிட்டு அம்பலப்படுத்தி இருக் கிறது. ஒரே நாடு, ஒரே தேர்தல், ஒரே நாடு, ஒரே ரேஷன் கார்டு, குடியுரிமை திருத்த சட்டம், இந்திய அரசமைப்பு சட்டத்தை மாற்றுவது வரலாறுகளை திருத்தி எழுதுவது என இப்படி பலவற்றையும் மாற்றுவதற்கு முயற்சி செய்து வரும் பிஜேபி அரசின் செயல்களை நாம் மக்களிடையே அம்பலப்படுத்தி வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் பிஜேபியை தோல்வி அடைய செய்ய வேண்டும். யார் வரவேண்டும் என்பதை விட யார் வரக்கூடாது என்பதில் நாம் கவனமாக இருக்க வேண்டும் என்றார்.
கடவுளால், மதத்தால், ஜாதியால் பிளவுப்படுத்தியதை மாற்றப் போராடிய தந்தை பெரியார்
நிறைவாக கருத்துரை வழங்கிய கழகச் சொற்பொழிவாளர் தஞ்சை இரா.பெரியார் செல்வன் உரையாற்றும்போது, ஆரிய பார்ப்பனர்களால் அடிமையாக்கப்பட்டு கடவுளால், மதத்தால், ஜாதியால் பிளவுப்படுத்தி வைத்திருந்ததை மாற்ற தந்தை பெரியார் அவர்கள் போராடினார். தந்தை பெரியார் என்ன செய்தார் என்று கேட்பவர்களுக்கு, மனிதனை மனிதன் தொடக்கூடாது, கண்ணில் படக்கூடாது, பொதுத் தெருவிலே நடக்கக்கூடாது, கோயிலுக்குள்ளே வரக்கூடாது, பொதுக் குளத்திலே தண்ணீர் எடுக்கக் கூடாது என்னும் கொள்கைகள் தாண்டவம் ஆடும் ஒரு நாட்டை, பூகம்பத்தால் அழிக்காமலோ, எரிமலை நெருப்புக் குழம்பால் எரிக்காமலோ, சமுத்திரம் பொங்கி மூழ்கச் செய்யாமலோ, சண்டை மாருதத்தால் துகளாக் காமலோ, பூமி பிளவில் அமிழச் செய்யாமலோ விட்டு வைத்திருப்பதை பார்த்த பிறகும், ‘‘கடவுள் ஒருவர் இருக்கிறார் அவர் நீதிமான், சர்வதயாபாளர்'' என்று சொன்னால், இந்த மக்களை என்னவென்று கருதுவது என்று பெரியார் கேட்டார்.
இங்கே உழைப்பவன் கீழ்ஜாதி; பிறர் உழைப்பில் உண்டு கொழுப்பவன் மேல் ஜாதி என வர்ணாசிரமம் பிரித்து வைத்து இருக்கிறது. இந்த இழிவை மாற்று வதற்குத்தான் தந்தை பெரியார் அவர்கள் தனது இறுதி மூச்சிருக்கும் வரை மூத்திரச் சட்டியை கையில் ஏந்திக் கொண்டு போராடினார். அவருக்குத்தான் இன்றைக்கு பிறந்தநாள் விழாவை நாடெங்கும் நாம் கொண்டாடிக் கொண்டிருக்கின்றோம்.
கேரளாவில் உள்ள வைக்கம் என்ற ஊரில் சென்று, அங்குள்ள ஈழவ மக்களுக்காக அங்குள்ள தெருக்களில் நடக்கின்ற உரிமையை தந்தை பெரியார் அவர்கள் போராடி, சிறை சென்று பெற்றுக் கொடுத்தார். அதனால் அவர் ‘‘வைக்கம் வீரர்'' என்று அழைக்கப்பட்டார்.
பெரியார் நினைவு சமத்துவபுரங்கள்!
