மதுரை: திராவிடர் கழக சட்டத்துறை கருத்தரங்கில் தமிழர் தலைவர் ஆசிரியர் சிறப்புரை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, September 5, 2023

மதுரை: திராவிடர் கழக சட்டத்துறை கருத்தரங்கில் தமிழர் தலைவர் ஆசிரியர் சிறப்புரை

ஒரு நாளை தேர்ந்தெடுத்து, ‘‘சமூகநீதி கோரிக்கை நாள்’’ என்று 
பார் கவுன்சிலில் தீர்மானம் நிறைவேற்றுங்கள்!

ஒவ்வொரு வழக்குரைஞர் சங்கத்திலும் தீர்மானம் போடுங்கள்
நாம் கேட்பது சலுகை அல்ல, பிச்சை  அல்ல - உரிமை! உரிமை!! உரிமை!!!

மதுரை, செப்.5  ஒரு நாளை தேர்ந்தெடுத்து, ‘‘சமூகநீதி கோரிக்கை நாள்'' என்று பார் கவுன்சிலில் தீர்மானம் நிறைவேற்றுங்கள்! ஒவ்வொரு வழக்குரைஞர் சங்கத் திலும் தீர்மானம் போடுங்கள்; ஒவ்வொரு தோழருக்கும், ஒவ்வொரு அமைப்பிற்கும் சொல்லுங்கள், இதில் கட்சியில்லை, ஜாதியில்லை, மதமில்லை,  சமூகநீதிக் கண்ணோட்டம் மட்டுமே இருக்கவேண்டும்! நாம் கேட்பது சலுகை அல்ல, பிச்சை  அல்ல - உரிமை! உரிமை!! உரிமை!!! என்றார்  திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.

திராவிடர் கழக சட்டத்துறை கருத்தரங்கம்

கடந்த 18.8.2023 அன்று மாலை மதுரை தமிழ்நாடு விடுதியில் நடைபெற்ற திராவிடர் கழக சட்டத் துறை கருத்தரங்கில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்  சிறப்புரை யாற்றினார்.

அவரது சிறப்புரையின் நேற்றையத் தொடர்ச்சி வருமாறு:

இதில் என்ன தவறு இருக்கிறது?

இதில் என்ன நியாயக் கேடு?

இதில் என்ன நீதிக்குப் புறம்பு?

தயவு செய்து சிந்தித்துப் பாருங்கள்.

இந்தக் கேள்வியே தவறா, என்பதை நினைத்துப் பார்க்கவேண்டும்.

வெகு சிறுபான்மையினரிடம் நாங்கள் கையேந்திக்கொண்டிருக்கின்றோம்!

தந்தை பெரியார் அவர்கள் இந்தக் கருத்தை அன்றைக்கே சொன்னார், ‘‘கடவுளைத் தூக்கிப் போடவேண்டும் என்று நான் சொல்லவில்லையே; எங்களையும் வாழ விடுங்கள்; நாங்கள் பெரும் பான்மை மக்கள்; வெகு சிறுபான்மையினரிடம் நாங்கள் கையேந்திக் கொண்டிருக்கின்றோம்; எங்களுடைய உரிமையை நாங்கள் விட்டுக் கொடுத்துவிட்டு, பிச்சைக்காரர்களைப்போல, நாங்கள் பிச்சை எடுத்துக் கொண்டிருக்கின்றோம்‘’ என்றார்.

பிச்சைக்காரர்கள் பெருநிலையில் இருக்கிறார்கள்; பிச்சை கொடுத்தவர்கள் இன்றைக்குப் பிச்சை கேட் கிறார்கள் என்பதை மாற்றி அமைப்பதற்குப் பெயர்தான் சமூகநீதி. அதை செய்கின்ற வாய்ப்புதான் திராவிடம் என்பது.

இதில் அரசியல் கிடையாது; முழுக்க முழுக்க சமூகநீதி தத்துவம். எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும், இந்திய அரசமைப்புச் சட்டத்தின்படிதானே நடைபெற வேண்டும்.

