உயர்நீதிமன்றங்கள், உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் நியமனத்தில் சமூகநீதி காப்பாற்றப்படவில்லை
எஸ்.ஸி., எஸ்.டி., ஓ.பி.சி., சிறுபான்மையினர், பெண்கள் நீதிபதிகளாக நியமனம் செய்யப்பட வேண்டும்
மதுரை, செப். 10 - உயர்நீதிமன்றங்களிலும், உச்சநீதி மன்றத்திலும் நீதிபதிகள் நியமனத்தில் சமூகநீதி பேணப்படுவதில்லை - இந்த நிலையில் மாற்றம் தேவை. எஸ்.ஸி, எஸ்.டி., ஓ.பி.சி., சிறுபான்மையினர், பெண்கள் போதுமான எண்ணிக்கையில் நீதிபதிகளாக நியமனம் செய்யப்பட வேண்டும் என்றுசென்னை உயர்நீதிமன்ற மேனாள் நீதிபதி அரி.பரந்தாமன் ஆதாரப்பூர்வமாகக் கருத்துரை ஆற்றினார்.உச்சநீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றங்களில் நீதிபதி பணி நியமனங்களில் சமூகநீதியை வலியுறுத்தி 18.8.2023 அன்று மதுரையில் நடைபெற்ற திராவிடர் கழக சட்டத்துறை கருத்தரங்கத்தில் ஓய்வு பெற்ற சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி அரிபரந்தாமன் ஆற்றிய உரையின் முக்கிய கருத்துரை வருமாறு:
பட்டியல் இனத்தவர், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், பெண்கள் மற்றும் சிறுபான்மையினர் பிரிவை சேர்ந்தவர்கள் போதிய எண்ணிக்கையில் உயர்நீதிமன்றம் மற்றும் உச்சநீதிமன்றங்களில் - உயர் நீதித்துறையில் - நீதிபதிகளாக பணிபுரிவதை உறுதி செய்வதே சமூக நீதி.
உயர் நீதித்துறை மட்டுமன்றி அனைத்து துறைகளிலும் -குறிப்பாக கொள்கை முடிவெடுக்கக்கூடிய உயர் பதவிகளிலும் -மேற்சொன்ன பிரிவினர் போதிய எண் ணிக்கையில் பணிபுரிய வேண்டும் என்பது சமூக நீதி.
சமூகநீதியை மறுக்கும் மனுநீதி!
மனுநீதி சமூக நீதியை மறுக்கிறது .வெள்ளையர் காலத்திற்கு முன்பும், வெள்ளையர் காலத்திலும், அரசமைப்புச் சட்டம் அமலுக்கு வந்த பின்னரும் கூட மனுநீதி ஆட்சி செய்கிறது. சூத்திரர்களும், பஞ்சமர்களும், பெண்களும் ஆட்சி அதிகாரத்தில் - குறிப்பாக உயர் பதவிகளில்-- இல்லை என்ற நிலை அரசமைப்பு சட்டம் அமலுக்கு வந்த பின்னரும் தொடர்கிறது. பெண்களை சூத்திரர்களாக பார்ப்பதே மனு நீதி.எனவே தான் இப்போதும் கூட அனைத்து துறைகளிலும் குறிப்பாக கொள்கை முடிவெடுக்கக்கூடிய உயர் பதவிகளிலும், உயர்நீதித் துறையிலும் பார்ப் பனர்களும், உயர் ஜாதிக்காரர்களும், வடநாட்டு பனியாக்களும் மிகப்பெரும் எண்ணிக்கையில் ஆதிக்கம் செலுத்துபவர்களாக இருக்கின்றார்கள். மக்களில் பெரும் எண்ணிக்கையில் இருக்கக்கூடிய எஸ்சி, எஸ்டி, ஓபிசி, பெண்கள், சிறுபான்மையினர் என அனைத்து தரப்பினரும் அதிகாரத்தில் பங்கு கொள்வதே ஜனநாயகமும் சமூக நீதியும் ஆகும். உயர்ஜாதிக்காரர்களும், பனியாக்களும் அவர்களுக்கு உரிய எண்ணிக்கையில் அதிகாரத்தில் பங்கு கொள்வதே ஜனநாயகமும் சமூக நீதியும்.
