'சுயமரியாதைச் சுடரொளி' சிவகங்கை வழக்குரைஞர் இரா.சண்முகநாதன் நூற்றாண்டு விழா - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, September 30, 2023

'சுயமரியாதைச் சுடரொளி' சிவகங்கை வழக்குரைஞர் இரா.சண்முகநாதன் நூற்றாண்டு விழா

தமிழர் தலைவர் ஆசிரியர், அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன், புதுச்சேரி தோழர் விசுவநாதன் பங்கேற்பு

சென்னை,செப்.30- பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்தின் தலைவராக 17 ஆண்டுகள் பொறுப்பேற்று செயல்பட்டு வந்தவரும், ஒருங்கிணைந்த இராமநாதபுரம் மாவட்டத்தின் தலைவர் உள்ளிட்ட பொறுப்புகளை ஏற்று கழகப் பணியாற்றி வந்தவருமாகிய 'சுயமரியாதைச் சுடரொளி' சிவகங்கை வழக்குரைஞர்  இரா.சண்முகநாதன் நூற்றாண்டு விழா நேற்று (29.9.2023) மாலை சென்னை பெரியார் திடல் நடிகவேள் எம்.ஆர்.ராதா மன்றத்தில் நடைபெற்றது. 

பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்தின் ஆயுள் செயலாளர் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தலைமையேற்று வழக்குரை ஞர் இரா.சண்முகநாதன் அவர்களின் படத்தைத் திறந்துவைத்து சிறப்புரை ஆற்றினார்.

வழக்குரைஞர் இரா.சண்முகநாதன்குறித்து அவர் மருமகள் டாக்டர் மலர்க்கண்ணி எழுதிய ‘மனதின் ஓட்டம்’ நூலை சிவகங்கை மாவட்ட திமுக செயலாளர், தமிழ்நாடு கூட்டுறவுத் துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் அவர்கள் வெளியிட தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் பெற்றுக்கொண்டார். வழக்குரைஞர் ச.இன்பலாதன் தொகுத் தளித்த 'சான்றோர் நெஞ்சில் வழக்குரைஞர் இரா.சண்முகநாதன்' நூலை தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் வெளியிட புதுச்சேரி சமூகநீதிப் பேரவை நிறுவனர் தோழர் இரா.விசுவநாதன் பெற்றுக் கொண்டார். மேலும், வழக்குரைஞர் இரா.சண்முகநாதன் குறித்த படத் தொகுப்புகளைக்கொண்ட புத்தகம் வெளியிடப்பட்டது.  வழக்குரைஞர் இரா.சண்முகநாதன் குறித்த புத்தகங்கள் பார்வையாளர்கள் அனைவருக்கும் குடும்பத்தினர் சார்பில் வழங்கப்பட்டன. கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங் குன்றன் அனைவரையும் வரவேற்று வழக்குரைஞர் இரா.சண் முகநாதன் தொண்டுகளை எடுத்துக்காட்டி உரையாற்றினார். அவர் உரையில்,

சொக்கத்தங்கம்

வழக்குரைஞர் இரா.சண்முகநாதன் அவர்கள் பெரியார் அறக்கட்டளையின் தலைவராக 17 ஆண்டுகள் பொறுப்பேற்று திறம்பட செயலாற்றினார். அவர் மறைவுற்றபோது தமிழர் தலைவர் ஆசிரியர் வெளியிட்ட இரங்கலில் 'வழக்குரைஞர் இரா.சண்முகநாதன் சுயமரியாதை இயக்கத்தின் சொக்கத் தங்கம்' என்று குறிப்பிட்டார். வழக்குரைஞர் இரா.சண்முகநாதன் பவள விழா 1998இல் இயக்கம் நடத்தியது. திருச்சி கல்வி வளாகத்தில் அவருக்கு நினைவேந்தல் சிறப்பாக நடைபெற்றது. மேலும், ஒரு கட்டடத்துக்கு அவர் பெயர் சூட்டப்பட்டது. சிவ கங்கையில் நடைபெற்ற பொதுக்குழுவில் தங்களின் பேரப் பிள்ளைகளுக்கு கருப்புடை அணிவித்து அவர்களை இயக்கத் துக்கு அனுப்பிவைக்கும் விழா என்று வித்தியாசமாக நடத்தினார்.