இதை உடைக்கவேண்டும்; அதை அழிக்கவேண்டும் என்று இப்பொழுது முயற்சிக்கிறார்கள். புத்தகத்தில் மேல் உள்ள அட்டை அப்படியே இருக்கிறது; ஆனால், உள்ளே உள்ள பக்கங்கள் செல்லரித்துப் போயிருக்கிறது; அது வெளியில் தெரியாததுபோன்று இருக்கிறது.

எந்த அரசமைப்புச் சட்டத்திற்கும் இல்லாத பெருமை, அண்ணல் அம்பேத்கர் அவர்கள் உருவாக்கிய நம்முடைய அரசமைப்புச் சட்டத்திற்கு இருக்கிறது. நீங்கள் எல்லாம் அறிவார்ந்த மக்கள், வழக்குரைஞர்கள் நன்றாக எண்ணிப் பார்க்கவேண்டும்.

We the People of India, having solemnly resolved to constitute India into a SOVEREIGN SOCIALIST SECULAR DEMOCRATIC REPUBLIC and to secure to all its citizens.

JUSTICE, social, economic and political;

LIBERTY of thought, expression, belief, faith and worship;

EQUALITY of status and of opportunity; and to promote among them all

FRATERNITY assuring the dignity of the individual and the unity and integrity of the Nation;

எப்படிப்பட்டது இந்த நாடு? அரசமைப்புச் சட்டத்தில் முதலில் இருப்பது சமூகநீதி தானே!

இந்திய அரசமைப்புச் சட்டத்தின்மீதுதானே குடி யரசுத் தலைவரிலிருந்து பஞ்சாயத்துத் தலைவர்வரை பதவிப் பிரமாணம் எடுத்துக் கொள்கிறார்கள்.

அரசியல் நீதி கடைசி; பொருளாதார நீதி இரண்டாவது; முதலில் சமூகநீதிதான். அந்த சமூகநீதி அடிப்படையில் பார்த்தால் நண்பர்களே, தமிழ்நாட்டில் எல்லாத் துறைகளிலும் இட ஒதுக்கீடு வந்திருக்கிறது. நாம் பாடுபட்டோம், அய்யா சொன்னதினால்; வயது வந்தவர்களுக்கு வாக்குரிமை வந்து, தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு ஆட்சி அமைக்கிறது. அதனால், தமிழ்நாட்டில் 69 சதவிகித இட ஒதுக்கீடு, 9 ஆவது அட்டவணைப் பாதுகாப்போடு இருக்கின்ற ஒரே மாநிலம் இந்தியா விலேயே தமிழ்நாடுதான்.

அரசமைப்புச் சட்டப்படி நாம் பெற்றிருக்கின்ற உரிமை

சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதிகளுடைய நிலைமை என்ன? இதை நன்றாக நீங்கள் எண்ணிப் பார்க்கவேண்டும். இது நம்முடைய உரிமை அல்லவா! நாம் வரிப் பணம் கொடுக்கின்றோம் அல்லவா! அந்த வரிப் பணம்தானே, அரசாங்கத்திற்குச் செல்கிறது. அரசமைப்புச் சட்டப்படி நாம் பெற்றிருக்கின்ற உரிமை அது.

அந்த உரிமையில் பார்த்தீர்களேயானால், சென்னை உயர்நீதிமன்றத்தின் நீதிபதிகளில் பெரும்பாலானோர் ஒரே ஜாதிக்காரர்கள் பார்ப்பனர்கள்; நமக்கொன்றும் தனிப்பட்ட முறையில் யார்மீதும் வெறுப்பு கிடையாது. அப்படிப்பட்ட சூழ்நிலையில், 13 பேருக்கு என்ன விகிதாச்சாரம்? 21 சதவிகிதம்  - 5 மடங்கு. இப்பொழுது எப்படி தந்திரம் செய்கிறார்கள் தெரியுமா? எனக்கு முன் உரையாற்றிய அய்யா நீதிபதி அரிபரந்தாமன் அவர்கள் சொன்னார்.

