ஆரியத்தை அலறவிடும் திராவிட வாரிசு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, September 16, 2023

ஆரியத்தை அலறவிடும் திராவிட வாரிசு

தந்தை பெரியார் சுயமரியாதை இயக் கத்தைத் தொடங்கி ஜாதி ஒழிப்பு, பெண் அடிமைத்தனம் ஒழிப்பு, மூடநம்பிக்கைகள் ஒழிப்பு போன்றவற்றை நாடு முழுவதிலும் பிரச்சாரம் செய்தார், பிள்ளையார் சிலையை போட்டு உடைத்தார், தமிழ்நாட்டு மேடை களிலே தமிழிசை ஒலிக்க வேண்டும் என்றார், கோயில் இருக்கும் வீதிகளிலே தமிழ் நாட்ட வர் நடக்க முடியாமல் ஆரியம் ஆட் கொண்டிருந்த பொழுது அதனை எதிர்த்து பெரியார் போராடி அனைத்து தரப்பு மக்களும் அனைத்து இடங்களிலும் நடக்கும் உரிமையை பெற்றுத் தந்தார், அப்போது அவர் ஆற்றிய உரைகளை எல்லாம் கேட்டு ஆரியம் அலறத் தொடங்கியது.   

தேவதாசி முறை ஒழிக்கப்பட வேண்டி சட்டமன்றத்திலே விவாதம் நடைபெற்ற போது மிக புனிதமான அந்த தேவதாசி தொழிலை பார்ப்பனர் வீட்டு பெண்களே இனி செய்யட்டும் என்று டாக்டர் முத்து லட்சுமி ரெட்டி அவர்கள் அன்றைக்கு சட்ட மன்றத்திலே தந்தை பெரியாரின் குரலாய் ஓங்கி ஒலித்தார். அதனைக் கேட்டு ஆரியம் அலறியது.

உலகிலேயே முற்போக்கு இயக்கத்தின் தலைவராக இருந்த முதல் பெண், தந்தை பெரியாருக்கு பிறகு திராவிடர் கழகத்தை தலைமையேற்று நடத்திய அன்னை மணி யம்மையார் வடநாட்டு பார்ப்பனர்கள் ராம் லீலா என்ற பெயரில் திராவிட மன்னனை எரித்து மகிழ்வுற்றதை கண்டித்து ராமன் லட்சுமணன் சீதை ஆகிய உருவ பொம் மைகளை எரித்து மிகப்பெரிய அளவிற்கு ராவணன் லீலாவை நடத்தினார் அப்போதும் ஆரியம் அலறிக்கொண்டே இருந்தது.

தந்தை பெரியாரின் தலைமை மாணவராக விளங்கிய பேரறிஞர் அண்ணா அவர்கள் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த பொழுது ஹிந்தி தேசிய மொழியாக அறிவிக்கப்பட வேண்டும் என்ற விவாதம் எழுந்த நேரத்தில் அதை எதிர்த்து இந்தி யாவில் அதிகமான மக்கள் பேசும் மொழி ஹிந்தி அதனால் ஹிந்தி தான் தேசிய மொழியாக இருக்க வேண்டும் என்று சொல் லப்படுமேயானால் பார்க்கும் இடமெல்லாம் பறக்கும் பறவை காகம் ஆகவே இந்தியாவின் தேசிய பறவையாக காகத்தை அறிவிக்க தயாரா என்று அன்றைக்கு பேசிய அண்ணா வின் குரலைக் கேட்டு ஆரியம் அலறியது.

90 வயதில் 80 ஆண்டு கால பொது வாழ்விற்கு சொந்தக்காரரான திராவிடர் கழக தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் வீரமணி அவர்கள் 2014 இல் டாக்டர் அம்பேத்கர் பிறந்தநாள் விழாவில் பெண்களின் அடிமைச் சின்னமான தாலி அகற்றும் நிகழ்வை நடத்தி னார், அதனைக் கண்ட ஆரியத்தின் அலறல் சத்தம் அதிகரித்தது.

அறிஞர் அண்ணாவின் அன்புத் தம்பி யாய் தமிழ்நாட்டு மக்களின் உடன்பிறப்பாய், அய்ந்து முறை முதலமைச்சராக இருந்த முத்தமிழறிஞர் கலைஞர் சேது சமுத்திர கால்வாய் திட்டம் தொடங்கிய போது, ராமர் பாலம் என்று சொல்லி அதற்கு முட்டுக்கட்டை போட்ட ஆரியத்தை எதிர்த்து ராமன் எந்தக் கல்லூரியில் பொறியியல் படித்தான் என்று கேட்டார். அந்த கேள்வியை எதிர்பார்க்காத ஆரியம் தலைவர் கலைஞர் தலைக்கு விலை பேசியது அன்று. என் தலையை நானே சீவி நெடுநாள் ஆகிவிட்டது என்று கலைஞர் கூறிய பதிலால் ஆரியம் அலறியது. 

