அரசு பணியில் இருந்து ஓய்வு பெற்ற தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறையில் அலுவலராக பணியாற் றியவரும் தேசிய அளவிலான சது ரங்கப் போட்டியில் நடுவராக பணி யாற்றியவருமான ஆர்.கே. பால குண சேகரனுக்கு பணி ஓய்வு பாராட்டு விழா மன்னார்குடி தேசிய மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.
இதில், கலந்துகொண்ட பள்ளி ஆசிரியர் ஒருவர் பணி ஓய்வு பெற்ற ஆசிரியரை பாராட்டி பேசும் போது, குசேலனுக்கு 27 பிள்ளைகள் என்றும் அவர்களது குடும்பம் வறுமையின் கோரப்பிடியில் சிக்கித் தவித்ததாகவும் தங்களுடைய வறுமையை போக்கிக் கொள்ள குசேலனின் நண்பரான கண்ணனிடம் சென்று உதவி கேட்டு வருமாறு குசேலனின் மனைவி சுசிலை கூறியதையும் அதன்படி கண்ணனுக்கு பிடித்தமான அவலை தயார் செய்து கொண்டு கண்ணனை சந்திக்க சென்று அவரைப் பார்த்து உதவி கேட்டதாகவும் குசேலன் கொண்டு வந்த அவலை எடுத்து கண்ணன் தனது வாயில் போடப் போட குசேலனுக்கு செல்வம் கொட்டிக் கொண்டே இருந்ததாகவும் புராணக் கதை ஒன்றைக் கூறி வாழ்த்தினார். என்ன காரணத்தினாலோ பணி ஓய்வு பாராட்டு விழாவிற்கு பொருத்தமில்லாத இந்த புராணக் கதையை அந்த பள்ளி ஆசிரியர் வாழ்த்துரையில் பேசிவிட்டு சென்று அமர்ந்தார்.
அவருக்கு பிறகு,ஒரு சிலர் பேசிய நிலையில் தமிழ்நாடு மின்வாரிய பொறியாளர் ஒருவரை வாழ்த்திப் பேசுமாறு அழைத்தனர். அவர், ஆன்மீகவாதி, தன்னம்பிக்கை மற்றும் சமய சொற்பொழிவாளர் - விடுதலை வாசகரும்கூட. அந்தப் பொறியாளர் பேசும் பொழுது, எனக்கு முன்னால் பேசிய பள்ளி ஆசிரியர் குசேலன் கதையை கூறி வாழ்த்தி இருக்கிறார் .அதில், உள் அர்த்தம் ஒன்று இருக்கிறது. குசேலனுக்கு 27 பிள்ளைகள், கடைசி பிள்ளைக்கு இரண்டு வயது இருந்தால் கூட குசேலனின் மூத்த மகனுக்கு குறைந்தது 25 வயது இருக்க வேண்டும். அடுத்த பிள்ளைக்கு 23, 20 என்று இருக்க வேண்டும். இவர்கள் ஒருவர் கூடவா உழைக்காமல் சோம்பேறி களாய் வீட்டில் இருந்தார்கள் - வயதான தாய், தந்தை சம்பாத்தியத்தில் 25 வயது இளைஞர் இருந்தார் என்றால் எப்படி அதனை ஏற்றுக் கொள்ள முடியும்? இதுதான் அந்தக் கதையில் உள்ள உள் அர்த்தம் என்று கூறினார். அப்போது எதிரில் அமர்ந்திருந்தவர்கள் ரசித்து சிரித்தார்கள்.
அதனைத் தொடர்ந்து, வேறு சிலர் தங்களுடைய வாழ்த்துரைகளை வழங்கி முடித்த பிறகு, சிறப்பு அழைப் பாளராக கலந்து கொண்ட திருவாரூர் மாவட்ட ஊராட்சித் தலை வரும் திமுக தலைமை செயற்குழு உறுப்பினருமான தலையாமங்கலம் ஜி. பாலு தான் ஆத்திகராக இருந்த போதும் - பணி ஓய்வு பெற்ற ஆசிரியரை வாழ்த்தி பேசிக் கொண்டிருக்கையில், எனக்கு முன்னால் பேசிய பள்ளி ஆசிரியர் குசேலன் கதையை சொல்லி விட்டுச் சென்றார். அவரை, தொடர்ந்து பேசிய மின்வாரிய பொறியாளர் குசேலன் கதையில் உள்ள உள் அர்த்தத்தையும் மிக அற்புதமாக விளக்கி கூறியுள்ளார். வேறு வேலை வெட்டி இல்லாமல் குசேலன் - சுசிலை தம்பதி 27 பிள்ளை களை பெற்றுக் கொண்டுள்ளார்களா என கேள்வி தோன்றுகிறது. இவர் களுக்கு வேறு வேலை இல்லையா?