முதலில் கொத்துக் கொத்தாக அனுப்பினார்கள். தொடக்கக் காலத்தில் நிறைய பேர் இருந்தார்கள். பெரிய அளவிற்கு போராட்டம் நடத்தி, ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தினோம். எம்.ஜி.ஆர். அவர்கள் முதலமைச்சராக இருந்த காலகட்டத்தில்,, மும்பையிலிருந்து வந்த ஒருவர் சென்னை உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதியாக இருந் தார்; அவர் 6 பேரையும் பார்ப்பனராகவே நியமனம் செய்யச் சொல்லி, பரிந்துரை செய்தார்.

இந்தச் செய்தியை முதலமைச்சர் எம்.ஜி.ஆர். அவர்களின் கவனத்திற்குக் கொண்டு சென்றோம். 

அதை அவர் புரிந்துகொண்டு, என்ன செய்யலாம்? என்று கேட்டார்.

உயர்நீதிமன்ற வாயில் வரையில் செல்லுங்கள்!

அப்பொழுது எம்.ஜி.ஆரின் அமைச்சரவையில் சட்ட அமைச்சராக இருந்தவர், இன்றைக்கும் இருக்கிறார், சாட்சியாக. ‘‘அவரையே ஒரு கிளர்ச்சிப் போராட்டம் நடத்தச் சொல்லுங்கள்; மீதியை நான் பார்த்துக் கொள்கிறேன். உயர்நீதிமன்றத்திலேயே உங்களுடைய கோரிக்கையை அளியுங்கள்’’ என்றார்.

முதலமைச்சராக எம்.ஜி.ஆர். அவர்கள் இருந்த தமிழ்நாடு  அரசு அந்தக் கோப்பில் என்ன எழுதியது என்றால், The soil psychology of Tamilnadu will not tolerate this. So it will be problem for me as Law and Order problem என்று.

அதற்கு முன்பு என்ன சொன்னார் என்றால், உங்கள் பேரணியை சென்னை உயர்நீதிமன்ற வாயில் வரையில் கொண்டு செல்லுங்கள் என்றார்.

சென்னை உயர்நீதிமன்ற வாயில் வரையில் அதற்கு முன் எந்தக் கிளர்ச்சியும் நடைபெற்றது கிடையாது. ஆனால், எங்களை அனுமதித்தார்கள்.

அன்றைக்குத் தலைமை நீதிபதி விடுப்பில் இருந்தார்; பதிவாளரிடம் எங்களுடைய கோரிக்கையை அளித் தோம்.

அதற்குப் பிறகு அந்த நிலை மாறியது.

இப்பொழுது என்ன செய்கிறார்கள் என்றால், ‘‘தந்திர மூர்த்தி போற்றி'' என்று ‘ஆரிய மாயை'யில் அண்ணா அவர்கள் சொன்னார்.

தந்திரங்களால்தான் அவர்கள் வெல்கிறார்கள்!

இப்பொழுது தந்திரங்களால்தான் அவர்கள் வெல் கிறார்கள். எப்படி என்றால், மூன்று, நான்கு நீதிபதிகளைப் பரிந்துரை செய்வது; அதில் ஒரு பார்ப்பனரை நுழைப் பது. இப்படியாக ஒவ்வொரு முறையும் ஒன்றிரண்டு பார்ப்பனர்களை உள்ளே நுழைக்கிறார்கள்.

எப்படியாக இருந்தாலும், அதற்கு ஒரு முடிவு கட்டியாகவேண்டிய சூழ்நிலை இருக்கிறது.

அதேபோன்று உச்சநீதிமன்றத்தில் என்ன சூழ்நிலை என்பதைப்பற்றியும் அய்யா நீதிபதி பரந்தாமன் அவர்கள் சொல்லிவிட்டார்.

உச்சநீதிமன்றத்தில் 34 நீதிபதிகளில், ஒரே ஒரு எஸ்.சி. சமூகத்தைச் சேர்ந்தவர். ஒன்றோ, இரண்டோ பிற் படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்கள். அதிலும் தமிழ்நாட்டிலிருந்து சென்றவர் ஒருவர்.

நீதிபதி இரத்தினவேல் பாண்டியன்

இந்த நேரத்தில் அய்யா நீதிபதி இரத்தினவேல் பாண்டியன் அவர்களை மரியாதையோடு நினைத்துப் பாராட்டவேண்டும் அவருடைய முயற்சியை, துணிச் சலை.

