எங்களுக்கு வண்ணங்கள் முக்கியமல்ல; எண்ணங்களே முக்கியம்!நாட்டில் இரண்டே அணிகள்தான்!
சனாதனத்தை ஆதரிக்கின்ற அணி -
சனாதனத்தை ஒழிக்கின்ற அணி!
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம்:
சென்னை, செப்.3 சனாதனம் ஒழியட்டும் - சமதர்மம் வெல்லட்டும் என்று சொல்லக்கூடிய இரண்டே அணிகள்தான். சனாதனத்தை ஆதரிக்கின்ற அணி ஒரு பக்கம்; சனாதனத்தை ஒழிக்கின்ற அணி இன்னொரு பக்கத்தில் என்று, மக்களைப் பக்குவப்படுத்த, நாடு தழுவிய அளவில், சுனாமி வேகத்தில் பிரச்சாரங்கள் நடைபெறட்டும் என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.சனாதன ஒழிப்பு மாநாடு
நேற்று (2.9.2023) காலை முதல் மாலை வரை சென்னை காமராசர் அரங்கத்தில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் சார்பில் நடைபெற்ற ‘‘சனாதன ஒழிப்பு மாநாட்டில்'' திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தொடக்கவுரையாற்றினார்.
அவரது தொடக்கவுரை வருமாறு:
மனிதத்திற்கு விரோதமானது சனாதனம்
இந்நாள் வரலாற்றுப் பொன்னாள் என்ற மகிழ்ச்சியோடு உங்களையெல்லாம் சந்திக்கக் கூடிய ஓர் அரிய வாய்ப்பில், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் சார்பில் ஓர் அற்புதமான சிறப்பான - இந்தியாவிற்கே வழிகாட்டக் கூடிய, ஏன் இன்னும் சற்று விரிவாக சொல்லவேண்டுமானால், உல கத்திற்கே வழிகாட்டக் கூடிய அளவிற்கு, ஏனென்றால், மனிதத்திற்கு விரோதமானது சனாதனம்; எனவேதான், மனிதத்தைக் காப்பாற்றுவது உலகம் முழுவதும் இருக் கின்ற மக்களுடைய கடமை. உலகளாவிய அளவிலே மனிதம் என்று சொன்னால், அதற்கு நேர் விரோதமானது சனாதனம்.
உலகளாவிய அளவில் என்று பெருமைக்காக சொல்லவில்லை; மனிதத் தன்மைக்காக, மானுடத்திற் காகத்தான் மண்பதை என்பதை எடுத்துச் சொல்லக்கூடிய இந்த மாநாட்டில், நான் கலந்துகொள்வதிலும், தொடக்கி வைப்பதிலும் உவகை அடைகிறேன். பெருமைக்குரிய இந்த மாநாட்டில் எல்லா முற்போக்குக் கருத்துள்ள வர்களும் இருக்கிறார்கள்.
அதுமட்டுமல்ல, நம்முடைய இந்து அறநிலையப் பாதுகாப்புத் துறை அமைச்சர் அவர்கள் சிறப்பு விருந்தினராக இங்கே வந்து அமர்ந்திருக்கின்றார். அவர் காவி வேட்டி அணிந்து வந்திருக்கிறார்.
எங்களுக்கு வண்ணங்கள் முக்கியமல்ல, எண்ணங்கள்தான் முக்கியம்!
காவிகளிலும் சனாதனத்தை எதிர்க்கிறவர்கள், ஒழிக்கிறவர்கள் இருக்கிறார்கள்; எங்களுக்குத் தனி மனித வெறுப்பு கிடையாது. எங்களுக்கு வண்ணங்கள் முக்கியமல்ல, எண்ணங்கள்தான் முக்கியம் என்று சொல்லக் கூடிய அளவில், மிகத் தெளிவாக அவரை முன்னிறுத்திப் பார்க்கின்றபொழுது, இது ஒரு குறிப் பிட்டவர்களுடைய கூட்டமல்ல - ஒரு தத்துவ ரீதியான ஒரு போர்.
தத்துவ ரீதியாக இப்பொழுது ஏற்பட்டு இருக்கின்ற மிகப்பெரிய நோயை எதிர்த்துப் போராடி வரக்கூடிய நிலைக்கு ஒரு வாய்ப்பு என்ற அடிப்படையில் இம் மாநாடு அமைந்துள்ளது. இம்மாநாட்டிற்கு வரவேற் புரையாற்றிய, பூபாளம் கலைக்குழு மூலமாக நாடு தழுவிய அளவில், நல்லதொரு பகுத்தறிவுப் பிரச் சாரத்தை, நீண்ட காலமாக சனாதன எதிர்ப்பை, மூட நம்பிக்கை எதிர்ப்பை, மனிதநேய வளர்ப்பை நடத்திக் கொண்டிருக்கக் கூடிய அருமைத் தோழர் பூபாளம் பிரகதீசுவரன் அவர்களே,
வரவேற்புக் குழுத் தலைவர் அன்பிற்குரிய தோழர் அம்மையார் ரோகிணி அவர்கள், மிகுந்த உற்சாகத்தோடு, அவரை இன்றைக்குத்தான் நான் நேரில் சந்தித்திருக் கின்றேன்; அவரை வேறு வகையில் திரைத்துறையில், மற்ற இடங்களில் அறிந்திருந்தாலும்கூட, அதிகமாக எனக்கு அவரைபற்றித் தெரியாவிட்டாலும், இவ்வளவு முற்போக்கான கருத்துத் தெளிவும், துணிவும் உள்ள வர்கள் அந்தத் துறையில் இருப்பது என்பது மிகவும் அபூர்வமான ஒன்றாகும்.
ஏனென்றால், அந்தத் துறையில் பல வகையான சிக்கல்கள் உண்டு. அந்தத் துறையில் அவர்கள் துணிந்து, வாழ்வு முக்கியமல்ல, மனிதனுக்குக் கொள்கையே முக் கியம் என்பதை அவர் முன்னிறுத்தி, சிறப்பாக அவருடைய பணிகளைச் செய்திருக்கிறார்.