20 வயதிலிருந்து 25 வயதுக்குள் நிரம்பிய பிள்ளைகளை தன் வீட்டில் வைத்துக்கொண்டு பெற்றோர்கள் எதற்கு சிரமப்பட்டு இருக்க வேண்டும், அடுத்தவர் உதவியை எதிர்பார்த்து ஏன் இவர்கள் இருக்க வேண்டும், இவர்கள் கை கால்கள் நன்றாக இருந்தது. பெற் றோர்கள் உழைத்திருக்க வேண்டாமா? பிள்ளைகள் 25வயது 18 வயதை நிரம்பிய பிள்ளைகள் எல்லாம் வேலைக்கு சென்று உழைத்திருக்க வேண்டாமா? யாரையும் நம்பி ஒருத்தரும் இருந்து விடக்கூடாது "ஒருவரின் வாழ்க்கைக்கு ஒரு வீடு" சிறு பொருளாதார வசதி இருந்தாலே போதும் என ஆணித்தரமாக பல்வேறு கேள்விகளை கேட்டு குசேலனின் கதையினை தூள் தூளாய் ஆக்கினர். இதனைக் கேட்டுக் கொண்டிருந்த மேடையில் இருந்தவர்களும் எதிரிலே இருந்தவர்களும் உற்சாகமாக கைதட்டி அவரது கருத்தை ஆதரித்தனர். இவ்வளவுக்கும் அந்த கூட்டத்தில் இருந்தவர்களில் (சுமார் 300க்கும் மேற்பட்டவர்கள் ) ஒரு சிலர் மட்டுமே நாத்திகர்களாக இருப்பார்கள். பெரும் பாலும் ஆத்திகர்கள் தான் இருந் தார்கள்.
அப்பொழுது எனக்கு, தந்தை பெரியாரின் கொள்கையை பற்றி பட்டுக்கோட்டை அஞ்சாநெஞ்சன் அழகிரி கூறிய, "ஈட்டி எட்டிய வரை பாயும் - பணம் பாதாளம் வரை பாயும். தந்தை பெரியாரின் கொள்கைகளோ அண்ட சராசரங்களையும் தாண்டி அதற்கு அப்பாலும் பாயும்" என்ற வரலாற்றின் கல்வெட்டில் பொறிக்கப் பட்ட வைர வரிகள் தான் மனதில் தோன்றியது.
தந்தை பெரியாரின் கருத்துகளை கருப்பு சட்டைக்காரர்களோ, பகுத்தறி வாளர்களோதான் கூற வேண்டும் என்பது இல்லை. அதற்கு அப்பால் மனித நேயமிக்க வாழ்வியலை உணர்ந்த சராசரி மனிதர்கள் கூட ஆணித் தரமாக வும் அழுத்தமாகவும் கூற முடியும் என்பதை உணர்ந்தேன் .
தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் கூறுவது போன்று, தந்தை பெரியாரின் கொள்கைகளை மக்களி டம் கொண்டு செல்வதில் கண்ணுக்குத் தெரிந்த கருப்புச் சட்டைக்காரர்களை விட கண்ணுக்குத் தெரியாத பல ஆயிரம் பேர் இருக்கிறார்கள். அவர்கள் கருப்பு சட்டையோ, கழக அடையாளமோ இல்லாமல் மிக நனி நாகரிகத்துடன் தந்தை பெரியாரின் கொள்கைகளை மக்களிடையே பரப்பி வருவது பெருமிதமாக உள்ளது.
- மன்னை சித்து
No comments:
Post a Comment