யூ-டியூபர் ஆட்களை - பொய்த் தயாரிப்பு தொழிற்சாலைகளை நிறைய வைத்திருக்கின்ற அமைப்புதான் ஆர்.எஸ்.எஸ். அமைப்பு!
பேசுவது முழுவதும் ஸநாதனம்; கையாள்வது முழுவதும் நவீன விஞ்ஞானம்!
சென்னை, செப்.16 யூ-டியூபர் ஆட்களை - பொய்த் தயாரிப்பு தொழிற்சாலைகளை நிறைய வைத்திருக்கின்ற அமைப்புதான் ஆர்.எஸ்.எஸ். அமைப்பு. அந்த அடிப்படையே இரண்டு முறை அவர்கள் வெற்றி பெறுவதற்குக் காரணம். பேசுவது முழுவதும் ஸநாதனம்; கையாள்வது முழுவதும் நவீன விஞ்ஞானம் என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.
ஸநாதனத்தை பி.ஜே.பி. தூக்கிப் பிடிக்கும் ரகசியம் என்ன? சிறப்புக் கூட்டம்!
கடந்த 12.9.2023 அன்று மாலை சென்னை பெரியார் திடலில் உள்ள நடிகவேள் எம்.ஆர்.இராதா மன்றத்தில் ‘‘ஸநாதனத்தை பி.ஜே.பி. தூக்கிப் பிடிக்கும் ரகசியம் என்ன?'' என்ற தலைப்பில் நடைபெற்ற சிறப்புக் கூட்டத்தில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சிறப்புரையாற்றினார்.
அவரது சிறப்புரை வருமாறு:
மிகக் குறுகிய காலத்தில் அறிவிக்கப்பட்டு, சிறப்பாக இந்த அரங்கத்தில் குழுமியிருக்கக்கூடிய பலதரப்பட்ட கருத்துள்ளவர்கள், இயக்கத்தவர்கள் மட்டுமல்ல, இயக்கத்திற்கு அப்பாற்பட்டவர்கள், தொலைக்காட்சி ஊடக நண்பர்கள் மற்றும் மிக முக்கியமான பொறுப் பாளர்களைக் கொண்ட இந்த வரலாற்று முக்கியத்துவம் பெறக்கூடிய ‘‘ஸநாதனத்தை பி.ஜே.பி. தூக்கிப் பிடிக்கும் ரகசியம் என்ன?'' என்ற தலைப்பில் நடைபெறக்கூடிய இந்தக் கூட்டத்திற்கு வருகை தந்துள்ள உங்கள் அனை வருக்கும் என்னுடைய அன்பான வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
எனக்கு முன் உரையாற்றிய அத்துணை பேரும், வரவேற்புரையிலிருந்து, சிறப்புரைகள் ஆற்றிய அனைவரும் ஒவ்வொருவரும் ஒரு புதிய செய்திகளைச் சொன்னார்கள். ஒருவர் பேசியதை இன்னொருவர் தொடவில்லை. இப்படி ஒட்டுமொத்தமாக பல செய்தி களைத் தெரிந்துகொண்டிருக்கின்ற நேரத்தில், இந்தக் காலகட்டத்தில் ஒன்று தெளிவாகி வருகிறது.
தேர்தல் எந்த நேரத்தில் நடத்தப்பட்டாலும், எதிர்க்கட்சிகளாக இருக்கக்கூடிய நாங்கள் அதை சந்திப்பதற்குத் தயாராகிவிட்டோம்!
அது என்னவென்றால், நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறவேண்டிய காலகட்டத்தைவிட, முன்பே நடத்தப்படுமா? என்கிற யூகம் இருந்தாலும், அந்தத் தேர்தல் எந்த நேரத்தில் நடத்தப்பட்டாலும், எதிர்க்கட்சி களாக இருக்கக்கூடிய நாங்கள் அதை சந்திப்பதற்குத் தயாராகிவிட்டோம் என்று ‘‘இந்தியா'' கூட்டணி சார்பில் அவர்கள் அறிவித்துவிட்டார்கள்.
‘‘திராவிட மாடல்’’ ஆட்சிதான்,
இந்தியாவிற்கு வழிகாட்டியது!
