நடிகமணி டி.வி.நாராயணசாமி நூற்றாண்டு விழாவில் தமிழர் தலைவர் சிறப்புரை!
சென்னை. செப்,9 நடிகமணி டி.வி.நாராயண சாமி அவர்களின் நூற்றாண்டு விழாவில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் கலந்து கொண்டு உரையாற்றினார். கலைமாமணி நாசர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
நடிகமணி டி. வி. நாராயணசாமி அவர்களின் நூற்றாண்டு விழா, சென்னை தியாகராயர் நகர், தியாகராயர் அரங்கில் நேற்று (8.9.2023) மாலை 5 மணிக்கு வில்லிசைக் கலைஞர் கவிஞர் சுப்பு ஆறுமுகத்தின் மகள், வில்லிசைக் கலைஞர் பாரதி திருமகன் கலைக்குழுவின் வில்லிசை நிகழ்ச்சியுடன் தொடங்கியது.
விழாவிற்கு தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் தலைமை தாங்கி சிறப்புரை ஆற்றினார்.
கலைமாமணி வாகை சந்திரசேகர், விஜயா தாயன்பன், மேனாள் நாடாளுமன்ற உறுப்பினர் டி.கே.எஸ். இளங்கோவன், வி.அய்.டி. பல்கலைக்கழக வேந்தர் கோ. விஸ்வநாதன், தென்னிந்திய திரைப்பட சங்கத் தலைவர், கலைமாமணி நாசர், துணைத்தலைவர் பூச்சி முருகன், திராவிட இயக்க ஆய்வாளர் க. திருநாவுக்கரசு, கலைமாணி ஓவியர் டிராட்ஸ்கி மருது, திரைப்பட நடிகை சச்சு என்கிற பி.எஸ். சரஸ்வதி, கல்வியாளர் ஆர்.எம்.கே. முனி ரத்தினம், நல்லி குப்புசாமி ஆகியோர் முன் னிலை ஏற்று உரையாற்றி சிறப்பித்தனர்.
நூல் வெளியீடு!
அதைத் தொடர்ந்து, நடிகமணி டி.வி.என். அவர்களின் வாழ்க்கை வரலாறு நூலை தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் வெளியிட, முதல் பிரதியை வி.அய்.டி.வேந்தர் கோ.விஸ்வநாதன் பெற்றுக்கொண்டார். அதேபோல், விழா மலரை, தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத் தலைவர் கலைமாமணி வாகை சந்திரசேகர் வெளியிட, முதல் இரண்டு பிரதிகளை தென்னிந்திய நடிகர் சங்கத் தலைவர், கலைமாமணி நாசர், துணைத் தலைவர் பூச்சி முருகன் ஆகியோர் பெற்று சிறப்பித்தனர். அனைவருக்கும் பொன் னாடை அணிவித்து சிறப்பு செய்யப்பட்டது. பார்வையாளர்கள் அனைவருக்கும் இரண்டு புத்தகங்களும் வழங்கப் பட்டன. இறுதியாக தமிழர் தலைவர் உரையாற் றினார்.
திராவிட இயக்கத்தின் ’கும்கி’ யானை!
அவர் தமது உரையை, தான் மாணவர் பருவத்திலிருந்தே டி.வி.என். அவர்களுடன் பழகும் வாய்ப்பைப் பெற்றவன்’ என்று தொடங்கினார். தொடர்ந்து, 'அண்ணா இவரைப் பற்றி ‘மாசு மறுவற்றவர், ஒழுக்கசீலர், கட்டுப்பாடு மிக்கவர்’ என்று சொல்லியிருப் பதை புத்தகத்திலிருந்து படித்துக் காட்டினார். கலைத்துறையிலும் கொள்கையாளர்களாக இருக்க வேண்டும். அவர்கள் கட்சிக்காரராகத் தான் இருக்க வேண்டிய தில்லை.