ரோகிணி சி.பி.எம். என்று பதிவு செய்தார் அமைச்சர்!
நம்முடைய அமைச்சர் கேசகர்பாபு அவர்கள் நிகழ்ச்சி என்றால், ஓராண்டு முழுவதும் நடத்தக்கூடியவர். நான் அவர் அருகில் அமர்ந்து கேட்டுக்கொண்டிருந்தேன், தோழர் ரோகிணி அவர்களுடைய தொலைப்பேசி எண்ணை கேட்டுப் அவருடைய செல்பேசியில் பதிவு செய்தார். அந்தப் பதிவில், ரோகிணி சி.பி.எம். என்று பதிவு செய்திருந்தார்.
அவருடைய முகவரி சி.பி.எம். இந்தத் துணிச்சல்படி ஒரு ரோகிணி அல்ல - ஆயிரம் ரோகிணிகள் வருவார்கள்; வரவேண்டும். அவர்கள்தான் சனாதன ஒழிப்புப் போரிலே வரவேண்டியவர்கள் - தோழர் ரோகிணி அவர்களே,
மாநாட்டிற்குத் தலைமை தாங்கக் கூடிய தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் மாநில தலைவரும், நம்முடைய ‘தீக்கதிர்' நாளிதழின் பொறுப் பாசிரியருமான அன்பிற்குரிய அருமை எழுத்தாளர் பேச்சாளர் அருமைத் தோழர் மதுக்கூர் ராமலிங்கம் அவர்களே,
இந்நிகழ்வில் சிறப்பான வகையில், மாநாட்டுப் பிரகடனத்தை முன்மொழிந்திருக்கின்ற - இந்த அமைப் பினுடைய பொதுச்செயலாளரும், சிறந்த சிந்தனை யாளரும், எழுத்தாளருமான அருமைத் தோழர் ஆதவன் தீட்சண்யா அவர்களே,
மாநாட்டிற்கு நன்றி கூறவிருக்கின்ற சைதை ஜெ அவர்களே,
இளைஞர்களின் நம்பிக்கை நட்சத்திரம்!
இந்நிகழ்விற்கு அடுத்ததாக வரக்கூடிய தமிழ்நாட்டு இளைஞர்களின் நம்பிக்கை நட்சத்திரமாகவும், மற்றவர் களுக்கெல்லாம் சுடச் சுட பதில் சொல்லக்கூடியவராகவும், அமைச்சர் பதவியைவிட, எனக்குக் கொள்கைப் பொறுப்புதான் மிக முக்கியம் என்றும் இருக்கக்கூடிய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் கொள்கை வீரர் மாண்புமிகு மானமிகு உதயநிதி ஸ்டாலின் அவர்களே,
இந்தத் தொகுதியின் சட்டப்பேரவை உறுப்பினர் பகுத்தறிவாளர் எழிலன் நாகநாதன் அவர்களே,
அருமைத் தோழர் இந்திய வழக்குரைஞர் சங்கத்தின் மாநில செயலாளர் சிவக்குமார் அவர்களே,
மூத்த வழக்குரைஞரும், சிறந்த முற்போக்குவாதியு மான அன்பிற்குரிய எழுத்தாளர், ஆய்வாளர் அய்யா சிகரம் செந்தில்நாதன் அவர்களே,
சனாதனத்தை எதிர்க்கக் கூடிய போராளிகளே!
கவிஞர் நந்தலாலா அவர்களே, மேடையில் இருக்கக் கூடிய, எதிரில் இருக்கக்கூடிய அறிஞர் பெருமக்களே, தோழர்களே, நண்பர்களே, சனாதனத்தை எதிர்க்கக் கூடிய போராளிகளே உங்கள் அனைவருக்கும் என்னு டைய அன்பான வணக்கத்தினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இதுவரை எத்தனையோ மாநாடுகள் நடைபெற் றிருந்தாலும்கூட, இந்த மாநாட்டில் ஒரு தனி சிறப்பாக நான் காணுவது என்னவென்றால், இந்த மாநாட்டின் தலைப்புதான்.
மற்ற மாநாடுகள் எல்லாம் இதுவரை சனாதன எதிர்ப்பு மாநாடாகத்தான் நடைபெற்று இருக்கின்றன. இம்மாநாட்டினைத்தான், சனாதன ஒழிப்பு மாநாடு என்று துணிச்சலாக அறிவித்திருக்கிறீர்கள்; அதற்காக உங் களைப் பாராட்டுகிறேன்.
நான் பெரியார் தொண்டன்; பெரியாருடைய கொள் கையிலே ஊறி, வாழ்நாள் மாணவனாக இருக்கிறேன்.
அய்யா ஒருமுறை சொன்னார், ‘‘எது என்னைத் தாக்குகிறதோ, அதை அழிக்கவேண்டியதுதான் என் னுடைய கடமை; அதற்காக மற்றவர்கள் மிரட்டினால், அதைப்பற்றி நான் கவலைப்படமாட்டேன்'' என்று சொன்னார்.
சனாதனத்தை எதிர்ப்பதை விட, அதனை ஒழிக்கவேண்டும்!
சனாதன எதிர்ப்பு மாநாடு என்று முதலில் போட்டார்கள்; கொசு நம்மைக் கடித்து, ரத்தத்தை உறிஞ்சுகிறது; அதனால், மலேரியா காய்ச்சல் உருவாகுகிறது. ஆகவே, சனாதன எதிர்ப்பு மாநாடு என்று போட்டால், அதில் பயனில்லை.
நாம் என்ன செய்யவேண்டும்?
மலேரியா நோயைப் பரப்புகின்ற கொசுவை அழிக்கவேண்டும்; ஆகவே, சனாதனத்தை எதிர்ப் பதை விட, அதனை ஒழிக்கவேண்டும்.