உயர்நீதி, உச்சநீதிமன்றங்களில் நீதிபதிகள் நியமனத்தில் சமூகநீதி பின்பற்றப்படவில்லை
உயர்நீதி துறையில் சமூக நீதி பேணப்படவில்லை என்பதை விரிவாக ஆய்வு செய்வதே இந்த உரையின் நோக்கம்.
I. உச்சநீதிமன்றத்திலும் உயர் நீதிமன்றங்களிலும் பட்டியல் இனத்தவர் மற்றும் பழங்குடியினர் நியமனம் பற்றி முதலில் பரிசீலிப்போம்.
i) அரசமைப்புச் சட்டம் அமலுக்கு வந்த 26.1.1950 முதல் இன்று வரை 73 ஆண்டுகளுக்கும் மேலான காலங்களில், இதுவரை மொத்தமாக 6 நபர்கள் தான் பட்டியல் இனத்திலிருந்து உச்சநீதிமன்றத்திற்கு நிய மனம் செய்யப்பட்டிருக்கிறார்கள் என்பதும்,பழங்குடி இனத்திலிருந்து ஒருவர் கூட நியமிக்கப்படவில்லை என்பதும் உயர்நீதித் துறையில் சமூக நீதி கடைபிடிக்கப் படவில்லை என்பதை மிகத் தெளிவாக கூறும்.
அரசமைப்புச் சட்டம் அமலுக்கு வந்து 30 ஆண்டுகளுக்கு பின்னர் 1980 இல் தான் முதன்முதலாக பட்டியல் இனத்தவர் உச்ச நீதிமன்றத்தில் நீதிபதியாக நியமிக்கப்பட்டார். தமிழ்நாட்டில் சென்னை உயர் நீதிமன்றத்தில் இருந்து உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்ட நீதிபதி வரதராஜன் அவர்கள் தான் முதலில் நியமிக்கப்பட்ட பட்டியல் இனத்தவர். அவர்தான் 1862இல் இருந்து செயல்பட்டு வரும் சென்னை உயர் நீதிமன்றத்திலும், முதலில் நியமிக்கப்பட்ட பட்டியல் இனத்தைச் சேர்ந்த நீதிபதி ஆவார்.
தமிழ்நாட்டில் பணியாற்றிய பட்டியல் இனத்தைச் சேர்ந்த IAS மற்றும் IPS அதிகாரிகள் 1972 ஆம் ஆண்டில் தந்தை பெரியாருக்கு சென்னையில் ஒரு பாராட்டு விழா நடத்தினார்கள். அதில் கலந்து கொண்டு பேசிய தந்தை பெரியார் அவர்கள், விழா நடத்தப்படும் இடத்திற்கு அருகில் இருக்கும் சென்னை உயர்நீதிமன்றத்தில் அதுநாள்வரையில் ஒருவர் கூட பட்டியல் இனத்தில் இருந்து நீதிபதியாக நியமிக்கப்படவில்லை என்பதை எடுத்துக்காட்டினார்.
அப்போது தமிழ்நாட்டின் முதலமைச்சர் மறைந்த கலைஞர் அவர்கள். மேற் சொன்ன செய்தியை படித்த முதலமைச்சர் கலைஞர் அவர்கள் ,அப்போதைய சட்டத்துறை அமைச்சர் மாதவன் அவர்களுடன் இது பற்றி பேசினார். தந்தை பெரியார் சொன்ன செய்தி சரியானது தான் என்று சட்ட அமைச்சர் சொன்னார். உடனடியாக பட்டியல் இனத்திலிருந்து ஒருவர் உயர் நீதிமன்றத்திற்கு நீதிபதியாக நியமிக்கப்பட வேண்டும் என்று கலைஞர் தெரிவிக்க, அதன் அடிப்படையில் அப்போது மாவட்ட நீதிபதியாக இருந்த வரதராசன் அவர்கள் - பணி மூப்பு பட்டியலில் ஜூனியராக இருப்பினும்-1973 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.