மண்டல் கமிசனுக்குத் தனியே அறிக்கை எழுதினார். இந்திரா  - சகானி வழக்கில், அவருடைய தீர்ப்பினை.

அப்பொழுது நடந்ததை எங்களிடம் சொன்னார்; மிக உருக்கமான செய்தி அது. அதை உங்களோடு இப் பொழுது பகிர்ந்துகொள்கிறேன்.

மண்டல் கமிசன் தீர்ப்பு வந்தபொழுது நாங்கள் அய்யா நீதிபதி இரத்தினவேல்பாண்டியன் அவர்களை சந்தித்தபோது -

அப்பொழுது அவர் சொன்னார், ‘‘நாங்கள் 9 பேர் நீதிபதிகளாக அமர்ந்திருந்தோம். ஜீவன்ரெட்டி அவர்கள் தீர்ப்பு எழுதினார், பெரும்பான்மை தீர்ப்பு என்கிற முறையில். எல்லோரும் ஒப்புக்கொண்டார்கள்; சில பேர் தனித்தனியாக தீர்ப்பு எழுதினார்கள்.

நீதிபதி ஜீவன்ரெட்டி அவர்கள், ‘‘மிஸ்டர் பாண்டியன், நீங்கள் என்ன சொல்கிறீர்களோ, அதை நாங்கள் எழுதுகிறோம்; நீங்கள் தனியே எழுதவேண்டாம்‘’ என்று எனக்கு அழுத்தம் கொடுத்தார்கள்.

ஆனால், நான் அதை மறுத்து, நான் தனியேதான் எழுதுவேன்; உங்களோடு சேர்ந்து எழுத முடியாது. இதற்காக உங்களை நான் மரியாதைக் குறைவாக நினைக்கிறேன் என்று நினைக்கவேண்டாம்; அதற்கு சில காரணங்கள் இருக்கிறது என்றேன்.

‘‘உங்களுடைய கருத்தை நாங்கள் தெரிந்துகொள்ள லாமா?’’ என்று என்னிடம் கேட்டார் அவர்.

குற்றப்பரம்பரை என்று எங்களை வைத்திருந்தார்கள்!

இதில் ஒன்றும் ரகசியம் கிடையாது. ஒன்றே உங் களுக்குச் சொல்கிறேன், 9 பேர் உங்களோடு அமர்ந் திருந்தேன் அல்லவா? நான் யார் என்று தெரியுமா? இந்த இடத்திற்கு எப்படி வந்தேன் என்று தெரியுமா? எங்கள் சமுதாய ஆட்களை எல்லாம் நாள்தோறும் காவல் நிலையத்திற்குச் சென்று கையெழுத்துப் போட வேண்டும்; குற்றப்பரம்பரை என்று எங்களை வைத் திருந்தார்கள்.

நாங்கள் என்ன குற்றம் செய்தோம்? எங்களைப் போய் குற்றப்பரம்பரை என்று சொன்னார்கள்.''

சீர்மரபினர் என்று பெயர் வைத்தவர் முத்தமிழறிஞர் கலைஞர்

(இன்றைக்கு நாம் முத்தமிழறிஞர் கலைஞர் அவர் களின் நூற்றாண்டு விழாவினைக் கொண்டாடிக் கொண் டிருக்கின்றோம். அந்தக் கலைஞர் என்ன செய்தார் தெரியுமா? குற்றப்பரம்பரையினர் என்று சொல்லப்பட்டு வந்த அந்த சமுதாயத்திற்கு ‘‘சீர்மரபினர்’’ என்று அழகான தமிழில் பெயர் வைத்தார். திராவிடம் இல்லையென்றால், இந்த நாட்டில், இவ்வளவு பெரிய அளவிற்கு மனிதத் தன்மை வந்திருக்காது).

நீதிபதி இரத்தினவேல்பாண்டியன் மேலும் தொடர்ந் தார், ‘‘நாங்கள் மாலை நேரத்தில் காவல் நிலையத்தில் கையெழுத்துப் போடவேண்டும் என்று எங்கள் மூதா தையர்கள் கட்டாயப்படுத்தப்பட்டனர். அதை மாற்றி அமைத்ததுதான் சமூகநீதி. அந்த சமூகநீதியால்தான், நான் உங்களோடு அமர்ந்திருக்கின்றேன்.