இம்மாநாடுதான் சரியான அணுகுமுறை; சரியான மருத்துவ முறை, தேவையானது இந்தக் காலகட்டத்தில்.
இந்நாட்டில் இனிமேல் தேர்தலே இருக்கக்கூடாது என்று சனாதனிகள் நினைக்கிறார்கள்.
அதற்கு முன்னோட்டமாக சனாதனம் பல ரூபங் களிலே, பல வேலைகளைச் செய்கிறது.
அப்படி வருகின்ற நேரத்தில்தான், ஒரே தேர்தல், ஒரே நாடு, ஒரே மதம், ஒரே மொழி, ஒரே கலாச்சாரம், ஒரே ரேஷன் கார்டு என்று எல்லாம் ‘‘ஒரே, ஒரே ஒரே'' என்று சொல்லுகிறார்கள்.
ஒரே ஜாதி என்று சொல்வதற்கு உங்களுக்கு ஏன் மனம் வரவில்லை?
அவர்களைப் பார்த்து ஒரே ஒரு கேள்வி கேட்கிறோம் - எல்லாவற்றிற்கும் ‘‘ஒரே ஒரே'' என்று போடுகிறீர்களே, ஒரே ஜாதி என்று சொல்வதற்கு உங்களுக்கு ஏன் மனம் வரவில்லை?
மக்கள் அனைவரும் ஒரே ஜாதி என்று சொல்வதற்கு ஏன் உங்களுக்குத் துணிச்சல் இல்லை?
ஒரே மதத்தைக் கேட்கிறீர்களே, ஏன் ஒரே ஜாதி, மக்கள் அனைவரும் ஒரே மக்கள் என்று சொல்வதற்கு ஏன் உங்களுக்கு மனம் வரவில்லை?
உங்களுக்கு மனம் வராது; ஏனென்றால், உங்கள் இனம் குறுக்கே நிற்கிறது; ஆகவே, உங்களுக்கு மனம் வராது. உங்களை முழுக்க முழுக்க இயக்குவது சனா தனம் என்கிற பெயராலே, இந்துத்துவம்; அதுதான் மிக முக்கியமானது.
ஆகவே, அந்த அடிப்படையில், இன்றைக்குச் சொல்கிறார்கள்; ஒரே தேர்தல் என்பதற்கான காரணமாக, இதுவரை கண்டுபிடிக்காத, ஏற்றுக்கொள்ள முடியாத காரணத்தைச் சொல்கிறார்கள்.
தேர்தல் நடத்தினால் 45 ஆயிரம் கோடி ரூபாய் செலவாகிறதாம், ஒவ்வொரு தேர்தலின்போதும் அவ்வளவு ரூபாய் செலவாகிறதாம்.
சனாதனத்தை சிம்மாசனத்தில் நிரந்தரமாக அமர வைப்பதற்குத்தான்...
சரி, ஒன்று செய்யலாமே! தேர்தலை நடத்தவில்லை யென்றால் செலவாகாதே! அதைத்தான் இப்பொழுது செய்யப் போகிறார்கள்; அதற்காகத்தானே ஒரே தேர்தல் என்று சொல்கிறார்கள். அவர்களுடைய நோக்கம் என்ன? எதற்காக இந்த அளவிற்குப் பாடுபடுகிறார்கள்? சனாதனத்தை சிம்மாசனத்தில் நிரந்தரமாக அமர வைப்பதற்குத்தான் இத்தனை முயற்சியும்.
இந்தக் காலகட்டத்தில்தான், நம்முடைய அமைப்பு கள் ஒன்றாகச் சேர்ந்து, அதிலும் குறிப்பாக வழிகாட்டக் கூடிய அளவில் நீங்கள் ‘‘சனாதன ஒழிப்பு மாநாடு'' என்று துணிச்சலாகப் போட்டிருப்பது, ஆயிரம் முறை பாராட்டப்பட வேண்டியது; இது இன்றைக்குத் தொடங் கினாலும், இது ஒரு தொடக்கமாக இருக்கவேண்டுமே தவிர, இது ஒரு முடிவாக இருக்கவே இருக்காது.
காரணம், நாம் எந்த ஆயுதத்தை எடுக்கவேண்டும் என்று முடிவு செய்வது, நாமல்ல; நம்முடைய எதிரிகள்; நம்முடைய கொள்கை எதிரிகள்.
அதன் காரணமாகத்தான், இப்பொழுது தேவைப் படுவது, சனாதன ஒழிப்பு முயற்சி என்பது மிகவும் முக்கியத்துவம் உடையது.
உழைக்கின்ற மக்களுக்காகவா? பொதுமக்களுக்காகவா?
சனாதனம் என்றால், அவர்கள் மிக சாமர்த்தியமாகச் சொல்கிறார்கள்; ஆன்மிகம் என்று சொல்கிறார்கள். ஆன்மிகம் என்றால், ஆத்மா. எங்கே இருக்கிறது ஆத்மா? உடலில் உயிர் போனவுடன் எரிக்கிறார்கள்; உயிர் போனவுடன் ஆத்மா வருகிறது; ஆத்மாவை தமிழ்ப் புலவர்கள் ஆன்மா என்றாக்கினார்கள். ஆன் மாவிலிருந்து ஆன்மிகம் வந்தது, அவ்வளவுதான்.
சனாதனம் என்பது யாருக்காக?
100-க்கு 97 சதவிகிதமாக இருக்கின்ற உழைக்கின்ற மக்களுக்காகவா? பொதுமக்களுக்காகவா?
சனாதனம் என்றால் என்ன? சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என்று இவ்வளவு கடுமையாகப் பேச வேண்டிய அவசியம் என்ன? என்று பல பேருக்கு நினைப்பு இருக்கும்.