இதற்கு முதன்முதலாகத் தொடக்கப்புள்ளி எங்கே இருந்து ஆரம்பித்தது, அந்த சிந்தனை எங்கே இருந்து ஆரம்பித்தது என்று சொன்னால், தமிழ்நாடு ‘‘திராவிட மாடல்'' ஆட்சிதான், இந்தியா விற்கு வழிகாட்டியது.
ஏனென்று சொன்னால், வெறும் பதவிக்காக அல்ல; இங்கே அமைந்தது கொள்கை ரீதியான கூட்டணியாகும். சமூகநீதிக்கான சரித்திர நாயகர் ஒப்பற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், எதிர்க்கட்சியாக இருந்த அந்தக் காலகட்டத்தில், நம்மைப் போன்றவர்கள் பலர் - திராவிடர் கழகம் ஒருங்கிணைத்து, எல்லா முற்போக்குச் சிந்தனையாளர்களும் ஒரே அணியில் நின்ற காரணத் தினாலும், அவ்வப்பொழுது தமிழ்நாட்டு மக்களுக்கு ஏற்படக்கூடிய பிரச்சினைகள், மாநில உரிமைகளுக்கு ஏற்படக்கூடிய ஆபத்துகள் - காவிரிப் பிரச்சினையாக இருந்தாலும், நீட் போன்று மாணவர்கள் பிரச்சினையாக இருந்தாலும், அதையெல்லாம் எடுத்துச் சொல்லிச் சொல்லி, நல்ல கொள்கை ரீதியான ஒரு கூட்டணி அமைந்தது. அதனுடைய விளைவு - தேர்தல் கால கட்டத்தில் இன எதிரிகள் என்ன எதிர்பார்த்தார்கள் என்றால், பல கட்சிகள் கூட்டணி சேரும்பொழுது, அவர்கள் கேட்கின்ற தொகுதிகள் கிடைக்கக்கூடிய வாய்ப் புக் குறைவு. அதேநேரத்தில் அரசியலில் பல காரணங்கள் உண்டு. ஆகவே, அந்தக் கூட்டணி உடைந்துவிடும் என்று நினைத்தார்கள், ஒன்றியத்தை ஆளுகின்ற மோடி அவர்களும், ஆர்.எஸ்.எஸ்., பி.ஜே.பி., அமைப்பினரும், அவர்களோடு கூட்டுச் சேர்ந்த சிலரும் - ஆனால், அவர்கள் ஏமாந்துதான் மிச்சம்.
பா.ஜ.க. கூட்டணி உருவானது எப்படி என்றால், திரிசூலத்தால்தான்!
பா.ஜ.க. கூட்டணியில் சேருகின்ற ஒவ்வொருவரும் மிரட்டப்பட்டு, மிரட்டப்பட்டு பணிந்து வந்தவர்கள்; விரட்டி விரட்டி பயந்து வந்தவர்கள். சூலத்தைக் காட்டி, அதன் காரணமாக பயத்தால் சேர்ந்தவர்கள். அந்தக் கூட்டணியே உருவானது எப்படி என்றால், அந்த திரிசூலத்தால்தான்.
என்ன அந்த திரிசூலம் என்றால்,
சி.பி.அய்., அமலாக்கத் துறை - வருமான வரித் துறை ஆகியவற்றை வைத்துக்கொண்டு, யாரை வேண்டு மானாலும் மிரட்டி, எங்கள் அணியின் பக்கம் இழுத்துக் கொள்வோம் என்று சொல்லக்கூடிய அளவிற்கு வந்தார்கள்.
புதுச்சேரி ஆட்சி எப்படி வந்தது? அதுபற்றி உங்களுக்குத் தெளிவாகத் தெரியும். இன்றைக்கு எப்படி அந்த ஆட்சி இருக்கிறது?
ஆனால், அவர்களுடைய மிரட்டல் இந்தத் தமிழ் மண்ணில் நடக்காது என்று காட்டக்கூடிய அளவிற்குத் தெளிவாகி விட்ட காரணத்தினால் அந்த உணர்வு ஒருமுகப்பட்டு அப்படியே வளர்ந்தது; நல்ல அளவிற்கு வெற்றி பெற்றார்கள்.