ஆகவே, அதற்காக நான் யாருக்கு நன்றி செலுத்தவேண்டுமோ, அவர்களுக்கு நான் தனிப்பட்ட முறையில் நன்றி சொல்லவேண்டும்'' என்று கூறினார். 

தந்தை பெரியாரில் தொடங்கி, அண்ணல் அம்பேத்கர், லோகியா போன்றவர்களுக்கு நன்றி சொல்லி அவருடைய தீர்ப்பில் குறிப்பிட்டிருந்தார்.

அறிவு, ஆற்றல்

 எங்களுடைய நீதிபதிகளுக்கு உண்டு!

நேரடியாக அவர் தீர்ப்பு எழுதினார் என்பதை விட, வி.பி.சிங் அவர்கள் மண்டல் கமிசன் விவாதத்தின்பொழுது, நாடாளுமன்றத்தில் என்ன சொன்னாரோ, அதை அப்படியே நாடாளுமன்ற கோப்பை எடுத்து, அதிலிருந்த வார்த்தையையே நம்முடைய நீதிபதி இரத்தினவேல் பாண்டியன் அவர்கள் அப்படியே எடுத்துப் போட்டு, அவர் களுக்கு மரியாதை செலுத்துவதை நான் வரவேற்கிறேன் என்று சொன்னார். வி.பி.சிங்கும் அப்படி சொன்னார்; உச்சநீதிமன்றமும் அப்படி சொன்னது என்பதை சொல்லக்கூடிய சாமர்த்தியம், அறிவு, ஆற்றல் எங்களுடைய நீதிபதிகளுக்கு உண்டு. அவர்களுடைய தகுதி திறமையில் ஒன்றும் குறைவில்லை.

ஆனால், இன்றைக்கு என்ன சூழ்நிலை?

Of the 604 high court judges appointed in the last five years, 72 belong to the Other Backward Classes category, 18 belong to the Scheduled Castes category, and only nine belong to the Scheduled Tribes (ST) category. Only 34 of the 604 judges belong to minority communities.

நாடாளுமன்றத்தில் ஒன்றிய சட்ட அமைச்சரின் ஒப்புதல்!

நாடாளுமன்றத்தில் 21.7.2023 அன்று ஒன்றிய சட்ட அமைச்சர் ஒரு கேள்விக்குப் பதில் சொன்னபொழுது, இந்தியா முழுவதும் உயர்நீதிமன்றங்களில் உள்ள நீதிபதிகளின் எண்ணிக்கை 604.

அதில், 

எஸ்.சி., 18 பேர் - 3 சதவிகிதம். ஆனால், இவர்களுக்கு நியாயமாக எத்தனை சதவிகிதம் கொடுக்கவேண்டும் என்றால், 15 சதவிகிதம். ஆனால், பிச்சை போட்டது போன்று அவர்களுக்கு மூன்று சதவிகிதம்தான் - அதுவும் தமிழ்நாடு போன்ற தென் மாநிலங்களில்தான்; வட மாநிலங்களில் கிடையாது.

அதேபோன்று எஸ்.டி., (பழங்குடியினர்) - 9 பேர்தான். நியாயமாக அவர்களுக்கு 7.5 சதவிகிதம் கொடுக்க வேண்டும். ஆனால், 1.5 சதவிகிதம்தான் மீதமுள்ள 6 சதவிகிதம் காணாமல் போய்விட்டது.

ஓ.பி.சி. (பிற்படுத்தப்பட்டவர்கள்) - 72 பேர்தான். 12 சதவிகிதம்தான். அந்த 12 சதவிகிதமும் தென்மாநிலங் களில்தான்.

மைனாரிட்டி சமுதாயத்தினரில் 34 நீதிபதிகள்தான்.  வெறும் 5.6 சதவிகிதம்தான்.

Category not known  என்று ஒன்று இருக்கிறது, அது 2 சதவிகிதம்தான்.