ஒருவர் இங்கே ஆளுநராக இருக்கிறார்; அவர் எங்கே சென்றாலும், சனாதனத்தைப் பெருக்கவேண்டும் என்கிறார். அரசமைப்புச் சட்டத்தைப்பற்றி அவர் கவலைப்படவில்லை; அவர் எதன்மீது பதவிப் பிராமணம் எடுத்தார் என்பதைப்பற்றியும் கவலைப்படவில்லை.
ஆனால், சனாதனம் என்றால் என்ன?
‘‘சனாதன தர்மா அன்ட் எலிமெண்ட்டரி டெக்ஸ் புக்!’’
‘சனாதன தர்மா' என்று சொல்வதற்கு, இன் றைக்குப் பல விளக்கங்களைச் சொல்கிறார்கள்; எதையும் ஆதாரத்தோடு சொல்லிப் பழக்கப்பட்ட வர்கள் நாங்கள். இதோ என்னுடைய கையில் இருப்பது ‘‘சனாதன தர்மா அன்ட் எலிமெண்ட்டரி டெக்ஸ் புக்.''
பப்ளிஸ் பை தி மேனேஜிங் கமிட்டி, சென்ட்ரல் இண்டு காலேஜ், பனாரஸ் -1916.
அதற்கு முன்பாக, சமஸ்கிருதம் பாடமாக்கப்பட்டது. அன்றைக்கு காசி பனாரஸ் இண்டு யுனிவர்சிட்டி - மாளவியா அவர்களால் உருவாக்கப்பட்டது.
அதைத் தமிழில் மொழி பெயர்த்திருக்கிறார், 1907. சனாதன தர்மம், ஓம் என முதலில் போட்டிருக்கிறார்கள்.
சமஸ்கிருதத்தில் சனாதனம்பற்றி முதலில் போடப் பட்ட பாடம், பி.ஏ. பாடமாக வைக்கப்பட்டு, நூறு ஆண்டு களுக்கு முன்பாக சனாதனம் சொல்லிக் கொடுக்கப் பட்டது. வெள்ளைக்காரர்களுக்கு அது என்னவென்று விளங்காத நிலை. அவர்களிடம் நிதியும் வாங்கி, இவ்வளவையும் செய்து கொண்டிருந்தார்கள்.
சனாதனம் முதல் பகுதி, மூலத்தத்துவம், முதலாம் பாகம், இரண்டாம் பாகம் - அடக்க அட்டவணை என்பதில், ஆதாரத்தோடு சொல்கிறோம்.
இந்நூலைக் கண்டுபிடிப்பதற்கே பெரிய முயற்சி எடுத்து, ஆவணக் காப்பகத்திலிருந்து எடுத்து வரக்கூடிய நிலை.
சனாதன தர்மம் முதலாம் பாகம்
‘‘சனாதன தர்மம் என்றால், நித்தியமான மதம் அல்லது புராதன விதி என்று பொருள்படும். இது வெகுகாலங்களுக்கு முன் மானுடர்க்கு அளிக்கப் பட்ட புண்ணிய புஸ்ககங்களான வேதங்களை ஆதாரமாகக் கொண்டது.
இந்த மதத்திற்கு ஆரிய மதம் என்ற பெயரும் இடப்பட்டு இருக்கின்றது. ஏனெனில், ஆரிய மகாஜாதியாருள், முதலாம் வகுப்பாருக்கு இம் மதம் கொடுக்கப்பட்டது. (ஆரிய என்னும் பதத்திற்கு மேன்மை பொருந்திய என்று அர்த்தம்). இவ்வுலகில் பூர்வ காலங்களில் வசித்துச் சென்ற ஜாதியார்களைக் காட்டிலும், ஒழுக்கம், ரூபம் இவற்றிற் சிறந்த ஒரு மகா ஜாதியாருக்கு இந்த ‘‘ஆரிய'' என்னும் பெய ரிடப்பட்டது.
இவ்வாரிய மகாஜாதியாரின் முதல் குடும் பங்கள் இப்பொழுது இந்தியா என்று கூறப்படும் இந்நாட்டின் வட பாகத்தில் குடியேறினார்கள். அவ்விதமவர்கள் முதலில் குடியேறின நாட்டிற்கு ஆரிய வர்த்தம் என்ற பெயரிடப்பட்டது.
‘‘கிழக்கு மேற்கு ஹிமாலயம் விந்தியமாகிய இவ்விரண்டு பர்வதங்கட்கும் மத்தியிலுள்ள பூமியை ஆரியவர்த்தம் எனக் கூறுவர் பெரியோர்.''
அக்காலத்துக்குப் பிறகு இம்மதம் ஹிந்து மதம் என்னும் பெயரடைந்தது. இப்பெயராலேயே தற்காலம் அது வழக்கமாய்க் குறிப்பிடப்படுகிறது.
இவ்வுலகில் பிரசித்திப் பெற்று விளங்கும் சர்வ மதங்களிலும் இதுவே பிராசினமயமானது.
சனாதனத்தின் மூலப் பிரமாணங்கள் என்ன வென்றால், ஓர் அஸ்திவாரம் - இதுதான் நான்கு ஜாதிகள் கொள்ளப்படவேண்டும்'' என்று அந்த நூலில் சொல்லி, ஜாதியை, வருணத்தை வரிசை யாகச் சொல்லி, ஒவ்வொரு ஜாதியும், அதனுடைய தர்மங்கள் என்பதுபற்றியும் அதில் நிறைய இருக்கிறது.
சனாதனத்தின் உச்சம் வள்ளலார் என்கிறார் தமிழ்நாடு ஆளுநர்!
இதிலிருந்து நீங்கள் தெரிந்துகொள்ளுங்கள். சனா தனம் என்றால், வேறொன்றுமில்லை, எல்லோருக்கும் வேண்டுமானாது, அதுதான் நிரந்தரமானது என் கிறார்கள். அந்த சனாதனத்தின் உச்சம் என்னவென்று இங்கே இருக்கின்ற ஆளுநர் ஒருவர் சொல்கிறார், நாடு கெட்டுப் போவது, பெரியாரால், அம்பேத்கரால், காரல்மார்க்ஸால் என்று சொல்லக்கூடிய இந்த மகா அறிவாளி இருக்கிறாரே, அவர் சொல்லுவது, சனா தனத்தின் உச்சம் எதுவென்றால், வள்ளலார் என்கிறார்.