1862ஆம் ஆண்டிலிருந்து சென்னை உயர்நீதிமன்றம் செயல்பட்டு வருகிறது. உயர்நீதிமன்றத்தில் 3 நீதிபதிகள் நியமனம் செய்யப்பட்டால், அவர்களில் இருவர் வழக்குரைஞராகவும் மற்றவர் மாவட்ட நீதிபதிகளில் ஒருவராகவும் இருப்பார். சென்னை உயர்நீதிமன்றம் செயல்பட தொடங்கி 125 ஆண்டுகளுக்கு பின்னர்,1990-இல்தான் வழக்குரைஞர் சாமித்துரை பட்டியல் இனத்திலிருந்து முதல் முதலாக சென்னை உயர்நீதிமன்றத்தின் நீதிபதியாக நியமிக்கப்பட்டார். சமீபத்தில் கேரளா உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இருந்து ஓய்வு பெற்ற நீதிபதி மணிக்குமார் அவர்களின் தந்தையே சாமித்துரை.
உச்சநீதிமன்றத்தில் இதுவரை நியமிக்கப்பட்ட பட்டியல் இன நீதிபதிகள்
மீண்டும் உச்சநீதிமன்றத்திற்கு வருவோம். உச்ச நீதிமன்றத்தில் இதுவரை நியமனம் செய்யப்பட்ட 6 பட்டியல் இனத்தவர்கள் எந்த மாநிலத்தை சேர்ந்தவர்கள் என்றும் அவர்கள் நியமனம் செய்யப்பட்ட நாள் மற்றும் ஓய்வு பெற்ற நாள் பற்றிய விபரம்:
1) நீதிபதி வரதராஜன் - 10.12.1980 முதல் 16.8.1985 ஆம் ஆண்டுவரை (தமிழ்நாடு)
2) நீதிபதி பங்கிம் சந்தர் ரே - 29.10.1985 முதல் 1991 ஆண்டுவரை (மேற்கு வங்கம்)
3) நீதிபதி கே. இராமசாமி - 6.10.1989 முதல் 12.7.1997 ஆண்டுவரை (ஆந்திரப் பிரதேசம்)
4) நீதிபதி கே.பாலகிருஷ்ணன் - 8.6.2000 முதல் 12.5.2010 ஆண்டுவரை (கேரளா)
5) நீதிபதி பி.ஆர்.கவாய் - 24.5.2019 (பணியில் உள்ளார்) மகாராஷ்டிரா
6) நீதிபதி சி .டி .ரவிக்குமார் - 17.8.2021 (பணியில் உள்ளார்) கேரளா
மேலே கண்ட விவரங்களில் இருந்து 2010 ஆம் ஆண்டில் தலைமை நீதிபதி பாலகிருஷ்ணன் உச்சநீதிமன்றத்தில் இருந்து ஓய்வு பெற்றதற்கு பின்னர், பட்டியல் இனத்தைச் சேர்ந்த எவரும் 9 ஆண்டுகளுக்கு நியமிக்கப்படவில்லை என்பதும் 6 பேரில் 5 பேர் தென் மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் என்பதும் அறியலாம்.
அரசமைப்புச் சட்டம் அமலுக்கு வந்த 26 ஜனவரி 1950 ஆம் ஆண்டிற்குப் பின்னர் இதுநாள் வரை மொத்தமே 6 பேர்கள் மட்டுமே பட்டியல் இனத்திலிருந்து உச்சநீதிமன்றத்திற்கு நியமிக்கப்பட்டிருக்கையில், எந்த ஒரு குறிப்பிட்ட நேரத்தில் எடுத்துக் கொண்டாலும் பத்திற்கும் மேற்பட்ட பார்ப்பனர்கள் மட்டுமே உச்சநீதி மன்ற நீதிபதியாக இருப்பதை காணலாம்.
ii)பட்டியல் இனத்தவருக்கான தேசிய ஆணை யத்தின் 2011ஆம் ஆண்டின் அறிக்கை, அரசமைப்புச் சட்டம் அமலுக்கு வந்த பின் இதுவரை இந்தியாவில் உள்ள அனைத்து உயர் நீதிமன்றங்களிலும் பட்டியல் இனத்தைச் சேர்ந்தவர்கள் 21 பேர் மட்டுமே நீதிபதிகளாக இருந்துள்ளனர் என்ற விவரத்தை கூறுகிறது.