உயர்ஜாதிக்காரர்கள், முன்னேறிய ஜாதிக்காரர்கள், பார்ப்பனர்கள் - 76 சதவிகிதம்

மீதம் எல்லாம் ‘ஜெனரல்' என்ற வார்த்தையைப் போடுகிறார்கள். ‘ஜெனரல்' என்றால் என்ன அர்த்தம் என்றால், உயர்ஜாதிக்காரர்கள், முன்னேறிய ஜாதிக் காரர்கள், பார்ப்பனர்கள் - அவர்கள் 76 சதவிகிதம்.

76 சதவிகிதம்; இதைப் படித்தால், நல்ல ரத்தம் ஓடுகிறவர்கள் எல்லாம் கொதித்தெழவேண்டாமா? மற்றவர்களுக்கு ஆத்திரம் வருகிறதோ, இல்லையோ, வழக்குரைஞர்களுக்கு ஆத்திரம் வரவேண்டும் அல்லவா!

ஒவ்வொரு வழக்குரைஞர் சங்கத்திலும் தீர்மானம் போடுங்கள்!

தயவு செய்து, இதற்குப் பிறகாவது, நீங்கள் பெரிதாக ஒன்றும் செய்யவேண்டாம்; நாங்கள் சிறைச்சாலைக்குப் போவதற்குத் தயாராக இருக்கிறோம்; நீங்கள் சிறைச்சாலைக்கு வரவேண்டாம்; நீங்கள் குறைந்தபட்சம், ஒவ்வொரு வழக்குரைஞர் சங்கத்திலும் இந்தத் தீர்மானத்தை வைத்துத் தீர்மானம் போடுங்கள்; எங்களுக்கு உரிய பங்கை கொடுங்கள்; அரசமைப்புச் சட்டத்தில் சொல்லப்பட்டு இருக்கின்ற சமூகநீதிப் படி எங்களுக்கு உரிய சதவிகிதத்தைக் கொடுங்கள் என்று. நாடு தழுவிய அளவில் வழக்குரைஞர்கள் இதற்காக முன்வரவேண்டாமா? சில அற்பக் காரணங்களுக்கெல்லாம் நீதிமன்றத்தைவிட்டு வெளியே வருகிறேன் என்கிறீர்கள். தனிப்பட்ட ஒரு நபருக்குப் பிரச்சினை என்றாலும் நீதிமன்றத்தைப் புறக்கணிக்கிறோம் என்று சொல்கிறீர்களே, நாம் சலுகை கேட்கவில்லை நண்பர்களே, நம்முடைய உரிமையைக் கேட்கிறோம். 

ஆகவேதான், இதை மிக முக்கியமாக சொல்கிறேன்.

நாங்கள் போராட்டம், போராட்டம் என்று போராடிக் கொண்டிருந்தோம்!

அவர்கள் என்ன தந்திரம் செய்கிறார்கள் என்றால், சென்னை உயர்நீதிமன்றத்தில் உள்ள பார்ப்பனர்கள்  13 நீதிபதிகளும் ஒரே ஜாதி என்று அவர்கள் இருந்தார்கள்; அதற்குப் பிறகு மாறியதே! ஒவ்வொரு முறையும் நாங்கள் போராட்டம், போராட்டம் என்று போராடிக் கொண்டிருந்தோம்.

முதலமைச்சர் கலைஞரோடு உரையாடிக் கொண்டிருக்கும்பொழுது, இந்தக் கட்சி, அந்தக் கட்சி என்று பார்க்காதீர்கள்; அவர்களுடைய பெயரை பரிந்துரை செய்யுங்கள் என்பார்.

அங்கே இருக்கும் சிலர், ‘‘அவர் எதிர்க்கட்சியில் வழக்குரைஞராக இருந்திருக்கிறாரே, அவருடைய பெயரை பரிந்துரை செய்யலாமா?’’ என்பார்கள்.

அரசியல் கண்ணோட்டம் இருக்கக் கூடாது என்றார் கலைஞர்!