மனிதர்களுக்குள் பேதத்தை உருவாக்கி, உழைப் பவன் வேறு; அதைக் காட்டி பிழைப்பவன் வேறு என்று சொல்லுகின்ற காரணத்தினால்தான், அந்த அடிப் படையைத் தகர்த்து வள்ளலார் சமத்துவத்தைப்பற்றிச் சொன்னார்.
இங்கே தோழர் ரோகிணி அவர்கள் உரை யாற்றும்பொழுது சுருக்கமாகச் சொன்னார்.
கல்விதானே நமக்குக் கண்ணொளி.
‘‘எதைக் கொடுத்தாலும், சூத்திரனுக்கு, கீழ்ஜாதிக் காரனுக்கு கல்வியைக் கொடுக்கலாகாது.
குளித்த குதிரை, மதம் பிடித்த யானை, படித்த சூத்திரன் மிக ஆபத்தானவன்'' என்று சொல்வதுதானே மனுதர்மம். மனுதர்மம்தானே, சனாதனம்.
இந்த சனாதனப் பாடத்திலேயே நண்பர்களே, உள்ளே இருக்கிறது; இதனுடைய மிக முக்கியமான மூல நூல் எதுவென்று சொன்னால், மனுதர்மம்.
மக்கள் அனைவருக்கும் சம வாய்ப்பு வழங்கவேண்டும்!
ஆகவே, இந்த ஒரு புத்தகமே அவர்களுடைய பாடப் புத்தகமாக, அதிகாரப்பூர்வமாக அவர்கள் பயன்படுத்தியதிலேயே அவர்கள் யார்? எப்படிப் பட்டவர்கள்? என்று தெரிகிறது. மனித குலத்தினுடைய ஒற்றுமைக்காகப் பாடுபடக் கூடியவர்கள் நாம் - உலகம் ஒரு குலம்; மக்கள் அனைவரும் சமம். மக்கள் அனை வருக்கும் சம வாய்ப்பு வழங்கவேண்டும் என்பவர்கள் நாம்.
இன்னார், இனியர் என்று பிரிக்கவேண்டிய அவசிய மில்லை. நாங்கள் சமத்துவம் உள்ளவர்கள்; சகோ தரத்துவம் உள்ளவர்கள்; அறிவுச் சுதந்திரம் உள்ளவர்கள் என்று நாம் சொல்லும்பொழுது, சனாதனத்தின் அடிப்படைத் தகர்க்கப்படுகின்றது.
சனாதனம் - நம்பு என்று சொல்வது!
பகுத்தறிவு - நம்பாதே, உன்னுடைய அறிவு என்ன சொல்லுகிறது - அதை நம்பு என்று சொல்வது பகுத்தறிவு.
எனவே, நாம் பகுத்தறிவுவாதிகளாக இருக்கின்ற காரணத்தினால்தான், இந்த ஒலிபெருக்கி இங்கே இருக்கிறது. இந்நிகழ்ச்சி காட்சிப் பதிவாகப் பதிவாகிக் கொண்டிருக்கின்றது. வீடியோ - ஆடியோ - முதலில் ஆடியோவைக் கண்டுபிடித்தார்கள்; பிறகு வீடியோவைக் கண்டுபிடித்தார்கள்.
இன்றைக்கு நிலவுக்கு ராக்கெட் விட்டு, சந்தி
ராயன்-3 அய் நம்முடைய விஞ்ஞானிகள் கண்டு பிடித்திருக்கிறார்கள்.
முப்பத்து முக்கோடி தேவர்கள், எண்ணாயிரம் ரிஷிகள் என்றெல்லாம் சொல்கிறார்களே, அவர்களில் ஒருவருக்காவது ராக்கெட் என்றால் என்னவென்று தெரியுமா?
மாறாதது என்று சொல்வது என்பதே முட்டாள்தனம் அல்லவா!
சனாதனம் என்றால் மாறாதது; மாறாதது என்று சொல்வது என்பதே முட்டாள்தனம் அல்லவா! உலகில் மாறாதது எது; நீங்கள் மாறாதது என்ற சொல்கிறீர்களே, அப்படியென்றால், ரபேல் விமானங்களை வாங்கலாமா?
மாறாதது என்று சொன்னால், ஆரம்ப காலத்தில் போருக்குப் பயன்படுத்தப்பட்டது அம்பும், வில்லும் அல்லவா!
அதையே இன்றைக்குப் பாகிஸ்தான் அல்லது சீனா போன்ற நாட்டினர் சண்டைக்கு வரும்போது, அம்பும், வில்லும் எடுத்துக்கொண்டு போய் சண்டை போட முடியுமா?
சிக்கனத்தைப்பற்றி பேசக்கூடிய பிரதமர்கூட, பயணம் செய்யவேண்டும் என்று சொல்லும் பொழுது, அவருக்கென்று ஒரு தனி விமானம் வேண்டும் என்கிறாரே, அதற்காக லட்சக்கணக்கான ரூபாய் செலவழிக்கப்படுகிறதே - இது சனாதனத்தினுடைய எந்தப் பகுதியில் இருக்கிறது?
சனாதனத்தின் முறைப்படிதான் அவர்கள் பயணம் செய்கிறார்களா?
எங்களுக்குக் கீழ்ஜாதியாக இரு; கீழ்ஜாதிக் காரர்கள் படிக்கக்கூடாது; அவர்கள் டாக்டர்களாக வரக்கூடாது; அவர்கள் பொறியாளர்களாக வரக்கூடாது; அவர்கள் சமத்துவம் பெறக்கூடாது என்பதுதானே சனாதனம்.
தொழிலாளிகள் ஏழு வகைப்படுவார்களாம்!
