மாநகராட்சி வளர்ச்சிப் பணிகளில் விரைவு தேவை அமைச்சர் கே.என்.நேரு உத்தரவு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, September 3, 2023

மாநகராட்சி வளர்ச்சிப் பணிகளில் விரைவு தேவை அமைச்சர் கே.என்.நேரு உத்தரவு

சென்னை, செப். 3 பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சிப் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்த நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு, அவற்றை விரைந்து முடிக்க அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். 

பெருநகர சென்னை மாநகராட்சி, தேனாம்பேட்டை மண்டலம், 111-ஆவது வார்டு, காதர் நவாஸ்கான் சாலையில் உலக வங்கியின் சென்னை நகர கூட்டாண்மை திட்டத்தின் கீழ், மாநில உட்கட்டமைப்பு, வசதிகள் நிதி மற்றும் பெருநகர சென்னை மாநகராட்சி மூலதன நிதியின் கீழ் ரூ.19.81 கோடி மதிப்பீட்டில் நடைப்பாதை வளாகம் அமைக்கும் பணிக்கு அமைச்சர்கே.என்.நேரு 1.9.2023 அன்று அடிக்கல் நாட்டி, பணிகளைத் தொடங்கி வைத்தார். தொடர்ந்து, திட்ட வரை படங்களை பார்வையிட்டு, அலு வலர்களுக்கு ஆலோச னைகளை வழங்கினார். இதைத் தொடர்ந்து, தேனாம்பேட்டை மண்டலத்துக் குட்பட்ட மாம் பலம் கால்வாயில் ரூ. 7.50 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் சீரமைப்புப் பணிகளை அமைச்சர் பார்வையிட்டார்.

பின்னர், கோடம்பாக்கம் மண் டலம், 133-ஆவது வார்டு, 141-க்கு உட்பட்ட தெற்கு உஸ்மான் சாலை, சி.அய்.டி. நகர் பிரதான சாலையில் ரூ. 131 கோடி மதிப் பீட்டில் 1,200 மீ. நீளத்தில் 8.40 மீ. அகலத்தில் கட்டப்பட்டு வரும் புதிய மேம்பாலப் பணியைப் பார்வையிட்டு அமைச்சர் ஆய்வு மேற்கொண்டார். இந்தப் பாலப் பணியினை உரிய தொழில்நுட்ப வழிகாட்டுதலின்படி மேற்கொள் வதோடு உரிய காலத்துக்குள் முடிக் கவும் அலுவலர்களுக்கு அவர் உத்தரவிட்டார். தொடர்ந்து, அசோக் நகர் 11-ஆவது நிழற்சாலை யில் மாநில பேரிடர் நிவாரண நிதியின் கீழ், ரூ. 2.77 கோடி மதிப்பீட்டில் 0.681 கி.மீ. நீளத்தில் நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் பணியைப் பார்வையிட்டு அவர் பணிகளை வடகிழக்கு பருவ மழைக்கு முன்னதாக விரைந்து முடிக்க அலுவலர்களுக்கு அறிவு றுத்தினார்.  ஆய்வின்போது, மேயர் ஆர்.பிரியா, சட்டப்பேரவை உறுப் பினர்கள் நா.எழிலன், த.வேலு, ஜெ.கருணாநிதி, துணை மேயர் மு. மகேஷ்குமார், ஆணையர் ஜெ.ராதா கிருஷ்ணன், நகராட்சி நிர் வாகம், குடிநீர் வழங்கல் துறை முதன்மைச் செயலர் தா.கார்த்தி கேயன் உள்ளிட்டோர் உடனி ருந்தனர்.


No comments:

Post a Comment