புத்தம் சரணம் கச்சாமி, சங்கம் சரணம் கச்சாமி, தம்மம் சரணம் கச்சாமி என்கிற நெறிபோல் இயக்கத்தில் அந்த 3க்கும் உரியவராக திகழ்ந்தார். இனாம்தார் சட்டத்திருத்ததின்போது முக்கியப்பங்காற்றி, அதன் வரைவை அரசிடம் அவர் அளித்தார். 1965இல் சிவகங்கையில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் தந்தைபெரியார் பங்கேற்றார். அப்போது பேசிய வழக்குரைஞர் இரா.சண்முகநாதன், அய்யாவுக்குப்பின் தலைவர் யார், புத்தகங்கள் மட்டும்தானாஎன்று பேசினார்.

கொள்கைக்கு வாரிசு

என்னுடைய கொள்கைக்கு வாரிசு புத்தகம் மட்டும் அல்ல, அறிவும், உணர்ச்சியும், துணிவும் உள்ள ஒருவர் வருவார் என்றார் தந்தைபெரியார். அப்படிப்பட்டவர் யார் என்று இப்போது நான் கூறவேண்டியதில்லை. எல்லோரும் அறிந் ததே. இந்நிகழ்வு வரலாற்றில் குறிப்பிடத்தக்கதொரு நிகழ் வாகும். அவர் பேரன் மருத்துவக்கல்லூரியில் படிக்கும்போது சென்னையில் தனியே வீடு எடுத்து அவர் வாழ்விணையர் அம்மா அவர்கள் தங்கியிருந்தார். பேரன் கல்லூரிக்கு சென்றதும், அவர் பெரியார் திடலுக்கு வந்துவிடுவார். அப்படி பெரயார் திடலோடு இணைந்திருந்தவர்கள். நீதிக்கட்சி ஆட்சியின்போது, சிவகங்கை இராமச்சந்திரன் அமைச்சராக வாய்ப்பு ஏற்பட்டது. அப்போது தந்தைபெரியாரைக் கேட்டு சொல்கிறேன் என்றார். அதன்படி, தந்தைபெரியாரிடம் அவர் சொன்னபோது, நமக்கு நிறைய வேலை இருக்குப்பா என்றதும், அமைச்சர் பதவியை அவர் ஏற்கவில்லை. அத்தகைய மாவட்டம் சிவகங்கை மாவட்டம் என்றார்.

தலைமைக்கழக அமைப்பாளர் கே.எம்.சிகாமணி, காரைக் குடி மாவட்டக் காப்பாளர் சாமி.திராவிடமணி முன்னிலை வகித்து வழக்குரைஞர் இரா.சண்முகநாதன் அவர்களுடனான தங்களின் அனுபவங்களை பகிர்ந்து கழகக் குடும்பங்கள் இணைந்து தொண்டாற்றுவதன் முக்கியத்துவத்தை எடுத்து ரைத்தனர். விழா இணைப்புரையை கழகத் துணைப் பொதுச் செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார் வழங்கினார்.

பயனாடை அணிவித்து சிறப்பிப்பு

தமிழர் தலைவர் ஆசிரியர், அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன், தோழர் விசுவநாதன், கவிஞர் கலி.பூங்குன்றன், கே.எம்.சிகாமணி, சாமி.திராவிடமணி ஆகியோருக்கு வழக்குரைஞர் இரா.சண்முகநாதன் குடும்பத்தினர் சார்பில் அவர் மகன் வழக்குரைஞர் ச.இன்பலாதன் பயனாடை அணிவித்து சிறப்பு செய்தார். மோகனா வீரமணிக்கு டாக்டர் மலர்க்கண்ணி பயனாடை அணிவித்து சிறப்பு செய்தார்.

அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன், தோழர் இரா.விசுவ நாதன் ஆகியோருக்கு தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் பயனாடை அணிவித்து சிறப்பு செய்தார்.

