கேரளா - கோட்டயத்தில் 17.9.2023 அன்று நடைபெற்ற தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்களின் விழாவில் கலந்து கொண்ட அமைச்சர் ராதாகிருஷ்ணன் தனக்கு இழைக்கப்பட்ட அவமதிப்பு குறித்து மனங்குமுறிக் கூறியதாவது:
"இங்கு வரும் முன்பு எனது துறைசார்ந்த கோவிலில் நடந்த ஒரு விழாவிற்கு சென்றிருந்தேன். கோவில் தலைமை அர்ச்சகர் விளக்கு ஏற்றுவதற்காக என்னை நோக்கி வந்தார். நான் தான் விளக்கு ஏற்ற வேண்டும் என்று நினைத்தேன், ஆனால் தலைமை அர்ச்சகர் அதை என்னிடம் கொடுக்கவில்லை - அவரே சென்று விளக்கை ஏற்றினார். அது அந்தக் கோவிலில் நடக்கும் நிகழ்வு என்று நினைத்து நான் விலகி இருந்தேன். பின்னர் தலைமை அர்ச்சகர் விளக்கை உதவி அர்ச்சகரிடம் ஒப்படைத்தார். அதன் பிறகு விளக்கு என்னிடம் ஒப்படைக்கப்படும் என்று நான் நினைத்தேன், ஆனால் அவர்கள் எனக்கு கொடுக்கவில்லை - மாறாக விளக்கை தரையில் வைத்த பிறகு தலைமை அர்ச்சகர் வெளியில் சென்றுவிட்டார். அதே நேரத்தில் அங்கிருந்த ஒரு உயர் ஜாதிப் பெண்ணின் கையில் ஒரு விளக்கை கொடுக்க அவர் விளக்கை ஏற்றினார். நானும் அப்பகுதி சட்டமன்ற உறுப்பினரும் தீண்டாமைக் கொடுமையை எதிர்கொண்டோம்.
ஆனால் நான் இந்தக் கோவிலுக்கு நன்கொடை கொடுத்துள்ளேன். அந்த நிகழ்ச்சியின் போது முன்னதாக கோவிலுக்கு காணிக்கை கொடுத்தேன். அதை மட்டும் வாங்கிக் கொண்டார்கள், நானும் என்னைப் போன்றவர்களும் கோவிலுக்கு நன்கொடையாக வழங்கிய பணத்தில் எந்தப் பாகுபாடும் இல்லை. கோவில்களில் ஏழைகள் காணிக்கையாக செலுத்தும் பணத்தில் மட்டும் எந்தப் பாகுபாடும் இல்லை - இதை நான் அந்த தலைமை அர்ச்சகர் முன்னிலையிலேயே கூறினேன். அனைத்து ஜாதி மக்களிடம் இருந்தும் பணம் வாங்குவதற்குக் கோயில் அதிகாரிகளுக்கு எந்தக் கவலையும் இல்லை என்ற நிலையில், ஜாதியைக் காரணம் காட்டி மனிதர்களை ஒதுக்கி வைத்துள்ளனர். ஜாதி அமைப்பின் காலத்திற்குத் திரும்புவதில் எனக்கு உடன்பாடு இல்லை. ஜாதி அமைப்பை உருவாக்கியவர்களுக்கு மக்களை எப்போதும் பிளவுபடுத்த வேண்டும் என்பதுதான் திட்டம். சந்திரயான் பணியில் ஈடுபட்டவர்களை விட ஜாதி அமைப்பை உருவாக்கியவர்கள் (அதிக) புத்திசாலிகள் போலும்." இவ்வாறு அமைச்சர் ராதாகிருஷ்ணன் கூறினார்.
அரசு நடத்தும் திருவிதாங்கூர் தேவஸ்தான வாரியத்தின் கீழ் உள்ள சபரிமலை, மாளிகாபுரம் ஆகிய கோவில்களுக்கு, மலையாள பார்ப்பனர்களை மட்டுமே தலைமை அர்ச்சகர்களாக நியமித்து வருகிறது. சபரிமலையில் தலைமை அர்ச்சகர் பதவிக்கு மலையாள பார்ப்பனர்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் என்ற திருவிதாங்கூர் தேவஸ்தான வாரியத்தின் ஆண்டறிக்கையை எதிர்த்து, தாழ்த்தப்பட்ட சமூக அர்ச்சகர்கள் குழு உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.
சிபிஅய்(எம்) மாநிலச் செயலகத்தின் உறுப்பினரும், கட்சியின் முக்கிய தாழ்த்தப்பட்ட சமூக மக்களின் முகமாகப் பார்க்கப்படுபவருமான அமைச்சர் ராதாகிருஷ்ணனுக்கு இழைக்கப்பட்ட தீண்டாமைக் கொடுமை அம்மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ராதாகிருஷ்ணனின் கருத்து கேரளாவில் உள்ள சிபிஅய்(எம்) தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி (LDF) அரசுக்கு ஒரு நெருடலாகப் பார்க்கப்படுகிறது. இம்மாநிலத்தின் தீண்டாமைக் கொடுமையை தடுத்து நிறுத்தும் திட்டத்தில் ஒரு பகுதியாக, 2018 ஆம் ஆண்டில் திருவிதாங்கூர் தேவஸ்தான வாரியத்தின் கீழ் உள்ள கோவில்களில் பட்டியலின சமூகத்தவர்களை அர்ச்சகர்களாக நியமித்த பெருமைக்குரியது. தற்போது சுமார் 32 பட்டியலின சமூக அர்ச்சகர்கள் பல்வேறு கோவில்களில் பூஜை செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
2021 ஆம் ஆண்டு நடந்த கேரள சட்டப்பேரவைத் தேர்தலில் ஆளும் இடதுசாரிக் கூட்டணி தொடர்ந்து இரண்டாவது முறையாக ஆட்சியைப் பிடித்தது. அமைச்சரவையில் கேரள கோவில்களை நிர்வகிக்கும் தேவசம்போர்டு அமைச்சராக, தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் நியமிக்கப்பட்டார்.
ராதாகிருஷ்ணனுக்கு தேவசம்போர்டு துறை ஒதுக்கப் பட்டதானது - மற்ற நியமனங்களை விட, முதலமைச்சர் பினராயி விஜயனின் இந்த நியமனம் கேரளாவை தாண்டியும், பொதுமக்கள், பல்வேறு தலைவர்கள் மத்தியிலும் பாராட்டுகளை பெற்ற நிலையில் அத்துறை அமைச்சரே இப்போது அர்ச்சகர்களால் அவமதிக்கப்பட்டுள்ளார்.
குடியரசுத் தலைவர்களே பட்டியலினத்தவராக இருந்தால் அவமதிக்கப்படும் ஹிந்து ராஜ்ஜியம் தானே இப்பொழுது நடக்கிறது. ஒடுக்கப்பட்ட மக்கள் பொங்கி எழுந்தால் தெரியும் சேதி!
No comments:
Post a Comment