அவரை தொடர்ந்து இன்றைக்கு ஆட்சிக் கட்டிலில் ஏறி இருக்கும் சமூக நீதிக்கான சரித்திர நாயகர் என்று தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களால் போற்றப் படும், இங்கே நடப்பது ‘திராவிட மாடல்‘ ஆட்சி என்று அறிவித்து, இந்த ‘திராவிட மாடல்' ஆட்சியின் பாதையை நிர்ணயிப்பது பெரியார் திடல் தான் என்று கூறி மிகச் சிறந்த ஆட்சியை இந்திய ஒன்றியத்திலேயே முதன்மை முதலமைச்சராக ஆட்சியை நடத்தி வரக்கூடிய மாண்புமிகு தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள், ஒன்றியம் - ஒன்றிய அரசு என்ற ஒற்றை சொல்லைப் பயன்படுத்தி ஒன்றிய அரசு குறித்து பேசினார் - ஆரியம் உட்கார்ந்த இடத்தில் சூடு வைத்ததை போல் துள்ளிக் குதித்தது.

இன்றைக்கு திராவிட முன்னேற்றக் கழ கத்தின் இளரத்தமாய், இளைஞரணி செய லாளராய் பொறுப்பேற்று திறம்பட செயல் பட்டு வரும் தமிழ்நாடு அரசின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் மாண்புமிகு உதயநிதி ஸ்டாலின் அவர்கள் 2021 தேர்தலில் எய்ம்ஸ் மருத்துவமனை எங்கே இருக்கிறது என்று கேட்டு இதோ எனது கையில் இருக்கிறது பாருங்கள் என்று ஒற்றைச் செங்கல்லை உயர்த்தி ஆரியத்துக்கு தமிழ்நாட்டில் இடம் இல்லை என்று ஓட ஓட விரட்டினார், அதனைத் தொடர்ந்து தற்போது காலம் காலமாக எதன் பேரைச் சொல்லி தமிழ்நாட்டு மக்களை அடிமைப்படுத்தினார்களோ அடக்கி ஒடுக்கினார்களோ அந்த ஸநா தனத்தை ஒழிப்போம் என்று ஓங்கி ஒலித்ததும் ஒன்றியம் முழுவதும் இருக்கக்கூடிய ஸநா தானிகள் அலறுகின்றனர். வாய்க்கு வந்ததை எல்லாம் உளறுகின்றனர். 

தாத்தாவின் தலைக்கு விலை பேசியதை போல் இன்றைக்கு பெயரனின் தலைக்கும் 10 கோடி ரூபாய் விலை பேசுகின்றனர், அண்ணாவை விட வீரியமானவர் கலைஞர், கலைஞரை விட வீரியமானவர் ஸ்டாலின், இவர்களையெல்லாம் விட 16 அடி பாயும் புலிக் குட்டியாய் வீரமும் விவேகமுமாய் விளங்கி வருகிறார் உதயநிதி ஸ்டாலின். நான் திராவிடத்தின் வாரிசு என்பதை கலைஞர் பாணியிலேயே பதில் கூறுவதிலும் நிரூபித் திருக்கிறார். என் தலைக்கு 10 கோடி ரூபாய் தேவையில்லை பத்து ரூபாய் சீப்பு போதும் சீவிக்கொள்ள என்று பதிலுரைத்திருக்கிறார். அவசர நிலை காலத்தில் ஆட்சி கலைக் கப்படும் என்று தெரிந்தும் கலைஞர் இந்திரா காந்தியை எதிர்த்தார் - ஆட்சி கலைக் கப்பட்டது. இன்றைக்கு உதயநிதி ஸ்டாலின் கூறுகிறார் நூறு ஆண்டுகளாக ஸநாதனத்தை ஒழிப்போம் ஒழிப்போம் என்று பேசிக் கொண்டிருக்கிறோம், நாளைக்கும் பேசு வோம் ஆட்சியே கலைந்தாலும் பேசுவோம். எங்களுக்கு நாங்கள் கொண்டுள்ள கொள்கை தான் முக்கியம் என்று திராவிடத்தின் வாரி சாக அனைத்து மக்களுக்கும் அனைத்தும் என்ற திராவிட மாடல் ஆட்சியின் கொள்கை குன்றாக ஓங்கி ஒலித்துக் கொண்டிருக்கிறார். எந்த விலை கொடுத்தேனும் பிரிவினையை தூண்டும், பிரிவினையை நிலை நிறுத்தும் ஸநாதனத்தை ஒழிப்போம் ஒழிப்போம், உதயநிதி பக்கம் நிற்போம்.

- முனைவர் வே.இராஜவேல், தஞ்சை


No comments:

Post a Comment