மிகப்பெரிய அளவில் உயர்நீதிமன்ற நீதிபதிகள் எண்ணிக்கை கொண்ட உத்தரப்பிரதேசத்தில் உள்ள அலகாபாத் உயர்நீதிமன்றம், பீகாரில் உள்ள பாட்னா உயர்நீதிமன்றம், கல்கத்தா உயர்நீதிமன்றம், மும்பை உயர்நீதிமன்றம், டில்லி உயர்நீதிமன்றம் போன்றவை களில் எந்த குறிப்பிட்ட நேரத்திலும் 21 பேருக்கு மேல் பார்ப்பனர்கள் மட்டுமே உயர்நீதிமன்ற நீதிபதிகளாக இருப்பார்கள்.
பட்டியலினத்தைச் சேர்ந்த ஒருவர்கூட நீதிபதியாக இல்லாத உயர்நீதிமன்றங்கள்
மேற்சொன்ன பட்டியல் இனத்தவருக்கான தேசிய ஆணையத்தின் 2011 ஆம் ஆண்டு அறிக்கையில், மொத்தம் உள்ள 24 உயர்நீதிமன்றங்களில் 14 உயர்நீதி மன்றங்களில் இதுவரை ஒருவர் கூட பட்டியல் இனத்தில் இருந்து நீதிபதியாக நியமிக்கப்படவில்லை என்பதும் குறிப்பிடப்பட்டுள்ளது.
II. உச்சநீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றங்களில் பின்தங்கிய வகுப்பினர் நீதிபதிகளாக நியமனம் செய்யப் பட்டது பற்றிய விவரம்:
i) தமிழ்நாட்டில் இருந்து தான் பின்தங்கிய வகுப்பைச் சேர்ந்தவர் உச்சநீதிமன்றத்திற்கு 1988-இல் முதல் முதலில் நீதிபதியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். நீதிபதி ரத்தினவேல் பாண்டியன் அவர்கள் தான் முதல் பின் தங்கிய வகுப்பினர் பிரிவிலிருந்து நியமிக்கப்பட்ட உச்ச நீதிமன்ற நீதிபதி.
ii) அதாவது 1950 முதல் 1988 வரை 38 ஆண்டுகளில் ஒருவர் கூட பின் தங்கிய வகுப்பில் இருந்து உச்சநீதி மன்றத்திற்கு நீதிபதியாக நியமிக்கப்படவில்லை.
iii) இப்பொழுதும்கூட உச்சநீதிமன்றத்தில் தமிழ் நாட்டைச் சேர்ந்த பின்தங்கிய வகுப்பிலிருந்து நியமிக்கப் பட்டு பணியில் உள்ள நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் அவர்களை தவிர்த்து, வேறு எவரேனும் பின்தங்கிய வகுப்பில் நீதிபதிகளாக இருக்கின்றனரா என்பது கேள்விக்குறி தான். நீதிபதிகள் பற்றிய ஜாதி விவரங்களை அரசு வெளியிடுவதில்லை.
iv) மிகவும் பின்தங்கிய வகுப்பினர் என்ற பிரிவு பின்தங்கிய வகுப்பில் இருந்து பிரிக்கப்பட்ட பின்னர், தமிழ்நாட்டில் இருந்து எந்த மிகவும் பின்தங்கிய வகுப்பினரும்(விஙிசி) உச்ச நீதிமன்றத்திற்கு நீதிபதியாக நியமிக்கப்படவில்லை.
v) உத்தரப்பிரதேசத்திலும் பீகாரிலும் மிகப் பெரும் எண்ணிக்கையில் உள்ள “யாதவர்கள்” முதல் அமைச்சராக -முலாயம் சிங் யாதவ், லாலு பிரசாத் யாதவ் போன்றவர்கள் -ஆகலாம். ஆனால் யாதவர் எவரும் இதுவரை உச்சநீதிமன்ற நீதிபதியாக ஆனது இல்லை.
vi) இதே போல கேரளத்தில் சுமார் 25% மக்கள் தொகையாக உள்ள ஈழவர்கள் இதுவரை ஒருவர் கூட உச்ச நீதிமன்ற நீதிபதியாகவில்லை. ஆனால் ஈழவ சமூகத்தைச் சேர்ந்த பலர் காங்கிரஸ் கட்சியில் இருந்தும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்தும் கேரளத்தின் முதலமைச்சராக இருந்துள்ளனர். இப்பொழுது கேரளத் தின் முதலமைச்சராக உள்ள பினராயி விஜயன் ஈழவரே.