இரா.விசுவநாதன் உரை

புதுச்சேரி மாநில மேனாள் அமைச்சர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சித் தோழர் சமூக நீதிப்பேரவை நிறுவனர் இரா.விசுவநாதன் உரையில், இந்த விழாவில் மூத்த தலைவர் இரா.நல்லக்கண்ணு அவர்களை அழைத்து வர எண்ணிணேன். ஆனால், அவர் உடல்நிலை சரியில்லாமல், பேச முடியாத நிலையில் இருந் தாலும், வழக்குரைஞர் இரா.சண்முகநாதன்பற்றி அவர் என்னிடம் கூறியதை கூறுகிறேன். விவசாயத் தொழிலாளர் சங்கத்தில் தீவிரமாக அய்யா இரா.நல்லக்கண்ணு பணி யாற்றியபோது வழக்குரைஞர் இரா.சண்முகநாதன் அந்த சங்கத்தின் தோழர்களுக்காக வாதாடி வெற்றி பெற்றுத்தருவது மட்டுமல்லாமல் கட்டணம் வாங்காமல் விட்டு விடுவார். அந்த தோழர்களுக்கு பேருந்து, உணவுக்கான உதவிகளையும் செய்வார் என்று கூறியுள்ளார்.

புதுச்சேரியில் சட்டமன்ற பெட்டிஷன் தலைவராக நான் இருந்தபோது, ஆசிரியர் அவர்கள் "நம்மால் முடியாதது யாராலும் முடியாது, யாராலும் முடியாதது நம்மால் மட்டுமே முடியும்" என்று கூறுவார். அதன்படி, அடக்கமுடியாத ஒருவரை பெட்டிஷன் கமிஷன்முன் நிறுத்தி நியாயத்தை நிலைநாட்டினேன்.  திராவிடர் கழகம், பெரியார் இயக்கம் என்பது வாழ்வியல் தத்துவம் ஆகும். மன நலத்துடன், மகிழ்ச்சியாக, உறுதியாக இருக்க முடியும்.

புதுச்சேரி சமூகநீதி வரலாற்றில்....

புதுச்சேரியில் இயக்கத்துக்கு படிப்பகத்துக்காக 

இடம் இருந்து பேருந்து விரிவாக்கத்தின்போது எடுத்துக் கொண்டார்கள் என்று என்னிடம் ஆசிரியர் சொன்னார். அப்போது கழகத்தில் வ.சு.சம்மந்தம் போன்றவர்களைக் கொண்டு வேறு ஒரு இடத்தை வாங்கி சிறப்பாக கட்டி முடிது அதையும் ஆசிரியர் அவர்கள் திறந்து வைத்தார். அனைத்தும் ஆசிரியர் அவர்களின் வழிகாட்டுதலின் படிதான். தமிழ்நாட்டில் உள் ளதைப்போல், புதுச்சேரியில் மண்டலுக்கு முன் இடஒதுக்கீடு இல்லை. பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் அமைக்க வேண்டும் என்று ஆசிரியர் அவர்கள் கூறினார். அதன்படி, சட்டமன்றத்தில் நாங்கள் வலியுறுத்தினோம். இரவு வரை நடத்திய விவாதத்தின்போது ஒரேயொரு ஆள் (கிராஸ்பெல்ட்) பார்த்தசாரதி என்று பெயர், அவர் மட்டும்தான் எதிர்ப்பு தெரிவித்துக் கெண்டிருந்தார்.  அதற்குப் பின்னர் பிற்படுத்தப் பட்டோர் ஆணையம் அமைத்தோம். அதன்பின்தான் புதுச்சேரியில் கார்ப்ப ரேஷன் அமைந்தது. புதுச்சேரி சமூகநீதி வரலாற்றில் ஆசிரியர் பங்கு அதிகமானது. திராவிடர் கழகம், கம்யூனிஸ்ட் கட்சி உறவு சாதாரணமானதல்ல என்றார்.

அமைச்சர் கே.ஆர். பெரியகருப்பன்

தமிழ்நாடு கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர். பெரியகருப்பன் உரையில், 

இந்த இயக்கம் வளர்வதற்கு தொண்டாற்றிய பல்லாயிரக்கணக்கானோரில் வழக்குரைஞர் சண்முகநான் ஒருவர். அப்படிப்பட்ட ஒரு தொண்டருக்கு பவள விழாவை மட்டுமின்றி  நூற்றாண்டு விழாவையும் நடத்துகின்ற ஆசிரியர் அவர்களுக்கு எங்கள் மாவட்டம் சார்பில், மாவட்ட மக்களின் சார்பில் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

திடல் என்றால் பெரியார் திடல்தான், கலைஞர் என்றால் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள்தான், பேராசிரியர் என்றால் பேராசிரியர் அன்பழகன் அவர்கள்தான். ஆசிரியர் என்றால் வழக்குரைஞராக இருந்தாலும், தாய்க்கழகத்தின் தலைவர் ஆசிரியர் அவர்களைத்தான் குறிக்கும்.

