நல வாழ்வு நம் கையில்தான் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, September 29, 2023

நல வாழ்வு நம் கையில்தான்

 நல வாழ்வு நம் கையில்தான்

இன்று - செப்டம்பர் 29 - உலக இதய நாள்  (World Heart Day) இவ்வாண்டு இதற்காக ஒரு தனிச் சொற்றொடர் தயாரித்து, விழிப்புணர்வுப் பரப்புரை சிறப்பாக நடக்க உதவியுள்ளார்கள்.

'Use Heart

Know Heart'

"இதயத்தைப் பயன்படுத்துங்கள்

இதயத்தைத் தெரிந்து கொள்ளுங்கள்"

உடலின் எந்த உறுப்பு ஓய்வு எடுத்துக் கொண்டாலும்கூட தாக்குப் பிடிக்கலாம். வாழ்வின் முடிவுக்கான கடைசி மணி அடிப்பதில்லை. ஆனால் நம் இதயம் நின்று விட்டால் வாழ்வே முடிந்து விடும் என்பதால் முழு முக்கியத்துவத்தை நாம் அதற்குத் தருகிறோமா? உணர்ந்து, புரிந்து, அதற்கேற்ப போதிய ஒழுங்கு முறையுடன் நடந்து கொள் கிறோமா?  உடற்கூற்றினைப் பேணுவதற்காக.

இதயப் பாதுகாப்புபற்றி நம் மக்கள் பலரும்  - ஏன் படித்த மக்கள் உள்பட அலட்சியமாக நடந்து கொள்கிறார்கள் என்பது ஒரு புதிர்!

வயிற்றில் ஒருவித உணர்வு ஏற்படும் நேரத்தில் 'அது வெறும் வாயுத் தொல்லை  (Gastric problem) பிரச்சினை' என்று அலட்சியத் துடன் உடனடியாக மருத்துவர்களிடம் காட்ட முயற் சிக்காது, "சுய வைத்தியத்தில் சுகானுபவம்" கொண்டு தங்களை இழக்கிறார்கள். வாயுத் தொல்லைதான் என்று மருத்துவர்கள் போதிய உடற் பரிசோதனைக்குப்பின் கூறிய பின்னரே நாம் நிம்மதி அடைய வேண்டும். நம்நாட்டில் மாரடைப்புச் சாவுகள் அண்மைக் காலத்தில் மிக அதிகமாகி வருகிறது. 

அதிலும் மிகவும் வருத்தப்பட வேண்டிய செய்தி  - 25 வயது 30 வயது இளைஞர்களுக்குக் கூட இதய நோய் தாக்கி, அவர்களை உயிரிழக்கச் செய்வது அண்மைக் காலத்தில் சர்வ சாதாரண மாகி வருகிறது.

இதற்குக் காரணம் - அந்த இளைஞர்களின் வாழ்க்கை முறை  (Life Style) தான்!

இளையர்களின் மதுப் பழக்கம் - இளை ஞர்களின் புகை பிடிக்கும் பழக்கம் - கண்ட உணவுகளை, கண்ட நேரத்தில் அதுவும் வெளி உணவு விடுதிகளில் நேரங் காலமின்றி சாப் பிடுதல் போன்ற கட்டுப்பாடில்லாத வாழ்க்கை முறைகள். துரித உணவுகள், சதா நொறுக்குத் தீனி!

உணவுப் பழக்கம் மட்டுமல்ல - போதிய தூக்கமின்மை, மன அழுத்தம் போன்றவையும் திடீர் இதயத் தாக்குதலுக்கு முக்கிய காரணமாக அமைந்து விடுகிறது!

இரத்தக் கொதிப்பு ஒரு முக்கிய காரணி ஆகும்! சர்க்கரை நோய் காரணமாக சிறுநீர கங்கள் பழுதடைந்த நிலையில் அதுவும் இதய தாக்குதலை நடத்தி விடுகிறது!

மருத்துவர்கள் சர்க்கரை நோயாளிக்கு விடுக்கும் முக்கிய அறிவுரை, "உங்கள் உடலின் சர்க்கரை அளவு சற்றுக் கூடுதலானாலும்கூட பயப்படாதீர்கள். இதய அறுவைச் சிகிச்சை செய்து கொண்டவர்களுக்கு சர்க்கரை அளவு மிகக் குறைந்து விடக் கூடிய நிலை ஏற்படாமல் பார்த்துக் கொள்ளுங்கள் அது இதயத் துடிப்பை நிறுத்தி விடக் கூடிய மிகப் பெரிய ஆபத்தை கூட உருவாக்கும் வாய்ப்பு உள்ளது" என்பார்கள்.

எனவே இதய நோய் - மாரடைப்புக்கும் மற்ற மற்ற நோய்களுக்கும் அலை இழுத்துச் செல் வதைப்போல பலரை திடீரென மரணத்திற்கு இழுத்துச் செல்லும் அபாயத்தை உருவாக்கி விடும்.

வருமுன்னர் காப்பது முக்கியம் அல்லவா?

நாளும் போதிய நடைப் பயிற்சி (வயதுக்கு ஏற்ப - மருத்துவர் ஆலோசனைப்படி) உடற் பயிற்சி, நல்ல நண்பர்களுடன் பழகி மகிழ்தல், அதிக நேரம் தொடர்ந்து அமர்ந்தே இராமல், அடிக்கடி எழுந்து நடந்து மீண்டும் பணி தொடருதல் - இவற்றைப் போன்ற எளியவற்றைச் செய்யும் பழக்கத்தை அன்றாட வாழ்வில் ஏற்படுத்திக் கொள்ளுங்கள்! 

No comments:

Post a Comment