அப்படி திராவிட இயக்கக் கொள்கைகளோடு இருந்தாலும் எல்லோருடனும் நட்பில் இருந்தவர் டி.வி.என்.’ என்று சொல்லிவிட்டு, ‘நான் கொள்கைக்காரன்; கட்சிக்காரன் அல்ல’ என்று தந்தை பெரியார் சொன்னதைக்கூறி, டி.வி.என். அவர்களின் சிறப்பை விளக்கினார்.
அத்தோடு, திராவிட இயக்கத்திற்கு எம்.ஜி. ஆர்., எஸ்.எஸ்.ஆர், கலைவாணர் போன்ற எண்ணற்ற கலைஞர்களை திராவிடர் இயக்கத் திற்கு அழைத்து வந்தவர் டி.வி.என். என்று கூற வந்தவர், 'திராவிட இயக்கத்திற்காக கலைத் துறையில் இருந்த ’கும்கி’ யானை தான் நமது டி.வி.என்.' என்று கூறி அனைவரையும் சிரிக்கவும், சிந்திக்கவும் வைத்தார்.
டி.வின்.என். மீது ஆசிரியரின் உயர்ந்த மதிப்பீடு!
மேலும் அவர், டி.வி.என். அவர்கள், மற்றவர்களை வளர்த்துவிடும் அரிய குணம் கொண்டவர்; தியாகசீலர் என்று என்று பாராட் டிப் பேசி விட்டு, ’மனிதன் தானாக பிறக்க வில்லை; தனக்காகவும் பிறக்கவில்லை; ஆகவே அவன் சமூகத்திற்குத் தொண்டு செய்ய வேண்டும்’ என்று தந்தை பெரியார் சொன்னதை எடுத்துரைத்து, அப்படி வாழ்ந்தவர் டி.வி.என். என்றார்.
இதைத்தான் புரட்சிக்கவிஞர் ‘தன்பெண்டு, தன் பிள்ளை, தம்மக்கள் என்றிருப்போர் சின்னதொரு கடுகு உள்ளம் கொண்டோர்’ என்ற புரட்சிக் கவிஞர்’ கவிதையையும் துணைக் கழைத்து, ‘அப்படி மற்றவர்களுக்காக வாழ்ந்தவர் டி.வி.என்.’ என்றார்.
ஆசிரியர் இன்னும் ஒருபடி மேலே சென்று, திருவள்ளுவரையும் துணைக்கழைத்து, ‘ஒத்த தறிவான் உயிர்வாழ்வான் மற்றோர் செத்தாருள் வைக்கப்படும்’ என்ற குறளை எடுத்துக்காட்டி, ’மற்றவர்களின் ஒத்தது அறிந்து உதவியவர் டி.வி.என்.’ என்று பாராட்டி சிறப்பித்து, அவர் தந்தை பெரியாரைச் சந்தித்த நிகழ்வுகளை எல்லாம் நினைவூட்டி தனது உரையை நிறைவு செய்தார்.
கலந்து கொண்டு சிறப்பித்தோர்!
தொடர்ந்து, 150 கலைக்குடும்பங்களுக்கு பரிசுகள் வழங்குவதாக அறிவித்து, அடை யாளமாக அய்ந்து பேருக்கு ஆசிரியர் பரிசுகளை வழங்கினார். மற்றவர்களுக்கு அவரவர் இருக்கைக்கே சென்று வழங்குவதாக அறிவிப்பு செய்தனர்.
நிகழ்ச்சிக்கு திராவிடர் கழகப் பொருளாளர் வீ. குமரேசன், சோ.சுரேஷ், மேனாள் நீதியரசர் பரஞ்சோதி, உடுமலை வடிவேல், கமலேஷ் மற்றும் திரைப்படத் துறை, நாடகத்துறை, கல்வியாளர்கள், தமிழ்நாடு அரசின் நிர்வாகத் துறையினர், திராவிட இயக்கப் பற்றாளர்கள் என அரங்கம் நிறையுமளவுக்கு மக்கள் திரண்டு வந்து சிறப்பித்தனர்.
No comments:
Post a Comment