நாட்டில் பெரும்பான்மையாக இருக்கக்கூடிய மக்கள், ஒடுக்கப்பட்ட மக்கள், காலங்காலமாக ஒதுக்கப் பட்ட மக்கள், உழைப்பாளித் தோழர்கள், இன்னுங் கேட்டால் தோழர்களே, சூத்திரர்கள் என்று பொருள் எழுதும்பொழுது மனுதர்மத்தில், எங்கள் தாய்மார் களையெல்லாம் கொச்சைப்படுத்தக் கூடிய அளவிற்கு தாசி புத்திரர்கள் என்று எழுதிவிட்டு, கீழே தொழி லாளிகள் ஏழு வகைப்படுவர் என்று மனுதர்மத்தில் எழுதப்பட்டு இருக்கிறது.
சனாதனம் ஏன் அழிக்கப்படவேண்டும்?
இதை எதிர்த்துக் கேட்கும்பொழுது, சனாதனம் ஏன் அழிக்கப்படவேண்டும் என்று சொல்லும்பொழுது, சமத்துவத்திற்காக அழிக்கப்படவேண்டும்; மனித தத்துவத்திற்காக அது அழிக்கப்படவேண்டும்.
அனைவருக்கும் அனைத்தும் என்பதுதான் சமூகநீதி. அந்த சமூகநீதிக்கு எங்கே இடம் இருக்கிறது? சமூகநீதி யைக் கொல்வதற்குத்தானே சனாதனம் இருக்கிறது.
இது துரோணச்சாரியார்களின் காலம் அல்ல; இது ஏகலைவன்கள் காலம் என்று நம்முடைய முதலமைச்சர் அவர்கள், பள்ளி மாணவர்களுக்குக் காலைச் சிற்றுண்டி திட்டத்தைத் தொடங்குகின்ற நேரத்தில் அழகாகச் சொன்னார்.
நண்பர்களே, துரோணாச்சாரியார்களின் காலம் மாறி மாறி வருகிறது. மண்டல் கமிசன் அறிக்கை எழுதுகிற நேரத்தில், துரோணாச்சாரியாருடைய கொடுமையைப்பற்றி மண்டல் அவர்கள் தமது அறிக்கையில் எழுதினார். சம்பூகனுடைய நியாயங்கள் என்ன என்பதைப்பற்றியும் மிகத் தெளிவாக அந்த அறிக்கையில் எடுத்துச் சொன்னார்.
நாம் ஏன் போராடிக் கொண்டிருக்கின்றோம்?
ஆகவேதான் நண்பர்களே, மனிதநேயம், மனித சமத்துவம், மனித குலம் ஒன்று என்றெல்லாம் வரவேண்டும் என்று நாம் போராடிக் கொண் டிருக்கின்றோம்.
இன்னமும் ஜாதி வர்ண தர்மமா?
இன்னமும் நாலாஞ்ஜாதி முறையா?
இன்னமும் எட்டி நில் என்று சொல்வதா?
இன்னமும் அவரவர் குலத் தொழிலைத்தான் செய்யவேண்டும் என்று சொல்வதா?
கடந்த 15 ஆம் தேதியன்று டில்லி செங்கோட்டையில் கொடியேற்றுகிறார் - சனாதனத்திற்காக சாமரம் வீசிக்கொண்டு, சனாதனத்திற்கு வரவேற்பு சொல்லிக் கொண்டிருக்கின்ற இந்த நாட்டினுடைய பிரதமர். அவரை இயக்கிக் கொண்டிருக்கின்ற ஆர்.எஸ்.எஸ். - அதற்கு அரசியல் ரீதியாக ஒரு பெயர் பி.ஜே.பி. அந்தப் பிரதமர் என்ன சொல்கிறார் தெரியுமா?
30 லட்சம் குடும்பங்களுக்கு, 13 ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கியிருக்கிறார்களாம்!
18 தொழில்களை தேர்ந்தெடுத்து, அதன்படி ஒரு புதிய திட்டம் என்று சொல்லி, அதற்கு விஸ்வகர்மா திட்டம் என்று பெயரிட்டு, 30 லட்சம் குடும்பங்களுக்கு, 13 ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கியிருக்கிறோம் என்று சொல்கிறார்.
இதைக் கேட்கின்ற அடித்தட்டு மக்கள், ஆகா, நமக்காக இவ்வளவு நிதி ஒதுக்கியிருக்கிறாரே என்று வியப்படைகிறார்களா, என்றால், அதுதான் இல்லை.
ஒடுக்கப்பட்ட மக்கள் உரிமைக் குரலை எழுப்பத் தொடங்கிவிட்டார்கள்
மீண்டும் நம்முடைய பிள்ளைகள் இப்போது படிக்க ஆரம்பித்துவிட்டார்கள்; அதிலும், தமிழ்நாடு இந்தி யாவிற்கே வழிகாட்டக் கூடிய அளவில் இருக்கிறது. எல்லா இடங்களிலும் ஒடுக்கப்பட்ட மக்கள் உரிமைக் குரலை எழுப்பத் தொடங்கிவிட்டார்கள். இட ஒதுக்கீடு, சமூகநீதி அதற்கு முன்னால் நிற்கிறது.
இவையெல்லாம் வந்துவிட்ட பிறகு, இவர்கள் படிக்க ஆரம்பித்துவிட்டார்கள்; இவர்களைத் தடுப்பது எப்படி என்று ஒரு பக்கத்தில் நீட் தேர்வு; இன்னொரு பக்கத்தில் நெக்ஸ்ட் தேர்வு; தேர்வு, தேர்வு என்று சொல்லி, ஊழல் மலிந்த அந்தத் தேர்வை நாடு முழுவதும் நடத்தினார்கள்.
மீண்டும் ஒரு மனுதர்மக் கொள்கையை உருவாக்கத் துடிக்கிறார்கள்!