ஊருக்கு ஒதுக்குப்புறமாக இருக்கும் சேரிகளை, ‘‘சேரி'' என்ற பெயரில் ஒதுக்கப்பட்ட பகுதிகளாக இருப் பதை மாற்ற வேண்டும் என ‘‘தகைசால் தமிழர்'' ஆசிரியர் அவர்களின் சிந்தனையிலேயே உதித்ததை, திருவாரூருக்குப் பக்கத்திலே கலைஞர் பிறந்த ஊரான திருக்குவளைக்கு அருகில் இருக்கின்ற கச்சனம் என்ற ஊரில் தந்தை பெரியார் அவர்களின் தலைமையில் நடைபெற்ற ஒரு மாநாட்டில் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் ஒரு தீர்மானத்தைக் கொண்டு வந்தார். ‘‘சேரி'' என்று ஒதுக்கப்பட்ட பகுதிகள் ஊருக்கு வெளியே தனியாக இருக்கக் கூடாது. எல்லோரும் சேர்ந்து வாழும் பகுதியாக அது மாற வேண்டும் என ஆசிரியர் அவர்கள் கொண்டு வந்த தீர்மானத்தை, தந்தை பெரியார் அவர்கள் முன்மொழிந்து உரையாற்றும்போது, அரசு இதனை கவனித்து நடைமுறைக்கு கொண்டு வர வேண்டும் என கேட்டுக்கொண்டார். இது பின்னாளில் திராவிட முன்னேற்ற கழகம் ஆட்சியில், ஆசிரியர் அவர்களால் கொண்டுவரப்பட்டு, தந்தை பெரியார் அவர்களால் முன்மொழியப்பட்ட தீர்மானம் - எல்லா மக்களும் ஒன்றாக சேர்ந்து வாழும் ‘‘பெரியார் சமத்துவ புரமாக'' மாறியது. திராவிடர் கழகம் என்ன செய்தது, திராவிட முன்னேற்றக் கழகம் என்ன செய்தது என்று கேட்பவர்கள் இதனை தெரிந்து கொள்ள வேண்டும் என்றார்.
தந்தை பெரியார் தான் மாற்றினார் -
திராவிடர் கழகம் தான் மாற்றியது!
இன்றைக்கு உள்ள எல்.கே.ஜி., யு.கே.ஜி பாடப் புத்தகங்களில் ‘‘ஏ பார் ஆப்பிள், பி பார் பால், சி ஃபார் கேட்'' என்று இருக்கிறது. இதனை நமது பிள்ளைகள் படிக்கிறார்கள். ஆனால், ஒரு 70 ஆண்டுகளுக்கு முன்பு பாடப் புத்தகத்தில் எப்படி இருந்தது தெரியுமா? புத்தகத் தைத் திறந்தால், முதல் பக்கத்திலேயே முடி வெட்டுபவர் படத்தை போட்டு அதன் கீழே ‘‘இவன் அம்பட்டன், முடி வெட்டுகிறான்'' என்று எழுதப்பட்டு இருக்கும். துணி துவைக்கும் தொழிலாளியின் படத்தை போட்டு, ‘‘இவன் வண்ணான், துணி துவைக்கிறான்'' என்று எழுதி இருக்கும். செருப்பு தைக்கிறவர் படத்தை போட்டு, ‘‘இவன் சக்கிலியன், செருப்பு தைக்கிறான்'' என்று எழுதி இருக்கும். மண்பாண்டம் செய்கிறவர் படத்தை போட்டு, ‘‘இவன் குயவன், மண்பாண்டம் செய்கிறான்‘‘ என்று எழுதி இருக்கும். தச்சு வேலை செய்கிறவர் படத்தை போட்டு, ‘‘இவன் தச்சன், தச்சு வேலை செய்கிறான்'' என்று எழுதி இருக்கும். தப்பு அடிப்பவர் படத்தை போட்டு, ‘‘இவன் பறையன், பறையடிக்கிறான்'' என்று எழுதி இருக்கும். இந்த எல்லா படங்களுக்கும் கீழே ஒரு ஆளை உட்கார வைத்து, அவர் உடம்பிலே ஒரு பூணூலை மாட்டிவிட்டு, உச்சி குடுமி வைத்து, அவர் கையிலே ஒரு புத்தகத்தை கொடுத்து கீழே எழுதினான், ‘‘இவர் அய்யர் மிகவும் நல்லவர், இவர் படிக்கிறார்'' என்று எழுதி மற்றவர்களை எல்லாம் இழிவு படுத்தி கேவலப்படுத்தி இருந்தானே, இது எதற்கு என்றால், மற்றவர்கள் யாரும் படிக்கக் கூடாது; அய்யர், பார்ப் பனர்கள் மட்டும்தான் படிக்க வேண்டும்; மற்றவர்கள் அவரவர்கள் குலத் தொழிலை செய்ய வேண்டும் என்று எழுதி இருந்தார்களே, இதை யார் மாற்றியது? எம்.எல்.ஏ மாற்றினாரா? எம்.பி மாற்றினாரா? அமைச்சர்கள் மாற்றி னார்களா? யார் மாற்றியது? தந்தை பெரியார்தான் மாற்றினார் திராவிடர் கழகம் தான் மாற்றியது.