இயக்கப்பணிக்கு தன்னை ஒப்படைத்துக்கொண்டவர் வழக்குரைஞர் சண்முகநாதன். அவர் வளர்த்த அந்த இயக்கம் நன்றிக்கடனை திருப்பி செலுத்தி இருக்கிறது. தொண்டர்களை, இளைஞர்களை மதிக்கின்ற இயக்கம் என்பதற்கு இதைவிட சான்று வேறு கிடையாது. சிவகங்கையில் நடத்தாமல், திடலில் நடத்துவது பெருமைக்குரியது.

2006-2011இல் முதலமைச்சர் கலைஞர் - அப்போது அவர் கொள்கைக்கு ஒவ்வாத துறையில் அமைச்சராக இருந்தேன். இங்கே விசுவநாதன் பேசும்போது ஒரு கிராஸ் பெல்ட் என்று பார்த்தசாரதி என்று ஒருவர் தொல்லைபற்றி கூறினார். நான் அமைச்சராக இருந்த போது அதைப்போன்று (கிராஸ் பெல்ட்) ஒன்றிரண்டல்ல, 40, 50 பேரை எதிர்கொண்டிருந்தேன். அப்போது பல்வேறு வகைகளிலும் எனக்கு வழிகாட்டியாக உற்றதுணையாக ஆசிரியர்திகழ்ந்தார்.

வைக்கம் வீரர் பெயரில் படிப்பகம் பழைமையான நூலகம். எந்த வித வசூலும் இல்லாமல், நானே புதுப்பித்துத்தந்தேன். கட்டடத் திறப்புவிழா ஆசிரியர் பங்கேற்க மாநாடு போல் நடந்தது. நூறாண்டுகள் கடந்தாலும், இன்றும் பேசக்கூடியவராக வழக்குரைஞர் சண்முகநாதன்  உள்ளார். சிவகங்கையில் இரட்டை மாட்டு வண்டிபோல் சாமி.திராவிடமணி-இன்ப லாதன் குடும்பத்தினர் இயக்கத்தில் இணைந்து செயல்படுத்தி வருகிறார்கள். சிவகங்கையில் இராமச்சந்திரனார் சிலையை நகர்மன்றத் தலைவர் துரை ஆனந்த் புதுப்பித்துள்ளார். வழக்குரைஞர்  இரா.சண்முகநாதன் புகழைப்போல் அவர் பிள்ளைகளும், வாரிசுகளும் பெற வேண்டும் என்றார்.

விழா நிறைவாக வழக்குரைஞர் இரா.சண்முகநாதன் மகன் சிவகங்கை மாவட்டக் காப்பாளர் வழக்குரைஞர் ச.இன்பலாதன் அனைவருக்கும் நன்றி கூறினார்.

விழாவில், பெருங்கவிக்கோ வா.முசேதுராமன், புலவர் பா.வீரமணி, மறைமலை திருவள்ளுவன், கற்பூர சுந்தர பாண்டியன் அய்.ஏ.எஸ். (ஓய்வு),  கழக வழக்குரை ஞரணித் தலைவர் த.வீரசேகரன், பொருளாளர் வீ.குமரேசன், பகுத்தறிவு எழுத்தாளர் மன்ற துணைத் தலைவர் கோ.ஒளிவண்ணன், நீதிபதி பரஞ்ஜோதி, வழக்குரைஞர் சு. குமாரதேவன், பெரியார் நூலகவாசகர் வட்டத் தலைவர் வழக்குரைஞர் ஆ.வீரமர்த்தினி, தலைமைக்கழக அமைப் பாளர் வி.பன்னீர்செல்வம், ச.இராஜசேகரன், துணைப் பொதுச் செயலாளர் பொறி யாளர் ச.இன்பக்கனி மற்றும் சென்னை கழக மாவட் டங்களின் பொறுப்பாளர்கள், சிவகங்கை மாவட்ட பல்வேறு கட்சிகள், அமைப்புகளின் பொறுப் பாளர்கள், வழக் குரைஞர் இரா.சண்முகநாதன் குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள் பலரும் பங்கேற்றனர்.


No comments:

Post a Comment