ஆஸ்திரேலியா மற்றும் ஜெர்மனி விஞ்ஞானிகளின் முயற்சியில், குவாண்டம் கணினி ஒன்று மேசைக் கணினி போல வடிவமைக்கப்பட்டுள்ளது. 'குவாண்டம் பிரில்லியன்ஸ்' என்ற ஆஸ்திரேலிய நிறுவனம் இதை சாதித்துள்ளது.
இதே வேகத்தில் போனால் விரைவில் பலகைக் கணினி மற்றும் அலைபேசிகளிலும் குவாண்டம் சில்லுகள் வருமளவுக்கு இத்தொழில்நுட்பம் முன்னேறக்கூடும்.
குவாண்டம் கணினிகள் அதிவேகமாக கணக்கிடும் திறன் கொண்ட சூப்பர் கம்ப்யூட்டர் ரகத்தை சேர்ந்தவை. ஆனால், இக் கணினிகள் ஒரு பெரிய அறையை அடைத்துக் கொள்ளுமளவுக்குப் பெரியவை.
அவற்றை காந்தப் புலம் மற்றும் வெப்பம் ஆகியவற்றிலிருந்து காப்பாற்றி வைக்கவேண்டும். ஆம், கிரையோஜினிக் குளிர்ச்சி முறையிலும், காந்த கவசங்களுடனும்தான் குவாண்டம் கணினிகள் இருக்க வேண்டும். இல்லாவிட்டால் அவற்றின் கணக்குகளில் பிழைகள் ஏற்படும்.
இதை தவிர்க்க குவாண்டம் பிரில்லியன்ஸ் ஆராய்ச்சியாளர்கள் சில உத்திகளை கடைப் பிடித்துள்ளனர்.
அவற்றில் முக்கியமானது, குவாண்டம் கணிணிக்குத் தேவையான சில்லுகளை செயற்கை வைரத்தில் பதிப்பதும் அடங்கும். இதனால், குவாண்டம் சில்லுகள் அறையை அடைத்துக் கொண்டிருப்பதற்குப் பதிலாக, சிலிக்கன் சர்க்யூட்டுகள் அளவுக்கு சுருங்கிவிட்டன. மேலும் அவற்றை குளிர்விக்கத் தேவையில்லை. அறை வெப்பத்திலேயே நன்கு இயங்கும்.
இன்னும் சில ஆண்டுகளில் குவாண்டம் கணினிகளை பரவலாக்குவதுதான் தங்கள் நோக்கம் என்று குவாண்டம் பிரில்லியன்சின் நிறுவனர்கள் அறிவித்துள்ளனர்.
No comments:
Post a Comment