எல்லாவற்றிற்கும் மேலாக 18 வயதிற்குப் பிறகு, புதிய கல்விக் கொள்கை என்ற பெயராலே, மீண்டும் ஒரு மனுதர்மக் கொள்கையை உருவாக்கி வைத்துவிட்டு, அதில் ஒரு பகுதி பகுதியாக எடுத்துச் செய்வதுபோல, இன்றைக்கு விஸ்வகர்மா திட்டம் என்ற ஒன்றைக் கொண்டு வந்திருக்கிறார்கள்.
முதலில் நாக்கில் தேன் தடவுகிறார்கள்; மயக்க பிஸ்கெட்டைக் கொடுப்பது போன்று - கடைசியில் என்னாகும் என்றால் நம்மிடம் இருக்கின்ற பொருள்கள் போய்விடும்.
18 வயதைத் தாண்டியவுடன் நம்முடைய பிள்ளைகள் எங்கே போவார்கள்? கல்லூரிக்குப் போவார்கள்.
தந்தை பெரியாரால், திராவிட இயக்கத்தால், முற்போக்குவாதிகளால் விரட்டப்பட்ட குலக்கல்வித் திட்டம்!
அப்படி அவர்கள் கல்லூரிக்குப் போகாமல், அவர் களுடைய மனதிற்குள் மயக்க மருந்து கொடுக்க வேண்டும் என்பதற்காகத்தான் இந்த விஸ்வகர்மா திட்டத்தைக் கொண்டு வருகிறார்கள். தமிழ்நாட்டில், தந்தை பெரியாரால், திராவிட இயக்கத்தால், முற்போக்கு வாதிகளால் விரட்டப்பட்ட குலக்கல்வித் திட்டம் என்பதை மீண்டும் அவர்கள் சனாதனத்தின் பெயராலே புதுப்பிக்கக் கொண்டு வந்திருக்கிறார்கள்.
அந்தத் தொழில் செய்பவர்களின் படத்தோடு வெளியிட்டு இருக்கிறார்கள். அவர்களுக்கு நாங்கள் கடனுதவி கொடுப்போம் என்கிறார் அவர். நிதி உதவி யல்ல, ஏமாந்துவிடாதீர்கள். கடனுதவி கொடுப்போம் - ஒரு லட்சம் - 5 சதவிகித வட்டி.
தொழில் முனைவோருக்குக் குறைந்த வட்டியில் நிதி கொடுப்பது என்பது அரசாங்கங்களின் இயல்பான நடவடிக்கை.
யாரைத் தேர்ந்தெடுக்கின்றார்கள் என்பதைப்பற்றி மட்டும் புரிந்துகொள்ளுங்கள்!
ஆனால், இவர்கள் யாரைத் தேர்ந்தெடுக்கின்றார்கள் என்பதைப்பற்றி மட்டும் புரிந்துகொள்ளுங்கள். சனா தனத்தினுடைய ஆபத்து எந்த ரூபத்திலே, எந்த வடிவத்திலே வருகிறது என்பதைப் பாருங்கள்.
முன்பு 10 அவதாரம் எடுத்துக் கொன்றார்கள்; இப் பொழுது புதிய அவதாரம் எடுத்துக் கொண்டிருக் கிறார்கள்.
பெரியார் கண்ணாடியைப் போட்டுப் பார்த்தால்தான், அது பளிச்சென்று உங்களுக்குத் தெரியும். அந்த முற்போக்கு எண்ணம் உங்களுக்கு வேண்டும்.
குரு - சிஷ்ய பாரம்பரியம் என்கிற வார்த்தையைத் தெளிவாகப் போட்டிருக்கிறார்கள்!
தொழில்களுக்காக என்று சொன்னால், அந்தத் தொழில்களுக்காக அல்ல - அந்தத் தொழிலை பரம் பரைத் தொழிலாகச் செய்யும் ஜாதித் தொழிலை மய்யப்படுத்தி - குரு - சிஷ்ய பாரம்பரியம் என்கிற வார்த்தையை தெளிவாகப் போட்டிருக்கிறார்கள்.
1. தச்சு வேலை,
2. படகு தயாரிப்பு
3. இரும்புக் கொல்லர்
4. ஆயுதங்கள் தயாரிப்பு
5. சுத்தியல் மற்றும் உபகரணங்கள் தயாரிப்பு
6. பூட்டு தயாரிப்பு
7. பொற்கொல்லர்
8. மண்பாண்டக் கலைஞர்
9. சிற்பி, கல் உடைப்பவர்
10. காலணி தைக்கும் கலைஞர்
11. கொத்தனார்
12. கூடை - பாய் - துடைப்பம் - தேங்காய் நார் மூலம் கால்மிதியடி தயாரிப்போர்
13. பொம்மை கலைஞர்கள்
14. முடிதிருத்துவோர்
15. பூ மாலை தயாரிப்பவர்
16. சலவை தொழிலாளர்
17. தையல் கலைஞர்
18. மீன்பிடி வலை தயாரித்தல்
18 வகையான தொழில்கள். 18 நாள் பாரதம்; 18 புராணம்; 18 தொழில். அதிலும்கூட சனாதனத்திற்கு 18 என்ற ஒரு கணக்கு.
சனாதன ஒழிப்பு மாநாடு என்பது சரியான நேரத்தில் தொடங்கப்பட்ட ஒரு போர்க் குரல்!
ஆகவே, இப்படிப்பட்ட சூழ்நிலை இன்றைக்கு வந்திருக்கிறது என்று சொன்னால் நண்பர்களே, இந்த சனாதன ஒழிப்பு மாநாடு என்பது சரியான நேரத்தில் தொடங்கப்பட்ட ஒரு போர்க் குரல் - போரினுடைய முதல் போர்ச் சங்கு. ஆகவே, இதனை வரவேற்க வேண்டும்; பாராட்டவேண்டும்.
இன்னொரு முக்கியமான ஒரு வேண்டுகோள் - கருத்து.