vii) 2010 அல்லது 2011 ஆம் ஆண்டில் மத்திய பிரதேசத்தில் உள்ள போபாலில் இருக்கும் நேஷனல் ஜூடிசியல் அகாடமிக்கு நான் சென்றிருந்தபோது, பாட்னா உயர்நீதிமன்றத்தில் இருந்து வந்த நீதிபதி மண்டலின் பேரன், அவரைத் தவிர்த்து வேறு எவரும் பின் தங்கிய வகுப்பில் இருந்தோ, பட்டியல் இனம் அல்லது பழங்குடி இனத்திலிருந்தோ பாட்னா உயர்நீதிமன்றத்தில் நீதிபதியாக இல்லை என்று கூறினார்.
viii)வடமாநிலங்களில் மாவட்ட நீதிபதியின் நிய மனங்களில் இட ஒதுக்கீடு இல்லாத காரணத்தால், பின் தங்கிய வகுப்பினர் எவரும் உயர்நீதிமன்ற நீதிபதியாக ஆவதற்கான வாய்ப்பு பறிக்கப்படுகிறது.
ix) 1989இல் கலைஞர் ஆட்சிக்கு வந்தபோதுதான், தமிழ்நாட்டில் பிற்பட்ட வகுப்பிலிருந்து மிகவும் பிற்பட்ட வகுப்பு என்பது பிரிக்கப்பட்டது. அவ்வாறு பிரிக்கப்பட்ட பின்னர் மிகவும் பிற்பட்ட வகுப்பைச் சார்ந்த சீர்மரபினர் பிரிவிலிருந்து வழக்குரைஞர் எவரும் தமிழ்நாட்டில் உயர்நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்படவில்லை. ஆனால் ஆண்ட பரம்பரை என்று கூறிக் கொள்ளும் இந்த பிரிவினரைச் சேர்ந்த மாணவர்கள் தான் நாங்கு நேரியில் பட்டியலின மாணவர் பேரில் கொலை வெறி தாக்குதல் நடத்தியவர்கள்.
x) 69% இட ஒதுக்கீடு மாவட்ட நீதிபதிகள் நியமனத்தில் தமிழ்நாட்டில் கடைபிடிக்கப்படுவதால் அனைத்து ஜாதியைச் சார்ந்தவர்களும் மாவட்ட நீதிபதி பிரிவிலிருந்து உயர்நீதிமன்ற நீதிபதிகளாக நியமனம் பெற்றுள்ளனர். ஆனால் வழக்குரைஞராக இருந்து பல பிரிவினர் உயர்நீதிமன்றத்தின் நீதிபதி களாக தமிழ்நாட்டில்கூட நியமிக்கப்படவில்லை. கோனார், இடையர், யாதவர் என்று பல பெயர்களில் அழைக்கப்படும் சமூகத்தைச் சார்ந்தவர்களில் வழக் குரைஞர் ஒருவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதி யாக நியமிக்கப்பட்டது மிகச் சமீபத்தில்தான். அவர் நீதிபதி புகழேந்தி ஆவார்.
xi) 2014இல் மோடி ஆட்சிக்கு வந்த பின்னர் தமிழ்நாட்டில் ஒவ்வொருமுறையும் 5 அல்லது 6 உயர் நீதிமன்ற நீதிபதிகள் நியமிக்கப்படும் போது, அதில் ஒருவர் பட்டியல் இனத்திலிருந்து நியமிக்கப்படாமல் இருக்கலாம்; ஆனால் அதில் ஒருவராவது நிச்சயம் பார்ப்பன சமுதாயத்தில் இருந்து இருப்பர். இப்போது பார்ப்பன சமூகத்தைச் சேர்ந்த வழக்குரைஞர்களாக இருந்து உயர் நீதிமன்றத்திற்கு நியமிக்கப்பட்ட நீதிபதிகள் 9 பேர் உள்ளனர். ஆனால் பட்டியல் இனத்தவர், வன்னியர், முக்குலத்தோர் என்ற மிகப் பெரும் எண்ணிக்கையில் உள்ள சமூகத்தில் வழக்குரைஞர்களாக இருந்து உயர்நீதிமன்ற நீதிபதிகளான நீதிபதிகளை கூட்டினால் கூட எண்ணிக்கை 9 இல்லை என்பதே உண்மை. தமிழ்நாட்டிலேயே இதுதான் நிலைமை என்றால் மற்ற மாநிலங்களில் உள்ள உயர்நீதிமன்றங்களின் நிலைமை எவ்வாறு இருக்கும் என்பதை யூகித்துக் கொள்ளலாம்.