ஆனால், ஆளுநர் என்ற பெயரில் தொல்லைகள். மாநிலத்திற்குத் தரவேண்டிய நிதியைக் கொடுக்காமல், ஒன்றிய அரசு நெருக்கடி கொடுக்கின்ற நிலை.
இவை அத்தனையையும் சமாளித்துக்கொண்டு தமிழ்நாட்டின் ‘திராவிட மாடல்' ஆட்சியை நல்ல முறையில் நடத்திக் கொண்டிருக்கிறார் நம்முடைய முதலமைச்சர்.
ஆனாலும், தமிழ்நாட்டு மக்களுக்கு தேர்தலின்போது நீங்கள் வாக்குறுதி கொடுத்தீர்களே, செய்தீர்களா? என்று கேள்வி எழுப்புகிறார்கள்.
இதேபோன்று, கருநாடக மாநில தேர்தலின்போது, காங்கிரஸ் கொடுத்த தேர்தல் வாக்குறுதியில், இலவச அரிசி கொடுப்போம் என்று சொன்னார்கள்.
கருநாடகா அரசுக்கு அரிசி கொடுக்க மறுத்து நெருக்கடியை உண்டாக்கியது ஒன்றிய அரசு
காங்கிரஸ் அமோக வெற்றி பெற்றது; அரிசியைக் கொடுக்கவேண்டும் என்று ஒன்றிய அரசிடம் கேட்டால், கொடுக்க மறுத்து நெருக்கடியை உண்டாக்கியது ஒன்றிய அரசு.
அரிசிக்குப் பதில் பணமாகக் கொடுத்துவிடுகிறோம் என்று கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றி வருகிறது கருநாடக காங்கிரஸ் ஆட்சி.
ஒன்றிய அரசு, எதிர்க்கட்சிகளுக்கு எந்தெந்த வகையில் நெருக்கடியை உண்டாக்க முடியுமோ, அப்படியெல்லாம் உருவாக்கி அப்படியாவது இவர்கள் மத்தியில் கலகம் வராதா? ஒருவருக்கொருவர் சண்டை போட்டு கூட்டணியிலிருந்து பிரிய மாட்டார்களா? என்று அவர்கள் கணக்குப் போட்ட நேரத்தில், அவர்களுடைய எதிர்பார்ப்பு என்பது - அது நிச்சயமாக நடைபெறாது என்ற அளவிற்கு ஆகிவிட்டது.
வரலாற்றை நீங்கள் தெரிந்துகொள்ளவேண்டும்!
ஏனென்றால், பீகாரில் நிதிஷ்குமார், தேஜஸ்வி ஆகியோர் யாரை அதிகமாகத் தொடர்புகொண்டு பேசினார்கள் என்கிற வரலாற்றை நீங்கள் தெரிந்து கொள்ளவேண்டும். நம்முடைய தமிழ்நாட்டு முதலமைச் சரைத்தான் தொடர்பு கொண்டார்கள்.
கலகத்தை உண்டு பண்ணலாம் என்று நினைத்தார்கள்!
‘இந்தியா' கூட்டணி என்ற பெயர் வைப்பதற்கு முன்பு, எதிர்க்கட்சிகள் எல்லோரும் ஒன்றாக இணை கிறார்கள் என்று சொன்னவுடன், அவர்களுக்குள் கலகத்தை உண்டு பண்ணலாம் என்று நினைத்தார்கள்.
ஏனென்றால், ஆரியத்தினுடைய தத்துவமே என்னவென்றால், கலகத்தை உண்டு செய்வது; பஞ்ச தந்திரம், மித்திர பேதம் - அவர்களுடைய தந்திரங்களில் பஞ்சதந்திரம் மிக முக்கியமானது. கலகத்தை உண்டாக்கலாம் என்று நினைத்தார்கள்; அது நடக்க வில்லை.
பீகாருக்கும் - தமிழ்நாட்டிற்கும்
ஒரு விரோதத்தை உருவாக்க....
பீகாருக்கும் - தமிழ்நாட்டிற்கும் ஒரு விரோதத்தை உருவாக்கவேண்டும் என்பதற்காகவே ஒரு செய்தியைக் கிளப்பிவிட்டனர்.
