விருதுநகரில் ஒரு கூட்டத்தில் ஜாதி மறுப்புத் திருமணத்தை ஆதரித்துப் பேசிய அண்ணா, "நீங்களெல்லாம் கும்பிடுகிற சுப்பிரமணிய சுவாமியே ஒரு வேட்டுவப் பெண்ணைக் கட்டிக்கிறப்ப, நீங்களும் அவர் வழியில் நடக்கிறதுல என்ன தப்பு?" என்று கேட்டார். ஒரு கல்லில் இரண்டு மாங்காய். ஒன்று, சாமியைக் கேலி செய்கிறார். அடுத்து தான் பேசுகிற கருத்துக்கு அதையே ஆதாரமாகக் காட்டுகிறார்.
"இப்படிப் பேச அண்ணாவை விட்டால் வேறு யாரு?" என்று சிலிர்த்துக் கொண்டது கூட்டம். ஜாதி மறுப்புத் திருமணங்கள், சடங்கு மறுப்புத் திருமணங்களை ஒரு அரசியல் செயல் பாடாகவே திராவிடர் கழகமும் தி.மு.க.வும் அக்காலகட்டத்தில் தொடர்ந்து செய்தாலும், சமூகங்கள் இடையேயான முட்டல் - மோதலாக அதை அவர்கள் மாற்றவில்லை.
கட்சிக்குள்ளேயேகூட காதலித்துத் திருமண முடிவை எடுப்பவர்களிடம் "கூடுமானவரை பெற்றோர் ஒப்புதலையும் ஆசியையும் பெற முயற்சியுங்கள். அங்கிருந்துதான் உங்கள் குடும்ப வாழ்வின் எல்லா வெற்றிகளும் தொடங்குகின்றன" என்பாராம் அண்ணா. பெரும்பாலான சுயமரியாதைத் திருமணங்கள் குடும்பத்தார் சூழ நடைபெறும் சூழலை உருவாக்கியது சுயமரியாதைத் திருமண இயக்கத்தின் முக்கியமான வெற்றிகளில் ஒன்று.
No comments:
Post a Comment