அரசியல் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் மூன் றாவது முறை நேற்று மும்பையில் தெளிவாகச் சந்தித்திருக்கிறார்கள். அதுதான் டில்லியில் உள்ள ஒன்றிய ஆட்சியைக் கலக்கிக் கொண்டிருக்கிறது. அந்தக் கலக்கத்தினுடைய உச்சக்கட்டத்திற்குச் சென்ற தினால், எதையும் செய்ய முடியவில்லையே என்று நினைத்து, ஒரே நாடு, ஒரே தேர்தல் என்று ஓர் அறிவிப்பை வெளியிடுகிறார்கள்.
இந்தியா கூட்டணி நிச்சயமாக வெற்றி பெறும்!
இந்தியா கூட்டணி நிச்சயமாக வெற்றி பெறும். இன்னும் 6 மாதங்களுக்குள் ஒன்றியத்தில் ஆட்சி மாற்றம் வரவேண்டிய ஒரு சூழ்நிலை காலத்தின் கட்டாயமாக இருக்கும். மக்கள் தயாராகிவிட்டார்கள். தலைவர்கள் தயாராகவேண்டுமே என்று மக்கள் நினைத்தார்கள்; தலைவர்களும் தயாராகி விட்டார்கள் என்ற அளவில், ‘இந்தியா' கூட்டணி உருவாகியிருக்கிறது.
சனாதன ஒழிப்புக் கூட்டணி - காலத்தின் முன்னோட்டமாக உருவாகவேண்டும்!
நாம் இன்னொரு கூட்டணியை உருவாக்கவேண்டும்; போட்டிக்காகவா என்றால், அல்ல; மாறாக, அது அரசியல் கூட்டணி; நமது இந்த சனாதன ஒழிப்புக் கூட் டணி என்பதை கலாச்சார ரீதியாக, அறிவியல் ரீதியாக, காலத்தின் முன்னோட்டமாக உருவாக்க வேண்டும்.
எந்தக் கருத்துள்ளவர்களாக இருந்தாலும், இந்த அடிப்படைக் கொள்கையை ஏற்றுக்கொள்ளக் கூடிய வர்களாக இருந்தால், அவர்கள் துணிச்சலாக வர வேண்டும். இதிலே யோசிக்கக் கூடாது; இதிலே பின்வாங்கக் கூடாது; இதிலே நமக்கு என்ன லாபம் வரும் என்று கருதக்கூடாது.
ஏனென்றால், அடுத்தத் தேர்தலைப்பற்றி சிந்திப்பதை விட, அடுத்த தலைமுறையைப் பற்றி சிந்திக்க நாம் கடமைப்பட்டு இருக்கின்றோம்.
அடுத்த தலைமுறையைப்பற்றி சிந்திக்கவேண்டும் என்றால் நண்பர்களே, அதற்குரிய முதல் போர்க் குரல்தான், முதல் போர்ச் சங்குதான் - இந்த சனாதன ஒழிப்பு மாநாடு!
திராவிடர் கழகம் உங்களை இருகை நீட்டி வரவேற்கிறது!
எனவே, இதை நீங்கள் தாராளமாகச் செய்யுங்கள்; திராவிடர் கழகம் உங்களை இருகை நீட்டி வரவேற்பது மட்டுமல்ல, இந்த ஒத்தக் கருத்துள்ளவர்கள் எல்லோ ரையும் ஒன்று சேர்த்து, எப்படி ஒரு போர்ப் படைக்கு ஆட்களை நாம் திரட்டுவோமோ, எப்படி போர்ப் படைக்கு ஆயுதங்களை நாம் திரட்டுவோமோ, அப்படி நாம் திரட்டியாகவேண்டும்.
நமக்குப் போர் ஆயுதங்கள் ஏராளமாக இருக்கின்றன. பெரியார் என்ற ஆயுதத்தைவிடவா? அம்பேத்கர் என்ற ஆயுத்தைவிடவா? காரல் மார்க்ஸ் என்ற ஆயுதத்தை விடவா?
ஆயுதங்கள் ஏராளமாக இருக்கின்றன; அவற்றைப் பழகவேண்டும்; இளைஞர்களை பழக்கவேண்டும்; சனாதன அழிப்புக் குரல் எங்கெங்கும் கேட்கவேண்டும்.
இது அரசியலுக்கும் அப்பாற்பட்டு, ஆயிரம் தலைமுறைகளைக் காப்பாற்றவேண்டியதாகும்.
இரண்டு அணிகள்தான்!
எனவே, சனாதனம் ஒழியட்டும் - சமதர்மம் வெல் லட்டும் என்று சொல்லக்கூடிய இரண்டே அணிகள்தான்.
சனாதனத்தை ஆதரிக்கின்ற அணி ஒரு பக்கம்;
சனாதனத்தை ஒழிக்கின்ற அணி இன்னொரு பக்கத்தில் என்று, மக்களைப் பக்குவப்படுத்த, நாடு தழுவிய அளவில், சுனாமி வேகத்தில் பிரச்சாரங்கள் நடைபெறட்டும். தொழிலாளர் தோழர்களாக இருந் தாலும், எழுத்தாளர்களாக இருந்தாலும், கலைஞர்களாக இருந்தாலும், அனைவருக்கும் அனைத்தும் என்று, அனைவர் கைகளிலும் அனைத்து ஆயுதங்களும், அறிவாயுதங்களும், திரட்டியல்களும் என்று வாருங்கள், வாருங்கள் என்று கேட்டு, இம்மாநாட்டினை தொடங்கி வைப்பதில் மிகுந்த மகிழ்ச்சியோடு,
வெல்லட்டும் சமதர்மம் -
வீழட்டும் சனாதனம்!
வெல்லட்டும் சமதர்மம் -
வீழட்டும் சனாதனம் என்று கூறி முடிக்கிறேன்.
நன்றி, வணக்கம்!
- இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தொடக்க வுரையாற்றினார்.
No comments:
Post a Comment