உடனே கலைஞர் அவர்கள், ‘‘இதில் அரசியல் எல்லாம் பார்க்கக் கூடாது; நம்மாட்கள் நீதிபதிகளாக வரவேண்டும்; அவர் எதிர்க்கட்சியாக இருந்தாலும் பரவாயில்லை; நாம் அதைத் தடுத்தாலும், ஆசிரியர் அதைவிட மாட்டார்; அதற்காக வாதாடுவார். நமக்கு விரோதமாக இருந்தாலும், இதில் அரசியல் கண்ணோட்டம் இருக்கக் கூடாது’’ என்று சொல்வார்.

அப்படி பரிந்துரைக்கப்பட்ட ஒருவர் நீதிபதியானவுடன், சில   கோளாறுகளை செய்தபொழுது,  என்னை அழைத்து, ‘‘என்ன ஆசிரியர், நீங்கள் வாதாடினீர்கள், அவரைப் பரிந்துரை செய்து நீதிபதியாக்கினோம்; இப்பொழுது அவர் செய்கின்ற வேலையைப் பாருங்கள்’’ என்றார்.

‘‘இதோ பாருங்கள், நம்மாட்கள் எல்லாம் அப்படித்தான் இருப்பார்கள்; இருந்தாலும், அதை செய்யவேண்டும் என்பதுதான் பெரியாருடைய கொள்கை’’ என்றேன்.

‘‘நீதிபதியாகப் பதவி ஏற்கும்முன், நான், ‘நான்-பிராமின்’ என்கிறான்; நீதிபதியாகப் பதவியேற்ற பிறகு, நான்பிராமின் என்று இடைவெளி விட்டுவிடுகிறான். என்ன செய்வது?’’ என்றார்.

நம்மாட்கள் மிகப்பெரிய அளவிற்கு வரவேண்டும்; நாம் சும்மா இருந்தால் போதாது; ‘‘அழுத பிள்ளைதான் பால் குடிக்கும்'' என்பதுபோன்று, நீங்கள் போராட்டக் களத்திற்கு வரவேண்டும் என்றுகூட சொல்லவில்லை; உங்கள் சங்கத்தில் நீங்கள் தீர்மானம் போடுங்கள். 

ஒரு நாளைத் தேர்ந்தெடுத்து, சமூகநீதி கோரிக்கை நாள் என்று பார் கவுன்சிலில் - நீதிபதிகளுக்கு முன் அதனை செய்யுங்கள்.

சமூகநீதி வெல்லும் - திராவிடம் வெல்லும்!

சட்டத்திற்கு விரோதமாக செய்யுங்கள் என்று சொல்லவில்லையே! இதுபோன்று தொடர்ந்து தமிழ்நாட்டில், தென்னாட்டில் வந்தது என்றால், அது இந்தியா முழுவதும்வரும். இன்னும் ஆறே மாதங்களில் ஒன்றியத்தில் ஆட்சி மாறக் கூடிய சூழ்நிலை வந்திருக்கின்ற காலகட்டத்தில், நிச்சயமாக சமூகநீதி வெல்லும் - திராவிடம் வெல்லும் - அதை நாளைய வரலாறு சொல்லும்.

இந்த மாநாட்டினை சிறப்பாக ஏற்பாடு செய்த தோழர்களுக்கு நன்றி!
மீண்டும் சந்திப்போம்!

காலம் இல்லை; ஆனால், காலத்தைக் குறை சொல்லாமல், காலம், பருவம் பார்க்காமல் கடமையாற்றுவதற்கு நீங்கள் உறுதியோடு செல்லுங்கள்.

ஒவ்வொரு வழக்குரைஞர் சங்கத்திலும் தீர்மானம் போடுங்கள்; ஒவ்வொரு தோழருக்கும், ஒவ்வொரு அமைப்பிற்கும் சொல்லுங்கள், இதில் கட்சியில்லை, ஜாதியில்லை, மதமில்லை,  சமூகநீதிக் கண்ணோட்டம் மட்டுமே இருக்கவேண்டும்!

நாம் கேட்பது சலுகை அல்ல, பிச்சை  அல்ல - உரிமை! உரிமை!! உரிமை!!!

வாழ்க பெரியார்!

வளர்க சமூகநீதி!

நன்றி, வணக்கம்!

- இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் உரையாற்றினார்.

No comments:

Post a Comment