பீகார் போன்ற வடநாட்டிலிருந்துதான் தமிழ்நாட்டிற்கு கட்டட பணிகளுக்கு ஆட்கள் வருகிறார்கள்; ஏனென்றால், தமிழ்நாட்டில் இருக்கின்றவர்கள் எம்.பி.பி.எஸ்., இன்ஜினியரிங் படிப்பு படிக்க ஆரம்பித்து விட்டார்கள்; இங்கே கட்டட வேலை செய்யும் மேஸ்திரி பிள்ளைகள் இன்றைக்கு எம்.பி.ஏ., படித்திருக்கிறார்கள்; டாக்டர்களாக இருக்கிறார்கள், வழக்குரைஞர்களாக இருக்கிறார்கள். இதுபோன்ற நிலைக்கு வந்தவுடன், கட்டட வேலைக்கு ஆட்கள் இல்லை இங்கே. அதனால், பீகார், அசாம், உத்தரப் பிரதேசம் போன்ற வட மாநிலங்களிலிருந்து தமிழ் நாட்டிற்கு வேலை தேடி வருகிறார்கள்.
ஹிந்தி படித்தவர்களுக்கே நம்முடைய தமிழ்நாடுதானே
வேலை கொடுக்கிறது!
இதில் இன்னொரு வேடிக்கை என்னவென்றால், நம்மாட்கள் எல்லாம் மேடைகளிலும் கேட்க ஆரம்பித்துவிட்டார்கள், ‘‘ஹிந்தி படித்தால் வேலை கிடைக்கும்; ஹிந்தி படித்தால் வேலை கிடைக்கும் என்று சொல்கிறார்களே, ஹிந்தி படித்தவர்களுக்கே நம்முடைய தமிழ்நாடுதானே வேலை கொடுக்கிறது'' என்று.
தமிழ்நாட்டில் கட்டுமானப் பணிகளுக்கு, திருப்பூர் போன்ற பகுதிகளுக்கு பணியாற்ற வடநாட்டு இளை ஞர்கள் வருகிறார்கள்.
இந்நிலையில்தான் தமிழ்நாட்டில், பீகார்காரர்கள் கொல்லப்படுகிறார்கள் என்று ஒரு தவறான தகவல்களை திட்டமிட்டுப் பரப்பினார்கள்.
ஏன் இதை உருவாக்கினார்கள்?
இது ஒரு சாதாரண சம்பவம் என்று நினைக்க வேண்டாம்; திடீரென்று ஒரு நாளில் வந்த செய்தி என்று நினைக்கவேண்டாம். ஆர்.எஸ்.எஸ். அமைப்பு, எப் பொழுதும் எதையாவது செய்து கலவரத்தை உண்டாக்க வேண்டும்; பிரித்துவிடவேண்டும் என்பதற்காக செய்த முயற்சிதான் அது.
பேசுவது முழுவதும் ஸநாதனம்;
கையாள்வது முழுவதும் நவீன விஞ்ஞானம்!
யூ-டியூபர் ஆட்களை - பொய்த் தயாரிப்பு தொழிற்சாலைகளை நிறைய வைத்திருக்கின்ற அமைப்புதான் ஆர்.எஸ்.எஸ். அமைப்பு. அந்த அடிப்படையே இரண்டு முறை அவர்கள் வெற்றி பெறுவதற்குக் காரணம். பேசுவது முழுவதும் ஸநாதனம்; கையாள்வது முழுவதும் நவீன விஞ்ஞானம்.