‘‘ஒரே நாடு ஒரே ஜாதி'' என்று சொல்ல முடியுமா?
தற்போது மீண்டும் குலத் தொழிலை செய்ய மானியம் கொடுத்து "விஸ்வகர்மா யோஜனா" என்ற ஒரு திட்டத்தை ஒன்றிய அரசு மீண்டும் கொண்டு வருகிறது. தோழர்களே நாம் விழிப்பாக இருக்க வேண்டிய காலம் இது. ஒன்றிய அரசு எல்லாவற்றையும் மாற்றி வருகிறது. 7 திட்டத்தில் ஏழரை லட்சம் கோடி ஊழல் செய்திருப்ப தாக சி.ஏ.ஜி. அறிக்கை கூறுகிறது. மணிப்பூர் கலவரம், குடியுரிமை திருத்தச் சட்டம் , ஒரே நாடு ஒரே தேர்தல், ஒரே நாடு, ஒரே ரேஷன் கார்டு, என்று சொல்பவர்களால், ‘‘ஒரே நாடு ஒரே ஜாதி'' என்று சொல்ல முடியுமா? இவற்றையெல்லாம் மறைப்பதற்காக, மக்களை ஏமாற் றுவதற்காக ஸநாதனத்தைக் கையில் எடுத்து பொய்யான பரப்புரைகளைச் செய்து வருகிறார்கள்.
பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட, சிறுபான்மை இன மக்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை இருந்து வருகிறது. நான் சொல்வதைத் தான் சாப்பிட வேண்டும், நான் கொடுப்பதைத் தான் உடுத்த வேண்டும், நான் வணங்கும் கடவுளையும், நீங்கள் வணங்க வேண்டும், நான் பின்பற்றும் மதத்தைத் தான், நீங்கள் பின்பற்ற வேண்டும் என ஒரு சர்வாதிகார நிலையை உருவாக்க ஒன்றிய பாஜக அரசு - ஆர்.எஸ்.எஸின் சிந்தனை சித்தாந்தங் களோடு செயல்பட்டு வருகிறது. இதனிலிருந்து மீண்டு, சுதந்திரமாக வாழ வேண்டுமானால், நீங்கள் வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் பிஜேபியை புறக்கணிக்க வேண்டும் என்று பேசினார்.
மாணவ, மாணவிகளுக்கு
புத்தகங்கள் வழங்கப்பட்டன!
கூட்டத்தின் தொடக்கத்தில் லூயிஸ் பியர் இல்லத்தில் மாவட்ட தலைவர் குரு. கிருஷ்ணமூர்த்தி முன்னிலை யில், பெரியார் செல்வம் கழகக் கொடியினை ஏற்றி வைத்தார். பொதுக்குழு உறுப்பினர் பதிஜெய் சங்கர் வாங்கி வைத்திருந்த செடிக் கன்றுகள் கூட்டத்தில் கலந்து கொண்டவர்களுக்கு கழகத் தோழர்களால் வழங்கப்பட்டது. மாணவ, மாணவிகளுக்கு புத்தகங்கள் வழங்கப்பட்டன.
கூட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் மற்றும் கழகத் தோழர்கள் நாகை மாவட்ட மகளிரணி செயலாளர் த.ஜெயப்பிரியா, கீழையூர் ஒன்றிய செய லாளர் த.தமிழரசன், ம.முத்துராஜா ஆகியோர் பங்கேற் றனர். நிறைவாக காரைக்கால் மாவட்ட திராவிட மாணவர் கழக செயலாளர் அறிவுச்செல்வன் நன்றி கூற, கூட்டம் இனிதே நிறைவுற்றது.
No comments:
Post a Comment