உயர்நீதிமன்றங்கள், உச்சநீதிமன்றத்தில் பெண் நீதிபதிகளின் நிலை
III. உச்சநீதிமன்ற, உயர்நீதிமன்ற நீதிபதிகளின் நியமனத்தில் பெண்களின் நிலை:
i) இதுவரை நியமிக்கப்பட்ட 266 உச்சநீதிமன்ற நீதிபதிகளில் வெறும் 11 பேர் மட்டுமே பெண்கள்.
பட்டியல் இனத்தைச் சேர்ந்தவர் 1980-லும், பின்தங்கிய வகுப்பைச் சேர்ந்தவர் 1988-லும் நியமிக்கப்பட்ட போது, 1989இல் தான் முதல் முதலாக கேரள உயர் நீதிமன்றத்தில் இருந்து நீதிபதி பாத்திமா பீவி உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.
ii) அந்த 11 நீதிபதிகள் விவரம்:
1) நீதிபதி பாத்திமா பீவி (1989 -1992)
2) நீதிபதி சுஜாதா மனோகர் (1994- 1999)
3) நீதிபதி ரூமா பால் (2000 -2006)
4) நீதிபதி கியான் சுதா மிஸ்ரா ( 2010 -2014)
5) நீதிபதி ரஞ்சனா தேசாய் ( 2011- 2014)
6) நீதிபதி பானுமதி (2014- 2020)
7) நீதிபதி இந்து மல்கோத்ரா (2018- 2021)
8) நீதிபதி இந்திரா பானர்ஜி (2018- 2022),
9) நீதிபதி ஹீமா கோலி(2021- பணியில் உள்ளார்)
10) நீதிபதி பேலா திரிவேதி(2021 -பணியில் உள்ளார்)
11) நீதிபதி நாகரத்தினம்மா(2021 -பணியில் உள்ளார்)
iii) இதுவரையில் பட்டியல் இனத்தைச் சேர்ந்த அல்லது பழங்குடி இனத்தைச் சேர்ந்த எந்தப் பெண்ணும் உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்படவில்லை.
iv) இதுவரையில் எந்த பெண்ணும் உச்சநீதிமன்ற தலமை நீதிபதியாக பணியாற்றியது இல்லை. தற்போது பணியில் இருக்கும் நீதிபதி நாகரத்தினம்மா 2027 ஆம் ஆண்டில் ஒரு மாதம் தலமை நீதிபதியாக இருப்பார்.
v) 11 நீதிபதிகளில் ஒரே ஒருவர்தான் பிற்பட்ட வகுப்பைச் சார்ந்தவர். அவர் தமிழ்நாட்டைச் சேர்ந்த நீதிபதி பானுமதி.
vi) சென்னை உயர் நீதிமன்றத்தில் தான் இந்தியா விலேயே அதிக எண்ணிக்கையில் பெண் நீதிபதிகள் உள்ளனர். 13 பெண் நீதிபதிகள் சென்னை நீதிமன்றத்தில் பணிபுரிகின்றனர். மும்பை உயர்நீதிமன்றம், கொல்கத்தா உயர்நீதிமன்றம், அலகாபாத் உயர்நீதிமன்றம், பஞ்சாப் மற்றும் அரியானா உயர்நீதிமன்றம் ஆகிய உயர் நீதிமன்றங்கள் சென்னை உயர்நீதிமன்றத்தை விட அதிக எண்ணிக்கையிலான நீதிபதிகளை கொண்டிருந்தாலும் அங்கெல்லாம் பெண் நீதிபதிகள் தமிழ்நாட்டை விட மிகக் குறைவாகவே உள்ளனர்.
vii) மக்கள் தொகையில் சரி பாதியாக பெண்கள் இருப்பினும், 29.7.2022 அன்றைய நிலவரப்படி அரசின் தகவலில் மொத்த வழக்குரைஞர்களில் 15%தான் பெண் வழக்குரைஞர்கள்.
(தொடரும்)
No comments:
Post a Comment