அதுபோன்ற ஒரு பொய்யான செய்தியை பரப்பியவுடன், தமிழ்நாடு அரசு சும்மா இருக்கவில்லை. உடனடியாக நம்முடைய முதலமைச்சர் அவர்கள் அதற்கு மறுப்புச் சொன்னதோடு மட்டுமல்லாமல், 48 மணிநேரத்திற்குள் அந்தச் செய்தி பொய்ச் செய்தி; அதற்கு எந்தவிதமான ஆதாரமும் கிடையாது. தமிழ் நாட்டில் வடநாட்டு இளைஞர்கள்மீது எந்தவிதமான தாக்குதலோ, கலவரமோ, கொலையோ நடைபெற வில்லை என்று செய்தியை வெளியிட்டதோடு மட்டு மல்ல. நேரிடையாக பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் அவர்களிடம் தொலைப்பேசியில் தொடர்புகொண்டு பேசியதோடு மட்டுமல்ல, உடனடியாக நம்முடைய டி.ஆர்.பாலு போன்றவர்கள் சென்று, அவரிடம் விளக்கிச் சொன்னார்கள்.
பீகார் பார்ப்பனரான மணீஷ் பாஷ்யப்!
இந்தப் பொய்ச் செய்தியை பரப்புவதற்கு யார் காரணமாக இருந்தார் என்று கண்டுபிடித்தார்கள்; பீகார் பார்ப்பனரான மணீஷ் பாஷ்யப் என்பவர்தான்.
அந்தச் செய்திக்கு ஆதாரம் உண்டா? என்று கேட்டு, அவரை கைது செய்தது நம்முடைய அரசாங்கம்.
அந்தக் கைதைத் தவிர்ப்பதற்கு உச்சநீதிமன்றத்திற்குச் சென்று முயற்சி செய்தனர். ஆனால், அது நடைபெற வில்லை என்றவுடன், நிபந்தனை பிணை வாங்கிக் கொண்டு வெளியில் இருக்கிறார் அவர்.
இந்த நிகழ்வை ஏன் சொல்கிறேன் என்றால், ‘இந்தியா' கூட்டணி உருவாகும்போதே, எதிர்க்கட்சியினர் ஒன்றாக சேரும்போதே - அவர்களை சேர விடக் கூடாது என்று நினைத்தனர். அதனால்தான், பீகாருக்கும் - தமிழ் நாட்டிற்கும் இடையே ஒரு கலகத்தை உண்டு பண் ணலாம் என்று நினைத்தார்கள்.
ஏனென்றால், பீகார், உத்தரப்பிரதேசம் போன்ற இரண்டு மாநிலங்களும் பெரிய மாநிலங்களாகும். அம்மாநிலங்களில் வெற்றி பெற்றால், நிச்சயமாக ஒரு மாற்றம் ஏற்பட்டுவிடும் என்பதால்தான்.
ஆகவேதான், முதலில் அந்த முயற்சியை செய்து பார்த்தனர், அதில் தோல்வியுற்றனர்.
மேற்கு வங்கத்தில் மம்தாவும் - கம்யூனிஸ்டும் சேர மாட்டார்கள்; கேரளாவில், கம்யூனிஸ்டும் - காங்கிரசும் எதிர் எதிராக இருக்கிறார்கள்; ஆகவே, அவர்கள் ஒன்று சேரமாட்டார்கள் என்று நினைத்தார்கள்.
ஆனால், நம்முடைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், ஒரு சரியான வழி காட்டினார்.
பெரியாரிடமிருந்து ஒலித்த தத்துவம்தான்!
அந்த வழி என்பது ஏற்கெனவே பெரியாரிட மிருந்து ஒலித்த தத்துவம்தான். அந்த தத்துவத்தை மிக அழகாக நம்முடைய முதலமைச்சர் கையாண் டார்.
எப்படியென்றால், நம்மிடையே பல மாறுபட்ட எண்ணங்கள் இருந்தாலும், ஒன்றே ஒன்றில் நாம் தெளிவாக இருக்கவேண்டும். அந்த ஒன்றுதான் ‘இந்தியா' கூட்டணி உருவாவதற்கு அடித்தளம். அந்த ஒன்று என்ன?
அந்த ஓர் அம்சம் - திட்டம் என்னவென்றால், ‘‘யார் வரவேண்டும் என்பதைவிட, யார் வரக் கூடாது என்பதுதான் மிக முக்கியம்'' என்பதைத் தெளிவாக்கினார்.
அப்படி தெளிவாக்கியவுடன், அந்தக் கூட்டணியில் பாதி பேருக்கு மேல் புரிந்துகொண்டு சரியானார்கள்.
(தொடரும்)
No comments:
Post a Comment